காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Tuesday, February 9, 2016

ஐ.எஸ் இன் பாரிஸ் தாக்குதல்


பிரான்சு தலைநகர் பாரிஸில் சமீபத்தில் நடந்த தாக்குதலானது மேற்கத்திய உலகிற்கு சில செய்திகளை சொல்லி விட்டு சென்றிருக்கிறது. .எஸ் அமைப்பு பொறுப்பேற்ற இந்த தாக்குதலில் 126 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிரான்சு போன்ற பலம் பொருந்திய மேற்கத்திய நாடுகள் இம்மாதிரியான தாக்குதல்களை எதிர்கொள்வது இது முதல்முறையாக இருக்கக்கூடும். இந்த தாக்குதலில் இறந்தவர்களில் கணிசமானோர் முஸ்லிம்கள் என்ற தகவல் இந்த பிரச்சினையின் வேர்களை ஆராய நம்மை தூண்டுகிறது.

கடந்த ஜனவரியில் இதே பாரிஸில் சார்லி ஹெப்டோ என்கிற பிரபல கார்ட்டூன் பத்திரிகை மீது நடந்த தாக்குதல் இதன் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. பிரபல பிரெஞ்சு நாவலாசிரியரான மிஷேல் ஹோல்பர்க் இன்  Submission நாவல் குறித்த கார்ட்டூன் தான் அந்த பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது. அதில் ஹோல்பர்க்கின் நாவல்  இஸ்லாமிய அடிப்படைவாத விமர்சனத்தை தாங்கி நிற்கிறது. அதாவது 2020 ல் பிரான்சில் இஸ்லாமிய தலைவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்அப்போது பிரான்சில் அதிகாரபூர்வமாக இஸ்லாமிய ஆட்சி ஏற்படும். பர்தா, கசையடி, கல்லெறிதல்மரண தண்டனை போன்ற தண்டனை முறைகள் அமல்படுத்தப்படும். இதன் மூலம் பிரான்சு ஷரியா ஆட்சிக்கு உட்படும் என்றார். இதனை கேலிச்சித்திரமாக வெளியிட்டிருந்தது அந்த பத்திரிகை. இதனால் கோபங்கொண்ட தீவிர மனநிலை கொண்ட அந்நாட்டு முஸ்லிம் இளைஞ்ர்கள் பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கியுடன் புகுந்து ஆசிரியர் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்களை சுட்டுக்கொன்றனர். உலகை அதிகமாக உலுக்கிய இந்நிகழ்வு  உலகிலேயே மிக மோசமான கண்டிக்கத்தக்க படுகொலையாகும்.
இந்தியாவின் மத சார்பின்மை என்பது அரசு அனைத்து மதங்களையும் சமமாக பாவித்தலாகும். ஆனால் மேற்கத்திய நாடுகளின் மதசார்பின்மை என்பது அரசானது அனைத்து மதங்களையும் விட்டு விலகி இருத்தலாகும். இந்நிலையில் அந்நாட்டு குடிமக்களுக்கு  கட்டற்ற கருத்து சுதந்திரம் இருக்கிறது. இதன் மூலம் தனிநபர் ஒருவர் அங்கு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசவும், எழுதவும் முடியும். எவரும் கேள்வி கேட்க முடியாது. அவதூறு வழக்கு தொடர முடியாது. இப்படியான சூழலில் மேற்கத்திய பத்திரிகைகள் கருத்து சுதந்திரத்தின் எல்லை எதுவரை என்பதை தெளிவாக அறிந்திருக்கின்றன. ஆனால் தற்போது நம்மூர் தக்காளி சட்டினி கதையாக மேற்கத்திய பத்திரிகைகள் நடந்து கொள்கின்றன என்ற விமர்சனம் பரவலாக எழுகின்றது. குறிப்பாக இஸ்லாத்தைப்பற்றி மட்டுமே அந்த பத்திரிகைகள் அதிகம் விமர்சிக்கின்றன. பிற மதங்களை பற்றி அதிகமும் அவர்கள் எழுதுவதோ, பேசுவதோ இல்லை என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது. பயங்கரவாதிகள் செய்யும் செயல்களுக்காக முஹம்மது நபியை விமர்சிக்கும் அவர்கள் பாலஸ்தீனில் இஸ்ரேல் செய்யும் அநியாயங்களுக்காக மோசஸை விமர்சிப்பதில்லை. இந்நிலையில் ஒரு தடவை மிஷேல் ஹோல்பர்க் நேர்காணல் ஒன்றில்  இஸ்லாம் பற்றிய கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்தார். “ நான் இஸ்லாத்தை வெறுக்கவில்லை. அதே நேரத்தில் அது குறித்து அச்சப்படுகிறேன். காரணம் குர் ஆனின் வசனங்களை முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் தீவிர செயல்பாட்டிற்கு சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதே அது. நான் குர் ஆனை முழுமையாக படித்தே பிறகு இந்த முடிவிற்கு வந்தேன்என்கிறார் ஹோல்பர்க். இந்நிலையில் தற்போது இராக்கிலும், சிரியாவிலும் .எஸ் அமைப்பு  இதனடிப்படையில் தான் வேலையை செய்து வருகிறது. தன்னை உலக முஸ்லிம்களின் தலைமை அரசாக பாவித்துக்கொண்டு தான் செய்யும் செயல்கள் அனைத்தும் புனிதப்போராக, இறைவனுக்கு பக்கத்தில் தங்களை அமர்த்தும் நடவடிக்கையாக அவர்கள் பார்க்கிறார்கள். மத்தியகிழக்கு பிராந்தியத்தையும், உலகையும் அதிகமும் அச்சுறுத்தும் செயல்பாடு இது.




ஐரோப்பிய நாடுகளில் பிரான்சு தான் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்கள் தொகையை கொண்டது. இதில் கணிசமானோர்  அல்ஜீரியா, டுனிசீயா, எகிப்து போன்ற ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள். எழுபதுகளில் இவர்கள் பல்வேறு காரணங்களுக்காக பிரான்சுக்கு புலம்பெயர்ந்தனர். மேலும் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாறிய உள்நாட்டு பூர்வ குடிகளும் உண்டு. இந்நிலையில் பிரான்சு  மத்தியகிழக்கில் தங்கள் நாட்டினரை பாதுகாக்க வேண்டி ,எஸ் அமைப்பிற்கு எதிராக தாக்குதல் தொடுத்ததால்  கோபங்கொண்ட .எஸ் அமைப்பு அதற்கு பதிலடியாக பாரிஸ் நகரில் புகுந்து அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றது. பிரான்சு அரசின் கொள்கையோடு, நிலைபாட்டோடு நேரடியாக சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஒருவர் எந்தவிதத்திலும் நியாயப்படுத்தமுடியாது. இதன் மூலம் அவர்கள் தங்களின் குறிக்கோள்களை அடைய முடிவதில்லை. அதே நேரத்தில் இந்த தாக்குதலின் மூல காரணங்கள் ஆராயப்பட வேண்டியவை.

புரட்சிகர வரலாற்று பாரம்பரியமிக்க பிரான்சில் போராட்டங்களுக்கும், புரட்சிகளுக்கும் பஞ்சமில்லை. 19 ஆம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சு  புரட்சியானாலும் சரி, அதன் பிறகு நடந்த விவசாய போராட்டங்களானாலும் சரி  எல்லாம் அந்நாட்டு சிவில் சமூகத்தின் பங்களிப்புடன், தன்னெழுச்சியாக நடந்தவை. அது மாதிரியே 1968 ல் பாரிஸில்  நடந்த மாணவர் புரட்சியும் பிந்தைய காலத்தில் பிரான்சின் சமூக, கலாச்சார, அறவியல் மாற்றங்களை ஏற்படுத்தியது. பிந்தைய கட்டத்தில் பிரான்சில் கணிசமாக வாழும் யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும்  இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல்கள் ஏற்பட்டன. அங்குள்ள பெரும்பான்மை சமூகமும் ஒரு கட்டத்தில் யூதர்கள் பக்கம் நின்றதால் அங்குள்ள முஸ்லிம்கள் ஆதரவற்ற தனித்தீவுகளாக மாறிப்போனார்கள். இந்நிலையில்  .எஸ் அமைப்பின் உருவாக்கம், அதன் செயல்பாடுகள் மற்றும் கருத்தியல் என்பது பிரான்சு நாட்டு இளைஞர்களை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.  


ஈராக்கில் ஷியா பிரிவு அரசிற்கு எதிராக போராடிய குழுவினர் ஒன்றிணைந்து  பிந்தைய கட்டத்தில் .எஸ் ஆக மாறினார்கள்.  இதன் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக உட்கொண்டு அதனையே  தங்களின் தீவிர செயல்பாடுகளுக்கான கருத்தியலாக தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதன் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருந்தது. ஐ.எஸ் தலைவர்கள் அமெரிக்கா சென்று இரகசியமாக அதிபரை சந்தித்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாயின. தலிபான்களையும், அல்கொய்தாவையும் உருவாக்கிய அமெரிக்காவின் தற்போதைய கண்டுபிடிப்பு தான் ஐ.எஸ் என்பது உலகளாவிய அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. ஒரே நேரத்தில் தன் சொந்த எதிரிகளையும், நண்பர்களையும் அது உருவாக்கி வந்திருக்கிறது. அதன் நோக்கம் மத்திய கிழக்கில் எப்போதும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவ வேண்டும் என்பதே. இந்நிலையில் ஐ.எஸ் அமைப்பு தங்களின் எதிரிகளை ஈவிரக்கமின்றி கொடூரமாக கொலை செய்கின்றது. தங்களின் நெட்வெர்க்கை மத்தியகிழக்கை தாண்டி உலகம் முழுவதும் பரப்ப முயற்சிக்கிறார்கள்.  இதனால் உலகளாவிய ஆயுத வியாபாரிகளின் காட்டில் தற்போது பண மழை பொழிகிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் கைப்பற்றிய எண்ணெய் கிணறுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அரபு பணக்காரர்களின் நிதி உதவி போன்றவை .எஸ் அமைப்பை இன்னும் ஊக்கம் கொள்ள செய்கின்றன. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் மீதும் அவர்களால் தாக்குதல் நடத்த முடிகிறது. அமெரிக்காவும் பிற ஐரோப்பிய நாடுகளும் மத்தியகிழக்கின் மீது காலங்காலமாக செலுத்தி வந்த ஆதிக்கம் இதன் மூலம் சவாலுக்கு உள்ளாகி இருக்கிறது. பிரான்சு தாக்குதலையும் நாம் இந்த கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டியதிருக்கிறது.

( நக்கீரன் வார இதழில் நான் எழுதிய கட்டுரை)

No comments: