காஞ்சா
அய்லய்யா இந்தியாவின் புகழ்பெற்ற தலித் அரசியல் சிந்தனையாளர். நான் ஏன் இந்து அல்ல,
பின் இந்து இந்தியா, அய்யங்காளி போன்ற நூல்களின் ஆசிரியர். தற்போது ஐதரபாத் மௌலானா
அபுல்கலாம் ஆசாத் உருது பல்கலைகழகத்தில் சமூக நீதி ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.
பசுவதை தடை சட்டம் குறித்து இணைய இதழுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழாக்கம் இது.
கேள்வி:
மாட்டிறைச்சி தடை என்பது இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களில் சில பிரிவினர்
மீதான கலாச்சார தடை என்பதாக நினைக்கிறீர்களா?
காஞ்சா
அய்லய்யா: நிச்சயமாக இது கலாச்சார தடை. குறிப்பாக உள்ளார்ந்த
குழுக்களான தலித்கள் மற்றும் பழங்குடிகள் மீதான தடை. முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்
மீதான தடை என்பது அதற்கு அப்புறம் தான்
கேள்வி:
ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்?
காஞ்சா
அய்லய்யா: வரலாற்று
ரீதியாக எல்லா இந்திய மக்களும் (பிராமணர்கள் உட்பட) மாட்டிறைச்சி உண்டார்கள். அதாவது
வேதகாலம் மற்றும் அதற்கு பிந்தைய காலம் முழுவதும் இந்த வழக்கம் இருந்தது. புத்தர் இதற்கு
எதிராக பிரச்சாரம் செய்தார். காரணம் அவரின் காலத்தில் புரோகித வர்க்கம் அதிக அளவில்
மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தது. புத்தர் மக்களிடம் பசுக்களை பலியிடக்கூடாது
என்றார். மேலும் தேவைக்கு அதிகமாக கொல்லக்கூடாது என்று கூட குறிப்பிட்டார், அந்த காலத்திலிருந்து
இப்போது வரை ஏராளமான தீண்டத்தகாத மக்கள் , குறிப்பாக தென்னிந்திய தலித்துகள் கோடை காலத்தில்
உணவு பஞ்சம் ஏற்படும் தருணத்தில் இதனை உண்ணும் வழக்கத்தை கொண்டிருந்தனர். மேலும் அவர்கள்
செத்துப்போன அல்லது நோய்பிடித்த கால்நடைகளையும் உண்டனர். என் சொந்த கிராமத்தில்
நான் குழந்தையாக இருந்த போது 70-80 தலித் குடும்பங்கள் கோடைகாலத்தில் வயிறு நிரம்ப
இதனை உண்பதை பார்த்திருக்கிறேன் .அவர்களுக்கு அரிசியோ, தானியமோ அல்லது மற்ற வழக்கமான
உணவும் இருக்காது. இந்த நிலைமை தற்போது வரை தொடர்கிறது.
முஸ்லிம்களை பொறுத்தவரை இறைச்சி என்பது வரலாற்று மற்றும் மதரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட
உணவு. மேலும் எல்லா முஸ்லிம்களும் தலித் மக்களை போல வறுமையோடு போராடுபவர்கள் அல்ல.
அவர்களுக்கு மற்ற உணவு வசதிகள் உண்டு.
ஆக
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மட்டும் இறைச்சி நுகர்வோர் அல்லர். அப்படித்தானே?
காஞ்சா
அய்லய்யா: ஆம். இது
இன்றைய நாளில் கூட நாம் பார்க்க முடியும். குறிப்பாக ஐதராபாத் நகரில் ரமலானின் போது
முஸ்லிம்கள் மாட்டிறைச்சி, செம்மறி ஆடு மற்றும் கோழி கலந்த ஹலீம் என்ற உணவை உட்கொள்கிறார்கள்.
இது நோன்பு திறக்கும் நேரத்தில் உணவாக பயன்படுகிறது. மேலும் இளம் பிராமணர்கள் உட்பட
பலர் மாலை 4.:30 மணிக்கு ஹலீம் உணவை உட்கொள்கின்றனர். மேலும் பல உணவகங்களில் பெரும்
எண்ணிக்கையில் மாட்டிறைச்சி முஸ்லிம் அல்லாதவர்களால் பயன்படுத்தப்படுகிறது. சுருக்கத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள்
மாட்டிறைச்சியை முஸ்லிம்களை விட அதிக அளவில்
பயன்படுத்துகின்றனர். கிறிஸ்தவர்களின் மாட்டிறைச்சி பயன்பாடு சுதந்திர இந்தியாவில்
குறைவாக இருக்கிறது.
கலாச்சார ரீதியாக அரசு
எதை செய்ய முயற்சிக்கிறது என்றால் ஜனநாயக அரசு என்ற பெயரில் சாதாரண மக்களின் உணவு கலாச்சாரத்தை,
அதன் புரதச்சத்தை இல்லாமல் ஆக்குகிறது. அவர்களில் தலித், முஸ்லிம்கள், மற்றும் கிறிஸ்தவர்கள்
போன்றோர்களின் உணவு பழக்கம் மாட்டிறைச்சியை உள்ளடக்கியோ அல்லது உள்ளடக்காமலோ இருக்கிறது.
தேர்வு என்பது நவீன ஜனநாயகத்தில் மிக முக்கியமாக இருக்கிறது.
நான் மாட்டிறைச்சி
மற்றும் ஆட்டிறைச்சி உண்ணாதவர்களை மதிக்கிறேன். இரு சமூகங்கள் குறிப்பாக பிராமணர்,
தென்னிந்திய பிராமணர் மற்றும் பனியாக்கள் அசைவ உணவு பக்கமே செல்லமாட்டார்கள். அவர்கள்
சைவர்களாக மாறி வெகு காலமாகிறது.
கேள்வி:
இந்த கலாச்சார திணிப்பின் பின்னால் இருக்கும் கருத்தியல் என்ன?
காஞ்சா
அய்லய்யா: இந்த
கருத்தானது பிந்தைய சங்கராச்சாரியார் கால சைவ மரபாகும். அது புத்தர் புலால் உண்ணாமை
குறித்து தீவிர பிரச்சாரம் செய்ததால் அதற்கு எதிராக மாமிசம் உண்பவர்களின் மீதும், சில
உணவு கட்டுப்பாடு கொண்டவர்கள் மீதும் எதிர்வினையாற்றுவதற்காக தான். புத்த மதத்தினர்
உண்மையான சைவர்கள் அல்லர். அதே நேரத்தில் ஜைனர்கள் தான் உண்மையான சைவர்கள். இந்நிலையில்
புத்த மதத்தினருக்கு வன்முறை குறித்த எதிர் எண்ணத்தை ஏற்படுத்த சங்கரர் பிராமணர் மற்றும்
உயர்ஜாதியினர் மத்தியில் மாட்டிறைச்சி தடை குறித்து பேசினார்.இதனை வட இந்திய பிராமணர்களுக்கு வெகு முன்னால் தென்னிந்திய பிராமணர்கள் மத்தியில் சைவம் குறித்து
பேசினார்.
கேள்வி:
இது கடந்த காலத்தில். தற்போது இந்த கலாச்சார திணிப்பின் பின்னால் உள்ள கருத்தியல் என்ன?
காஞ்சா
அய்லய்யா: இன்றைக்கு தென்னிந்திய பிராமணர்கள், அவர்கள் நவீன
கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றிருந்த போதும் கூட
கலாச்சார ரீதியாக குடும்பத்தோடு இயைந்து இருக்கிறார்கள். அவர்களின் மனோபாவம்
உணவு கலாச்சாரத்தின் மீது எதிர்மறையாக இருப்பதுடன் அதனை தீண்டத்தகாத செயலாகவும் பார்க்கிறது.
நன்றாக கல்வி கற்ற பிராமணர்கள் மற்றும் பனியாக்கள் இந்த தீண்டாமையை கடைபிடிக்கும் போது
அது அவர்களுக்குள் ஆழமாக வேர்பாய்ந்த கருத்தியலாக மாறுகிறது. அந்த கருத்தியலானது ஆர்.எஸ்.எஸ்
இன் செயல்திட்டமாக, கலாச்சார மேலாண்மையை நிறுவும்
ஒன்றாக மாறுகிறது. இந்த இலக்கை அடைவதற்காக ஆர்.எஸ்.எஸ் மற்ற விஷயங்களுக்கிடையே, மாட்டிறைச்சியை
முஸ்லிம்- இந்து விவகாரமாக மாற்றுகிறது.
கேள்வி:
ஆக மாட்டிறைச்சி மீதான தடை என்பது ஒரு படித்தான
இந்து சமூகத்தை கட்டியெழுப்பும் கருவியா?
காஞ்சா
அய்லய்யா: ஆம். நீங்கள் கூட கேள்வி கேட்க வேண்டும். எப்போது
இந்த மாட்டிறைச்சி உண்ணாத, புலால் குறித்த கருத்து பலமான ஒன்றாக மாறியது? காந்தி சாராம்சத்தில்
ஒரு ஜெயின். அவர் பசு பாதுகாப்பு குறித்தும், சைவ உணவு குறித்தும் பிரச்சாரம் செய்தார்.
இந்த காந்தியின் பிரச்சாரம் பிராமணர் அல்லாத சமூக குழுக்கள் மத்தியில் புலால் உண்ணாமையை
ஏற்படுத்தியது. இந்நிலையில் காந்தியின் பசு பாதுகாப்பு பிரச்சாரத்தால் கவரப்படாதவர்கள்
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்கள்.
தலித்கள் மத்தியில் இந்த விஷயம் செல்வாக்கு பெறாமைக்கு அம்பேத்காரின் உடனடியாக
எதிர் – பிரச்சாரம் தான் காரணம்.
கேள்வி:
எதிர் பிரச்சாரம்?
காஞ்சா
அய்லய்யா: காந்தி
ஹரிஜன் என்ற தன் கருத்துரு குறித்து பிரச்சாரம் தொடங்கி, மக்களை அது சார்ந்து திரட்டிய
தருணத்தில் சில நிபந்தனைகளை விதித்தார். ஒன்று அவர்கள் இறைச்சி உண்ணக்கூடாது. இரண்டு
அவர்கள் ராமரை வணங்க வேண்டும். இதனை உடனடியாக உணர்ந்து கொண்ட அம்பேத்கார், காந்தி தலித்
மக்களை இந்துயிசத்தை நோக்கி மாற்றுகிறார் என்றார். அம்பேத்கார் உடனடியாக காந்தியின்
இந்த கொள்கையை விமர்சித்து, இந்த ஹரிஜன் கொள்கை தலித் மக்களுக்கு எவ்விதத்திலும் பயன்தராது
என்றார். மாறாக தலித் மக்கள் அவர்களின் கலாச்சார
வேர்களின் வழி மதிக்கப்பட வேண்டும் என்றார்.
அம்பேத்கார் தலித்கள்
இறந்த கால்நடையை உண்ணக்கூடாது என்றார். அதே நேரத்தில் அவர்கள் மாட்டிறைச்சியை கைவிட
வேண்டாம். மேலும் புத்த மதத்தினர் கூட மாட்டிறைச்சி உண்கின்றனர் என்றார் அம்பேத்கார்.
புத்தமதம் பரவியிருக்கும், சீனா, ஜப்பான்,கொரியா போன்ற நாடுகளில் பன்முக கலாச்சார உணவு
அனுமதிக்கப்படுகிறது. அவர்கள் பன்றி மற்றும் மாடுகளை உண்கின்றனர். இதன் மூலம் உணவு
விலக்கல் அங்கு இல்லை.
கேள்வி:
ஏன் ஆர்.எஸ்.எஸ் பசு பாதுகாப்பை அதன் செயல்திட்டத்தில் முக்கியமான ஒன்றாக இணைத்திருக்கிறது?
காஞ்சா
அய்லய்யா:
ஆர்.எஸ்.எஸ் இன் தர்க்கம் என்னவென்றால் பசு பாலை கொடுப்பதால் அதனை பாதுகாக்க வேண்டும்.
இதன் காரணமாக வரலாற்று ரீதியாக அது புனித மிருகமாக கருதப்படுகிறது. என் கருத்துப்படி
இந்தியா பசும் பாலில் வாழவில்லை. மாறாக எருமை பாலில் தான் வாழ்கிறது. இப்போது ஆர்.எஸ்.எஸ்
ஏன் எருமை பாதுகாப்பை வலியுறுத்தவில்லை.? நாம் குஜராத்தை எடுத்துக்கொள்வோம். குஜராத்
அரசு பசுவதையோடு காளைகளை வெட்டுவதை தடை செய்திருக்கிறது. ஏன் அது எருமைகள் விஷயத்தில்
மௌனமாக இருக்கிறது? மோடி காலத்தில் மிக அதிகமாக எருமைகள் கொல்லப்பட்டன. அதே நேரத்தில்
ஏராளமான பசுக்கள் பால்பண்ணைகளில் வளர்க்கப்பட்டன. மேலும் எருமை இறைச்சி குஜராத்தில்
இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
இது முழுமுதலான இனவெறி. இந்தியாவை பொறுத்தவரை
75% பால் என்பது எருமைகளிடம் இருந்து தான் கிடைக்கிறது. இன்னும் நீங்கள் அதை கொல்கிறீர்கள்
என்றால் அது கருப்பு மிருகம் என்பதால் தான். அமெரிக்க இனவெறி ஒரு காலத்தில் எருமைகளை
பெருமளவில் கொன்றொழித்தது. நீங்கள் பார்க்கும் போது , எருமைகள் எப்போதுமே இந்தியாவில்
இருந்து வருகின்றன. ஆனால் பசுக்கள் ஆரியர்களின் வருகையின் போது இந்தியாவில் நுழைந்தன.
ஆக ஆர்.எஸ்.எஸ் ஆரிய மிருகத்தை பாதுகாக்க விரும்புகிறது. இந்த இன மற்றும் சாதிய அணுகுமுறை
உணவு கலாச்சாரத்திலும் நீள்கிறது. இது ஆபத்தானது.
கேள்வி:
ஆக நீங்கள் சொல்வது உயர்சாதி கலாச்சார மேலாண்மையை
கட்டமைக்க, ஆர்.எஸ்.எஸ் மாட்டிறைச்சியின் நுகர்வோர்
முஸ்லிம்கள் மட்டுமே என்பதான தோற்றத்தை உருவாக்குகிறது....
காஞ்சா
அய்லய்யா:
ஆர்.எஸ்.எஸ் இன் உள்ளார்ந்த சொல்லாடல்கள், அதன் வெளியீடுகள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும்
இதனை வெளிப்படுத்துகின்றன. ஆனால் நடைமுறைப்படி இது தவறானது. அவர்கள் இந்தியாவில் முஸ்லிம்கள்
மட்டுமே மாட்டிறைச்சியின் நுகர்வோர் என்கின்றனர். அதனை கைவிடவும் செய்ய வேண்டும் என்று
கோரிக்கை விடுக்கின்றனர். ஆக முஸ்லிம்கள் மாடுகளை கொல்பவர்களாக இருக்கும் பட்சத்தில்
இந்துக்கள் அவர்களுக்கு எதிராக போராட வேண்டும் என்கின்றனர். இந்த வாதம் உயர்ஜாதி இந்துக்கள்
மத்தியில் நன்றாகவே வேலை செய்கிறது.
இதில் அபாயகரமான விஷயம் என்னவென்றால் இந்த கருத்தை
ஆர்.எஸ்.எஸ் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மத்தியில் எடுத்து செல்கிறது. அவர்கள் இதன் பின்னால்
அதிகமும் அணிதிரள்கிறார்கள். பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு பிற்படுத்தப்பட்ட சாதிகளின்
ஆர்.எஸ்.எஸ் அணிச்சேர்க்கை மறுக்க முடியாத அளவிற்கு பெருகி இருக்கிறது. அவர்களை அவ்வாறு
செய்வதற்கு கருத்தியில் சட்டகத்தை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குகிறது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்
இவ்வாறு குறிப்பிடுகிறது. " மாட்டிறைச்சி உண்பது இந்து கலாச்சாரம் அல்ல. ஆக அது
இந்திய கலாச்சாரம் இல்லை. மாறாக அது அந்நிய கலாச்சாரம். குறிப்பாக முஸ்லிம் மற்றும்
கிறிஸ்தவ கலாச்சாரம் என்கிறது.
கருத்தியில்
ரீதியாக இரு விஷயங்களை ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கிறது. ஒன்று முஸ்லிம்களின் வருகைக்கு முன்பு
இந்தியாவில் மாடுகள் கொல்லப்படவில்லை. மேலும் தீண்டாமை என்பது கூட முஸ்லிம்கள் தான்
உருவாக்கினர். இது முழுவதும் தவறான வாதம். இந்த வாதத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ் தலித்
மக்களை சைவ உணவிற்கு மாற்றி இந்துயிசத்திற்குள் அடைக்க முயற்சிக்கிறது.
மேலும்
பிற்படுத்தப்பட்டவர்கள் மத்தியில் மாட்டிறைச்சி இந்து கலாச்சாரம் அல்ல என்பதாக பிரச்சாரம்
செய்கிறது. இது தவறானது. மேலும் மாட்டிறைச்சி என்பது பிற்படுத்தப்பட்டவர்களின் திருமண
விருந்துகளிலும், இறப்பு சடங்குகளிலும் உணவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தென்னிந்திய
பிற்படுத்தப்பட்ட சாதிகள் தற்போது இந்த கலாச்சார நடவடிக்கைகளை கைவிட்டிருக்கின்றன.
நான் ஆர்.எஸ்.எஸ் க்கு சவால் விடுகிறேன். எந்த
இந்து கடவுளாவது அல்லது இந்து சிற்பங்களாவது மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று குறிப்பிடுகிறதா....
அல்லது எந்த கடவுள்கள் மாடு அல்லது பன்றி இறைச்சியை படையலாக நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்
என்று குறிப்பிடுகின்றனர்? அவை வேதங்கள், உபநிஷதங்கள் மற்றும் கீதையில் இருக்கின்றனவா?
இப்போது ஆர்.எஸ்.எஸ் பகவத்கீதையை தங்களின் ஆன்மீக அடையாளமாக முன்வைக்கிறது. மாட்டிறைச்சி
உண்ணக்கூடாது என்ற ஒரு வரியையாவது கீதையிலிருந்து
அவர்களால் மேற்கோள் காட்ட முடியுமா?
கேள்வி:
ஆக நீங்கள் சொல்வதை பார்க்கும் போது ஆர்.எஸ்.எஸ்
அதன் கருத்தியலை மக்கள் மத்தியில் பரப்பி விட்டது என்றே கருத்தில் கொள்ள வேண்டும்.
காஞ்சா
அய்லய்யா: முன்பு
ஆர்.எஸ்.எஸ் இந்த கருத்தியலை பிராமண- ஜெயின் மற்றும் பனியாக்கள் மத்தியில் பரப்பியது.
பின்பு அதன் சாகாக்களில் பரப்பியது. இப்போது
வி.எச்.பியும், பஜ்ரங்தள்ளும் இதனை பரப்புகின்றன. இந்த பிரச்சாரத்தை வன்முறையற்ற அவர்களின்
கோட்பாட்டின் ஒரு பகுதி என்கின்றனர். இதை விட
ஒரு பெரிய ஜோக் வேறு எதுவும் இருக்க முடியாது. அகிம்சை தான் உங்களின் புனித கோட்பாடு
என்றால் ஏன் தெய்வங்களும், சிலைகளும் , பிம்பங்களும் வன்முறையை புனிதமாக பார்க்கின்றன.
ராமரும், கிருஷ்ணரும் அகிம்சைவாதிகளா? அவர்கள் தங்களின் எதிரிகளை கொலை செய்யவில்லையா?
மேலும் மாடுகளை கொல்லாமல் அவை இயற்கை மரணம் அடையட்டும் என்று விட்டு விட்டால் நம் விவசாய
பொருளாதார உயர்ந்து விடுமா? ஏன் இந்தியாவின் கிராமப்புறங்களில் மக்கள் கன்றுக்குடியை
பேணி வளர்க்கின்றனர்.? காரணம் பசுக்கள் கன்று குட்டியை ஈனுகின்றன. அந்த கன்றுக்குட்டிகள்
காளைகளாக மாறுகின்றன. மேலும் விவசாய தொழில்நுட்பங்கள்
வருவதற்கு முன்பு காளைகள் நிலத்தை உழுதன. அவை விவசாய பெருங்குடிகளுக்கு பெரும் உதவி
புரிந்தன. இப்போது இந்த இடத்தை டிராக்டர்கள் ஆக்கிரமித்துக்கொண்டன.
கால்நடைகளால் பிற பொருளாதார
பலன்கள் இருக்கின்றன. அதன் சாணம் உரமாக பயன்படுத்தப்படுகிறது. எலும்புகள் சீப்புகள்
செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின்
தோல் தோல்தொழிற்சாலையில் பதனிடப்பட்டு பல்வேறு தோல்பொருட்கள் செய்ய காரணமாக அமைகிறது.
கால்நடைகளால் பொருளாதார பலன்கள் குறையும் போது அவற்றை கொல்வதே சிறந்த வழி. செத்த மாட்டை
புதைக்க முடியாது. காரணம் அதன் தோலும், எலும்பும் பயன்படுத்த முடியாதவை. ஆக வயதான மாட்டை
பராமரிக்க செலவுகளை யார் ஏற்பது.?
கேள்வி:
கால்நடைகள் கொல்லப்படுவது ரகசிய நடவடிக்கையாக
மாறுமா?
காஞ்சா
அய்லய்யா: சட்டவிரோத நுகர்வு நிகழும். குறிப்பாக தலித்துகள்
மற்றும் பழங்குடிகள் மத்தியில். காரணம் அவர்கள் சட்ட அமலாக்கத்துறையின் அருகில் வாழவில்லை.
அதே நேரத்தில் முஸ்லிம்களின் மாட்டிறைச்சி நுகர்வு கட்டுப்படுத்தப்படும். காரணம் முஸ்லிம்
சமூகம் தற்போது நகர்மயமாகி இருக்கிறது. நுகர்வு தவிர, மும்பையில் மாட்டிறைச்சி மீதான
தடை வணிகர்களை பெருமளவில் பாதிக்கும். குறிப்பாக தோல் வணிகர்களை அதிகளவில் பாதிக்கும்.
கேள்வி:
இதற்கான தண்டனை முறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? மாட்டிறைச்சி தடையை மீறினால் மகாராஷ்டிராவில்
5 வருடங்களும், அரியானாவில் 10 வருடங்களும் சிறைத்தண்டன கிடைக்கும்
காஞ்சா
அய்லய்யா: மத்திய அரசு இதற்கான சட்டத்தை இயற்ற முடியாது. காரணம்
மாடுகள் கொல்லப்படுவது மாநில அரசு சம்பந்தப்பட்ட விவகாரம் என்கிறது மத்திய அரசு. ஆனால்
மத்திய அரசு மாதிரி சட்டம் ஒன்றை கொண்டு வந்து மாநிலங்களுக்கிடையே பரப்பும் என்கிறது.
இது மாநில அரசுகள் பசுவதை தடுப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கான அபாயகரமான தந்திரமான
உத்தியாகும். தண்டனை முறையை பொறுத்தவரை மாடுகள் சமூகத்தின் சில பிரிவினரை விட அதிக
மகிழ்ச்சியில் இருக்கின்றன. இதற்கு வலுவான போராட்டங்கள் நடைபெற வேண்டும். முஸ்லிம்களும்,
கிறிஸ்தவர்களும் இதற்காக வீதிக்கு வர வேண்டும். ஆனால் ஒரு காரணத்திற்காக அல்லது மற்ற
காரணத்திற்காக அவர்கள் பயப்படுகிறார்கள். மாயாவதி மற்றும் பிற தலைவர்கள் முஸ்லிம்கள்
மற்றும் கிறிஸ்தவர்களுடன் இணைந்து மாநில அரசுகளின்
இப்படியான அபாயகரமான நடவடிக்கைக்காக, மக்களின் உணவு பழக்கங்களில் தலையிடும் அரசை எதிர்த்தும்
அவர்களின் கலாச்சார வேர்களுக்கு சவாலாக இருக்கும், அவர்களின் தேர்வு உரிமையில் தலையிடும்
அரசை எதிர்த்தும் போராட முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment