காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, February 1, 2016

கல்வி தனியார்மயமாக்கலின் விளைவுகள்- தமிழ்நாட்டை முன்வைத்து




விழுப்புரம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவிகள் மூன்று பேர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட கொடூரம் தமிழ்நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்கள் மீதான அவநம்பிக்கையை மேலெழ செய்கின்றன. முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் நுட்பத்தை போன்று கல்வியையும் மாற்ற தனியார் கல்வி நிறுவன முதலாளிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை அதை முதலாளிகள் எட்டி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.  குறிப்பாக மருத்துவமும், பொறியியலும் அந்த நிலையை அநேகமாக எட்டி விட்டன. மிச்சமிருப்பவை பிற உயர்கல்வி பிரிவுகள். அதுவும் இன்னும் சில ஆண்டுகளில் இது மாதிரி ஆகி விடும்.
ஏன் கல்வியும், மருத்துவமும் சேவைத்துறையாக அரசிடம் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக, அடிப்படை கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது? அதற்குள் பல அறங்களும், சமூகம் மீதான கரிசனமும் ஒளிந்திருக்கின்றன. காரணம் அரசு மட்டுமே மேற்கண்ட துறைகளில் அடிப்படை அறத்தையும், பரவலாக்கலையும் ஏற்படுத்த முடியும். மனிதனின் அடிப்படை உரிமைகளாக மேற்கண்ட இரண்டும் இருப்பதால் அதனை அடைவதற்கு பரந்துபட்டு விளிம்பு நிலை மனிதர்களுக்கு அவை கிடைக்க, அவற்றை மேற்கண்ட மனிதர்கள் அடைவதற்கு அரசு மட்டுமே இரண்டையும் அளிப்பது சரியானதாக இருக்க முடியும். தனியாரால் ஒருபோதும் மேற்கண்ட இரண்டையும் பரவலாக்க முடியாது. அடித்தள மக்கள் அதன் பலன்களை இவர்களால் அடைய முடியாது. வளர்ந்த நாடுகள் கூட உயர்கல்வியை சாதாரண மனிதர்களும் அடைய முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் இந்தியாவில்/தமிழ்நாட்டில் கல்வியும், மருத்துவமும் தனியாரை நோக்கி குவிந்து வருவது மிக ஆபத்தானது. அதே நேரத்தில் அரசும் தன் கடமையிலிருந்து விலகுவது  சரியான அணுகுமுறையல்ல. ஆட்சி செயல்பாடும் அல்ல. இப்படியான நிலையில் தான் தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகளின் செயல்பாடு பற்றி பார்க்க வேண்டியதிருக்கிறது.ரியல் எஸ்டேட் மாபியாக்கள், மணல் மாபியாக்கள், மோசடி வியாபாரிகள், அரசியல்வாதிகள் இவர்கள் தான் இன்றைய தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள். சிறு அழிவு ஒன்று பேரழிவை நோக்கி திரும்ப காத்திருப்பதன் அறிகுறிகள் இவை. அது இப்போதே தென்பட ஆரம்பித்து விட்டது.



பன்னாட்டு நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ஒருவரிடத்தில் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்த போது தற்போது தமிழ்நாட்டில் பொறியியல் பட்டதாரிகளின் தரம் குறித்து கவலையுடன் குறிப்பிட்டார். இப்போதெல்லாம் பொறியியல் முடித்து வெளியே வரும் பல இளைஞர்களிடம் துறை சார்ந்த எந்த அறிவும் இருப்பதில்லை. வலுவான தகவல்தொடர்பு திறனும் இருப்பதில்லை.  இதன் காரணமாக பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் இவர்களை வேலைக்கு எடுக்க தயங்குகின்றன என்றார். இந்த போக்கு இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மனித வளர்ச்சி குறியீட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். அவர் சொன்னபடியே தற்போதைய புள்ளிவிபரம் இந்தியாவில் தரமற்ற பொறியியல் பட்டதாரிகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் மனித வளர்ச்சி குறியீட்டில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டிற்கு இது மிகப்பெரும் சவாலான விஷயம் தான்.



இந்தியாவை பொறுத்தவரை 80 களில் தான் கல்வியில் தனியார் மய கொள்கை புகுத்தப்பட்டது. அதுவரை அரசு பொறியியல் கல்லூரிகளும், சில அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இருந்தன. உயர்கல்விக்கான மானியத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு குறைத்ததன் காரணமாக பல மாநில அரசுகள் உயர்கல்வியில் தனியார் மயத்தை அமல்படுத்த தொடங்கின. இதனால் அதுவரையிலும் ஓரளவு தரத்துடன் இருந்து வந்த உயர்கல்வி முறை கேள்விக்குறியானது. குறிப்பாக தொழிற்கல்வி முறை அதன் தொடர்ச்சியான தரத்தை இழந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. மேல்நிலை படிப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் சிரமமின்றி உயர்கல்வியில் சேர்ந்த காலம் மாறி அவர்கள் உயர்கல்விக்காக லட்சங்களை செலவிடும் நிலைமைக்கு இது தள்ளியது. மருத்துவ படிப்பில் தனியார்மயம்  குறிப்பிட்ட அளவாக இருந்து கொண்டு பொறியியல் சார்பான தொழிற்கல்வி படிப்புகள் எவ்விதமான வரைமுறையும் இல்லாமல் தனியார்மயமாக்கப்பட்டன. இதனால் தனியார் மற்றும் கல்வி சார்ந்த அதிகாரவர்க்கத்தினரிடையே இனம் புரியாத கூட்டு உருவாகி ஊழலுக்கு வழிவகுத்தது

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.  இந்த எண்ணிக்கை ஒருவேளை காய்கறி கடைகளை விட அதிகமாக இருக்கக்கூடும். இந்த வருடம் அண்ணா பல்கலைகழகம் நடத்திய கலந்தாய்வில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருக்கின்றன. கடந்த வருடத்தை விட இது அதிகம். நிர்வாக ஒதுக்கீடு இடங்களை சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். பொறியியல் சார்ந்த படிப்புகள் மீதான ஆயாசமும், அவநம்பிக்கையும் இன்றைய தலைமுறைக்கு ஏற்பட்டதே இதற்கு காரணம். இந்த நிலைமைக்கு வேலைவாய்ப்பு மற்றும் பொறியியல் கல்லூரிகளின் தரம் ஆகியவை இரு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. 90 களின் இறுதிவரை தமிழ்நாட்டில் சுமார் 100 கல்லூரிகள் மட்டுமே இருந்தன. அப்போது வரை பட்டதாரிகளின் தேவைக்கும், அவர்களின் துறை சார்ந்த வேலைவாய்ப்பிற்குமான இடைவெளி மிக குறைவாக இருந்தது. பின்னர் அதிக அளவில் பணப்பரிமாற்றம் நடைபெறும் கௌரவமான துறையாக அதிகாரவர்க்கம் இதனை கண்டறிந்ததன் விளைவாக அணை நீர் போன்று மேலும் பல தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அன்றிலிருந்து கடந்த வருடம் வரை வெள்ளப்பெருக்காக பல கல்லூரிகள் வர ஆரம்பித்தன. ஓய்வு பெற்ற அரசியல்வாதிகள், கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மாஜிகள், ஐந்து வருடம் பதவி சுகத்தை அனுபவித்து கோடிகளை அடைந்தவர்கள், ரியல் எஸ்டேட் பேர்வழிகள் என பலர் இந்த உயிர்ப்பான துறையில் புகுந்தனர். கையில் சில கோடிகள் இருந்தால் போதும். சில ஏக்கர் நிலங்களை விலைகொடுத்தோ அல்லது வளைத்து போட்டோ பல இடங்களில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்வி சார்ந்த அதிகாரவர்க்கத்தை கவனித்து விட்டு வெறும் தூண்கள் மட்டுமே போடப்பட்ட இடங்களுடன் பலர் கல்லூரிகளை ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியான தாக்கம் தான் இந்த துறையில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் சகலவிதமான அவலநிலைக்கும் காரணம்.

கோடிகள் சார்ந்த கனவு காரணமாக பொறியியல் கல்லூரிகளை தொடங்கியவர்கள் பிற்காலத்தில் சந்தை பொருளாதாரம் தங்களை அழித்து விடும் என்று கற்பனை செய்திருக்கமாட்டார்கள். கல்வியை வெறும் பண்டமாக மாற்றிய இவர்களுக்கு அறிவு பரிமாற்றம் என்பது கடைசரக்கு போன்றது தான். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கல்லூரிகள் தவிர தமிழ்நாட்டின் பெரும்பாலான கல்லூரிகள் இன்றைக்கு தரமிழந்து காட்சியளிக்கின்றன. பொறியியலில் தரம் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் நிலைமை இருக்கிறது. பல கல்லூரிகளில் போதிய கட்டிடங்கள், ஆய்வுகூடங்கள், பிற வசதிகள் இல்லை. சில இடங்களில் ஒரே வளாகத்தினுள் பல கல்லூரிகள் இருக்கின்றன. இதனால் மாணவர்களுக்கு தாங்கள் எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்ற உணர்வு உருவாவதில்லை. மேலும் ஒரு கல்லூரி சார்ந்த ஆசிரியர்களை ஒன்றிற்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு பயன்படுத்துவது. இதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து கணக்கு காட்டுவது, (இதில் தமிழ்நாட்டில் 64 கல்லூரிகள் கண்டறியப்பட்டிருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது) மாணவர்களிடம் கல்வி கட்டணம் மட்டுமே வசூலித்த காலம் போய் அவர்கள் வளாகத்தினுள் காலையில் உள்நுழைவதில் தொடங்கி, மாலையில் வீடு வந்து சேர்வது வரை எல்லாவற்றிற்கும் கட்டணம் வசூலிப்பது போன்ற கொடூரங்கள் சர்வசாதாரணமாக அரங்கேறி வருகின்றன. மாணவர்களின் தலைமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொன்றிற்கும் கட்டணம் நிர்ணயம் செய்து இவை வசூலிப்பதால் பல நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை தட்டிக்கேட்கும் பல மாணவர்களும், பெற்றோர்களும் நிர்வாகத்தால் மிரட்டப்படுகின்றனர் அல்லது கல்லூரிகளிலிருந்து நீக்கப்படுகின்றனர். ஏதாவது ஒரு காரணத்திற்காக மாணவர்கள் நீக்கப்பட்டாலோ அல்லது அவர்களாக இடைநிற்றல் செய்தாலோ நான்கு வருடத்திற்காக கட்டணங்கள் பல கல்லூரிகளில் வசூலிக்கப்படுகின்றன. இதனை சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்காவிட்டால் அவர்களின் சான்றிதழ் மறுக்கப்படும்.  தனியார்கல்வி முறை கொடூரத்தின் உச்சம் இது.
அரசு துறைகளை பொறுத்தவரை சிவில் பொறியாளர்களுக்கு மட்டுமே அதிக அளவில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் அரசு பொறியியல் கல்லூரிகளும் மிகக்குறைவு. இதனால் பொறியியலில் முதுநிலை படிப்பு படித்தவர்கள் பலர் இந்த கல்வி வணிகர்களின் வலைக்குள் அகப்படுகின்றனர். இவர்களுக்கு  இன்னமும் பல கல்லூரிகள் நான்காம் சம்பள கமிஷன் வரைமுறைப்படி தான் ஊதியம் வழங்கி வருகின்றன. இது  தற்போதைய சூழலில் ஹோட்டல் பணியாளர்களின் மாதச்சம்பளத்தை விட குறைவானது. இம்மாதிரி மிகக்குறைவான ஊதியம் வழங்குவதில் படித்தவர்கள் நிறைந்த குமரிமாவட்டம் தான் முதலிடம் வகிக்கிறது. இதனால் பலருக்கு கற்பித்தல் மீதான ஆர்வம் குறைவதுடன், தங்களை மேம்படுத்திக்கொள்ளும் திறனும் குறைகின்றன. மேலும் பாடம் சார்ந்த அறிவும் பல பேராசிரியர்களுக்கு குறைவாக இருக்கிறது. துறையில் அன்றாடம் நிகழும் மாற்றங்கள் குறித்த அறிவை அவர்கள் தேடிக்கொள்வதில்லை. இது குறித்து பயிற்சியளிக்கும் தரமணியில் உள்ள அரசு நிறுவனத்திற்கு பெரும்பாலானோர் செல்வதில்லை. மேலும் பல தனியார் கல்லூரிகள் இதனை செலவாக கருதி தங்கள் ஆசிரியர்களை அனுப்புவதில்லை. இதனை மீறி தங்கள் அறிவையும், கற்பித்தல் திறனையும் வளர்த்துக்கொள்ளும் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் ஒரு கட்டத்தில் விரக்தியடையும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.



பள்ளிக்கல்வி மட்டுமல்லாது உயர்கல்வியும் தனியார்மயமாக்கப்பட்டதன் நீண்டகால மற்றும் உடனடியான விளைவுகளை சமூகம் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறது. கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகியதால் இன்று சாதாரண மனிதன் கல்விக்காக பெருஞ்செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் அரை மாபியாதனத்தை நோக்கி நகர்வதால் அதனை யாராலும் கட்டுப்படுத்த இயலாத நிலை உருவாகி இருக்கிறது. மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கு கூட இந்த கல்லூரிகளால் உத்தரவாதத்தை வழங்க முடியவில்லை. இதனால் கல்விக்கடன் பெற்று பொறியியல் படித்த மாணவர்கள் பலர்  வாங்கிய கடனை அடைக்க  துறை சாராத சாதாரண வேலைகளுக்கு செல்லும் நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். சென்னை மாநகரில் இதை சாதாரணமாக பார்க்க முடிகிறது. அரசு பள்ளிகளை காலி செய்தது போன்றே உயர்கல்வியில் குறைந்த அளவில் இருக்கும் அரசு நிறுவனங்களையும் காலி செய்யும் முயற்சி இலாவகமாக நடைபெற்று வருகிறது. இந்த  அபாயங்களை அதிகாரவர்க்கம், ஆளும் வர்க்கம், கல்வியாளர்கள்  கண்டறிந்து அதனை போக்க உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இரு தலைமுறைகளின் அழிவை யாராலும் தடுக்க முடியாது.

No comments: