சார்த்தரும் அரபுலகமும்
- எட்வர்ட் செய்த்
மொழியாக்கமும் குறிப்பும் : எச்.பீர்முஹம்மது
புதிய காற்று (ஏப்ரல் 2007)
மேற்கின் யூதர்களான மார்க்சிய மற்றும் பின் நவீனத்துவ அறிவு ஜீவிகள் பலரும் சியோனிச மனோபாவம் கொண்டவர்கள். ஹிட்லரால் அழிக்கப்பட்ட யூத ஆன்மாக்கள் அவர்களின் நனவிலியாக மாறியுள்ளன. அவர்களில் ஒருவர் தான் இருத்தலிய தத்துவவாதியான சார்த்தர். மார்க்சிய சிந்தனைகளிலிருந்து ஹைடெக்கரின்
மனித இருப்பு நிலைக்கு மாறிய சார்த்தர் தனிமனித விடுதலை நோக்கி தன் சிந்தனை ஓட்டத்தை செலுத்தினார். அவரின் "Being and nothingness " ஐரோப்பிய சிந்தனையுலகில் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியது. இக்கட்டுரையில் பாலஸ்தீனிய புலம் பெயர் அறிவு ஜீவி மற்றும் பின் காலனிய சிந்தனையின் தந்தையான எட்வர்ட் செய்த் சார்த்தரின் இஸ்ரேலிய முகம் பற்றி விவரிக்கிறார். பிரான்சில் அவருடனான கருத்தரங்க சந்திப்புகளும் இதில் இடம் பெறுகின்றன.
மேற்குலகத்தால் அதிகம் கொண்டாடப்பட்ட ழீன் பால் சார்த்தர் அவருடைய பார்வைகளால் சமீபகாலமாக மங்கிவிட்டார். 1980 ல் அவருடைய இறப்புக்கு சற்று முன் வரை சோவியத் குலாக் மற்றும் அவரின் இருத்தலிய குருட்டுத்தனத்தால் கடும் தாக்குதலுக்குள்ளானார். சார்த்தர் பின் அமைப்பியல், பின் நவீனத்துவ வாதிகளின்
சிந்தனைகளில் (சில விதிவிலக்குகளை தவிர) அதிகம் பாதிப்பு செலுத்தினார். சார்த்தரின் விரிவான பங்களிப்புகளான நாவல், கட்டுரை,நாடகம், தத்துவ, அரசியல் அறிவு போன்றவை அவருக்கு அதிகஅளவிலான வாசகர்களை தேடி தந்தன.அல்ஜீரியா மற்றும்
வியட்நாம் பிரச்சினைகளில் அவரின் துணிச்சலான நிலை மற்றும் 1968 பிரான்சு மாணவர் புரட்சியில் ஒரு மவோயிஸ்டாக அவரின் நிலைபாடு ஆகியவை மறக்கப்பட்டிருக்கின்றன. தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை மறுத்ததன் மூலம் இலக்கிய உலகில் தன்னை வித்தியாசப்படுத்தினார். ஆங்கிலோ அமெரிக்க உலகத்தை தவிர மற்ற பகுதிகளில் அவர் தீவிர தத்துவவாதியாக அங்கீகரிக்கப்படவில்லை.
அதன் பிற்பாடு பிரான்சில் நிலைமைகள் பழைய நிலைக்கு திரும்பின. சார்த்தரை பற்றிய பல புத்தகங்கள் வெளியாயின. அவர் பேசப்படும் நபராக மாறினார். நான் உறுதியாக சொல்வேன். சார்த்தர் என்னுடைய தலைமுறையின் இருபதாம் நூற்றாண்டின் பெரிய அறிவுஜீவி ஹீரோ. அவரின்முயற்சிகள் கடினமான சூழலை புரிந்து
கொள்ளவும், தேவைப்பட்ட நேரங்களில் அரசியல் அணிவகுப்பை உறுதி செய்வதாகவும் இருந்தன. ஆனால் அவரால் தவறிழைக்க முடிந்தது. இருந்தாலும் அவர் இயல்பான வாழ்க்கையை விட என்னை போன்ற வாசகர்களுக்கு பெரிய மனிதராக இருந்தார். அவர் எழுதிய விஷயங்கள் மிகுந்த நம்பிக்கையையும், சுதந்திரதன்மையையும்
கொண்டதாக இருந்தன. ஆனால் சில தருணங்கள் தவிர. அதுஎன்னவென்பதை விளக்க நான் விரும்புகிறேன்.
என் வாழ்க்கையில் சோகமான, வேடிக்கையான அனுபவம் அது. 1979 ஜனவரி முதல் வாரம். நான் நியூயார்க்கில் என்னுடைய வீட்டில் வகுப்பறைக்கான பாட தயாரிப்பில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டில் அழைப்பு மணி ஒலித்தது.கதவை திறந்து பார்த்த போது பிரான்சிலிருந்து வந்த தந்தி. " மத்திய கிழக்கு பற்றி இந்த ஆண்டு மார்ச் 13, 14 ல் பிரான்சில் நடைபெறும் கருத்தரங்கிற்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். உங்கள் ஒப்புதலை எதிர்பார்க்கிறோம் இப்படிக்கு ழீன் பால் சார்த்தர் மற்றும் சைமன் டி பேவர்". என்னால் நம்பமுடியவில்லை. ஒருவேளை தந்தி கேபிள் தான் நம்மை பார்த்து பரிகசிக்கிறதோ என்று நினைத்தேன். நான் அந்த தந்தி அசலானதா என்பதை உறுதிசெய்ய நியூயார்க்கில் என்னுடைய
நண்பர்களிடத்தில் விசாரித்தேன். அதை உறுதிப்படுத்த எனக்கு இரண்டு நாட்கள் எடுத்தது. அது என் ஒப்புதல் காலத்தை விட குறைவாக இருந்தது. சில வாரங்களுக்கு பிறகு நான் பாரிஸ் சென்றடைந்தேன். நான் பாரிஸ் வந்தடைந்த போது சார்த்தர் மற்றும் சைமன்டி பேவர் எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றது. "பாதுகாப்பு காரணங்களுக்காக" இந்த நிகழ்ச்சி மிஷல் பூக்கோவின் வீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. எனக்கு அவர் வீட்டின் சரியான முகவரி அளிக்கப்பட்டது. மறுநாள் காலை பத்து மணிக்கு நான் பூக்கோவின் விசாலமான வீட்டை அடைந்தேன். அங்கே குறிப்பிட்ட அளவு மனிதர்கள் இருந்தனர். சார்த்தர் மட்டும் இல்லை. எவருமே "பாதுகாப்பு காரணங்கள் " என்ற பூடகத்தை பற்றி விளக்கவில்லை.
அப்போது சைமன் டி பேவர் உரையாற்றி கொண்டிருந்தார். நான் அவரின் உரையை கவனமாக கேட்டு கொண்டிருந்தேன். அவர் உரையாற்றி ஒருமணிநேரத்திற்குள் (சார்த்தர் வருவதற்கு சற்று முன்) அங்கிருந்து நகர்ந்து விட்டார். அதன் பின் நான் அவரை
பார்க்கவேயில்லை.
பூக்கோ அப்போது இருந்தார். அவர் மிகத்தெளிவாக இருந்தார். என்னிடத்தில் கருத்தரங்க விஷயங்கள் குறித்து எதுவுமே அவர் பேசவில்லை. அவரின் புத்தக அலமாரியில் என்னுடைய புத்தகம் ஒன்று இருந்தது. மேலும் பல இதழ்கள், ஆய்வறிக்கைகள்
போன்றவை இருந்தன. நான் அவரிடத்தில் பல விஷயங்கள் குறித்து நட்புரீதியில் உரையாடி கொண்டிருந்தேன். அதிலிருந்து பூக்கோ ஏன் மத்திய கிழக்கு குறித்து என்னிடத்தில் பேச தயங்குகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. எடிபர் மற்றும் ஜேம்ஸ் மில்லர் ஆகிய அவரின் வாழ்க்கை குறிப்பை எழுதியவர்கள் சொன்னவற்றை நான்
நினைவு கூர்ந்தேன். அறுபதுகளில் பூக்கோ டுனீசியாவின் பல்கலைகழகம் ஒன்றில் வேலைபார்த்ததாகவும் அதன் பிறகு டுனீசியாவில் அரபுகள் மத்தியில் எழுந்த இஸ்ரேலிய எதிர்ப்புணர்வு காரணமாக அங்கிருந்து தானாகவே வெளியேறியதாகவும் குறிப்பிட்டார்கள். ஆனால் அவரின் சக பணியாளர் ஒருவர் என்னிடத்தில் சொன்னது வேறுவிதமாக இருந்தது. பூக்கோ டுனீசிய பல்கலைகழகத்தில் அங்குள்ள இளம் மாணவர்களுடன் ஹோமோசெக்ஸில் ஈடுபட்டதால் தான் வெளியேற்றபட்டார். இதில் எது சரி என்றே தெரியவில்லை. பாரிஸில் இருந்த போது பூக்கோ அவரின் ஈரானின் பயணம் பற்றி சொன்னார். அது நெகிழ்வூட்ட கூடியதாகவும், வித்தியாசமாகவும் இருந்தது என்றார். மேலும் ஈரானின் புரட்சி பற்றிய அம்சங்களை நினைவு கூர்ந்தார். எண்பதுகளில் டெல்யூஷ் (உளபகுப்பாளர்) பூக்கோவைப் பற்றி என்னிடத்தில் சொன்னார். அவர்கள் இருவரும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பின்னர் பாலஸ்தீன் விவகாரத்தில் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. பூக்கோ இஸ்ரேலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். டெல்யூஷ் பாலஸ்தீனை ஆதரித்தார். ஆச்சரியமில்லை. பூக்கோ என்னிடமோ அல்லது வேறு யாரிடமோ மத்தியகிழக்கை குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமிருந்ததில்லை.
பூக்கோவின் வீடு பெரிய, செளகரியமான, தெளிவான
தோற்றத்துடன் இருந்தது. தத்துவவாதிகள் மற்றும் சிந்தனையாளர்கள் தனித்து தங்கும் அமைப்பு பெற்றிருந்தது. அங்கு கொஞ்சம் பாலஸ்தீனியர் மற்றும் யூதர்கள் இருந்தனர். அதில் இப்ராஹிம் தாகக் ஒருவர். அவரை ஜெருசலத்தின் வைத்தே எனக்கு நன்றாக தெரியும்.மேலும் நபிஷ் நஷால். அவர் அமெரிக்காவில் என் நண்பர். வேறொருவர் கோல்டா மெர். இஸ்ரேல் ராணுவத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர் அவர். நானும் அவரும் ஸ்டேண்ட் போர்டு நடத்தை அறிவியல் மையத்தில் ஒன்றாக பயின்றோம். ஆனால் எங்களுக்கிடையே பெரிய உறவேதுமில்லை. பாரிஸில் அவரின் நிலைபாடு வேறுவிதமாக மாறியது. அவர் வெளிப்படையாகவே தனி பாலஸ்தீன் பற்றி பேசினார்.மற்ற பங்கேற்பாளர்கள் பெரும்பாலும் இஸ்ரேலிய அல்லது
பிரெஞ்சு யூதர்களாக இருந்தனர். அவர்கள் சியோனிச சார்பாளராக இருந்தும் மதத்திலிருந்து மதநீக்க வாதிகளாக இருந்தனர். அவர்களில்ஒருவர் எலி பென் கல். சார்த்தருடன் தொடர்பு வைத்திருந்தார்.அவர் சார்த்தர் இஸ்ரேலுக்கு வந்த போது வழிகாட்டியாக செயல்பட்டதை பின்னர் தான் அறிந்தேன். அவரை அப்போது நான் பார்த்த போது அதிர்ந்து விட்டேன். அவர் ஆரோக்கியமற்று, மிகவும் மெலிந்து இருந்தார். அடுத்ததாக வோன் பிலோ. இவர் சார்த்தரின் பத்திரிகை ஒன்றில் பணிபுரிந்தவர். மூன்று மொழிகளை தெரிந்தவர். சார்த்தருக்கு மொழிபெயர்ப்பில் உதவியாக இருந்தார். எனக்கு சின்ன ஆச்சரியமும் ஏமாற்றமும் கலந்திருந்தது. சார்த்தர் ஜெர்மனியில் சில காலம் இருந்தார். அங்கு ஹைடெக்கரை பற்றி மட்டும் அல்ல. டாக் பெஸோஸ் மற்றும் பாக்னர் பற்றியும் எழுதியிருக்கிறார். அவருக்கு ஜெர்மனோ அல்லது ஆங்கிலமோ தெரியவில்லை. அவருக்கு வோன் பிலோ தான் இரண்டு நாள் கருத்தரங்க விஷயங்களை உடனுக்குடன் மொழிபெயர்த்து கொடுத்தார். மேலும் வியன்னாவிலிருந்து வந்த பாலஸ்தீனியர் ஒருவர் இருந்தார். அவருக்கு அரபி மற்றும் ஜெர்மன் மட்டுமே தெரிந்தது. ஆனால் எங்கள் விவாதமோ ஆங்கிலத்தில் இருந்தது. எனக்கு தெரியவில்லை. சார்த்தர் அதை எவ்வளவு தூரம் புரிந்திருப்பார். அவர் முதல் நாள் கருத்தரங்கில் மெளனமாகவே இருந்தார். இது எனக்கும் மற்றவர்களுக்கும் குழப்பமாக இருந்தது.
நாங்கள் பிரெஞ்சு பாணியிலான மதிய உணவு சாப்பிட்டோம். ரெஸ்டாரண்ட் பூக்கோவின் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருந்தது. மழை இடைவிடாது கொட்டிக்கொண்டிருந்தது. நாங்கள் ஒரு குழுவாக சென்று விட்டு திரும்பி வந்தோம். சுமார் மூன்று அல்லது நான்கு மணிநேரம் அதற்காக செலவானது. ஆக முதல் நாள் அரங்கு குறுகிய
காலத்தில் நிறைவு பெற்றது. நாங்கள் முதல் நாளில் பின்வரும்
விஷயங்களை விவாதித்துக் கொண்டோம் 1. இஸ்ரேல் - எகிப்து இடையேயான சமாதான ஒப்பந்தம். 2. இஸ்ரேல் மற்றும் அரபுலகம் இடையேயான சமாதான உடன்படிக்கைகள். எங்கள் விவாதங்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு பிரெஞ்சு பத்திரிகையில் வெளிவந்தன.
இவை எல்லாம் வாய்வழி உரையாடல்களாக இருந்தன. ஆனால் யார் இதை ஏற்பாடு செய்தார்களோ அவர்களின் சரியான ஈடுபாடு ஏதுமின்றி இருந்தது.சைமன் டி பேவர் தீவிர ஏமாற்றத்தை அளித்தார். சுமார் ஒரு மணி நேரம் அவர் இஸ்லாம் பற்றியும் பர்தா பற்றியும் வழவழ வென்று பேசி சென்று விட்டார். எனக்கு அவரின் அமர்வை பற்றி வருத்தம் இல்லை. ஆனால் சார்த்தரின் அமர்வு மிக மந்தமானதாக, அரங்கில் எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்தாத ஒன்றாக இருந்தது. அரங்கின் முடிவில் கூட அவர் எதுவும் சொல்லவில்லை. மதிய உணவின் போது கூட என் பக்கத்தில் அமர்ந்திருந்தார். ஆனால் என் முகத்தை பார்க்கவில்லை. எதுவும் பேசவில்லை. நான் பேச முயற்சித்ததற்கும் பலனில்லை. நான் பாலஸ்தீனிய அரசியலில் தீவிரமாக இருந்த நேரம். 1977 அது. அப்போது பாலஸ்தீனிய தேசிய கவுன்சிலில் உறுப்பினராக இருந்தேன். அடிக்கடி பெய்ரூட் சென்று வந்தேன். அரபாத்தையும் சந்தித்தேன். நான் நினைத்தேன் சார்த்தரிடமிருந்து பாலஸ்தீன் ஆதரவு அறிக்கை வெளிவர வைக்க வேண்டும்.அது இஸ்ரேலுடனான மரண யுத்தம் நடந்த வெப்பமான தருணம்.
மதியத்திற்கு பிறகான அமர்வில் விக்டர் (கருத்தரங்கின் முக்கிய புள்ளி) எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து கொண்டார். ஆனால் விவாதம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை. கருத்தரங்கின் முக்கிய விஷயமே இஸ்ரேலின் எல்லை விரிவாக்கம் பற்றியது தான். மாறாக அரபுலகமோ அல்லது பாலஸ்தீனோ அல்ல. அதை தொடர்ச்சியில் புரிந்து கொள்ள முடிந்தது. நான் சில அரபுலகத்தினர் சார்பாக இருந்தேன். அவர்கள் என்னிடமிருந்து அர்னால்ட் டாய்ன்பீ மற்றும் சீன் பிரைட் ஆகியோருக்கு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்த்தனர். சார்த்தர் அல்ஜீரியா விவகாரத்தில் அவரின் உறுதியான நிலைபாட்டை என்னால் மறக்க முடியாது. கருத்தரங்கின் முதல் நாள் நிறைவில் சார்த்தர் நாளை பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. நான் அவரின் உரையை கேட்க ஆர்வமாய் இருந்தேன். மறுநாள் அவர் தான் எழுதி வைத்த இரண்டு பக்க உரையை வாசித்து விட்டு அமர்ந்தார். அதில் அவர் பாலஸ்தீன் பற்றி சொன்ன வார்த்தைகள் பலவற்றை நான் மறந்து விட்டேன். ஆனால் அதில் இஸ்ரேலின் காலனியம் பற்றி ஒன்றுமே இல்லை. அந்த நாளிலும் அவரின் வழக்கமான மெளனம் தொடர்ந்தது.
சில மாதங்கள் கழித்து அந்த விவாதங்கள் ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளிவந்தன. அதில் சார்த்தரின் பதிவுகளும் இருந்தன. நான் அதில் உள்ளவற்றை மறுவாசிப்பு செய்ய விரும்பவில்லை. இதற்கு முன்னர் சார்த்தரின் எகிப்து வருகை பற்றி அரபுலக அறிவுஜீவிகள் சொன்னவற்றை நினைத்தேன். அவர்கள் இதையே பிரதிபலித்தார்கள். கருத்தரங்கில் என்னுடைய இடையீடு அவர்களை பாதித்த போதும் கூட அவர்கள் மறைந்தே இருந்தார்கள். பின்னர் நான் நினைத்தேன். இது ஒரு வெறுமையான ஏமாற்றம்.
மேலும் ஒரு குறிப்பாக சில வாரங்களுக்கு முன்பு பெர்னார்ட் பைவட்டின் கலாசார விவாத நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பாக அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் கண்டேன். அதில் சார்த்தரும் பங்கு கொண்டார். அதில் அவரின் இஸ்ரேலிய நிலைபாடு மிகத்தெளிவாக இருந்தது. மாறவே இல்லை. அவரின் வார்த்தைகள் முழுமையாக இருந்தன. அவர் அடிப்படையான சியோனிச ஆதரவு நிலைக்கு இரு காரணங்களை சொல்ல முடியும். 1. ஐரோப்பிய யூத எதிர்ப்பு மனோபாவத்தின் தொடர்ச்சி 2. ஹிட்லரின் யூத இனப்படுகொலை. அவர் பாலஸ்தீனிய அகதிகள் மீதோ அல்லது போராளிகள் மீதோ எந்த ஆழ்ந்த அனுதாபமும் கொள்ளவில்லை. எனக்கு தெரியவில்லை. ஒரு வயது முதிர்ந்த அறிவுஜீவி மாற்ற முடியாத அரசியல்
நம்பிக்கைக்குள் வருவது பற்றிய ஏமாற்றம். பெர்டிணான்ட் ரஸ்ஸல் இவரை விட மேல். அவர் தன்னுடைய இறுதிகாலத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிலைபாட்டை விமர்சித்தார். ஏமாற்றமான பாரிஸ் கருத்தரங்கின் ஒரு வருடத்திற்கு பிறகு சார்த்தர் மறைந்து விட்டார். நான் எவ்வளவு சோகமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினேன் என்பதை தற்போது தெளிவாக நினைவு கொள்கிறேன்.
No comments:
Post a Comment