(ஜுன் 5 காயிதே மில்லத் பிறந்த நாள்)
தமிழ்நாட்டின் மிகப்பெரும் சமூக புரட்சியாளராக இருந்த பெரியார் தன் வாழ்நாளில் அதிகம் அழுதது இருவரின் மரணத்திற்கு மட்டும் தான். அதில் ஒன்று காயிதேமில்லத்தின் மரணம். மற்றொன்று இராஜாஜியின் மரணம். தன் போராட்டத்தின் சக பயணியாக பெரியார் நேசித்தவர்களில் காயிதேமில்லத் முக்கியமானவர்.
காயிதேமில்லத் என்னும் இஸ்மாயில் சாகிப் 1896 ஜுன் 5 ல் திருநெல்வேலியில் நடுத்தரகுடும்பத்தில் பிறந்தார். அப்போது இந்தியாவில் சுதந்திர போராட்டம் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. நாங்கள் 1000 வருடங்கள் இந்தியாவை ஆண்ட பரம்பரை என்று இந்திய முஸ்லிம்கள் பலர் ஆங்கிலேயர்களை எதிர்த்து தீவிரமாக போராடிய தருணம். இஸ்மாயில் சாகிப் அவர்களின் வரவு தமிழ்நாட்டை பொறுத்தவரை இதனை மேலும் கூர்மைப்படுத்த உதவியது. கல்லூரி படிப்பை செயின்ட் ஜோசப் திருச்சி மற்றும் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முடித்தார். தன் தந்தையோடு இணைந்து தோல் பொருட்கள் வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இந்நிலையில் 1918 ல் நெல்லையில் இஸ்லாமிய கல்வியாளர்களின் கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். அப்போது தமிழ்நாட்டில் வேர்கொண்டிருந்த திராவிட, நீதிகட்சி அரசியலுக்கு ஒரு வழிதிறப்பை ஏற்படுத்துவதில் காயிதேமில்லத் உறுதுணையாக இருந்தார்.
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக்கின் தோற்றம் அசாதாரண சூழலில் ஏற்பட்ட மாற்றமாகும். இந்திய முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் சகல உரிமைகளும் இழந்து நிர்கதியாக இருக்கின்றனர். மேலும் அவர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு அளிப்பது குறித்து பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க அமைப்பு ரீதியாக திரள்வது அவசியம் என்ற சிந்தனை பலரிடம் உருவானது. இது முந்தைய முகலாய ஆட்சியின் தாக்கத்தினாலும், 1885 ல் அகில இந்திய காங்கிரஸ் உருவாக்கத்தினாலும் ஏற்பட்ட ஒன்று. இந்நிலையில் நவாப் விகர் உல் முல்க் தலைமையில் 1906 ல் வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்தியாவின் சகல பகுதிகளிலிருந்தும் முஸ்லிம் தலைவர்கள் ஒன்று கூடி விவாதித்தனர். அந்த கூட்டத்தின் முடிவில் உருவானது தான் அகில இந்திய முஸ்லிம் லீக். நவாப் சலிமுல்லா கான் அது பற்றிய செயல்திட்டத்தை முன்மொழிந்தார். அது இந்திய முஸ்லிம்களுக்கு அவர்களுக்கான உரிமைகளை, வாழ்வியல் பாதுகாப்பை ஆங்கிலேயர்களிடம் உறுதி செய்வதை முக்கிய செயல்திட்டமாக வைத்தது. லக்னோவை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக்கின் முதல் தலைவராக ஆகா கான் நியமிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியில் இருபதுகளில் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்த காயிதேமில்லத் அதில் தீவிரமாக இணைந்து பணியாற்றினார். அவரின் வரவு சென்னை மாகாண முஸ்லிம்களுக்கும், மற்றவர்களுக்கும் சுதந்திர இந்தியா குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்றாக அமைந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரியாருடன் அவருக்கிருந்த உறவு , பிந்தைய நாட்களில் முஸ்லிம் லீக் மேடைகளை பெரியார் தன் சுயமரியாதை பிரசாரத்திற்கு பயன்படுத்தும் உச்சத்திற்கு சென்றது. முஸ்லிம் லீக்கின் பல மீலாது விழா மேடைகளை பெரியார் தன் பிரசாரத்திற்காக பயன்படுத்தினார். திராவிட இயக்க செயல்திட்டங்களுக்கு முஸ்லிம் லீக் மேடைகள் ஓரளவிற்கு சிறந்த வடிகாலாக இருந்ததே அதற்கு காரணம். மேலும் சுதந்திர போராட்ட காலத்தில் காயிதே மில்லத் தன் ஆற்றல் மிக்க உரைகளால் பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்ட மனோபாவத்தை உருவாக்கினார்.
இந்திய பிரிவினையின் நதி மூலம் அனைத்துமே ஜின்னா என்ற தனிநபரின் மீதே ஒட்டுமொத்தமாக சாத்தப்பட்டு அதுவே வரலாறாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் எதார்த்தம் இதற்கு வெளியே தான் இருக்கிறது. காயிதேமில்லத் மீதும் அந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதையும் இங்கு கவனிக்க வேண்டும். முஸ்லிம் லீக் உருவாக்கத்திற்கும், பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை தீர்மானத்திற்கும் இடையே 34 ஆண்டுகள் இடைவெளி இருந்தன. பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையானது 1940 மார்ச் 23 ல் லாகூரில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் முதன் முதலாக தீர்மான வடிவில் முன்வைக்கப்பட்டது. அதுவரை கூட்டாட்சி முறையை ஏற்றுக்கொண்ட ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் பிரிவினையே தீர்வு என்பதை முன்வைத்தது. ஆனால் காந்தி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. என் பிணத்தின் மீது தான் இந்திய பிரிவினை நடக்கும் என்றார். அவர் கனவு கண்ட சுதந்திர இந்தியாவிற்கு இம்மாதிரியான கோரிக்கைகள் மிகப்பெரும் தடையாக இருப்பது அவருக்கு வேதனையளித்தது. ஆனால் பிரிவினை கோரிக்கையின் முந்தைய காலகட்டங்களில் காங்கிரஸின் வலதுசாரி தலைவர்கள் சிலரின் எதிர் செயல்பாடுகள், நடவடிக்கைகள் முஸ்லிம் லீக்கை பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை நோக்கி நகர்த்தியது. இந்நிலையில் ஜின்னாவை பற்றி ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். தாராள சிந்தனை கொண்டவர். அடிப்படைவாதி அல்ல. மேலும் தாதாபாய் நௌரோஜி மற்றும் திலகரின் உதவியாளராக பணியாற்றிவர். இதைத்தான் அத்வானி பாகிஸ்தான் சென்ற போது வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டார். மேலும் பாகிஸ்தான் கோரிக்கை வலுவடைந்த பின்னர் பல்வேறு கட்ட சமரச முயற்சிகளின் விளைவாக முஸ்லிம் லீக்கும், ஜின்னாவும் அந்த கோரிக்கையை கைவிடும் முடிவிற்கு வந்தனர். இதில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் முக்கிய பங்காற்றினார். மந்திரிசபை தூதுக்குழு திட்டத்தை ஏற்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக சுதந்திர இந்தியாவின் இடைக்கால அரசின் அமைச்சரவையில் இடம் பெற லீக் சம்மதித்தது. இந்நிலையில் 1946 ஜுலை 10 ல் மும்பையில் நடந்த நேருவின் பத்திரிகையாளர் சந்திப்பு தான் இந்திய வரலாற்றின் போக்கை மாற்றும் ஒன்றாக இருந்தது. அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நேரு காங்கிரஸ் நினைத்தால் மந்திரிசபை தூதுக்குழுவின் ஒப்பந்தத்தை மாற்றி அமைக்கும் என்று நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலாக இதனை கூறினார். ஏற்கனவே அதிருப்தியிலும், அரை மனநிலையிலும் இருந்த லீக் நேருவின் இந்த கருத்தால் கொந்தளித்தது. உடனடியாக கட்சியின் பொதுக்குழுவை கூட்டி நேரடி நடவடிக்கை தினம் என்று ஒன்றை அறிவித்து மேற்கு வங்கத்தில் அதனை செயல்படுத்தியது. இதன் விளைவாக வங்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. மேலும் பிந்தைய கட்டங்களில் இதன் விளைவாக முன்னெச்சரிக்கை இல்லாத சூறாவளியாக வட இந்தியா மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் அனைத்தும் கலவர காடுகளாக மாறின. இரு தரப்பிலும் நிகழ்ந்த படுகொலைகள் இந்திய வரலாற்றில் மாறாத சிதிலமாக இன்னும் இருக்கிறது.
இந்திய பிரிவினைக்கு பின் எஞ்சியிருந்த முஸ்லிம்களின் நலனிற்காக சென்னையை மையமாக வைத்து 1948 ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உருவானது. அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்பதாக மாற்றப்பட்டது. அதன் அகில இந்திய தலைவராக காயிதேமில்லத் பொறுப்பேற்றார். அதற்கு முந்தைய கட்டத்தில் 1945 ல் சென்னை மாகாண முஸ்லிம் லீக்கின் தலைமை பொறுப்பில் காயிதே மில்லத் இருந்தார். அந்த கால கட்டத்தில் அவரின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்தது. மேலும் திராவிட இயக்கத்தோடு நல்லுறவை பேணிய காயிதேமில்லத் அதனை இறுதிவரை கடைபிடித்தார். பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் ஒரு தடவை ஜின்னா இவரை பாகிஸ்தான் வருமாறு அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் சென்ற காயிதே மில்லத்திடன் விருந்தின் போது ஜின்னா பின்வருமாறு கூறினார். " இந்திய முஸ்லிம்களுக்கு பெரும்பான்மையினரால் பிரச்சினை இருக்கிறதா? சொல்லுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றார். உடனே கோபங்கொண்ட காயிதேமில்லத் அது பற்றி கவலைப்பட நாங்கள் இருக்கிறோம். என்றைக்கு நீங்கள் எங்களை விட்டு பிரிந்தீர்களோ அப்போதே நீங்கள் எங்களுக்கு அந்நியர்களாகி விட்டீர்கள். ஆகவே நீங்கள் அது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. எங்களின் உள்நாட்டு விவகாரங்களை குறித்து பேச வேண்டியதில்லை என்றார். அவரின் பரந்துபட்ட, நாட்டு நலன் குறித்த சிந்தனைக்கு இது ஓர் உதாரணம். மேலும் அவரின் நாடாளுமன்ற , சட்டமன்ற உரைகள் மிகவும் கூர்மையாகவும், பிரச்சினையின் ஆழ அகலங்களை பிரதிபலிப்பவையாகவும் இருந்தன. குறிப்பாக இலங்கை குடியுரிமை சட்டம் பற்றிய தமிழ்நாடு சட்டமன்ற விவாதம், ஆலயபிரவேசம் குறித்த சட்டமன்ற விவாதம் ஆகியவற்றில் காயிதேமில்லத்தின் விவாத பங்களிப்பு குறிப்பிடும் படியாக இருந்தது. மேலும் வகுப்புகலவரங்கள் மற்றும் மதசார்பின்மை கோட்பாடு குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் மிகவும் குறிப்பிடதக்கவை. அலுவல்மொழி குறித்த விவாதம் அரசியல் நிர்ணய சபையில் நடந்த போது இந்தியாவின் அலுவல் மொழிக்கான அனைத்து தகுதிகளும் தமிழுக்கு இருக்கின்றன என்றார். இந்திய அரசியலில் காயிதேமில்லத் சிறுபான்மையினரின் நலன்களுக்காக, அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் , இந்திய மதசார்பின்மை கோட்பாட்டிற்கும் எவ்வித களங்கமும் ஏற்படாமல் தன் அரசியல் வாழ்க்கையை இறுதிவரை நகர்த்தினார்.
No comments:
Post a Comment