காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Thursday, August 14, 2008

மஹ்மூத் தர்வீஷ் -இரு நூற்றாண்டு பாலஸ்தீன் கவிஞனின்

காத்திருந்த மரணத்தின் கால இடைவெளியில்- மஹ்மூத் தர்வீஷ் -இரு நூற்றாண்டு பாலஸ்தீன் கவிஞனின்
நினைவு குறிப்புகள்

எச்.பீர்முஹம்மது


"என் உயிரிடத்தில் நான் சொல்வேன். மெதுவாக செல்லவும்.
நான் குடிக்கும் கண்ணாடி டம்ளர் உலரட்டும்.
நான் என்னவாக இருக்கிறேன் அல்லது யாராக என்பதில் எனக்கு எந்த பங்குமில்லை. ஒரு வாய்ப்பின் பிறப்பு தவிர . இதற்கு எந்த பெயருமில்லை. என் மரணத்தின் பத்து
நிமிடங்கள் முன்பாக டாக்டரை அழைக்கிறேன். பத்து
நிமிடங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு போதும்."

மரணப்படுக்கையின் இறுதியில் மேற்கண்ட வரிகள் பாலஸ்தீனின் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் புனைந்து சென்றவை. தன் இறுதி கட்டத்தில் வாசக சமூகத்தின் மீது கவிதை வரிகளோடு செல்லும் வாய்ப்பு சிலருக்கே மட்டுமே கிடைக்கிறது. அது அவனுக்கான வித்தியாச அனுபவம் கூட. படைப்பு மனத்தின் நெருடிய இடைவெளியில் விகசங்களின் வெளிப்பாடாக இவை அமைகின்றன. அரபு இலக்கிய வெளியில் அந்த
விகசங்களை கவிதைகளாக அதிக அளவில் வெளிப்படுத்தியவர் மஹ்மூத் தர்வீஷ். அவரின் கவிதைகள் எல்லா தருணங்களிலும் மரணப்பெருவெளியில், வாழ்விலிருந்து அந்நியமாக்கலுக்கு பணிக்கப்பட்ட, அனாமதேய சூழலின் விளைபொருளாக எழுந்தவையே.

பாலஸ்தீனை கவிதைகள் வழியாக உலகின் கவனத்திற்கு முன்வைத்தவர் மஹ்மூத் தர்வீஷ். ஒரு நெருக்கடியான, போர்ச்சூழலின், இஸ்ரேலிய உருவாக்கத்தின் சற்று பிந்தைய கட்டத்தில் அன்றைய பாலஸ்தீன் கிராமமான அல்பிர்வாவில் (தற்போது இஸ்ரேல் பகுதி) 1941 மார்ச் 13 ல் மஹ்மூத் தர்வீஷ் பிறந்தார். இவர் பிறந்த கட்டம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு துவக்கத்தின் சாரலாக இருந்தது. தனிமனித உழைப்பும் , அதனோடு கூடிய முனைப்பும் நிச்சயமற்ற வாழ்க்கை சூழலில் ஒரு மனிதனை எவ்வாறு சர்வதேச கவனத்திற்கு உட்படுத்த முடியும் என்பதற்கு தர்வீஷ் விசனகரமான உதாரணமாக இருந்தார். அவரின் ஏழாவது வயதில் குடும்பம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு காரணமாக லெபனானுக்கு புலம்பெயர நேர்ந்தது.இஸ்ரேலிய ராணுவ தாக்குதல் காரணமாக இளமைக்காலத்திலேயே தன் கண் முன்பாக தன் சொந்த கிராமத்தின் அழிவை பார்க்க நேர்ந்தது. பிந்தைய கட்டத்தில் பிறந்த கிராமத்தின் இருப்பிலிருந்து அந்நியமானார். அவரின் மொழியும், பரந்த வாசகர் வட்டமும் மட்டுமே இதிலிருந்து தப்பியது. இவரின் கவிதைக்கான தொடக்கம் 1950ல் ஆரம்பமாகிறது. ஒரு கவிதை அதன் வாசிப்பு உள்ளோட்டத்தில் தீவிர அதிர்வை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதற்கு தர்வீஷின் கவிதை உதாரணமாக இருந்தது. அந்த அதிர்வுகள் கவிதை பிரதிகளில் விரவிக் கிடந்தன. பாலஸ்தீன் மற்றும் அரபு அடையாள அரசியலை கவிதை வெளிப்படுத்தியதால் இஸ்ரேலின் மிரட்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளானார்.

தர்வீஷின் ஆரம்ப கல்வி சொந்த கிராமத்தின் பக்கத்தில் நடந்தது. அதன் பிறகு மேல்நிலை கல்வியை தர்வீஷ் கப்ர் யஸீப் கிராமத்தில் முடித்தார். முதல் தொகுப்பு தர்வீஷின் பத்தொன்பதாவது வயதில் Wingless birds (asafir bila ajniha) என்ற பெயரில் 1960 ல் வெளிவந்தது. இது பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேலிய எழுத்துலகில் பரவலாக கவனம் குறித்தது. இதன் தொடர்ச்சியில் 1964 ல் இவரின் அடுத்த தொகுதியாக Leaves Of Olives (Awraq al zaytun) வெளிவந்தது. இஸ்ரேலிய அரச பயங்கரவாதத்தின் பிரதிபலிப்பு காரணமாக பெரும் மக்கள் திரளின் இடப்பெயர்வை இலை உதிர்வின் ஒப்பீடாக அத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மொழிப்படுத்தின. இக்காலகட்டத்தில் தர்வீஷ் இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியான ரகாவில் இணைந்தார். அதன் பத்திரிகை ஆசிரியராகவும் சில காலம் பணியாற்றினார். அப்போதைய இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியானது அரச ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தது. இந்த நிலைப்பாட்டிற்கு தர்வீஷ் பெரும் தூண்டலாக இருந்தார். குறிப்பிட்ட காலத்திற்கு பின் தர்வீஷ் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகினார். பின்னர் 1970 ல் மேற்படிப்புக்காக சோவியத் ரஷ்யா சென்றார். சோவியத்திலிருந்து திரும்பிய பின்னர் கெய்ரோவில் குடியேறிய தர்வீஷ் தன் படைப்புகளை புதிய சாத்தியப்பாடுகளை நோக்கி நகர்த்தினார். முன்னை விட அதி உற்சாகமான மனநிலையில் கவிதைகளை முன்னகர்த்தினார். இடைக்கட்டத்தில் அரசுகளால் தன் எழுத்துகளுக்காக சிறைத்தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது. இந்த கட்டத்தில் தர்வீஷ் தன் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காக பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தில் இணைந்தார். யாசர் அரபாத் தலைமையிலான அந்த இயக்கத்தின் பெரும் மூளையாக தர்வீஷ் செயல்பட்டார். எட்வர்ட் செய்த்துடன் இணைந்து அந்த இயக்கத்தில் பணியாற்றிய மஹ்மூத் தர்வீஷ் 1993 ல் ஒஸ்லோ ஒப்பந்தம் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிலிருந்து விலகினார். இதைப்பற்றி பிந்தைய கட்டத்தில் குறிப்பிடும்போது " நான் தவறானவனாக நம்புகிறேன். மேலும் சரியாக இருக்கிறேன் என்ற சோகமும் உண்டு".எகிப்தின் பிரபலமான அல் அஹ்ரம் பத்திரிகையில் சில காலம் தர்வீஷ் பணியாற்றினார். இந்த பத்திரிகை அனுபவம் தர்வீஷுக்கு வெகுவான இதழியல் அனுபவத்தை கொடுத்தது. தர்வீஷுக்கு அரபுலகில் வெகுவான கவனப்படுத்தலை ஏற்படுத்தியது அடையாள அட்டை கவிதையாகும்.

"பதிவு செய்

நான் ஓர் அரேபியன்

என் அடையாள அட்டை எண் ஐம்பதாயிரம்

எனக்கு குழந்தைகள் எட்டு

ஒன்பதாவது, கோடை விடுமுறைக்கு பின் வரும்

உனக்கு கோபமா?

(இக்கவிதை எம்.ஏ. நுஹ்மான் மொழிபெயர்த்த பாலஸ்தீன் கவிதைகள் என்ற தொகுதியில் இருக்கிறது)

அதிகார திணிப்புக்கு எதிரான சுய அறிமுகமும்,
கொதிநிலையான மனமும் இதில் வெளிப்படுகிறது.
அக்காலகட்டத்தில் ஆப்ரிக்க அனுபவத்தை ஒத்த ஒன்றாக இக்கவிதை இருந்தது.

தர்வீஷின் வாழ்க்கை புற நெருக்கடிகள் காரணமாக நாடோடியின் வாழ்க்கைச்சூழலை பிரதிபலித்தது. பெய்ரூட், அம்மான், கெய்ரோ, மற்றும் பாரிஸ் என்ற வட்டத்தின் விளிம்பை தொட்டு கொண்ட ஒன்றாக அவரின் வாழ்க்கை சுழன்று கொண்டிருந்தது. அவரின் சொந்த கிராமத்தை இடப்பெயர்வு நெருங்கிய போதும் அவரால் அங்கு குடியேற இயலவில்லை. ஆக்கிரமிப்பு சமூகத்தின் நெருக்கடி அவரை வெகுதூரத்திற்கு இழுத்து சென்றது. இதன் ஒரு கட்டம் சுழற்சி முடிவு பெறாத தருணத்தில் தர்வீஷிடமிருந்து
பின்வரும் கவிதை வெளிப்பட்டது.

"எனக்கு போதுமான வயதில்லை
என் முடிவை ஆரம்பம் நோக்கி இழுப்பதற்கு"

தர்வீஷ் தன் கவிதைகள் மூலம் இஸ்ரேலுக்கு பெரும்சவாலாகவே இருந்தார். இஸ்ரேலின் பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் இவரின் கவிதைகளை சேர்ப்பதற்கு இஸ்ரேலிய கல்வி அமைச்சர் முடிவு செய்த போது இஸ்ரேலிய பிரதமரின் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. கவிதைகள் அதன் உள்ளகத்தை தாண்டி மொழி அரசியல் கூறாக மத்திய கிழக்கு சமூகத்தில் பிரதிபலிக்கும் முறைக்கு தர்வீஷ் தான் முன்னோடி. அவரின் கடந்து போகும் வார்த்தைகளில் கடப்பவர்கள் என்ற கவிதை அரசியல் வெளியின் உன்னத நிலைக்கு பயணம் செய்யும் என்று அவர் நினைக்கவில்லை. அவரின் சிந்தனைக்கு மாறாக அக்கவிதை ஆற்று நீரோட்டமாக நீண்ட தூரம் கடந்து சென்றது. தர்வீஷின் அரபு மொழியுடனான உறவு மற்றவர்கள் மத்தியில் இருந்து தனித்த ஒன்றாக இருந்தது. அரபு மொழியில் தன் கவிதைகள் வழி புதிய மொழி மண்டலத்தை உருவாக்கினார். அதில் புதிய ஆளுகையையும், ஏக்க உணர்வையும் அவரால் தோற்றுவிக்க முடிந்தது. இதன் காரணமாக அரபு இலக்கிய
விமர்சகர்களால் "அரபு மொழியின் மீட்பாளர்" என்று அழைக்கப்பட்டார். தர்வீஷின் மொழி ஆழத்தோடு கூடிய சாதாரணமாகவும், அவர் மற்றும் சார்பானோரின் அக
நெருக்கடிகளை வித்தியாசப்படுத்தி அதீதம் கலந்த கற்பனை வெளிக்குள் சலனித்த ஒன்றாகவும் இருந்தது. கவிதைகள் குறியீடுகள், உருவகங்கள், பிம்பங்கள் இவைகளை
கவனமாக தேர்ந்தெடுத்த ஒன்றாக இருந்தன. அதற்குள் தீவிர கலைவேட்கையும், அரசியல் அறிவும், சாதாரண கவிதைகள் சொல்ல முடியாமல் தவிக்கிற கருதுகோளின் பொருண்மையும் வெளிப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு நடந்த இஸ்ரேலிய தாக்குதல் தருணத்தில் அவரிடமிருந்து பின்வரும் கவிதை வெளிவந்தது.

"மேகத்திடம் பெண் என் அன்பை உன்னால் மூடி விடு என்றாள்

என்னுடைய ஆடைகள் அவன் ரத்தத்தால் நனைகின்றன

மழையாக மாறாவிட்டால் மரமாக இரு

மரத்தின் வளமையோடு இருக்கிறேன்.

மரமாகாவிட்டால் கல்லாக இரு

அதன் ஈரப்பதத்தில் இருக்கிறேன்

கல்லாகாவிட்டால் பிறையாக இரு

என் அன்பின் கனவில்

பெண் தன் மகனின் பிணத்தின் மீது இவ்வாறு சொன்னாள்"

இதன் பின்னர் இஸ்ரேலின் முற்றுகை சமயத்தின்
பின்வருமாறு குறிப்பிட்டார்.

" முற்றுகையின் போது காலம் வெளியாக மாறுகிறது
அது அதன் நிரந்தரத்தை கடினமாக்குகிறது.
முற்றுகையின் போது வெளி காலமாக மாறுகிறது
அது அதன் நேற்றையும் இன்றையும் தாமதப்படுத்துகிறது."

2002 ல் இஸ்ரேலிய போர்ச்சூழலின் உக்கிரத்தை இந்த வரிகள் வெளிப்படுத்துகின்றன. தேர்ந்த கவிதைகளின் காட்சி பிரதியமைப்புகளால் மஹ்மூத் தர்வீஷ் ஓர் எதிர்நிலை கவிஞனாக அரபு மற்றும் மேற்குலகத்தால் அழைக்கப்பட்டார். தர்வீஷ் எப்போதுமே தான் யாராக, எப்படி , ஏதாக இருக்க வேண்டும் என்ற புற கருதுகோள்களை மறுப்பவராகவே இருந்தார். இதனால் சிலரின் கடும் விமர்சனத்தோடு உள்ளானார். அவரின் அநேக கவிதைகள் அரபு மனத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தன. நான் தூய கவிதை வெளியை நோக்கி நகரும் போது பாலஸ்தீனியர்கள் என்னை நான் யார் என்ற பின்பகுதிக்கு போக சொல்கிறார்கள். என்னை நம்பும் வாசகர்களை நான் என்னோடு எடுத்து கொள்ளவே விழைகிறேன். இதை என் அனுபவம் எனக்கு கற்று தந்திருக்கிறது. நான் நேர்மையாக இருந்தால் என் நவீனத்தை நான் உருவாக்க முடியும். தன் படைப்பு வாழ்வை பற்றி நியூயார்க் டைம்ஸ் நேர்முகத்தில் இவ்வாறு குறிப்பிட்டார் மஹ்மூத் தர்வீஷ். எப்போதுமே தன் வாசகர்களோடும் தன்னை நேசிப்பவர்களிடத்திலும் பரஸ்பர உறவை கொண்டிருந்தார் தர்வீஷ்.

"நான் என்னை நானே தேடும் போது

அதில் மற்றவர்களை காண்கிறேன்.

மற்றவர்களை தேடும் போது

அதில் என் அந்நியப்பட்ட சுயத்தை மட்டுமே காண
முடிகிறது. ஆக நான் தனிமனிதனா- கூட்டமா?

தர்வீஷ் தன் உரையாடலை பரந்த வெளியாக விரிவுபடுத்தினார். அரபு, கனான், ஹிப்ரூ, அராமிக்,பாரசீக, ரோம, கிரேக்க, பிரஞ்சு, மற்றும் துருக்கிய கலாசாரங்களோடாக அந்த உரையாடல் அமைந்திருந்தது. மூன்று பெருமதங்களின் தொன்மங்களை அதிகம் உட்கிரகித்து கொண்டார். இவை அவருடையை கவிதைகளை பன்முக அடுக்கம் கொண்டதாகவும் வாசகர்கள் நான் மற்றும் மற்றவர்கள் என்ற பிரதியை முழுவதுமாக அறியாவிட்டால் புரியாத ஒன்றாகவும் மாற்றியது. தர்வீஷ் தன் கவிதைகளில் நான் மற்றும் பிற என்பவற்றின் இடைவெளியை அதிகம் கடக்க முயற்சித்தார். இதன் வழி அரபு மற்றும் பிற உலகம் முழுவதும் வாழ்வின் எல்லா ஓட்டங்கள் மற்றும் படிநிலைகள் சார்ந்த மனிதர்களை அதிகம் ஈர்த்து கொண்டார். மேலும் கவிதை சார்ந்த உரையாடலாக இருக்கிற சாரம்-உன்னதம் என்பவற்றிற்கு வெளியில் இவரின் கவிதை இருந்தது. மஹ்மூத் தர்வீஷ் தன்
கவிதைகளுக்காக லெனின் விருது, தாமரை விருது, பிரான்சு
அரசின் விருது மற்றும் மொராக்கன் விருது போன்ற பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றிருக்கிறார். இவரின் கவிதைகள் உலகின் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழில் யமுனா ராஜேந்திரன் நிறையவே மொழிபெயர்த்திருக்கிறார்.

கவிதைகளோடு அரபு வாசகர்களிடத்தில் தொடர்ந்த உரையாடல் நடத்திய மஹ்மூத் தர்வீஷின் மரணம் என்னை மிகுந்த அதிர்வுக்குள்ளாக்கியது. அரபு பல்கலைகழக பேராசிரியர் முனீர் ஹசன் மஹ்மூத் கடந்த சனிக்கிழமை இரவு என்னிடம் தொலைபேசியில் அவரின் மரணச் செய்தியை சொன்ன போது ஒரு வித நொடிப்போட்டத்தை அடைந்தேன்..
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்தது அவரின் மரணம்.தாளாமை எனக்குள் தொடர்ச்சியற்று வந்து கொண்டிருந்தது. அவரின் பரவலான பல
கவிதைகள் மற்றும் Adams of Two edens, Unfortunately it was paradise ஆகிய தொகுப்புகளால் அதிகம் ஈர்க்கப்பட்டவன். என்றைக்குமே படைப்பின் மீதான ஈடுபாடு படைப்பாளியின் உயிர்ப்பு மற்றும் மரணத்தோடு இணைந்திருப்பது இயல்பே. அது படைப்பின் மீதான உறவாடல் கூட.அரபு மற்றும் பாலஸ்தீன் கவிதை உலகில் மஹ்மூத் தர்வீஷ் தவிர்க்க இயலாத ஐகானாக இருந்தார். மேற்கத்திய விமர்சகர்கள் இவரை பாப்லோ நெருதா மற்றும் ராபர்ட் லோயலோடு ஒப்புமைப்படுத்தி மதிப்பீடு செய்தார்கள். அவர்களின் அளவுகோல்களிலிருந்து தப்பிக்க முடியாத மனிதராகவே இறுதிவரை தர்வீஷ் இருந்தார். இவரின் சமகாலமாக அதோனிஸ் மற்றும் பத்வா தவ்கான் போன்றவர்கள் இருந்தாலும் இவர்களின் மத்தியில் தர்வீஷ் வித்தியாச உருவமாகவே இருக்கிறார். அரபு மற்றும் பாலஸ்தீன் வெளியில் நாற்பதாண்டுகளுக்கு மேலாக கவிதைகளோடு இயங்கிய தர்வீஷ் மரணத்தின் இடைவெளியில் இன்னும் உயிர்ப்புடன் இருந்து கொண்டிருக்கிறார்.

தர்வீஷின் படைப்புகள்

1.Wingless birds (poetic collections 1960)

2. Leaves of olives (poetic collections 1964)

3. A lover from palestine (1966)

4. Dairy of a palestine wound (1969)

5. Writing in the light of the gun (1970)

6. Mahmood darwish works (two volumes 1971)

7.Light rain in a distant autumn

8. The Adam of two edens

9. Unfortunately it was paradise (Selected Poems 2003)

10.Selection of poems (new works 2003)

No comments: