காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Friday, January 8, 2016

மாமழை போற்றுதும்….

சென்னையின் மழை விதி குறித்து





சென்னையில் கடந்த டிசம்பர் 1 ந்தேதி பெய்த மழை நீண்ட இடைவெளிக்குப்பிறகு சென்னையை அப்படியே தலைகீழாக புரட்டிப்போட்டு விட்டது. அதற்கு முந்தைய மாதத்தில் சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த மழையில் சென்னையின் பாதி மூழ்கியது. மழையின் தாக்கம் ஆட்சியாளர்களை பாதிக்காத காரணத்தால் அவர்கள் இது பற்றி கவலைப்படவில்லை. அம்மாவின் ஆட்சியில் அரசு அதிகாரி தும்முவதற்கு கூட அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலையில் மழை வெள்ள பாதிப்பின் வேர்கள் பற்றி ஆராய்வது அவசியமற்றதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தலைவிதியும், அது சார்ந்த மக்கள் மனோபாவமும் திமுக அல்லது அதிமுக என்ற இருமை நிலையாகி விட்டதால் ஆட்சியாளர்கள் பற்றிய விமர்சனம் பயனற்று போகிறது. காரணம் இதற்கு இரண்டு நபர்களுமே ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

செம்பரம்பாக்கம் ஏரியில்  கடந்த டிசம்பர் 1 ந்தேதி இரவில் ஒரேயடியாக சுமார் 3000 கன அடி நீரை திறந்து விட்டது தான் சென்னையின் பெரும் பாதிப்பிற்கு காரணம். இல்லாவிட்டாலும் பாதிப்பு இருந்திருக்கும் என்பதை தாண்டி பல விஷயங்களை பரிசீலிக்க வேண்டியதிருக்கிறது. எப்போதுமே இது மாதிரியான பேரிடர்களின் போது குறிப்பிட்ட காலம் அதைப்பற்றி பேசி விட்டு, மீண்டும்  அதே நிலைமை திரும்பாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் போன்றவை எடுக்கப்படுவதில்லை. காற்றின் பக்கங்களில் அது கலந்து விடுகிறது. அதே வேகத்தில் மக்கள் மனதில் இருந்தும் உடனடியாக மறைந்து விடுகிறது. சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமை தொடர்கிறது. வழக்கமான விதிமீறல்கள், முறைகேடுகள் , ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. கடந்த 25 ஆண்டுகால தமிழ்நாட்டு வரலாற்றை எடுத்துக்கொண்டால் இது தொடர்ச்சியான செயல்பாடாக இருப்பதை காணலாம்.


சமீபத்தில் சென்னையில் பெய்த மழை 100 ஆண்டுகளுக்கு பிறகான அதிகப்படியான மழை என்று சொல்லப்படுகிறது. ஆனால் 1985 ல் கூட இம்மாதிரி மழை பெய்திருக்கிறது. அந்த காலத்தில் கூட இம்மாதிரியான சேதங்கள், பாதிப்புகள் இல்லை. இந்தளவிற்கான ஆக்கிரமிப்பு சார்ந்த வளர்ச்சி இல்லையென்றாலும்  பெருமளவு சேதாரங்கள் தவிர்க்கப்பட்டன. கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட அதீத அநியாயமான வளர்ச்சி பல நீர்நிலைகளை, சதுப்பு நிலங்களை காலி செய்திருக்கிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இருவரும் ஆக்கிரமிப்பு சார்ந்த பெருமுதலைகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டதால் பல ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் ஆற்றங்கரைகள் தாரைவார்க்கப்பட்டன. குறிப்பாக தனியார் கல்லூரிகள் தான் பெருமளவில் இந்த ஆக்கிரமிப்பு செயல்பாட்டை நிகழ்த்தின. தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் ஆய்வு படி 80 களில் சென்னையில் 600க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்தன. இதன் தொடர்ச்சியில் 2008 ல் அதில் ஒருபகுதி மட்டுமே அதாவது வெறும் 100 மட்டுமே தேறின. அதாவது நீரை உருப்படியாக தேக்கி வைக்கும் நிலையில் இருந்தன. ஆனால் அதன் பிறகான 7 வருடங்களில் நிலைமை இன்னும் மோசமானது. முன்னைவிட  ஆக்கிரமிப்புகள் இன்னும் அதிவேகத்தில் நடந்தேறின. அரசியல்வாதிகள்-அதிகாரிகள்- பெருமுதலைகள் ஆகிய முத்தரப்பு உறவு முறை சென்னையின் நீர்நிலைகளை காலி செய்தன . வளர்ச்சி என்ற மோஸ்தரின் பின்னால் இந்த தகிடுதத்தங்கள் மறைக்கப்பட்டன. யாருக்கான வளர்ச்சி என்ற கேள்விகள் உள்ளார்ந்து மறைந்து போனதால் இம்மாதிரியான குற்றச்செயல்கள் நீரோட்டம் போல தொடர்ந்தன.  நீர்வளத்துறை அறிக்கைப்படி 80 களில் 19 பெரிய ஏரிகளின் மொத்த பரப்பு 1,130 ஹெக்டேராக இருந்தது. அது 2000 த்தின் தொடக்கத்தில் 645 ஹெக்டேராக சுருங்கியது. மேலும் மழைநீர் வடிகால்கள் பல தூர்வாரப்படவில்லை. இது தமிழ்நாடு முழுவதுமான நிலைமையாக இருக்கிறது.  சென்னையில் சுமார் 2847 கிலோமீட்டர் நீளமுள்ள நகர்புற சாலைகளில் வெறும் 855 கிலோமீட்டருக்கு மட்டுமே மழைநீர் வடிகால்கள் இருக்கின்றன. இது பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களால் காலிசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் சுமார் 2000க்கும் மேற்பட்ட சட்டவிரோத கழிவுநீர் குழாய்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றுடன் சட்டவிரோதமான முறையில் இணைக்கப்பட்டிருக்கின்றன.கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் கூட்டு செயல்பாட்டால் இது சாத்தியமாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே கடந்த 49  ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆளுகின்ற சூழலில் தொடர்ச்சியாக அந்த கட்சிகளில் நகர்புறம் சார்ந்து உருவாகி வருகின்ற உதிரிகள், ரவுடிகள், குறுநில மன்னர்கள் ஆகிய எல்லா தரப்பினரும்  முன்னிலை பெறுகின்றனர். அவ்வகையில் 2006 முதல் சென்னையில் அதிகமும் ரவுடிகள் கவுன்சிலர்களாக மாறினார்கள். விளைவு சென்னையின் நடைபாதை ஆக்கிரமிப்பு, வீடு கட்டுவதில் கமிஷன், வர்த்தக நிறுவனங்களில் தலையீடு, ஆறு, ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்தல் போன்றவை நடந்தேறின. ஒரு கட்டத்தில் அதுவே வழக்கமான (Routine) நிகழ்வாக மாறியது. பின்னர் 2011 காலகட்டத்திலும் அது தொடர்ந்தது. ஆக சென்னை நீர்நிலைகள் என்பதை தாண்டி நிலங்களாக மாறிய திருவிளையாட்டின் பின்னால் சென்னை மாநகராட்சி இருக்கிறது.




கடந்த 25 ஆண்டுகளில் சென்னை பெருமளவு வீங்கி இருக்கிறது. இந்தவீக்கம் ஒரு பக்கத்தில் மத்திய தரவர்க்கம் மற்றும் உயர் மத்திய தரவர்க்கத்திற்கு  உதவிகரமாக இருந்தது. சென்னை புறநகரில் புதிதாக முளைத்த பிளாட்டுகள், வில்லாக்கள் இவர்களின் கனவுகளாக இருந்தன.  மற்றொரு புறத்தில் மாநகரை அப்படியே புரட்டி போட்டது. காரணம் ரியல் எஸ்டேட் மாபியாக்கள் தான். இவர்களால். சென்னையின் பெரும்பாலான நீர்நிலைகளின் கரையோரங்கள் பிளாட்டுகளாக மாறின. கடந்த10 ஆண்டுகளில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 35 க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதன் பின்னணி இந்த நிலவிவகாரங்களே. மேலும் தென்மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு சென்னையை நம்புவதை தவிர வேறு வழி இல்லாத நிலைமை ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட கட்டத்தில் அவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்தார்கள். இது தவிர பிற மாவட்டங்களில் இருந்தும் பெருவாரியான மக்கள் ஒரு கட்டத்தில் சென்னையை நோக்கி முன்னேறினர். இதன் தொடர்ச்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னையில் கோடைகாலத்தில் கடும் வறட்சி, குடிநீர்  பற்றாக்குறை ஏற்பட்டது. கோடைகாலம் தொடங்குவதற்கு முந்தைய மாதத்தில் மழை பெய்தால் கூட அதை தேக்கி வைக்க வழிமுறைகள் இல்லாததால் அத்தனை மழைநீரும் வீணாகிப்போனது. இப்படியான ஒழுங்கற்ற நகர வளர்ச்சியானது  இயற்கையின் போக்கை பெருமளவில் திசைமாற்றம் செய்தது. விளைவாக ஒரு பகுதியில் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. பிற பகுதிகளில் தண்ணீர் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் சென்னைவாசிகள் தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி படையெடுத்தார்கள். சென்னை நகர மக்களாலும், அதிகாரவர்க்கத்தாலும்  இவ்வாறாக தொடர்ந்து சிதைக்கப்பட்ட சென்னை தன் கோபத்தை மிக நீண்ட மழையாக வெளிப்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட இயற்கையமைப்பு இருந்திருக்கிறது. இது வித்தியாசமான புவியமைப்பை கொண்டிருக்கிறது. ஐவகை நிலங்களில்  நான்கு வகை நிலங்கள் தமிழ்நாட்டில் வலுவாக இருந்திருக்கின்றன. இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக வளர்ச்சி என்ற பெயரில் அநியாயமாக இயற்கை சுரண்டல் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. பல ஆறுகளில் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, ஏரிகளின் ஆக்கிரமிப்பு, நீர்வழித்தடங்களை மறித்தல் போன்ற பல அக்கிரமங்கள் நடந்தன. இந்நிலையில் இதனை தடுத்து நிறுத்தவேண்டியது அரசின் கடமை. அரசு மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் சென்னையில் மீண்டும் படகுபோக்குவரத்தை தொடங்கும் சூழல் ஏற்படலாம்.


சென்னையின் நிலப்பகுதியில் படகுபோக்குவரத்தை தவிர்ப்பதற்காக அதன் மையத்தன்மையை பரவலாக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் என்று விழுங்கி வீக்கமடையும் அதன் புவியமைப்பு தன்மையை  மாற்ற வேண்டியதிருக்கிறது. எப்போதும்  பின் தங்கி இருக்கும் தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சதவீத அளவு சென்னையை நகர்த்தலாம். கொங்கு மாவட்டங்களில் மற்றொரு சதவீத பகுதிகளை நகர்த்தலாம். சென்னையை சுற்றி உருவாகும் புதிய தொழில் முதலீடுகளை இந்த பகுதிகளுக்கு திருப்பலாம். அல்லது அவர்களாகவே திரும்புவதற்கான சூழலை உருவாக்கலாம். மராட்டியத்தில் மும்பைக்கு இணையாக உருவான புனே,நாக்பூர் மாதிரி தமிழ்நாட்டை மாற்ற வேண்டும். அதற்காக சாத்தியங்கள் வெகுதூரத்தில் இல்லை. மிக அருகிலேயே இருக்கிறது. மேலும் இயற்கை அரசியலை எல்லா அரசியல் கட்சிகளும் தங்களின் செயல்திட்டத்தில் இணைக்க வேண்டும்.

இந்தியாவில் பெரும்பாலும் இயற்கைவளங்கள் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. அதே நேரத்தில் தொடரும் கழக ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் இதனை வளர்ச்சி கருத்துருவத்தை மீறி தடுத்திருக்க முடியும். ஆனால் அவர்களிடம் அது பற்றிய நேர்மறையான எண்ணங்கள் இல்லாததால் இயற்கை சுரண்டல் அவர்களின் சுயநலனுக்கான ஒன்றாக மாறியது. பல இயற்கை அழிப்பு மாபியாக்களிடம் கூட்டு வைத்துக்கொண்டு மதுரை மாவட்டத்தில் அத்தனை மலைகளையும் காலி செய்தார்கள். மேலும் பாலாறு, தாமிரபரணி, தென்பெண்ணை ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு  அவை அனைத்தும் பாழாய் போயின. இங்கு மாபியாக்கள் மற்றும் இரு திராவிட கட்சிகளின் கூட்டணி வலுவாக இருந்தது. அவர்களுக்கு தேர்தலில் நிதியளிப்பவர்களாக இவர்கள் மாறினார்கள். ஒழுங்கு முறையற்ற, வரைமுறையற்ற, சமனற்ற வளர்ச்சி கட்டமைப்பு கடந்த 20 ஆண்டுகளில் சென்னையை அதிகம் பாதித்திருக்கிறது. இதனை மாற்ற வேண்டிய, அந்த மாற்றத்தை உணர வேண்டிய அவசியத்தை இந்த மாமழை ஏற்படுத்தி சென்றிருக்கிறது. வழக்கமாக இயற்கை பேரிடர் என்று ஒதுக்கி விட்டு, நிவாரணம் என்ற தற்காலிக தீர்வை மட்டும் ஏற்படுத்தி விட்டு கடந்து சென்று விட்டால் அடுத்த தலைமுறை எல்லாவற்றையும் இழக்க வேண்டியது  வரும். இதனை ஆளும் வர்க்கம் முதல் அனைத்து தரப்பினரும் உணர வேண்டிய தருணமிது.


mohammed.peer1@gmail.com

No comments: