ஆரம்ப உலகில் அறிவியலும் தத்துவமும்
ஒன்றாகவே இருந்தன. நாடோடியாக அலைந்த மனிதன் இயற்கையை நேசிக்க, அவதானிக்க தொடங்கியதிலிருந்தே
தத்துவம் பிறந்து விட்டது. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு, இயற்கைக்கு அப்பால் உள்ள
உறவு, உலகின் தோற்றம், மனிதனின் பரஸ்பர உறவுகள் குறித்த தேடல் இவை அனைத்தும் தத்துவத்தின்
பிறப்பிற்கு ஆதாரமாக அமைந்தன. அறிவியல் உலகை நிரூபணமான உண்மைகளால் அறிய முயற்சித்தது.
கடந்து போன அனுபவத்தை தற்கால மனிதன் பரிசோதனை செய்யும் போது அறிவியல் பிறக்கிறது என்றார்
விஞ்ஞானி பெய்மென் ஆரம்பகாலத்தில் தத்துவாதியும், அறிவியலாளரும் ஒருவரே. அவர்களுக்குள்
பெரிய வித்தியாசங்கள் இல்லை. இந்நிலையில் சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளாட்டோ, தைலமி,
ஹெரோடடஸ் போன்றவர்கள் விஞ்ஞானிகளாகவும் , தத்துவவாதிகளாகவும் இருந்தனர்.
முதல் தத்துவ கோட்பாடு எது என்பதில்
தெளிவான தரவுகள் இல்லை. இருந்தும் உலகம் என்பது தண்ணீரை தவிர வேறில்லை என்பதே முதல்
கோட்பாடாக அறியப்படுகிறது. இதனிலிருந்து தான் அறிவியலே பிறந்தது என்கின்றனர் சிலர்.
அறிவியலானது உலகை நிரூபணமான உண்மைகளால் அறிய முயற்சித்தது. எதையும் நடைமுறை உண்மைகளோடு
பொருத்தி பார்ப்பதே அதன் வேலை. இதனடிப்படையில் ஒரு விஞ்ஞானி தான் உத்தேசிக்கிற கோட்பாட்டை
, அதற்கே உரிய நிரூபண செயல்முறைகளோடு, அவதானத்தின் அடிப்படையில் விளக்குவார். தத்துவம்
போன்று வெறும் தர்க்கத்தை வெளிப்படுத்தி விட்டு அது நகர்ந்து விடுவதில்லை. இயற்கையின்
இயக்கத்தை, சில தர்க்கங்களாக விவரித்து விட்டு
சென்றது. இந்நிலையில் ஆரம்பகால அறிவியலில் வானவியலே முக்கிய இடம் பிடித்தது. இடி, மின்னல்,மழை,
வெயில் போன்ற இயற்கையின் அனிச்சை செயல்பாடுகளை மனிதன் ஆராயத்தொடங்கிய போது வானவியல்
பிறந்தது. இந்த வானவியல் உலகில் தோன்றிய எல்லா
நாகரீகங்களிலும் அதிக தாக்கம் செலுத்தியது.
மேலும் மருத்துவம், கணிதம், வேதியியல் ஆகியவையும் ஆரம்பகால அறிவியல் சிந்தனைகளில் அதிக
தாக்கம் செலுத்தின. அறிவியலின் ஒரு பகுதியான கணிதத்தை மனித கருத்தாக்கத்தின் வரைவியல்
என்றனர் கிரேக்கர்கள். மேலும் அரேபியர்களும் வரலாற்றில் அறிவியலுக்கு கணிசமான பங்களிப்பை
செலுத்தி இருக்கின்றனர். குறிப்பாக வானவியல், மருத்துவம் மற்றும் கணிதம் ஆகிய துறைகளுக்கு
அவர்களின் பங்களிப்பு அபாரமானது. கி.பி 9 ம் நூற்றாண்டு முதல் 13 ம் நூற்றாண்டு வரை ஈராக் தலைநகர் பாக்தாதில் அறிவியல் ஆராய்ச்சி மையம்
அமைத்து மேற்கண்ட துறைகளை வளர்ச்சி பெற செய்தனர். அவ்வகையில் கணிதத்தில் இயற்கணிதமும்,
ஒழுங்கணிதமும் அவர்களின் கண்டுபிடிப்பே. அங்கிருந்து அவர்கள் மேற்குலத்தோடு தங்கள்
கண்டுபிடிப்புகளை விரிவுபடுத்திக்கொண்டனர். இந்நிலையில் அறிவியலுக்கும், தத்துவத்திற்கும்
வேறுபாடு இல்லாத காலத்தில் அறிவியலாளர்கள் எல்லாம் இயற்கை தத்துவவியலாளர்கள்
(Natural philosophers)என்றழைக்கப்பட்டனர். மேலும் ஒவ்வொரு செயல்பாடும் மகிழ்ச்சியையும் அதற்கான விலையையும் உட்கொண்டிருக்கிறது என்ற சாக்ரடீஸின் கோட்பாடு அன்றைய
காலகட்டத்தின் சமூக எதார்த்தம். மாறிவரும் காலநிலைகளுடன் கூட அதனை தொடர்பு படுத்த முடியும்.
இது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
நவீன அறிவியல் மற்றும் தத்துவம் என்பது
மத்தியகிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் தொடர்பு கொண்டது. 16 ஆம் நூற்றாண்டு ஐரோப்பா நவீன
அறிவியலுக்கான சிறந்த தொடக்கத்தை அளித்தது. நியூட்டன், கோபர்நிகஸ் மற்றும் கலிலியோ
போன்றவர்கள் அதற்கான தொடக்கத்தை அளித்தனர். மரங்களிலிருந்து பழங்கள் கீழே விழுவதையும்,
கீழிருந்து மேலே எறியப்படும் பொருள் கீழே விழுவதையும அடிப்படை கேள்வியாகக்கொண்டு அதற்கான
விடையை தேடிய அறிவு தோற்ற செயல்பாடு நியூட்டனால் புவிஈர்ப்பு விசையாக அறியப்பட்டது.
அதுவரை மனிதர்கள் அவையெல்லாம் கீழே விழுந்து ஓய்வெடுத்துக்கொள்கின்றன என்று நினைத்தார்கள்.
ஆனால் அவை ஓய்வெடுத்துக்கொள்வதில்லை. மாறாக இயங்கிக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையை
நியூட்டன் போன்றவர்கள் வெளிக்கொணர்ந்தார்கள்.எல்லா பொருட்களுமே இயக்கநிலையை உடையவை
தான். அவை குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுகின்றன.
மேலும் அளவு மாறுபாடே தர மாறுபாடாகிறது. (Quantity will become as quality) இந்நிலையில் கோபர் நிகஸின் அறிவியல் கோட்பாடுகள் அதுவரை பிரபஞ்சம் குறித்த
ஐரோப்பாவின் நம்பிக்கையை பெருமளவில் தகர்த்தன. சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்றும்,
உலகம் தட்டை என்றும் நம்பியிருந்த மனிதர்களின் சிந்தனையை கோபர்நிகஸின் கோட்பாடுகள்
பெருமளவில் மாற்றின. உலகம் உருண்டை என்றும், பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என்றும்
உறுதியாக கோபர்நிகஸ் முன்வைத்தார். இதன் காரணமாக ஐரோப்பிய மத ஆதிக்கவாதிகளால் கொல்லப்பட்டார்.
பிந்தைய கட்டத்தில் இதனை அடிப்படையாக வைத்து மெகல்லன் கடல்வழி பயணம் மேற்கொண்ட போது
உலகம் தட்டையாக இருப்பதால் எப்படி இவர் திரும்பி வர முடியும் என்று ஒருசாரார் கேள்வி
எழுப்பப்பட்டதையும் இங்கு குறிப்பிடவேண்டியதிருக்கிறது. கலிலியோ இதன் தொடர்ச்சியே. நவீன இயற்பியலின் தந்தையாக
கலிலியோ அறியப்படுகிறார். வானவியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியதில் கலிலியோவிற்கு
பங்குண்டு. தொலைநோக்கி மற்றும் கோள்களின் இயக்கம் குறித்த முக்கிய கண்டுபிடிப்புகளை
நிகழ்த்தினார். எல்லா உண்மைகளும் ஒரு தடவை கண்டுபிடிக்கப்பட்டால் அவை புரிந்து கொள்வதற்கு
மிகவும் எளிதான ஒன்று என்றார். கலிலியோ தொடங்கி வைத்த இயற்பியல் மற்றும் வானவியல் சிந்தனை
முறைகள் உலகம் முழுவதும் நவீன அறிவியலில் பெரும் புரட்சியை நிகழ்த்தின. மேலும் டார்வினின்
உயிரியல் கோட்பாடும் உலக அளவில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. மனித உயிர்கள் எவ்வாறு
உருவாயின? எவ்வாறு அவை பெருக்கமடைகின்றன? தனி உயிர் எவ்வாறு பல்கி பெருகுகிறது என்பன
போன்ற சிந்தனைகளை டார்வின் முன்னெடுத்தார். அறிவியல் சிந்தனைமுறை உருவான சமகாலத்தில்
ஐரோப்பாவில் தத்துவவியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அறிவொளிகாலம் என்றழைக்கப்பட்ட
தருணத்தில் அறிவுவாதமும், அனுபவவாதமும் உருவானது. கணிதவியலாளரான தெகார்தே மற்றும் தத்துவவாதியான பேகன் ஆகியோர் மேற்கண்ட சிந்தனை
முறைகளை உருவாக்கினர். நான் சிந்திக்கிறேன். அதனால் இருக்கிறேன் என்று அறிவுவாதிகளும்,
புலன் அனுபவங்கள் தான் மனித அறிவை, செயல்பாட்டை தீர்மானிக்கின்றன என்று அனுபவவாதிகளும்
முன்வைத்தனர். இன்றைய ஐரோப்பாவின் பகுத்தறிவு சார்ந்த நவீன சிந்தனைமுறைகளுக்கு தொடக்கம்
இது தான்.
அறிவியல் கோட்பாடுகளின் நடைமுறை ரீதியான பயன்பாடு
தான் பொறியியலாகவும், தொழில்நுட்பமாகவும் அறியப்படுகிறது. வரலாற்றில் கற்காலம் என்றழைக்கப்பட்ட
தருணத்தில் கற்கள், மரங்களை கொண்ட கைக்கருவிகள் மற்றும் நகர்வை அடிப்படையாகக்கொண்ட
சிறிய இயந்திரங்கள் போன்றவை மனிதனால் உருவாக்கப்பட்டன . இது மேலும் பரிணாமடைந்து கற்கள்
மற்றும் மரத்தால் ஆன பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது நவகற்காலமாக அறியப்பட்டது.
நவீன அறிவியலின் தொடக்கம் 18 ஆம் நூற்றாண்டில் நவீன தொழில்நுட்பத்தின் உருவாக்கத்திற்கு
வழிவகுத்தது. தொழிற்புரட்சியானது அதுவரை நிலவிய சமூக கட்டமைப்பை மாற்றியது. அச்சு இயந்திரத்தின்
வருகை மனித சமூகத்தின் அறிவு தளத்தில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. பொறியியல் என்பது ஆரம்பகாலத்தில் கட்டுமான துறையில்
தான் பயன்படுத்தப்பட்டது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை பொறியியல்
என்பது கட்டுமானத்தை குறித்தது. அதே நேரத்தில் தகவல் தொடர்பு என்பது போக்குவரத்தை குறித்தது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் இது பல்வேறு துறைகளுக்கும் பரவியது. இதில்
கம்ப்யூட்டரின் வரவு மிக முக்கியமானது. உலகின் போக்கை தீர்மானித்ததிலும், சராசரி மனித
வாழ்க்கையின் பாங்கை மாற்றியதிலும் கம்ப்யூட்டர்
பெரும் பங்களிப்பை செய்திருக்கிறது. இன்றைய காலத்தில் உலகம் இதனடிப்படையில்
தான் இயங்கி வருகிறது.
தத்துவம் மற்றும் அறிவியலுக்கு இந்தியா
புராதன காலத்திலிருந்தே மிகப்பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கிறது. ஆரியபட்டர் தொடங்கி,
ஹோமிபாபா மற்றும் அப்துல் கலாம் வரை அதற்கு ஒரு நெடிய மரபு இருக்கிறது. ஆனால் பிரிட்டனின்
காலனியாதிக்க காலகட்டத்தில் இது பெரும் தேக்கநிலையை அடைந்தது. சர்.சி.வி ராமன் மற்றும்
ராமாநுஜம் போன்றவர்கள் இருந்தும் உலக அளவில் காத்திரமான அறிவியல் பங்களிப்புகளை செய்யமுடியவில்லை.
தற்போதைய இந்தியா வெறும் தொழில்நுட்ப மூளைகளை மட்டுமே உற்பத்தி செய்கிறது. தொழில்நுட்ப
மூளைகள் எப்போதுமே தர்க்க ரீதியான மனத்திற்கு அப்பாற்பட்டவை. ஓர் இயந்திரத்தை விட அதிகம்
உயர்ந்ததல்ல. அதே வேலையை மனித வடிவில் செய்யும் தன்மை கொண்டவை. மனிதனின் படைப்புத்திறனை
அழித்து விட்டு இயந்திரமயமான வாழ்க்கைக்கு அவனை மாற்றும் திறன் கொண்டது. ஆக இன்றைய இந்தியாவில் இயற்கை மற்றும் உயிரியல்
அறிவியல் அனைத்துமே பயன்பாட்டு அறிவியலாக
(Applied Science)மாறி விட்டன. கல்வித்துறையும்
இதையே ஊக்குவிக்கிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பெருகி விட்ட நிலையில் அறிவியல்
சார்ந்த படைப்புத்திறன் குறைந்து வருகிறது.
சுதந்திரத்திற்கு பிந்தைய 50 வருடங்களில் சொல்லும்படியான கண்டுபிடிப்புகள் எதுவுமே
நிகழ்த்தப்படவில்லை. மிகப்பெரும் தொழில்நுட்பதிறன்களுக்கு, கண்டுபிடிப்புகளுக்கு சுதந்திரமான இயற்கை அறிவியலே மிகப்பெரும் ஆதாரம்.
ஒரு நாட்டில் கணிசமான அளவிற்கு நிகழ்த்தப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அந்நாட்டின்
மனிதவள குறியீடு அதிகரிப்பிற்கு காரணமாக அமைகின்றன. மனிதவளர்ச்சி நிலையின் அடிப்படையாகவும்
அறிவியல் இருக்கிறது.
தத்துவத்தில் கடந்த நூற்றாண்டு வரை இந்தியா குறிப்பிடதக்க
நிலையை அடைந்தது. இன்றைய காலகட்டத்தில் ஐரோப்பாவை ஒப்பிடும் போது இன்னும் நிறைய தூரம்
கடக்க வேண்டியதிருக்கிறது. ஐரோப்பிய வாழ்க்கைமுறையை நகலெடுத்து நாம் அவர்களின் இயந்திரவாழ்க்கையை
உள்வாங்கிகொண்டிருக்கிறோம். மேம்போக்கான மனிதர்களாக படித்த மத்திய தரவர்க்கத்தினரை
மாற்ற இவை துணைபுரிகின்றன. இங்கு மனிதவள அடிப்படையே தகர்ந்து விடுகிறது. இந்நிலையில் இந்தியாவில் தத்துவம் வெறும் ஆன்மீக
தளத்தோடு சுருங்கி விட்டது நம்மை பொறுத்தவரை பின்னடைவு தான். தத்துவம் என்பது ஒரு நாட்டில்
அறிவு வளர்ச்சிக்கு, அதன் மனிதவள மேம்பாட்டிற்கு மிகவும் துணைபுரிகின்றது. இந்திய அரசானது
அறிவியல் மற்றும் தத்துவ வளர்ச்சிக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டியது அவசியம். அதன்
மூலம் மட்டுமே அறிவு வளர்ச்சி பெற்ற, இந்திய சமூகத்தை உருவாக்க முடியும்.
No comments:
Post a Comment