வெட்கரமான மௌனத்தின் மொழி - காசாவின் தொடரும் துயரம்
பயங்கரவாதம் என்ற சொல்லாடல் இன்று ஒரு சார்பு வாதமாகவே மாறி போன சூழலில் அதன் அர்த்தங்களும் மாறி இருக்கின்றன. நவீன உலகில் அரசமைப்பு, அதன் மக்கள், ஒடுக்கும் பெரும்பான்மையான இனத்தொகுதி, ஒடுக்கப்படும் சிறுபான்மை இனம் இவற்றால் அது பதிலீடு செய்யப்படுகிறது. வெறுமனே பெயரிடல் சார்ந்த வன்முறையாகவும் அளவிடப்படுகிறது. உலக வரலாற்றில் எல்லா ஒடுக்குமுறைகளும் அதன் அதன் வரைமுறைக்குட்பட்ட நியாயங்களோடு வெளிப்படுத்தப்பட்டன. பாலஸ்தீன் பகுதியான காசா மீது இஸ்ரேல் தற்போது நடத்தி வரும் வான்வழி தாக்குதல் மேற்கண்ட நியாயத்தோடு தான் அதனால் முன்வைக்கப்படுகிறது. ஒடுக்கு முறையே சுயபாதுகாப்பு தான் என்பது ஏகாதிபத்தியத்தின் பிளவுபடாத மனநிலையே. இந்த கட்டுரை எழுதப்படும் போது காசாவில் மனித உயிரிழப்பு 700 யை தாண்டியிருக்கிறது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். வரலாற்றின் தொடர்ந்த பக்கங்களில் போர், இன வன்முறை போன்றவற்றில் குழந்தைகளின் மரணம் மற்றும் பெண்கள் மீதான வன்புணர்ச்சி போன்றவை சாதாரணமாக காண கிடைக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை ஒடுக்குமுறை கால அளவின் நேர்விகிதத்தில் இருக்கும்.
எதார்த்தத்தில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்றவை ஓர் அடிப்படைவாத அமைப்புகளே. லெபனான் மற்றும் சிரியா பகுதி ஷியா மக்களை பெரும்பான்மையான கொண்ட அமைப்புகள் அவை. தன் எல்லை பகுதியை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றல், அடக்குமுறைக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்தல் இவற்றின் தந்திரோபயமாக இருக்கின்றன. அவர்கள் காசா பகுதியில் இருந்து கொண்டு ராக்கட் ஏவுவது இஸ்ரேலின் முற்றுகையை விலக்குவதற்கே. இஸ்ரேல் காலம் காலமாக அந்த பகுதியில் நடத்தி வந்த தாக்குதல் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர நிர்பந்திக்கப்படும் போது எதிர்ப்புணர்வு அவசியமானதே.
யூத சமூகத்தின் வரலாறு துன்பகரமானது. இரண்டாம் உலகப்போரும் அதனை தொடர்ந்து ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய யூதர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பும் சர்வதேச சமூகத்தில் அறிவுஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள் மத்தியில் யூத சமூகத்தின் மீது அனுதாபம் கொள்ள வைத்தது. இன்னொரு நிலையில் தங்களின் சுயபாதுகாப்பு விஷயத்தில் ஹிட்லருக்கும் யூத அடிப்படைவாதிகளுக்கும் இடையே இருந்த ரகசிய உறவாடல் மற்றும் ஒப்பந்தம் போன்றவற்றை லென்னி பிரன்னர் என்ற அமெரிக்க மார்க்சிய சிந்தனையாளர் வெளிப்படுத்தினார். (இவரை பற்றி முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.)இதனை தொடர்ந்து அவர் மேற்கத்திய யூத அடிப்படைவாதிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார்.19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தியோடர் ஹெர்ஸ் முன்வைத்த தேசிய இருப்பிடம் என்ற கருத்தாக்கம் இஸ்ரேல் பகுதியை குறிப்பிடவில்லை. யூத அடிப்படைவாதிகளால் முதலில் அல்ஜீரியா,மொரீசியஸ், உகாண்டா ஆகிய நாடுகளில் ஒன்று தான் தேசிய இருப்பிடமாக முன்வைக்கப்பட்டன. அவரை பின் தொடர்ந்தவர்கள் புராதன வரலாற்று அடிப்படையில் ஜெருசலத்தை உள்ளடக்கிய இஸ்ரேல் தான் தங்களுக்கான இருப்பிடம் என அறிவித்தனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் வரலாறு குறித்து பலவிதமான தொன்ம தரவுகள் நிலவுகின்றன. தொன்மங்கள் மற்றும் புராணங்கள் அடிப்படையிலான தரவுகளை மட்டுமே தீர்மானகரமான முன் முடிவுகளாக நாம் வைக்க முடியாது. அதனடிப்படையில் பார்த்தால் உலகின் பல பிரதேசங்களும் மறுவரையறைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். இஸ்ரேல் உருவாக்கத்தின் போது அதற்கு தேசிய இனத்திற்கான எந்த வரையறையோ, பிரதேச பொருளியல் தன்மைகளோ, வரைவாக்கம் செய்யப்பட்ட நெறிமுறைகளோ இருக்கவில்லை.பல்வேறு தேசங்கள், மொழிகள், கலாசாரங்கள், குடி அம்சங்கள்கொண்ட மக்கள் தொகுதியின் குடியேற்றமாக அது இருந்தது. பல நாட்டு பறவைகள் இரைதேடி ஓரிடத்தில் கூடும் வேடந்தாங்கல் மாதிரியான சூழலே அன்று காணப்பட்டது. இதனின் தர்க்க ரீதியான தொடர்ச்சியே தற்போதைய ஆக்கிரமிப்பிற்கும், போர்படுகொலைக்குமான முக்கிய காரணம். உலக வரலாற்றில் சாதி, மதங்கள், மற்ற இஸங்கள் போன்றவற்றுக்கான போராட்டங்களை விட தேச, தேசிய இனங்களுக்கான போராட்டத்தில் தான் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதுபற்றி பெல்பாஸ்ட் குடியரசுவாதியின் வரிகள் முக்கியமானவை. " அயர்லாந்தின் வலிமைமிக்க அம்சம் அதன் தேசியவாதமாகும்.அது தான் உலகிலேயே வலிமைமிக்கதாக நான் கருதுகிறேன். பல்வேறு நாடுகளில் தேசியவாதத்திற்காக இறந்தோர் பலகோடி. ரஷ்யாவில், அமெரிக்காவில், இங்கிலாந்தில் ஜெர்மனியில் பலகோடி மக்கள் இறந்துள்ளனர்.ஆனால் சோசலிசத்துக்காக இறந்தோர் மிகச்சிலரே. என் அனுபவத்தின் படி உலகம் முழுவதும் மக்கள் தமது நாட்டிற்காக இறப்பார்கள். ஆனால் ஒரு இஸத்துக்காக இறக்க தயாரில்லை." இந்த வரிகள் பாலஸ்தீன் விஷயத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கின்றன. 1948 லிருந்து இன்றுவரை இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வும் படுகொலையும் இஸ்ரேலை சர்வதேச சமூகத்தில் போர்குற்றவாளியாக்க தகுந்தவை. அது 1993 ஒஸ்லோ ஒப்பந்தத்தையும் 2003 ல் ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா போன்றவற்றின் முன்னிலையில் நிகழ்ந்த ஒப்பந்தத்தையும் மதிக்கவில்லை. ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்தான 2005 க்குள் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேற வேண்டும் என்பதை இஸ்ரேல் இதுவரையிலும் பொருட்படுத்தவில்லை. தனக்கு ஏகாதிபத்தியத்தின் துணை இருப்பதால் அரபு பிராந்தியத்திற்குள் தன் இருப்பை வலிமையாக நிறுவிகொள்ள முனைகிறது. வழிகளை தேடாமல் விளைவுகளை தேடும் இஸ்ரேலின் இந்த செயல்தந்திரம் நூற்றாண்டு முழுவதுமான பிராந்திய ஸ்திரத்தன்மையை குலைக்கும் ஒன்றாகும்.காசா பகுதியில் பதினெட்டு மாதங்களாக அதன் முற்றுகை தொடர்வதால் முரண்பாடுகளும், மோதல்களும், உயிர்பலிகளும் தொடந்து கொண்டே செல்கின்றன. இந்த நிகழ்வுகளுக்கான விதைத்தல் முதல் உலகப்போர் காலகட்டத்தில் இருந்து தொடங்குகிறது. அன்றைய ஒருங்கிணைந்த பாலஸ்தீன் 500 ஆண்டுகளாக துருக்கிய உதுமானிய பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்தது. முதல் உலகப்போர் காலகட்டத்தில் உதுமானிய பேரரசு தன் பரந்த ஆளுகை பகுதிகளை முற்றிலுமாக இழந்து தன் துருக்கிய அடையாளத்தை வெளிப்படுத்தும் நிர்பந்தத்திற்கு ஆளானது. அந்த தருணத்தில் அங்குள்ள அரபுகள் மற்றும் யூதர்கள் தங்கள் சுய பாதுகாப்பிற்காக உதுமானிய பேரரசோடு இணைந்து நின்றார்கள். முதல் உலகப்போரில் உதுமானிய பேரரசு தோல்வியடைந்த காரணத்தால் பாலஸ்தீன் பகுதி பிரிட்டனில் கட்டுப்பாட்டில் வந்தது. இதன் பிறகே முரண்பாடு வேர்கொள்ள தொடங்கியது.அதுவரை பத்து சதவீதமாக இருந்த யூதர்கள் வெளிப்புற அழுத்தம் காரணமாக அதிக எண்ணிக்கையில் குடியேற தொடங்கினர். அங்குள்ள நிலங்கள் யூதபெரும் வணிகர்களால் வாங்கப்பட்டன. இதில் பலவந்தமாக பறிக்கப்பட்டவைகளும் உண்டு. யூத குடியிருப்புகளில் அரபுகள் நடமாட தடைவிதிக்கப்பட்டது. தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இதன் காரணமாக இரு இனத்தவரிடையே உராய்வு அதிகரிக்க தொடங்கியது. இதன் பின்னர் ஹிட்லரின் இனத்தூய்மை கொள்கை காரணமாக பாலஸ்தீன் பகுதியில் யூத குடியேற்றம் மேலும் அதிகரிக்க தொடங்கியது.இதன் தொடர்ச்சியில் பிரிட்டிஷ் அரசுக்கு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மேற்கத்திய சியோனிச தலைவர்களின் வேண்டுகோள்களின் படி பிரிட்டிஷ் பாலஸ்தீன் இஸ்ரேல்- பாலஸ்தீன் ஆகிய இருபகுதிகளாக பிரிக்கப்பட்டது.இதன் இடைக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் விசனமும், வன்மமும் நிரம்பியவை. பிந்தைய கட்டத்தில் எகிப்து, சிரியா, லெபனான், ஈராக், ஈரான் போன்ற அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்குமான பிரதேச ரீதியான முரண்பாடு அதிகரிக்க தொடங்கியது. விளைவாக 1949, 1967, 1973 ஆகிய ஆண்டுகளில் அரபு பிராந்தியம் துயரம் படர்ந்த போர்களை சந்தித்தது. இஸ்ரேல் ஆக்கிரமித்த அதன் எல்லை பகுதிகளை விடுவிப்பதற்காக அவை இருந்தன. இந்த போர்களில் அமெரிக்காவின் வலுவான ஆதரவு இஸ்ரேலுக்கு இருந்ததால் அரபு நாடுகளால் முன்னகர இயலவில்லை. எழுபதுகளுக்கு பிறகு மத்திய தரைக்கடல் பகுதியில் இஸ்ரேலின் வல்லாதிக்கம் வேர்கொள்ள ஆரம்பித்தது. ஆக்கிரமிப்பும், தாக்குதலும், படுகொலைகளும் பயங்கரவாத எதிர்ப்பு, சுயபாதுகாப்பு என்ற சார்பு சொல்லாடல்களுக்குள் ஒளிந்து கொள்ளுமாறு செய்யப்படுகின்றன. காசா பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை தாங்கி கொண்டே "நீங்கள் இந்த பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுங்கள்" என்ற துண்டுபிரசுரங்களை தூவுகின்றன. மனித உயிரிழப்பின் மீது மெழுகு பாய்ச்சும் நடவடிக்கை இது. போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற சமீபத்திய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தையும் இஸ்ரேல் பொருட்படுத்தவில்லை. தன் செயல்பாடு, வல்லாதிக்கம் கேள்விக்குட்படுத்த முடியாதது என்பதை இஸ்ரேல் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் எந்த ஆக்கபூர்வமான செயல்திட்டங்களோ, நடவடிக்கைகளோ இல்லாமல் மௌனம் காத்து வருகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு நிலைபாடு என்ற ஒருபுறத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான உணர்வுநிலை, அவர்களுக்கான நிதியுதவி என்ற மறுபக்கமாக இரட்டை தன்மையோடு விளங்குகின்றன. மேற்கத்திய நாடுகளில் தன்னியல்பாக ஏற்பட்டிருக்கும் எழுச்சிகர உணர்வை கூட அரபு நாடுகளில் காண முடியவில்லை. இதற்கு இஸ்லாமின் ஆரம்ப கால கருத்தியல் முரணாக இருக்கும் ஷியா- சுன்னி விவகாரமும் காரணம். பாலஸ்தீன் பகுதிகள் கணிசமான அளவில் ஷியா மக்கட்தொகுதியை கொண்டவை. ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்றவை பெரும்பான்மை ஷியா உறுப்பினர்களை கொண்டவை. இவற்றிற்கிடையேயான உள்முரண்பாடுகள் இஸ்ரேலின் தொடர்ந்த ஆக்கிரமிப்பு மற்றும் போர் நடவடிக்கையை பலப்படுத்துகின்றன.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் முழு மொழிதலும், பொருளுதவியும் இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் இந்துத்துவ அமைப்புகள் தன்னுடைய முழுமையான , தார்மீக ஆதரவை இஸ்ரேலுக்கு வழங்குகின்றன. இரண்டாம் உலகப்போர் கட்டத்தில் ஹிட்லருக்கு தன் தொடர்ந்த ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் அளித்த இவர்கள் தற்காலத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. தன்னுடைய இயக்க சடங்குகள் அனைத்துமே ஹிட்லரின் நாசி கட்சியின் போலச்செய்தலாக(imitation) இருக்கும் பட்சத்தில் இந்த ஆதரவு என்பது சர்வதேச சூழலில் அதன் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ எதிர்ப்புக்கான பதிலீடே. வரலாற்றடிப்படையில் யூத சமூகத்தின் மீது எந்த கரிசனையும் இல்லாத இவர்கள் இஸ்ரேலை ஆதரிப்பது தார்மீக நெறிமுறைகளுக்கு மாறானது. சில வருடங்களுக்கு முன்னர் லெபனான் பிரச்சினையை ஒட்டி இணையதளம் ஒன்றில் நான் எழுதிய கட்டுரைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரபல எழுத்தாளர் ஒருவர் மறுப்பு எழுதி என்னிடம் சில கேள்விகளும் கேட்டிருந்தார். அன்றைய சூழலில் புலம்பெயர் வாழ்க்கையின் தவிர்க்க இயலாத சில காரணங்களால் என்னால் அப்போது பதிலளிக்க இயலவில்லை. அவரை இப்போது நான் அழைக்கிறேன். உங்களை எப்போதும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். இஸ்ரேல்-பாலஸ்தீன், ஈராக்-அமெரிக்கா, வியட்நாம்- அமெரிக்கா, கியூபா- அமெரிக்கா, சிங்கள - தமிழ் இனம் போன்றவற்றில் கூர்ந்து நோக்கும் போது இவர்களின் ஆதரவு என்பது வல்லாதிக்க, ஒடுக்குமுறை சக்திகளின் சார்பாகவே இருக்கிறது. அவர்களின் இந்திய நிலைபாட்டின் உலகளாவிய நீட்சியே இஸ்ரேல் ஆதரவு. காலத்தொடர்ச்சியில் பாலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் படுகொலைகளுக்கு வரலாற்றின் முன்னோக்கில் தகுந்த விலையை அது கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment