அக்டோபர் புரட்சியின் பதினொன்றாம் நாள்- பாராளுமன்ற
ஜனநாயகத்தில் இந்திய இடதுசாரிகள்- கேரளாவை
முன்வைத்து
-எச்.பீர்முஹம்மது
புதிய காற்று (ஜுன் 2008)
உலகம் ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்தை தேடிய இருபதாம் நூற்றாண்டில் ஏறத்தாழ முப்பத்தாறு புரட்சிகள் நடந்தேறியிருக்கின்றன.மகத்தான அக்டோபர் புரட்சி, ஜெர்மன் விவசாய புரட்சி, பிரஞ்சுமாணவர் புரட்சி, மற்றும் சீன புரட்சி முதலான எதிர் நடவடிக்கைகளாக இருபதாம் நூற்றாண்டு கடந்தேறியிருக்கிறது.புரட்சியின் அகோன்னத வடிவத்தில் 19 ம் நூற்றாண்டின் 1792 க்கும் 1871 க்குமான காலகட்டம் வரலாற்றில் மிக முக்கிய கவனத்தை அளிக்கிறது. 1792 ல் பிரான்சில்நடந்த புரட்சி உலக வரலாற்றில் அதிகார, ஒடுக்குமுறை சமூகங்களுக்கு ஒரு மாற்று செயல் திட்டமாக அமைந்தது. அதன் பிறகான 1871 ன்பிரான்சு கம்யூன் சோசலிச சமூக வடிவத்திற்கு தொடக்கமிட்டது.மார்க்ஸின் சிந்தனை செயல் வடிவம் இதனின் தொடர்ச்சியே. அதற்கானதத்துவ தொடக்கத்தை, தரிசனத்தை அவர் ஹெகலிடம் இருந்து பெற்றார். ஹெகலின் தத்துவத்தின் வரலாறு பற்றிய உரைகள் (Lectures
on philosophy of history) என்ற நூல் வரலாறு மனித இயல்பை எவ்வாறு நெறிப்படுத்துகிறது என்பதைப் பற்றி குறிப்பிட்டது. வரலாறு ஓர் அறிவுபூர்வமான போக்கை கொண்டிருக்கிறது என்றும் , அதை ஆராய்வதன் மூலம் நம்மையும் நம்மை சுற்றி இருக்கும் இன்றைய உலகையும் புரிந்து கொள்ள முடியும் என்பதாக இருந்தது ஹெகலின் நிலைபாடு.இதன் மூலம் வரலாற்றின் போக்கு பற்றிய கருத்துக்கு மார்க்ஸ் வந்தார். ஹெகலின்வரலாற்றின் தத்துவம் என்ற நூலின் புகழ்பெற்றவாக்கியமான "உலக வரலாறு என்பது சுதந்திரம் பற்றிய பிரக்ஞையின் வரலாறு என்பதை தவிர வேறில்லை.(The history of world is none otherthan the progress of the consciousness of freedom). என்பது வரலாறு பற்றிய ஹெகலின் திசைவழியாகும்.இந்த நூலில் ஹெகல் இந்தியா, சீனா,ஈரான் போன்ற கீழை நாடுகளை உதாரணமாக காட்டுகிறார். இங்கெல்லாம் µ÷ அரசன் மற்றும் குடிமகன் என்ற அமைப்பு காணப்பட்டது. இதில்அரசன் மட்டுமே சுதந்திரமானவன்.அவனின் கீழிருந்தவர்கள் சுதந்திரமற்றவர்கள், எது சரி, எது தவறு என்பதை கூட ஆராய இயலாதநிலையில் இருந்தார்கள். இதில் சுதந்திரம் என்பது குடிமகனின் பிரக்ஞைக்கு வெளியில் இருந்தது. சுதந்திரம் பற்றிய இந்த பார்வையில் ஹெகல்தாராளவாத சிந்தனையாளரான ஜான் ஸ்டூவர்ட் மில்லின் கருத்தோடுவேறுபடுகிறார்.ஸ்டூவர்ட் மில் சுதந்திரம் என்பதை தனி மனிதனின் தேர்வுஎன்றார். நான் தனித்து விடப்பட வேண்டும் என்னை யாரும் தொந்தரவுசெய்ய கூடாது. இன்னொரு வகையில் பொருளாதார நிபுணர்கள் சுதந்திரம் என்ற சொல்லை நுகர்வோர் மீதான பொருளின் தேர்வாக மாற்றினார்கள். இந்த பொருளை தேர்வு செய்ய எனக்கு தடையேதுமில்லை. நான்இதை வாங்கி கொள்வேன். ஹெகல் இதை மிகவும் மேம்போக்கான பார்வையாக கருதினார். பொருளாதார நிபுணர்கள் இதற்கு கீழே சென்றுநுகர்வோர் ஏன் இத்தகைய தேர்வை மேற்கொள்கிறார்கள் என்பதை பார்ப்பதில்லை. மாறாக நுகர்வோரின் இத்தகைய தேவையானது அவர்களைகட்டுப்படுத்தும் புற சக்திகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்றார். மேலும்சொகுசுகளின் தேவைகள் நமக்குள் எழாமல் எப்படி அந்த தேவைகளை உருவாக்கி லாபம் ஈட்டுவோரால் பரப்பப்படுகிறது என்பதை ஹெகல் கண்டறிந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஹெகல் வரலாற்றை நம்
விருப்பங்களையும் இயற்கை சூழலையும் வடிவமைக்கும் இயங்குமுறையாக கண்டார். இதற்கான தேடலுக்கு நம்மை கட்டுப்படுத்தும்வரலாற்று ரீதியான சக்திகளை அனுமதியாமல் அவைகளை நாம் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை குறித்து ஆராய வேண்டும் என்றார். ஹெகலின் இந்த கருதுகோள்கள் இளமைக்கால மார்க்ஸ் மீது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தின. ஹெகலில் வரலாற்று ரீதியான சக்திகள் என்பதிலிருந்து தான் மார்க்ஸ் தன் வரலாற்று பார்வையை தொடங்கினார். அவர் ஹெகலின் வரலாற்றின் தத்துவம், தத்துவத்தின்வரலாறு, சரியான வழியின் தத்துவம் போன்ற நூல்களால் அதிகம்தாக்கமுற்றார். மார்க்ஸின் பொருளாதார தத்துவ கையேடு, ஜெர்மானிய கருத்தியல் போன்ற நூல்கள் இதனின் பாதிப்பினால் எழுந்தவையே.இன்னொரு வகையில் ஜெர்மனியில் அன்று நடந்த விவசாய
போராட்டங்கள் மார்க்ஸின் சிந்தனை வடிவமைப்பிற்கு தூண்டு கோலாகஅமைந்தது. அதன் விளைவாக தான் அவரின் பொருளாதார பார்வைமுழு வடிவத்தை அடைந்தது. சமூத்தின் அலகுகளாக அவர் உற்பத்தி சக்திகள், உற்பத்தி சாதனங்கள் மற்றும் உற்பத்தி உறவுகள் ஆகியவற்றை கண்டார். உழைப்பு என்ற நடவடிக்கையிலிருந்து தொடங்கும்இவை மீண்டும் அதே நிலைக்கு வந்தடைகின்றன. சமூகத்தின் இந்தஇயக்கவியலை ஹெகல் தலைகீழாக பார்த்தார். நான் அதை நேராக்கினேன் என்றார். தேவைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்றஹெகலில் பார்வை தான் மார்க்சுக்கு சுரண்டல் பற்றிய கருத்துருவத்திற்குவழிவகுத்தது. ஹெகலின் சுதந்திரம் பற்றிய பார்வையில் மன்னர்குடிமகன் என்ற ஒப்பீடு மார்க்ஸை மிகவும் கவர்ந்தது. சுதந்திரத்தைஉற்பத்தி சக்திகளே தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும் அதைகட்டுப்படுத்தும் சக்திகள் அல்ல என்பதாக அவரின் கருதுகோள்தொடக்கம் பெற்றது. ஹெகலின் இத்தகைய நூல்களை மார்க்ஸ் பலமுறை படித்திருக்கிறார். வெறும் கோட்பாட்டு வடிவமாக நாம் கையாளும்இவற்றை ஏன் நடைமுறை செயல்பாடாக மாற்றக் கூடாது? மார்க்ஸின்இந்த சிந்தனை தான் அவரின் புகழ்பெற்ற வாக்கியமாக உருவம்
பெற்றது. தத்துவவாதிகள் உலகை விளக்கி விட்டு சென்று விடுகிறார்கள்.
இங்கு பிரச்சினையே உலகை எவ்வாறு மாற்றுவது என்பது தான்( Allphilosophers are interpreting the world, however the question is how tochange the world). இதை அடைவதற்கே அவர் தொழிலாளர்கள் கழகம்மற்றும் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கை ஆகியவற்றை உருவாக்கினார். உலகின் பெருமதங்கள் தவிர எந்த லெளகீக தத்துவங்களுமேஇதுவரையிலும் உலகை விளக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கின்றன.மார்க்சியம்மட்டுமேஉலகின்மாற்றுசெயல்திட்டத்திற்குவழிவகுத்தது.மார்க்ஸின் மேற்கண்ட செயல்பாட்டின் தொடர்ச்சியாக இருபதாம்நூற்றாண்டின் ஆரம்பத்தில் 1917 ல் ரஷ்யாவில் லெனின் தலைமையிலான போல்ஸ்விக்குகளின் புரட்சி முதன் முதலாக உலகிற்கு ஒடுக்குமுறை சமூகத்திற்கு மாற்றான செயல்திட்டத்திற்கு தொடக்கம் குறித்தது.ரஷ்ய புரட்சியை பொறுத்தவரை மாற்று செயல் வடிவமான சோசலிசகருதுகோள்கள் பற்றிய கனவுகளோடு மட்டுமே ஆளுகைக்கு வந்தது.அது முதல் உலகப்போர் முடிந்த காலகட்டம். உலகம் ஏகாதிபத்தியங்களால் காலனிய வகைக்கு உட்பட்டிருந்தது. சாரியத்தின்கொடுங்கோன்மையால் அழிவின் விளிம்பு பகுதியை தொட்டிருந்தரஷ்யாவை சீரமைப்பதற்கான அவசியம் அன்று போல்ஸ்விக்குகளின்முன் நிர்பந்தமாக நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் ரஷ்யாவை பின்தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் புரட்சி ஏற்பட்டுஅதிகார மாற்றம் நடைபெற்றது. லெனின் ஒரு தேர்ந்த சிந்தனையாளராகநின்று கொண்டு மார்க்ஸின் சிந்தனையை வளர்த்தெடுத்தார். அன்றையகாலகட்டங்களில் காலனிய நாடுகள் பலவற்றில் விடுதலைபோராட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்தன. ரஷ்ய புரட்சியை பற்றிகுறிப்பிடும் பின் மார்க்சியரான எர்னஸ்ட் மண்டேல் அதைஏகாதிபத்தியத்திற்கு எதிரான மாற்று நடவடிக்கை என்றார்.ரஷ்ய புரட்சியின் தாக்கம் உலகம் முழுவதிலுமான தத்துவ வாதிகள்மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியது. நம்மை சுற்றியுள்ள உலகம் எவ்வாறு இருக்கிறது. நம்மின் இருப்பை எது தீர்மானிக்கிறது போன்ற கேள்விகள் இவர்களிடத்தில் எழதொடங்கின.
இந்திய துணைக்கண்டமானது அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்தது. அப்போது இந்தியாவில்சுதந்திர போராட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அன்று காங்கிரஸ்சுதந்திரத்தை அடைவதற்கு தான் மட்டுமே அதிகார பூர்வ நபர் என்றசிந்தனையோடு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய விடுதலைபோராட்ட ஆளுமைகளில் பலர் உயர்கல்வியை லண்டனில் முடித்தனர்.இவர்களில் அன்றைய ரஷ்ய புரட்சியால் தாக்கமுற்ற சிலர் இந்தியாவிலும் அதற்கான தேவையை உணர்ந்தனர். அப்போது ரஷ்யாவின் கண்இந்திய சுதந்திர போராட்ட நடவடிக்கைகள் மீதும் இருந்தது. 1920 ல்தாஷ்கண்டில் இதற்கான கூட்டம் எம்.என் ராய் தலைமையில்நடந்தது. இதில் அபானி முகர்ஜி மற்றும் எம்.பி.பி.டி ஆச்சார்யா,முஹம்மது அலி, சபீக் சித்தீக் போன்றோர் கலந்துகொண்டனர். (இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு என்ற நூலைஎழுதிய தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்ஆரம்பம் ரஷ்யா தான் என்கிறார். இதில் கான்பூர் தான் தொடக்க இடம்என்ற கருத்து கொண்டவர்களும் உண்டு). அந்த கூட்டத்தில் இந்தியாவின் காலனிய ஆட்சி குறித்தும் அதை மாற்றுவதற்கான செயல்திட்டம்குறித்தும் ஆராயப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் கட்சியானதுமிகவும் பலகீனமாகவும் , ஒருங்கிணைக்கப்படாததாகவும் இருந்தது.இந்த சூழலில் எம்.என் ராய் மேற்கு வங்கத்தில் சில சீர்திருத்தவாதகுழுக்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இதன் பிறகு மார்க்சிய சிந்தனைஅடிப்படையில் மேற்கு வங்கத்தில் சில குழுக்கள் அமைக்கப்பட்டன.மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்ட குழுவானது இந்தியா முழுவதும்பரவலாக்கம் செய்யப்பட்டது. வங்காளத்தில் முசாபர் அஹ்மதுதலைமையிலும், மும்பையில் டாங்கே தலைமையிலும், சென்னையில்சிங்கார வேலர் தலைமையிலும், ஐக்கிய மாகாணத்தில்செளகத் உஸ்மானி தலைமையிலும், பஞ்சாபில் குலாம் உசேன்தலைமையிலுமான குழுவாக அது இருந்தது.இந்தியாவின் சில பகுதிகளில் நிலவுரிமைக்கான போராட்டம் அப்போது நடைபெற்றுகொண்டிருந்தது. இதன் தொடர்ச்சியில் 1935 ல் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியானது மூன்றாம் அகிலத்தை ஏற்றுக்கொள்ள தயாரானது. கம்யூனிஸ்ட் அமைப்பு முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆயுதம்தாங்கிய புரட்சி மூலம் இந்தியாவை வென்றெடுக்கலாம்என்றநம்பிக்கையோடு செயல் திட்டங்களை தயாரித்து களமிறங்கியது.புரட்சிக்கான யுக்திகள் புரட்சியின் சகாப்தங்களில் மட்டுமே சாத்தியமாகும் என்ற ஏங்கல்ஸின் வார்த்தைகளை உள்வாங்கியதாக இருந்தது அது.இந்நிலையில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகள்பிரிட்டிஷ் ஆட்சியால் முழுமையாக தடைசெய்யப்பட்டன. இதன்காரணமாக கட்சியானது தலைமறைவாக, ரகசிய போராட்டநடவடிக்கைகளில் இறங்கியது. இது தலைமறைவு இயக்கம் என்றழைக்கப்பட்டது. 1920க்கும் 1930 க்குமான காலகட்டம் இயக்கத்திற்கு பெரும் சோதனை கட்டமாக இருந்தது. இக்கட்டத்தில் அதன்தலைவர்களுக்கு எதிராக நான்கு சதி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.கான்பூர் சதி வழக்கு, மாஸ்கோ சதி வழக்கு, பெஷாவர் சதி வழக்கு,மீரட் சதி வழக்கு போன்றவைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால்இயக்கவாதிகள் மீது தொடுக்கப்பட்டன. இதில் கான்பூர் சதி வழக்குஎன்பது அரசியல் முக்கியத்துவம் வாயந்த ஒன்றாக இருந்தது. எம்.என்ராய், அபானி முகர்ஜி, முசாபர் அஹ்மத், நளினி குப்தா,செளகத் உஸ்மானி, சிங்காரவேலர், குலாம் உசேன், ஆர்.சி சர்மாபோன்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதுகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இவர்கள் "இந்தியாவில்
பிரிட்டிஷ் ஆட்சியை சதிச் செயல்கள் மூலம்அகற்றி விட்டு புதிய கொள்கை பிரகடனத்தை கொண்டு வர இருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது". இந்த செய்தியை இந்தியபத்திரிகைகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில்வெளியிட்டன. அப்போது தான் இந்தியாவில் முதன் முதலாகசோசலிசம், கம்யூனிசம் பற்றிய சிந்தனைகள் வெகுஜன உளவியலில்கட்டமைக்கப்பட்டன. இதில் சிங்கார வேலர் உடல் நலம்பாதிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டார். குலாம் உசேன் தான் ரஷ்யாவிடமிருந்து பணம் பெற்றதை ஒப்புக்கொண்டார். முசாபர் அஹ்மத் மற்றும்செளகத் உஸ்மானி போன்றோர் ஆயுள் தண்டனைக்கு பிறகு விடுதலைசெய்யப்பட்டனர்.அதன் பிறகு இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலின்உடனடி எதிரி, ஒத்திவைக்கப்பட வேண்டிய எதிரி என்ற இருமைநிலையில் ஹிட்லருக்கு எதிராக பிரிட்டன் பக்கம் சாய்ந்தார். இதன்
விளைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான தடை விலக்கிகொள்ளப்பட்டது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானதுபிரிட்டிஷ் கம்யூனிட் கட்சியை ஆதரித்தது இந்நிலைப்பாட்டில் தான்.1946 ல் கம்யூனிஸ்ட் கட்சியானது வங்காளத்தில் நிலவுடமைக்கு எதிராகதெபாகா இயக்கத்தை ஆரம்பித்தது. பிந்தைய ஆண்டுகளில் கம்யூனிஸ்ட்கட்சியின் உள்ளமைப்பு முறையானது மிகவும் சிக்கலாக மாறியது.பல்வேறு விஷயங்களில் பலர் மோதி கொண்டார்கள். பி.சி ஜோசி மற்றும்அஜய் கோஷ் போன்றவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். பின்னர் ஸ்டாலின் தலையீட்டின் பேரில் அவர்கள் சேர்த்து கொள்ளப்பட்டனர்.இந்த காலகட்டத்தில் 1948 ல் பாலகாட்டில் நடந்த கட்சியின் அகிலஇந்திய மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகபி.டி.ரணதிவே தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகாலகட்டத்தில்கேரளா, திரிபுரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் விவசாய போராட்டங்கள் நடைபெற்றன. இதில் தெலுங்கானா போராட்டம்
வரலாற்றின் முக்கிய பக்கத்தில் இடம்பெறுகிறது. இந்த கலகங்கள்கொடூரமாக ஒடுக்கப்பட்டன. பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியானது ஆயுதபோராட்டங்களை கைவிட்டு விட்டு பாராளுமன்ற ஜனநாயகம்(Parliamentary democracy) என்ற கருதுகோளுக்குள் வந்தது.பி.டி ரணதிவே தான் முதன் முதலாக இதனை முன்மொழிந்தவர்.சுதந்திரத்திற்கு முன் நடந்த கப்பற்படை எழுச்சியில் பி.டி ரணதிவேகலந்து கொண்டார். இந்நிலையில் 1952 ல் கட்சியானது பாராளுமன்ற ஜனநாயகம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தது. அன்றையகாலகட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது சோவியத் ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. பி.டி ரணதிவே சீன புரட்சியை விமர்சித்து மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் , ஸ்டாலின் ஆகியோரை தவிரமார்க்சியத்திற்கு வேறு மூலவர்களை கண்டுபிடிக்க முடியாது என்றார். இப்பொழுதே இயக்கத்தில் பிளவு ஏற்படுவதற்கான சூழல் உருவானது.ஒரு பிரிவினர் ஆயுத புரட்சியில் இன்னும் நம்பிக்கை கொண்டுஇருந்தார்கள். மற்றொரு பிரிவினர் சீன புரட்சியால் ஆகர்சிக்கப்பட்டு இருந்தார்கள். பி.டி ரணதிவே தலைமையிலான தேசியவாதிகள்இந்தியாவில் காங்கிரஸ் தலைமையோடு இணைந்து செயல்படுவதன்மூலம் ஜனநாயக புரட்சியை ஏற்படுத்தலாம் என்று கருதினார்கள். அன்றுநேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு சோவியத் ஆதரவானதாகவிளங்கியது. சோவியத் ரஷ்யாவும் இந்திய கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ்அரசு விஷயத்தில் மிதமான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றும்,அதனோடு இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியது. இந்நிலையில் ஐம்பதுகளின் இறுதியில் விவசாய புரட்சி விஷயத்தில்சீனாவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.சீனா, சோவியத் மார்க்சிய, லெனினிய பாதையிலிருந்து விலகி சென்றுவிட்டதாக குற்றம் சாட்டியது. இந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்துசீனா- சோவியத் பிளவாக மாறியது. இந்நிலையில் சீனாவுக்கும்
இந்தியாவுக்குமான எல்லை பிரச்சினை வளர்ந்து வந்தது. இது 1962 ல்போர் என்ற கட்டத்துக்கு சென்றது. இப்பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சர்வதேசிய வாதிகள், தேசிய வாதிகள், மத்திய வாதிகள் என்ற மூன்று வகைப்பாடு கொண்டவர்கள் இருந்தார்கள். இதில் டாங்கே, ஏ.கே கோபாலன் மற்றும் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு போன்றவர்கள் தேசியவாதநிலைபாட்டை எடுத்தார்கள். இவர்கள் இந்திய அரசுக்கு ஆதரவாக நின்றார்கள். பி.டி ரணதிவே, பசவபுன்னையா, சுந்தரய்யா, பி.சி ஜோசி,ஹர்கிஷன்சிங் சுர்ஜித் மற்றும் ஜோதிபாசு போன்ற சர்வதேசியவாதிகள்சீனாவுக்கு ஆதரவாக நின்றார்கள். இவர்கள் இது முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்குமான போர் என்றார்கள். இவர்களில்பி.டி ரணதிவே சீனா பற்றி விமர்சித்து சோவியத் ஆதரவு நிலைபாடுஎடுத்து வெறும் பத்து ஆண்டுகளே ஆகியிருந்தது. பி.டி ரணதிவே மதம்மாறி விட்டார் என்று அன்றைய இடதுசாரி விமர்சகர்கள் அவரைவிமர்சித்தார்கள்.இவர்களில் அஜய் கோஷ் மத்தியவாதியாகஅறியப்பட்டார். மேற்கு வங்க கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பெரும்பான்மையான தலைவர்கள் சீனாவுக்கு ஆதரவாக நின்றார்கள்.இதில் சீனாவுக்கு ஆதரவாக நின்றவர்கள் தேச விரோதகுற்றஞ்சாட்டபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். பி.டி ரணதிவேயும்சிறை சென்றார். 1962 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான அஜய் கோஷ் மரணமடைந்தார். அவருக்கு பின் டாங்கே மற்றும்இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்புக்கு வந்தனர். 1964 ஏப்ரல் 11 ல் கல்கத்தாவில் நடந்த கட்சியின்மத்திய குழு கூட்டத்தில் 32 உறுப்பினர்கள் டாங்கேயின் நிலைபாட்டுக்குஎதிராக வெளிநடப்பு செய்தார்கள். இவர்கள் தனியாக கூட்டம் நடத்திமாற்று செயல்திட்டம் ஒன்றை வகுத்தார்கள். மேற்கு வங்க கம்யூனிஸ்ட்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் டாங்கேவிற்கு எதிர்ப்புதெரிவித்து ரகசிய கூட்டங்களை நடத்தினார்கள். இவர்கள் அதேஆண்டில் ஆந்திராவின் தெனாலி பகுதியில் மாநாடு ஒன்றை நடத்தினார்கள். அதில் சீனாவுக்கு ஆதரவான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மாவோயின் உருவப்படங்களைகையில் வைத்திருந்தார்கள். இதில் பரிமள் தாஸ் குப்தா புதிய அமைப்பின் செயல்திட்டம் மற்றும் ஸ்தாபன அறிக்கையை வடிவமைத்தார்.அசிசுல் ஹக் என்பவர் அதற்கு இறுதிவடிவம் கொடுத்தார். இந்நிலையில்மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி மாநாடுகள்நடைபெற்று சீனாவுக்கு ஆதரவான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.1964 அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 7 வரை கல்கத்தாவில் நடந்தமாநாட்டில் புதிய கட்சியானது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதே நேரத்தில் டாங்கே தலைமையில் மும்பையில் மாநாடுநடைபெற்றது. கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் புதிய கட்சிக்கான பெயர்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்பதாக உருவாக்கப்பட்டது. இவர்கள் இந்தியா இன்னும் அரை நிலப்பிரபுத்துவ நாடாக இருந்து கொண்டிருக்கிறது. இதற்காக வர்க்கப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதிருக்கிறது. காங்கிரஸோடு இணைந்து கொண்டால் இதனை இழக்க வேண்டியதிருக்கும் என்றார்கள். மாறாக இந்திய கம்யூனிஸ்ட்கட்சியோ காங்கிரஸோடு இணைந்து பாராளுமன்ற ஜனநாயகம் மூலம்இதனை முன்னெடுக்க முடியும் என்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது பாராளுமன்ற ஜனநாயகத்தில்நம்பிக்கை கொண்ட பிறகு 1957 ல் கேரளாவில் முதன் முதலாகஅதிகாரத்தை கைப்பற்றியது. இதை மார்க்சிய அடிப்படையிலான உலகின் முதல் ஜனநாயக அரசு என்பதாக உலகம் முழுவதுமான இடதுசாரி சிந்தனையாளர்கள் வர்ணித்தார்கள். இ.எம்.எஸ் நம்பூதிரிபாடுமுதலமைச்சராக பொறுப்பேற்றார். அதற்கு முந்தைய ஆண்டு தான் கேரளா சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த மலபார் பிரதேசத்தைஉள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாநிலமாக மாறியது. அதுவரையிலும்திருவிதாங்கூர், கொச்சி ஆகிய மன்னர் சமஸ்தானங்களை மட்டுமேகொண்டிருந்தது.இந்நிலையில் வரலாற்று அடிப்படையில் கேரளா சேரமன்னர்களின் ஆளுகைப்பகுதியாகும். இன்றைய கேரளகட்டிடக்கலையின் வடிவமைப்பானது சேர ஆளுகையின் பிரதிபலிப்பாகும். கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வருகை முப்பதுகளில்தொடங்குகிறது. 1937 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளபிரிவானது கோழிக்கோட்டில் நடந்த ரகசிய கூட்டம் மூலம்தொடங்கப்பட்டது. அதில் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு, கிருஷ்ணபிள்ளை,என்.சி சேகர், கே.தாமோதரன் மற்றும் எஸ்.வி கதே போன்றவர்கள் கலந்து கொண்டனர். இந்த தொடர்ச்சியில் கேரள இடதுசாரி முறைக்குஒரு பாரம்பரியமே உண்டு.இதில் கதே தவிர மற்ற நான்கு பேரும்அன்றைய காலத்தில் இருந்த காங்கிரஸ் சோசலிச கட்சியைசார்ந்தவர்கள். கதே சி.பி.ஐயின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார்.இவர் சென்னையிலிருந்து வருகை தந்திருந்தார். இவரும் சுந்தரய்யாவும்அடிக்கடி கேரளா சென்று அங்குள்ள காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிதலைவர்களை சந்தித்தனர். இதன் விளைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅங்கு வேர் பதிக்க தொடங்கியது. கேரளாவை பொறுத்தவரை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்களிப்பு என்பது அங்குள்ள ஜமீன்தாரிகளுக்குஎதிரான போராட்டமாகும். இன்னொரு பக்கத்தில் சாதியஒடுக்குமுறைக்கு எதிராக நாராயணகுரு இயக்கத்தின் போராட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. ஜமீன்தாரிக்கு எதிரான போராட்டத்தில்வயலார் -புன்னப்புரா போராட்டம் வரலாற்று பதிவான ஒன்றாகும். அதுஒரு துயர சம்பவமும் கூட. போராட்டம் மனித உயிர்களின்இழப்பீட்டிலும் கொண்டு போய் முடிந்தது. இதில் கிருஷ்ணபிள்ளையின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இப்போர்திரட்சிக்காக கிருஷ்ணபிள்ளை மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டார். குருவாயூர் கோயிலில் மணியடிக்கும் உரிமை அக்காலகட்டத்தில் உயர்சாதிக்கு மட்டுமே சொந்தமான ஒன்று. 1946 ல் கிருஷ்ணபிள்ளை குருவாயூர் கோயிலுக்கு சென்றுமணியடித்தார். இதன் விளைவாக சிறைத்தண்டனையும் அவருக்குகிடைத்தது. ஒரு சமூக மாற்றத்துக்கான தொடக்கம் இதன் மூலம் கேரளவரலாற்றில் குறிக்கப்பட்டது. இதன் காரணமாக கேரளாவில் இன்றுகூர்மையான சாதி அரசியலும், சாதிய ஒடுக்குமுறையையும்குறைந்திருக்கிறது. இங்கு தமிழ்நாட்டை போல் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை. சாதியசமூகங்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. இதேகாலகட்டத்தில் கேரள நக்சல்பாரிகளின் எழுச்சியையும் அவர்களின்போராட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட வேண்டும். சாரு மஜூம்தார்தலைமையில் 1967 ல் இந்தியா முழுமையும் , பின்தங்கிய பகுதிகளில்விவசாய நிலங்களை நிலப்பிரபுக்களிடமிருந்து மீட்டெடுப்பதற்கானஇயக்கமாக உருவான மார்க்ஸிய-லெனினிய கட்சி பல்வேறுமாநிலங்களில் போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தது. கேரளாவில்அம்பாடி சங்கரன் குட்டி மேனன் தலைமையில் புல்பள்ளி, தலசேரி,குற்றியாடி, வயநாடு மற்றும் கண்ணூர் பகுதியில் நிலபறிப்புபோராட்டங்கள் நடைபெற்றன. அவர்களின் ஆயுத போராட்டங்கள்மூலம் பல நிலப்பிரபுக்கள் கொல்லப்பட்டனர். நிலங்கள் பின் தங்கியமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. அய்யங்காளி படை என்றதலைமறைவு போராட்ட இயக்கமும், போராட்ட படை என்றவெளிப்படையான இயக்கமுமாக இரு இயக்கங்கள் செயல்பட்டன. 1968முதல் 1976 வரையிலான கேரள நக்சல்பாரி போராட்டமானது கேரளவரலாற்றில் முக்கியத்துவமான ஒன்றாகும்.1957 ல் அதிகாரத்திற்கு வந்தஇ.எம்.எஸ் அரசானது நில உச்சவரம்பு, மற்றும் கல்வி நிலையங்கள்ஆகிய இரு முக்கிய சட்ட திருத்தங்கள் கொண்டு வந்தது. இதன்படி பாலக்காடு, திருச்சூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஜமீன்தார்வசமிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்தியாவில்நிலவுடமை முறை அதன் காலந்தொடர்ந்த மன்னர் ஆளுகையால்ஏற்பட்டது. அவர்கள் தான் மானியங்கள், குத்தகை என்பதாக
ஜமீன்களுக்கு நிலமளித்தனர். இந்த இடத்தில் விவசாய நிலம் மன்னர்களின் ஆளுமை சார்ந்த எல்லை குறியீடு. அந்த காலகட்டத்தில் இது மன்னர்களின் திட்டவருவாயாகவும் இருந்தது. நில உச்சவரம்பு சட்டம் கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அன்றைய காலகட்டத்து மிக முக்கியமான பங்களிப்பு என்று சொல்லலாம். மற்றொன்று கல்வி சீர்திருத்த சட்டம். அதாவது அனைத்து கல்வி நிலையங்களையும்அரசுடைமையாக்குவது. இது அன்றைய கல்வி அமைச்சரான ஜோசப்முண்டசேரியால் கொண்டுவரப்பட்டது. இது சோசலிச பிரதிபலிப்பு என்றாலும் அன்றைய கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப்பெரும் சறுக்கல் என்றே சொல்ல வேண்டும். இந்திய சமூக உள்கட்டமைப்பைபற்றிய ஆழ்ந்த விமர்சன கண்ணோட்டம் இல்லாமல் அவசரமாகஎடுக்கப்பட்ட முடிவானது இறுதியில் தோல்வியில் கொண்டு போய்சேர்த்தது. கல்வி நிலையங்களை பொறுத்தவரை கேரளாவில் கிறிஸ்தவமிஷினரிகளே அதிக அளவில் நிர்வாகம் செய்கின்றன. இதனுடையசமூக தேவை என்ன? இதன் தர்க்கரீதியான தொடர்ச்சி என்ன என்பதைபற்றியெல்லாம் எவ்வித சிந்தனையுமில்லாமல் நம்பூதிரிபாடு அரசானதுஅரசுடமை சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தின் அம்சங்கள்ஆசிரிய மற்றும் மாணவர்களுக்கு சாதகமானதாக இருந்த போதும்அடிப்படைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக அதை திரும்பபெறவேண்டியதாயிற்று. மேலும் காவல் நிலையங்களில் கட்சியினரின்ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இறுதியில் காவல்நிலையங்கள் கட்சிஅலுவலமாக மாறக்கூடிய நிர்பந்தச்சூழல் ஏற்பட்டதுபிந்தையவருடங்களில் நம்பூதிரிபாடு அரசானது கலைக்கப்பட்டு விட்டது. பின்னர்காங்கிரஸ் மற்றும் பிளவுக்கு பிந்தைய கட்டத்தில் 1967 ல் இம்.எஸ்.எஸ்ஆட்சிக்கு வந்தார். அந்த கட்டத்தில் தான் 1969 ல் இந்தியா முழுவதும்மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்றது. அதில்எல்லா மாநில அரசுகளும் காவல்துறையை பயன்படுத்தி அந்த போராட்டத்தை ஒடுக்கியபோது இ.எம்.எஸ் அரசாங்கம் மறுத்துவிட்டது. இதுஅவருடைய அரசின் மிக சவாலான முடிவு. மேலும் தன்னுடையகட்டுப்பாட்டில் இருந்த காவல்துறையை ஒடுக்கப்பட்ட மக்களுக்குசாதகமானதாக மாற்றினார். முந்தைய காலங்களில் தான் கற்றுக் கொண்ட பாடமானது அவருக்கு இதற்கான தூண்டலாக இருந்தது. இருவருடங்கள் மட்டுமே அவரால் அதிகாரத்தில் தொடர முடிந்தது. அதற்கு
பின்னர் காங்கிரஸ் துணையோடு அச்சுதமேனன் தலைமையில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரவை பொறுப்பேற்றது. அன்றையகட்டத்தில் இந்திய அளவில் இரு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கான உராய்வுஅதிகம் இருந்தது. கேரளாவை பொறுத்தவரை அன்றைய கட்டத்தில்
அரசுகளின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி இருந்தது. உள்முரண்பாடுகள் காரணமாக எந்த அரசுகளுமே ஐந்து ஆண்டுகாலத்தை பூர்த்திசெய்ய இயலவில்லை. இதுவும் கேரள வளர்ச்சியின் பாதகமானஅம்சமாக இருந்தது.
கேரளாவின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் இடதுசாரி கட்சிகள் 24 வருடங்கள் அரசியல் அதிகாரத்தில் இருந்திருக்கின்றன. இதில் இவர்களின் வெற்றி என்பதை விட தோல்விகளே அதிகம். கேரளாவின் சாதகமான அம்சம் என்பது இந்தியாவின் முழு எழுத்தறிவு பெற்றமாநிலம் என்பதாகும். 1991 ல் தான் இது சாத்தியம் ஆனது. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் நேருவின் அராசங்கம் 1960 ல் வெளியிட்டபுள்ளிவிபர அறிக்கையில் கேரளாவின் எழுத்தறிவு 59 சதவீதமாகஇருந்தது. இது இந்திய சரசாரியை விட 14 சதவீதம் அதிகம். இதன்இலக்கு நோக்கிய இயக்கம் என்பது எண்பதுகளில் சி.பி.எம் அரசால் எர்ணாகுளத்தில் தொடங்கப்பட்டது. பல இடங்களில் எழுத்தறிவு பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அந்த மாவட்டத்தில் மட்டும் 175000பேர் எழுதப்படிக்க தெரியாதவர்களாக இருந்தனர். தொடர்ச்சியான இயக்கத்தின் விளைவாக 1990 ல் கேரளா முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அன்றைய கட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் அறிவொளி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 1993 ல் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. மற்றொன்று சரசாரி மனித ஆயுள். கேரளாவைபொறுத்தவரை ஆணின் சராசரி ஆயுள் 70 ஆகவும் பெண்ணின் ஆயுள்72 ஆகவும் காணப்படுகிறது. இது இந்திய சராசரியை விட 7 வருடங்கள்அதிகம். பிறப்பு விகிதம் 2001 ன் கணக்குபடி கேரளாவில் 18 சதவீதமாககுறைந்திருக்கிறது. இதற்கு அதன் உள் காலநிலை மற்றும் எழுத்தறிவே காரணம்.மேலும் குழந்தைகளின் இறப்புவிகிதம். இதுவும் இந்திய சராசரியை விட குறைவு. இதற்கான முன்னோட்டம் ஆரம்பகால நம்பூதிரிபாடுஅரசின் சுகாதார திட்டங்களே.வாழ்க்கை குறியீட்டின் உடல் தரம்
(Physical quality of life index) அடிப்படையில் கேரளா முதல் இடத்தில்இருந்தாலும் உடல் தரம் என்பது உழைப்பு திறனை உருவாக்கும் சாத்தியமற்று போனது கேரளாவை பொறுத்தவரை மிகப்பெரும் தோல்வியே.தனி நபர் வருமான விகிதம் இந்தியாவில் கேரளாவில் தான்மிகக்குறைந்து காணப்படுகிறது. இது அதன் செலவீன குறியீட்டை (costof living index) விட குறைவு. தமிழ்நாட்டு இயக்க அடிப்படைவாதிகள் இதனை மறுக்கிறார்கள்.அதாவது செலவு குறைந்த மாநிலம் கேரளம் என்றும் இது இடதுசாரிகளின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகவும்அவர்கள் கருதுகிறார்கள்.அதற்கு அவர்களால் பத்து ரூபாய் வாதம்வைக்கப்படுகிறது. அதாவது கேரளாவின் எந்த பகுதிக்கு சென்றாலும்பத்து ரூபாயில் ஒரு நேர உணவை உட்கொண்டு விடலாம். இது தற்காலசூழலில் பொருத்தமான விஷயமாகவே இல்லை. கேரள உணவுகலாசாரத்தின் பிரதிபலிப்பாகவே நாம் இதை பார்க்க வேண்டும்.சூழல் என்பதே விலை அடிப்படையில் உணவகங்களுக்கான இடைவெளி கேரளாவில் குறைவு என்பதாகும். ஓர் இடத்தில்விற்கப்படும் பொருள் கேரளாவில் பல தூரங்கள் கடந்தே விலையில்மாறுபடும். தமிழ்நாட்டில் இந்த இடைவெளி சற்று அதிகம். தமிழ்
நாட்டின் நகர்புறத்தில் இது அதிகமாக இருக்கிறது. சென்னைநகரில் ஒரே இடத்தில் உணவகங்களுக்கிடையே ஒரே வகையினத்தின் விலையை ஒப்பிட்டாலே இதை புரிந்து கொள்ள முடியும். இன்னொருவகையில் இது பணசுழற்சியின் நேர்விகிதத்தில் இருக்கிறது. பணம்அதிகமாக சுழலும் போது அவை பண்டங்களை பாதிக்கின்றன.மேலும் கேரள உணவு கலாசாரம் என்பது தமிழ்நாட்டை விட சின்னதான வித்தியாசம் கொண்டது. அங்கு கிழங்கு மற்றும் கஞ்சி இன்றும்வழக்கத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஒருகாலத்தில் கேழ்வரகு கூழ் வழக்கத்தில் இருந்தது. இன்று பெரும்பாலும்வழக்கொழிந்து விட்டது. இன்னொரு முக்கிய விஷயத்தை கவனிக்கும் போது அத்தியாவச பண்டங்களின் விலை தமிழ்நாட்டை விடகேரளாவில் அதிகம் என்பது தான். அரிசி, கோதுமை, பால்,பருப்புவகைகள், நறுமண பொருட்கள், சர்க்கரை, மாமிச வகைகள்,
காய்கறிகள், இவற்றின் விலையை தமிழ்நாட்டோடு ஒப்பிட்டாலே புரியும்.
வேறொரு மொழியில் சொன்னால் தமிழ்நாட்டில் சாராசரியாக பத்து ரூபாயில் ஒருவர் இருவேளை சமைத்து சாப்பிட முடியுமென்றால், கேரளாவில் இது ஐந்து ரூபாய் அதிகப்படும். மத்திய அரசின் விவசாய அமைச்சகஅறிக்கைப்படி கேரளாவில் நெல் உற்பத்தி கடந்த பத்தாண்டுகளில்குறைந்திருக்கின்றது. 2001ல் 3.64 ஹெக்டேராக இருந்த நெல் உற்பத்தி2007ல் 2.67 ஹெக்டேராக குறைந்திருக்கிறது. இந்த நிலைமை அதன்போக்கில் செல்லும் போதும் இன்னும் பத்து ஆண்டுகளில் கேரளாவில்பட்டினி சாவுகள் ஏற்படும் என்று உணவு நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.கடந்த பத்தாண்டுகளில் இந்தியா முழுவதுமான விவசாய உலகத்திற்கு மிகுந்த நெருக்கடியான காலகட்டம். விவசாயத்தின் பலன் விவசாயிக்கு சென்று சேர முடியாத சூழலில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.மத்திய குற்றப்பதிவு அமைப்பின் (National crime records bureau) அறிக்கைப்படி மகாராஷ்டிரா, ஆந்திரம், கர்நாடகா மற்றும் சட்டிஸ்கர்அடங்கிய மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் விவசாயிகள் தற்கொலையில் முதல் இடத்தில் வருகின்றன. இங்கு 1997 முதல் 2005 வரைசராசரியாக ஒவ்வொரு 53 நிமிடத்திற்கும் ஒரு தற்கொலை நடைபெற்றிருக்கிறது. இதற்கு அடுத்த படியாக அதிகம் தற்கொலை நடைபெற்ற மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதல் இடத்தில் வருகிறது.இங்கு 1997முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் தான் அதிகப்படியான தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அதில் 1998 க்கும் 2003 க்குமான வருடங்களில் மிக மோசமான நிலைமையாக இருந்திருக்கிறது. தற்கொலை செய்து கொண்ட மொத்தமுள்ள 11,516 விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இந்த காலகட்டத்தில் தான் மரணமடைந்தார்கள். வயநாடுமாவட்டம் தான் இதில்கடுமையாக பாதிக்கப்பட்டது.அன்றைய ஈ.கேநாயனார் அரசு இதற்காக எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையையும்மேற்கொள்ளவில்லை. சோவியத் விமர்சனம் மாதிரியே மத்திய அரசின்மீது பழிபோட்டுக்கொண்டு விலகி கொண்டது. உணவு பொருட்களின்விலை எங்கள் மாநிலத்தில் தான் கட்டுக்குள் இருக்கிறது என்றுசொல்லும் போது மத்திய அரசு எங்கே போனது என்றே தெரியவில்லை.இறுதியில் 2002ல் அந்தோணி அரசில் தான் இதற்கான கமிட்டிஅமைக்கப்பட்டது. இந்த நிகழ்வு மூலம் 1957 ல் தொடங்கப்பட்டநிலசீர்திருத்தம் அதன் இலக்கை அடைய முடியவில்லை என்பது தெளிவானது. மேற்குலகில் சோசலிச சமூகத்திற்கு உதாரணமாகபசுமாட்டைகுறிப்பிடுவார்கள். உன்னிடத்தில் பால் தரும் இரு பசுக்கள் இருந்தால்அதில் ஒன்றை பறித்து மற்றொருவருக்கு கொடுப்பது என்பது தான்சோசலிசம். அந்த வகையில் நில சீர்திருத்தம் என்பது சோசலிச சமூக
கட்டுமானத்திற்கான முதல் நடவடிக்கை. இங்கு பிரச்சினையே அதன்பலன் அவனை அடைய வேண்டும் என்பது தான். விவசாயத்தைபொறுத்தவரை நிலம், அதன் சூழல், மூலப்பொருட்கள், விவசாயநடவடிக்கை, விளைபொருள், சந்தைச்சூழல் ஆகிய மொத்தநடவடிக்கையின் தொகுதியாக இருக்கிறது. இவற்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலே விவசாயம் பாதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை கேரளாவின் கம்யூனிஸ்ட் கட்சிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.சமீபத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளகுட்டநாட்டில் நெல்லை கொய்வதற்கு ஆளில்லாமல், இயந்திரத்தையும்பயன்படுத்த முடியாமல் பயிர்கள் நாசமாயின. இதற்கு கேரளாவின்வறட்டு தொழிற்சங்க வாதமே காரணம். சிண்டிகேலிசத்தை தவறாகபுரிந்து கொண்டதன் விளைவு இது. ஒரு நபர் அந்த வேலையை செய்யாமலே அவருக்கு கூலி வழங்கும் நோக்கு கூலி முறை இந்தியாவில்கேரளாவில் தான் உள்ளது. தற்போது இது பற்றிய விவாதங்கள் கேரளாவில் நடைபெற்று வருகின்றன. அதற்கு தொழிற்சங்கங்கள் நோக்கு கூலி என்ற வார்த்தை பிரயோகமே தவறானது. மாறாக தொழில் இல்லாசூழலில் தொழிலாளிக்கு வழங்கப்படும் இழப்பீடு மாதிரியான தொழிலாளியின் உரிமை என்கிறது. (கேரளாவின் நோக்கு கூலியை பற்றிபொன்னீலனின் கதை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது) இந்தவறட்டுத்தனமான விளக்கம் மூலம் கேரளாவின் இடதுசாரிதொழிற்சங்கங்கள் தங்களை சுய ஏமாற்றம் செய்து கொள்கின்றன.குட்டநாடு சம்பவத்தை தொடர்ந்து வளைகுடா நாட்டில் உள்ள மலையாள சங்கத்தை சார்ந்த நிர்வாகி ஒருவர் என்னிடத்தில் சொன்னார்."முஹம்மது, முல்லை பெரியார் விஷயத்தில் கேரளா அரசுக்கு ஆதரவாக நாங்கள் நின்றோம். அந்த நேரத்தில் அதற்காக உங்களிடம் வாதம்செய்தேன்.இப்போது அதை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின்நிலைபாடு சரியானது தான் என்று நாங்கள் சொல்லப்போகிறோம்".கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த தோல்வி என்பது விவசாயத்திலிருந்து தொழிற்துறைக்கு மாறுவதைப் பற்றியதாகும். முழு எழுத்தறிவுக்கான நடவடிக்கையை எடுத்த கம்யூனிஸ்ட் கட்சியால் அதன் பலன்கள்சமூகத்தில் விவசாயம் சாராத பிரிவினருக்கு சென்று சேர வேண்டும்என்பதை கவனிக்க இயலவில்லை.. சமீபத்திய கணக்கெடுப்பின் படிகேரளாவில் 56.5 சதவீத இளைஞர்கள் (21 வயது முதல் 35வயதுக்குட்பட்டவர்கள்) கேரளாவுக்கு வெளியில் இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில், கர்நாடகத்தில், மும்பையில், ஆந்திராவில் மற்றும் இந்தியாவுக்கு வெளியே வளைகுடா நாடுகளில் இவர்கள் பரந்திருக்கிறார்கள்.இவர்களில் 40 சதவீதம் பேர் வளைகுடா நாடுகளில் இருக்கிறார்கள்.மலையாளிகளின் வளைகுடா வாழ்க்கையின் துயரங்கள் பற்றி கேரளாவில் ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன.பல தொழிற்சாலைகள்மூடப்பட்டிருக்கின்றன. இதில் முக்கிய அம்சம் என்பதே மூடப்படும்தருணத்தில் ஒன்றை கூட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியால்அரசுடமையாக்க முடியவில்லை. (தமிழ்நாட்டு கழகங்கள் மூடிய
தொழிற்சாலையை திறப்பதற்கு பெயரளவிலாவது இதை சொல்லும்) இந்தஇயலாமையிலிருந்து அது எவ்விதமான சுய விமர்சனத்தையும்செய்யமுடியவில்லை. உழைக்கும் வர்க்கமானது புலம் பெயரும் போதுஅடையும் உளவியல் நெருக்கடி மற்றும் சுரண்டல் சார்ந்த நெருக்கடிகள்போன்ற எவற்றையுமே கம்யூனிஸ்ட் கட்சிகள் பார்க்க தவறி விட்டன.கேரளாவில் நாங்கள் முதலாளித்துவத்தை ஒழித்து விட்டோம் என்று சொல்லும் போதே கேரளாவை பொறுத்தவரை பாட்டாளி வர்க்கத்தையும்அழித்து விட்டோம் என்பது தான். இங்கு எஞ்சியிருப்பது அரசு மற்றும்அரசியல், தொழிற்சங்க அமைப்புகள் தான். முந்தைய காங்கிரஸ் அரசின்முதல் அமைச்சராக இருந்த உம்மன் சாண்டி கடந்த மூன்றாண்டுகளுக்குமுன்பு துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது (இந்தியாவில் அதிகமாக வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்குசுற்றுப்பயணம் செல்வது கேரள அரசியல் வாதிகள் தான்) அங்குள்ளதொழிலாளர் முகாம்களுக்கு சென்றார். அப்போது கேரளதொழிலாளர்களை கண்ட போது அவர் அழுத காட்சியை கேரளதொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின்பெருவாரியான பங்குகளை கொண்ட கைரளி தொலைக்காட்சியானதுவளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்று மீண்டும் கேரளாவுக்குதிரும்ப முடியாத, காணாமல் போன மலையாளிகள் பற்றிய நிகழ்ச்சியைவாரந்தோறும் ஒளிப்பரப்புகிறது. கேரள தினப்பத்திரிகைகள் சில இங்கும்தனது தினசரி பதிப்பகத்தை வைத்திருக்கின்றன. உலகிலேயேவெளிநாட்டில் பதிப்பை வைத்திருப்பவை மலையாளபத்திரிகைகள்தான்.
கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு வறட்டுத்தனம் சிறுதொழில்கள்மற்றும் பெருந்தொழில்கள் இடையே உள்ள வித்தியாசம் பற்றியபார்வை. பூர்ஷ்வாக்களின் தொழில் என்று பல சிறு தொழில் சார்ந்தநிறுவனங்கள் மூடப்பட்டன. அதில் முக்கியமானது கேரளாவின்உயிர்நாடியாக இருக்கும் கயிறு உற்பத்தி . இதுவும் கேரளாவில்
நலிவடைந்திருக்கிறது. வங்கியில் கடன் எடுத்து இரண்டாம் தரமாகபேருந்து ஒன்றை வாங்கி தானே அதன் ஓட்டுநராக இருந்து அரசின்அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் பேருந்து ஓட்டிய பலர் பூர்ஷ்வா வளையத்தில் கொண்டு வரப்பட்டு அதனை மற்றொரு பெரு முதலாளிக்கு விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கடந்தஆண்டில் கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஏற்பட்டமுல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரள கம்யூனிஸ்ட் கட்சியின்அணுகுமுறை மிகக்கேவலமாக இருந்தது. விவசாயம் அங்கு நலிவடைந்தசூழலில் தனக்கான நியாயத்தை வலுப்படுத்துவது அறிவீனமானது.மேலும் சேலம் ரயில்வே கோட்டம் விஷயத்தில் கேரள எம்.பிக்கள்நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து சோம்நாத்சட்டர்ஜியே வெட்கம் என்றார். இந்த இரு பிரச்சினைகளிலும்தமிழ்நாட்டு இந்திய மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் வளைந்துநெளிந்து உருண்டு கொண்டன. டெல்லியில் மத்திய அரசு நடத்தியகூட்டத்தில் நான்கு எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை. இறுதியில்நந்தி கிராம் மாதிரியான விமர்சனம் தங்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாதுஎன்ற உள்ளுணர்வு காரணமாக கடைசிக்கூட்டங்களில் அதன்எம்.பிக்கள் கலந்து கொண்டார்கள். இது ஆத்மார்த்தமான தமிழ்நாட்டுஉரிமை சார்ந்த உணர்வோடு கூடியதல்ல. அந்த இரு பிரச்சினைகளின்காலக்கிரமங்களையும், அதன் நிகழ்வுகளையும் கூர்ந்து கவனித்தாலேஇதன் நிலைபாடு புரியும். இன்றும் தமிழ்நாட்டு சி.பி.எம் சேலம் கோட்டவிஷயத்தில் கேரளாவுக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுக்கிறது.(பார்க்க: வரதராஜன் நேர்முகம் கீற்று.காம்) அந்த சமயத்தில் நான்தமிழ்நாட்டு சி.பி.ஐ தோழர் ஒருவரிடம் சொன்னேன் " நீங்கள் இனி
இந்திய தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என முப்பத்து மூன்றுதடவை உங்களுக்குள் சொல்லி கொள்ளுங்கள்".இதில் சீதாராம்ரெய்ச்சூரி கேரள எம்பிக்கள் குழுவிற்கு தலைமை தாங்கி சென்றது தான் நோதமான ஒன்றாக இருக்கிறது. மொழி வாரி மாகாணங்கள் பற்றிஐம்பதுகளில் மத்தியகுழு கூட்டங்களில், பாலக்காடு அகில இந்தியமாநாட்டில், கல்கத்தாவின் மாநில கூட்டங்களில் விவாதித்த கம்யூனிஸ்ட்கட்சி இன்று திருத்தல் வாதத்திற்கு சென்று விட்டது. வெறும் கட்சி அரசுமற்றும் தொழிற்சங்கம் ஆகிய எல்லையோடு அது குறுகி விட்டது.கல்வி விஷயத்தில் கேரளா ஆரம்பகல்வியோடு நின்று விடுகிறது.உயர்கல்வி நிறுவனங்கள் கேரளாவில் மிகக்குறைவாக இருக்கின்றன.பொறியியல் கல்வி நிறுவனங்களை பொறுத்த அளவில் தமிழ்நாட்டில்கல்வி தந்தைகளை அதிகம் உருவாக்கிய பெருமை கேரளாவுக்குஉண்டு. தமிழ்நாட்டில் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் அதிகஅளவில் கேரள மாணவர்கள் படிப்பதை நாம் காண முடியும். கேரளாவி
ன் சிறப்பம்சம் இந்தியாவிலேயே அதிகமான பெண் பட்டதாரிகளைகொண்ட மாநிலம் என்பதாகும். ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை கேரளாவில் குறைந்து வருவதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. 2000 ஆண்டுக்கும் 2008 க்கும் இடையேயான புள்ளி விபரத்தைஎடுத்துக்கொண்டாலே இது புரியும். இதற்கு அங்கு நிலவும் வேலைஇல்லா சூழலும், பெண்களுக்கான பாதுகாப்பு சூழலும் முக்கியகாரணங்கள். இந்தியாவிலே அதிக பெண்கள் விகிதத்தை (ஆயிரம்ஆண்களுக்கு 1120 பெண்கள் இருக்கிறார்கள்.) கொண்ட மாநிலமாககேரளா இருக்கும் நிலையில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகேரளாவில் அதிகம் இருக்கிறது. அவுட்லுக் பத்திரிகை 2004 ஆம்ஆண்டு கேரளாவில் நடத்திய சர்வேயில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மேலும் இந்தியாவில் தினசரி பத்தில் ஒரு தற்கொலை கேரளாவில் நடக்கிறது. மேலும் நகர்புற வறுமை அதிகம் காணப்படுகிறது (மேற்கு வங்கத்தில் கிராமப்புற வறுமை அதிகம் காணப்படுகிறது.) கேரளாவின் மற்றொருசிறப்பம்சம் கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையேயான இடைவெளிகுறைவு என்பதே. இது சோசலிச சமூகத்தின் கூறுகளில் ஒன்று. மார்க்ஸ்இதைப்பற்றி ஜெர்மானிய கருத்தியல் (German ideology) நூலில் விரிவாககுறிப்பிட்டிருக்கிறார். நகரத்திற்கும் கிராமத்திற்குமான இடைவெளிஎன்பதே முதலாளிய வெளிப்பாடு. இதனை குறைப்பது என்பதே சோசலிச நடவடிக்கை. ஆனால் கேரளாவை பொறுத்த வரை இந்த இடைவெளிகுறைவு என்பது அங்குள்ள புவி-அரசியல் நிலையே. இயல்பாகஅமைந்த உள்கட்டமைப்புகள் அதன் நகர-கிராம இடைவெளியைகுறைத்திருக்கின்றன.
கேரளாவின் இன்னொரு முரண்பாடு அரசு நிர்வாகம் பற்றியதாகும்.
இந்தியாவிலே ஊழல் குறைந்த மாநிலம் என்ற ஒரு நிலையில், அரசுஅலுவலகங்களில் லஞ்சம் அதிகம் காணப்படும் மாநிலமாக இருக்கிறது.இது இடதுசாரி நிர்வாகத்தின் சறுக்கலே. பல்வேறு பிரச்சினைகளில் அரசுஊழியர்கள் ஆதரவு நிலைபாடு எடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி இதில்மட்டும் கவனம் செலுத்தாமல் போய் விட்டது. இதற்கு நோக்கு கூலிமாதிரியான தத்துவார்த்த விளக்கம் சொன்னவர்கள் கேரளாவில் இருக்கிறார்கள். மேலும் கேரள அரசின் வருவாய் என்பது வெறும் வரிகளைமட்டுமே நம்பி இருக்கிறது. மற்ற வருவாயினங்கள் மிகக்குறைவு. இந்தநிலைமை காரணமாக இரு தடவை அரசு ஊழியர்களுக்கு சம்பளம்கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தொழிற்துறை, பூர்ஷ்வாபற்றிய அதன் வறட்டு பார்வை இவைகளே அதற்கு காரணம். மேலும்சாலை, போக்குவரத்து, மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள்கேரளாவில் குறைவாக இருக்கின்றன. மிகவும் குறுகலான தேசியநெடுஞ்சாலைகள், உடைந்த பாலங்கள், குழிகள் மட்டுமே நிறைந்தகிராம சாலைகள் , மிகவும் குறுகலான உடைந்த கட்டிடங்கள் நிரம்பியபெரும்பாலான பேருந்து நிலையங்கள்,கடலில் கலக்கும் நீரை சேமிக்கஇயலாமை, மின்வசதி இல்லாத வயநாட்டு கிராமங்கள் இவைகள் மொத்தரீதியில் உள்கட்டமைப்பு வளர்ச்சியைபாதிக்கின்றன.கேரளாவின் இத்தகைய போக்குகள் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகமுறையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அங்கு ஏற்பட்ட தோல்விகள்இவைகளை பற்றி கேரளாவில் நிறைய விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக கேரள எழுத்தாளர்களானசச்சிதானந்தன்,ஓ.விஜயன்மற்றும் சக்கரிய்யா போன்றவர்கள் இதனை முன்னெடுத்திருக்கிறார்கள்.அவர்களை எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியானது வழக்கமாக வகுப்புவாதிகள், புரட்டல்வாதிகள் என்ற வசையோடு மட்டுமே எதிர்கொண்டது.மேலும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றிய அதன் வறட்டுபார்வையையும் குறிப்பிட வேண்டும்.கேரளா இதில் மிகத்தீவிரமாக
நின்றது. உதாரணமாக ராஜீவ்காந்தி எண்பதுகளில் இந்தியாவில்கம்ப்யூட்டரை அறிமுகம் செய்த போது இடதுசாரி கட்சிகள் அதைகடுமையாக எதிர்த்தன. இயந்திரமயமாக்கல் ஆட்குறைப்பிற்கு வழிவகுக்கிறது என்ற வாதத்தை அடிப்படையாக வைத்த ஒன்றாக அதுஇருந்தது.மற்றொருநிலையில் கம்ப்யூட்டரை அடுத்த கட்டத்திற்குவளர்த்தெடுத்ததே சோவியத் ரஷ்யா தான். அமெரிக்காவிற்கு முன்பேஅதனை தகவல் தொடர்பிற்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதைபற்றி சோவியத் விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். கம்ப்யூட்டர் மட்டுமேஅதிக அளவில் உழைப்பு பிரிவினையை குறைக்கிறது. இன்றுஅச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி அரசு கேரளாவில் தகவல்தொழில்நுட்ப பூங்காங்களை அமைக்க திட்டமிட்டு வருகிறது. அதற்காகபெங்களூர் சென்ற அச்சுதானந்தன் அங்கு பலரை சந்தித்து பேசியிருக்கிறார். தங்கள் நிலைபாட்டின் பரிணாம வளர்ச்சிக்கு இருபது ஆண்டுகள்வேண்டும் என்பது இன்னொரு தோல்வியே. கேரள சி.பி.எம் என்றுமேஉயர்ஜாதி அரசியலோடு தொடர்பு கொண்டது. அதன் தற்காலபோக்குகளையும், கடந்த கால அனுபவச்சூழலையும் கவனத்தில்கொண்டாலே இது புரியும்.
இந்திய இடதுசாரி கட்சிகள் கடந்த காலத்தில் எதிர்கொண்ட மிக முக்கிய
விமர்சனமே இந்திய சமூக கட்டுமானம் பற்றிய அதன் மரபான பார்வை.
குறிப்பாக அடிக்கட்டுமானம்- மேற்கட்டுமானம் பற்றிய மார்க்சியபார்வை. மார்க்ஸின் அளவில் ஐரோப்பிய சூழலில் இது மிகச்சரியாகவேஇருந்தது. அன்றைய காலகட்டம் என்பது ஐரோப்பிய வரலாற்றில்தொழிற்புரட்சி ஏற்பட்ட காலகட்டமாகும். இன்னொரு சூழலில் அங்குதேசியவாதம் வலுப்பெற்று வந்தது. ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றுமேபுதிய காலனியை தேடி பல நாடுகளுக்கு பயணம் செய்தன. இந்தநிலையில் அந்த காலனியத்தை வலுப்படுத்துவது அதன் பொருளாதாரநலன்களே என்பதை மார்க்ஸ் கண்டறிந்தார். சமூகத்தை வரலாற்றின்அடிப்படையில் பிரித்து கண்ட பிறகு அதன் வேர் பொருட்களைஉற்பத்தி செய்வதில் தான் அடங்கியிருக்கிறது. இந்த உற்பத்திமற்றொன்றோடு அதனை விநியோகம் செய்வதில் போய் முடிகிறது.இதில் தான் அரசன், பிரஜை, ஆண், பெண், கைவினைஞர்கள்-பொதுவானர்கள், உடைமையாளர்கள்-இல்லாதவர்கள் போன்ற சமூகவேறுபாடுகள் தோன்றுகின்றன. உற்பத்தி, சமூகத்தின் அடிநாதமாகசெயல்முறை அலகாக மாறும் போது தவிர்க்க முடியாமல் அதுஅடிப்படையாக எழுகிறது. இதில் மேல் உள்ளடங்கும் சக்திகளாக அரசியல்,சட்டம், மதம், கலாசாரம் போன்றவை எழுகின்றன. பொருளாதாரசமூகம் இப்படி தான் வரலாற்று பூர்வமாக இயங்குகிறது என்று மார்க்ஸ்கண்டார்.மார்க்ஸ் இந்த முடிவுக்கு வந்த 19 ஆம் நூற்றாண்டின் இறுதிபகுதியில் தவிர்க்க இயலாமல் அதற்கு மாறுபட வேண்டியதிருந்தது.ஜெர்மனியிலிருந்து புலம் பெயர்ந்தவராக லண்டனுக்கு வந்த போதுஅங்குள்ள சமூக முரண்களை பற்றியும், தேசிய இன போராட்டங்கள்
பற்றியும் அதிகம் சிந்திக்க வேண்டியதாயிற்று. அயர்லாந்துபிரச்சினை பிரிட்டனின் உள் உராய்வாக நீண்டகாலமாகவே இருந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் மார்க்ஸ் அயர்லாந்துவிடுதலையைப் பற்றி பேசினார். நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில்"தேசிய இன விடுதலையே சமூக விடுதலை" என்றார். மேலும்இங்கிலாந்தில் இதைப்பற்றி பல கூட்டங்களில் விவாதித்திருக்கிறார்.மார்க்ஸின் வாழ்க்கை μdடத்தை பற்றி எழுதிய David MClellanதன்னுடைய Marx : His life and thought நூலில் இதனைப்பற்றி விரிவாககுறிப்பிடுகிறார். மார்க்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை நெருக்கடிகள் எப்படிஅவரது கோட்பாட்டில் பாதிப்பை செலுத்தின என்பதை பற்றி எல்லாம்அதில்ஆராய்கிறார். அன்றைய ஐரோப்பிய சூழலில் அவரின்சிந்தனைகள் மரபான ஜெர்மானிய தத்துவ இயலை உள்வாங்கி கொண்டதர்க்க ரீதியான தொடர்ச்சியாகவே இருந்தன.அவருக்கு பின் வந்த பலசிந்தனையாளர்கள் இந்த கட்டுமானம் பற்றிய விஷயத்தைஆராய்ந்திருக்கிறார்கள். அல் தூசர் அதில் முக்கியமானவர். அவர்சமூகத்தை பொருளாதார சக்திகள் என்பதாக பார்க்காமல் அடுக்குகளாககண்டார். இந்த அடுக்குகள் பல்வேறு அலகுகளை கொண்டவை. இவைபல ஆறுகள் ஒரே நேரத்தில் கடலில் கலக்கும் தருணத்தில் ஏற்படும்அலைவியக்கத்தை போன்றவை. பல்வேறு முரண்கள் இதற்குள்வருகின்றன. இந்த முரண்களில் ஒன்று அதிகமாகும் போது அதிலிருந்துபோராட்டம் எழுகிறது. இதனை இந்திய சூழலுக்கு விரித்து செல்லும்போது மார்க்ஸின் கட்டுமான பார்வை முழுமுதலாக பொருந்தும் படிஇல்லை. காலங்காலமான நிலப்பிரபுத்துவ, மன்னர் மற்றும் பிரிட்டிஷ்காலனிய ஆட்சியின் உறைவிடமாக இருந்த இந்திய சமூகம் மரபார்ந்தஉடல், நிலம் மற்றும் அதை சார்ந்த அடையாள அரசியலோடு மட்டுமேஅதிகம் வேர்கொண்டிருக்கிறது. சாதி என்பதன் நீட்சியாக அதுஉருமாறும் போது இங்கு அல்தூசர் சொன்ன மாதிரியான முரண்கள்மேலெழுகின்றன. இதை இந்திய இடதுசாரிகள் பார்க்க தவறினார்கள்.குறிப்பாக சி.பி.எம் நெடுங்காலமாக இதனை மறுத்து வந்தது. இந்தியாமுழுவதுமான இடதுசாரி விமர்சகர்கள் மற்றும் தலித் சிந்தனைவாதிகள்ஆகியோரின் தொடர்ந்த விமர்சனங்கள் காரணமாக இந்த விஷயத்தில்2000 க்கு பிறகு தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ள தொடங்கியது.அப்போது சீதாராம் ரெய்சூரி சொன்னார் " இந்திய சமூக வரலாற்றின்வளர்ச்சி போக்கில் சாதிய சமூக சக்திகள் தவிர்க்க இயலாமல் மேலெழுகிறது. இதனை நாம் மறுப்பதற்கில்லை". இதன் பிறகு அதன் ஸ்தாபனஅறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது. கட்சியின் செயல்திட்டம் சாதியஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடும் படியாக அமைக்கப்பட்டது.ஆனால் பிளவுக்கு பிந்தைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதை தெளிவாகபுரிந்து கொண்டது. பீகாரில், தெலுங்கானாவில், மணிப்பூரில்,தமிழ்நாட்டில் என பல பகுதிகளில் ஒடுக்கப்பட்டவர்களுக்கானநிலசீர்திருத்த போராட்டங்களை நடத்தியது. ஆனால் சில தருணங்களில்இந்த போராட்ட தொடர்ச்சியில் சாதி-வர்க்கம் குறித்த கருத்துருவத்தைவிளக்க முடியாமல் இருந்திருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதிபகுதியில்தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தலித்களுக்குஎதிரான வன்முறை நடந்த போது இந்திய கம்யூனிஸ்ட்கட்சிஎந்தஆக்கபூர்வமானசெயல்திட்டத்தையும்முன்எடுக்கவில்லை.அந்ததருணங்களில் கட்சி அலுவலகங்களில் நடந்த உரையாடல்களே இதற்குஉதாரணம்.இன்னொன்று தேசிய இனங்கள் குறித்த பார்வை. குறிப்பாகஇலங்கை பிரச்சினையில் காலங்காலமான அதன் ஒரே அணுகுமுறை.இலங்கையில் சிங்கள பேரினவாதத்தின் தமிழர்கள் மீதான அதிஒடுக்குமுறை. அவர்களுக்கான பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டநிலையில் இன்று தமிழர்கள் தங்கள் சுய நிர்ணய உரிமை கோரும்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இலங்கையில் இந்திய ஊடகங்களின்பார்வை படாத சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை பற்றியதகவல்கள் இலங்கை தமிழ் ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. வீர கேசரி மற்றும் ஈழ முரசு போன்றவற்றை படித்தாலேஇவற்றை அறிந்து கொள்ள முடியும்.இந்நிலையில் இலங்கை தமிழ்சமூகத்தில் தமிழ்நாட்டை போலவே சாதிய ஒடுக்குமுறை உண்டு. இதைபற்றி பல்வேறு விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவர்களில்
தலித்கள் சிங்கள மற்றும் தமிழ் ஆதிக்க சாதியினர் ஆகிய இருபக்கஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். இந்திய இடதுசாரிகள் இதை பற்றியகவலை ஏதும் இல்லாமலேயே வழக்கமான சோவியத் விமர்சனம் மாதிரியே அரசியல் தீர்வு தான் சாத்தியம் என்ற கருதுகோளுக்குள் வந்துவிழுகிறார்கள். இலங்கை ஒடுக்குமுறையின் பரிணாம வளர்ச்சியை பற்றிய பார்வை ஏதும் இல்லாமல் ஒரே வார்த்தையில் நழுவி விடுவது ஒருவித தப்பித்தலே. இலங்கை பிரச்சினையில் தனித்தேச கோரிக்கையைஆதரிப்பது என்பது விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக அமையாது. ஓர்அர்த்தத்தில் விடுதலை புலிகள் அமைப்பும் அதிகார அமைப்பே.அவர்களால் அரசியல் நடவடிக்கை என்ற ஸ்டாலினிய அடிப்படையில்கொல்லப்பட்ட இலங்கையின் மாபெரும் அறிவுஜீவிகள் மற்றும் இலங்கைஇஸ்லாமியர்கள் (இலங்கை இஸ்லாமியர்களின் தோற்றம் குறித்து தனிஉரையாடல் நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது), இலண்டனில்,கனடாவில் தாக்கப்பட்டவர்கள் ஆகியோர்களின் எண்ணிக்கைஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைக்குசற்று பக்கத்தில் வரும். இன்று இலங்கையின் பெரும்பாலான தமிழ்அமைப்புகளுமே சிங்கள இனத்தோடு தாங்கள் ஒரே கூட்டமைப்பில்வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டன. இன்றைய சிங்கள அரசுஇலங்கையில் தமிழ் இரண்டாம் ஆட்சி மொழி என்பதை நீக்கிவிடமுடியுமா என்பதைபற்றிஆராய்ந்துகொண்டிருக்கிறது.இடதுசாரிகளின் இந்த நிலைப்பாட்டை பற்றி திருவனந்தபுரத்தில் வைத்துமார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடத்தில்கேட்டேன். நீங்கள் முல்லைபெரியாறு பிரச்சினையிலும்,சேலம் கோட்டபிரச்சினையிலும் எந்த நிலைப்பாட்டை எடுத்தீர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. எழுபதுகளில் பாகிஸ்தான் - வங்கதேசம் பிரச்சினை ஏற்பட்ட பொழுது வங்க தேசத்தவர்கள் அகதிகளாக அதிக எண்ணிக்கையில் இந்தியாவிற்கு, குறிப்பாக மேற்கு வங்கத்திற்கு வருகை தந்தார்கள். அப்போது மேற்கு வங்க அரசு அன்றைய இந்திராவின் அரசிடம்சொன்ன ஒன்று " நீங்கள் அங்கு இந்திய ராணுவத்தை அனுப்பாவிட்டால்நாங்கள் எங்கள் காவல்துறையை அனுப்புவோம்." இதை அங்குள்ள இருகம்யூனிஸ்ட் கட்சிகளுமே ஆதரித்தன. வரலாறு இப்படி இருக்கும்நிலையில் இதே இலங்கையிலோ அல்லது உலகின் வேறு ஏதாவது பகுதியிலோ மலையாளிகளோ அல்லது வங்காளிகளோ ஒடுக்குமுறைக்குஉள்ளாக்கப்பட்டால் உங்களின் நிலைபாடு என்னவாக இருக்கும்?தெளிவாகவும், நேர்மையாகவும் பதில் சொல்லுங்கள் என்றேன். அதற்குஅவர் சின்னதாக யோசித்தவாறு "எனக்கு தமிழ்நாட்டு அரசியலை பற்றிஅதிகம் தெரியாது என்றார். நான் சொன்னேன் "இதற்கு தமிழ்நாட்டுஅரசியலை பற்றி தெரிய வேண்டியதில்லை. வளைகுடா நாடுகளில்மலையாள தொழிலாளர்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது அங்கு
வருகை தரும் கேரள வெளிநாடு விவகார அமைச்சர்களை (இந்தியாவில்
வெளிநாடு விவகாரங்களுக்கான தனி அமைச்சகம் உள்ள மாநிலம்கேரளா மட்டும் தான்) நான் பார்த்திருக்கிறேன். அப்படி இருக்கும் போதுஇலங்கை பிரச்சனையில் தற்போது எடுக்கும் நிலைபாட்டை கம்யூனிஸ்ட்கட்சியானது இவர்களின் விஷயத்தில் கண்டிப்பாக எடுக்காது. ஒருவேளை அவ்வாறு எடுக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்குஏற்பட்ட நிலை தான் அவர்களுக்கு ஏற்படும். இந்த விஷயம்உங்களுக்கு நன்றாகவே தெரியும். சின்ன இடைவெளிக்கு பின்னர்சொன்னார். சரி தான் மறுப்பதற்கில்லை. மேலும் கேரளதொழிற்சங்கங்கள், மலையாளிகளின் வளைகுடா வாழ்க்கை பற்றியபேச்சு வந்த போது சுரண்டலை பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாதுஎன்றார். நான் சொன்னேன் " புலம் பெயர்ந்தவர்கள் என்ற முறையில்உங்களை விட அதிகமாக சுரண்டலின் சுவையை நாங்கள்உணர்ந்தவர்கள். அதனால் அதைப்பற்றி நீங்கள் எனக்கு கற்றுத் தர
வேண்டிய அவசியமில்லை."இப்படியான பல்வேறு கருத்தியல்முரண்பாடுகள், குழப்பங்கள் காலங்காலமாக இருந்து கொண்டிருக்கின்றன. சோவியத் தகர்விற்கான காரணம் பற்றி சி.பி.எம் இதுவரையிலும்எந்த உரையாடலையும் நடத்த வில்லை. அது மிக எளிதாக கோர்பசேவ்மீது பழிபோட்டு விட்டு தப்பி விடுகிறது. பெரும்பாலானவர்களிடத்தில்சோவியத் தகர்வு குறித்து உரையாடும் போது இதையே கேட்க முடிகிறது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் தகர்விற்கு பின்தன்னை சுய விமர்சனம் செய்து கொள்ள ஆரம்பித்தது. இதனுள் எந்தஆத்மார்த்தத்தையும் காணமுடிவதில்லை. "நாம் இருந்தோம். நாம் தவறுசெய்தோம்." இப்படி வெறும் "நாம், நாம்" என்ற தன்னிலைக்குள் சென்றுவிட்டு முடித்து விடுகிறது. மேற்கு வங்க புத்ததேவ் அரசின் நிலைபாடுகள் மூலம் அது உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்றவற்றை பற்றி மறு வாசிப்பு செய்து கொள்ளதொடங்கி விட்டது. இந்த விஷயத்தில் அரசு ஊழியர் ஆதரவு நிலைபாட்டை எடுத்துக்கொண்டாலே புரியும். சமீபத்தில் ஆறாவது சம்பளகமிஷன் பரிந்துரைகள் வந்த போது மத்திய அரசு ஊழியர்களின் வாதமேவேடிக்கையாக இருந்தது. " எங்களுக்கு 40 சதவீதம் சம்பள உயர்வுபோதாது. இன்று தனியார் துறையில் இரு கைகள் நிறைய சம்பளம்கிடைக்கிறது. ஆகவே இன்னும் அதிகப்படுத்தி தர வேண்டும். இதை
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே ஆதரித்தன. தனியார்மயமாக்கலுக்குஎதிர்ப்பு என்று சொல்லியே தனியார் துறையில் கை நிறைய சம்பளம்என்று சொல்வதே அறிவீனமானது. இன்று அவர்கள் வாதப்படி தனியார்துறையில் கைநிறைய சம்பளம் வாங்குபவர்களில் 55 சதவீதம் பேர்தங்களின் வாரிசுகள் தான் என்பதை லாவகமாக மறந்து விடுகிறார்கள்.(தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர் புள்ளிவிபரங்கள்அதையே தெரிவிக்கின்றன.)சமீபத்தில் கோவையில் நடந்த மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநாட்டில் கட்சியில் இளைஞர்களின் வருகை கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்திருக்கிறது என்பதாக தெரிவிக்கப்பட்டது. மார்க்சியகம்யூனிஸ்ட் கட்சியின் எனக்கு பிடித்த ஒரே அம்சம் என்பது அவர்கள்இளைஞர்களை நேசிக்கும் முறை தான். இருந்தும் அதில் இளைய
தலைமுறையின் வருகை குறைவு என்பது அதன் சறுக்கல் தான்.ஐம்பது ஆண்டுகள் இந்திய இடதுசாரிகளின் பாராளுமன்ற ஜனநாயகவரலாறு பல வளைவு சுழிகளையும், துயரங்களையும் கொண்டது. சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் இடதுசாரிகள் அதிகாரத்தை கைப்பற்றிவிடக்கூடாது என்பதில் நேரு மிகக்கவனமாக இருந்தார். 1952 க்கு பிறகுகாங்கிரஸுக்கு மாற்றான எதிர்கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட்கட்சி ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில் பாசிசத்தை அதன் இடத்தில்உட்கார வைத்து விட்டது. இதற்கு அறுபதுகளில் ஏற்பட்ட இயக்கபிளவும் காரணமாக சொல்லப்படுகிறது. இப்பொழுது சி.பி.எம் இந்தியாவில் இடதுசாரிகள் என்றாலே நாங்கள் தான் என்பதாக சொல்லி கொள்கிறது. மற்றவர்களெல்லாம் உதிரிகள் என்கிறது. இடதுசாரிகள்ஒருங்கிணைவு என்ற குரல் எழும் போதெல்லாம் அதனை மறுத்தேவந்திருக்கிறது. 2002 ல் இது மாதிரி எழுப்பப்பட்ட போது அன்றையபொதுச்செயலாளராக இருந்த தோழர் ஹர்கிஷன்சிங்சுர்ஜித் கல்கத்தாவி
ல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். " இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாம் ஒருங்கிணைய வேண்டும் என்றுசொல்கிறார்கள். இது இயலாத காரியம். அது ஏற்கனவே சோவியத்ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களுக்கும் நமக்கும்இடைவெளி அதிகம். இம்மாதிரி தரகு வேலையை பார்க்க வேண்டாம்.நீங்களும் எங்களுடன் வாருங்கள் என்பதாக சொல்லுங்கள். நாம்இணைந்து செயல்படுவோம். அவ்வளவு தான்." இதனை அப்போதுகுறிப்பிட்டு Main stream பத்திரிகையில் எழுதிய கல்கத்தாவை சேர்ந்தஇடதுசாரி விமர்சகர் ஒருவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் இம்மாதிரியான மனோபாவம் எதிர்காலத்தில் இந்தியாவில் இடதுசாரிகளின்தேய்மானத்திற்கே வழிவகுக்கும் என்றார். மார்க்ஸூக்கு பிந்தையகட்டத்தில் மார்க்சியம் பிராங்க்பர்ட் , அல்தூசர், எடின் பாலிபர், அலன்பத், எர்னஸ்ட் லக்லோ, எர்னஸ்ட் மண்டேல், ஐஸையா பெர்லின்,ஸிலவோய் சிசக், பெரி ஆண்டர்சன், ரிச்சர்ட் ரோர்டி , தாரிக் அலிபோன்ற வரிசைகளால் இன்னொரு கட்டத்திற்குநகர்ந்து விட்டது. (இவர்களில் எடின் பாலிபர், ஐஸையா பெர்லின்போன்றவர்களின் இஸ்ரேல் ஆதரவு நிலைபாட்டை பற்றி ஏற்கனவேநான் எழுதியிருக்கிறேன்) வரலாறு, சமூக இயக்கம் பற்றிய புதியபார்வைகள் வந்து விட்டன. மேலும் சந்தையை அடிப்படையாககொண்ட இவ்வுலகில் மனித இருப்பு என்பது " நான் வாங்குகிறேன்.அதனால் இருக்கிறேன்" என்பதே. சந்தை பொருளாதாரத்தை பற்றிகுறிப்பிடும் சமீர் அமீன் சந்தை என்பதும் முதலாளித்துவம் என்பதும்வேறானது என்கிறார். முதலாளித்துவம் சந்தைக்கு அப்பால் இருக்கிறது.சந்தை என்பது மூலதன சமூக பொருளாதரத்தின் நிர்வாக வடிவம்மட்டுமே. இதனடிப்படையில் தான் முதலாளித்துவ சமூகத்தை ஆராயவேண்டும் என்கிறார். இன்றைக்கு இந்தியாவில் பல்வேறு அமைப்புகள்எழுச்சி பெற்று வரும் நிலையில் இடதுசாரிகள் தங்கள் கடந்த காலநிகழ்பயணத்திலிருந்து பாடம் கற்று கொள்ள வேண்டியது அவசியம்.ஐம்பது ஆண்டுகள் பாராளுமன்ற ஜனநாயக செயல்பாடு அதை தான்சொல்லுகிறது.
No comments:
Post a Comment