காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, January 19, 2009

பின் நவீன நிலைமைக்கு வெளியே

பின் நவீன நிலைமைக்கு வெளியே- மத்திய கிழக்கு குறித்து லியோ தர்த்துடன் எட்வர்ட் செய்த் உரையாடல்

மொழியாக்கமும் குறிப்பும் :-எச்.பீர்முஹம்மது

ஐரோப்பிய சூழலில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளில் இடதுசாரி நிலைபாட்டை மேற்கொண்ட சிந்தனையாளர்களில் பலர் இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்தில் இஸ்ரேலிய ஆதரவு நிலைபாட்டையே மேற்கொண்டனர். மார்க்சிய சிந்தனையாளர்களான எரிக் ஹாப்ஸ்கம், எடின் பாலிபர் ,ஸ்லொவோய் ஸிசக், மற்றும் பின் நவீன சிந்தனையாளர்களான லியோதர்த், பூக்கோ ஆகியோரை இவ்வாறு குறிப்பிடலாம். இருத்தலிய மூல தத்துவ வாதியான ஹைடெக்கர் மிக வெளிப்படையாகவே குறிப்பிட்டார் " தத்துவ வாதிகளின் நடைமுறைவாழ்வுக்கும் அவர்களின் தத்துவசிந்தனைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை" (ஹைடெக்கரின் இந்த வரிகளை தங்கள் நடைமுறை வாழ்வின் ஆதர்சனமாக பின் தொடரும் படைப்பு கர்த்தாக்கள் தமிழ் நாட்டில் நிறையவே உண்டு)இதனடிப்படையில் நாசிக்கட்சியில் உறுப்பினராக இருந்த ஹைடெக்கர் நாசிகள் புதிய ஜெர்மனியை உருவாக்குவார்கள் என நம்பினார். இதன் மூலம் நாம் தத்துவவாதிகளின் பிறப்பு-வாழ்வு-கருத்தாக்கம் குறித்து விவாதிக்க முடியும். இதை வேறொரு சூழலில் பின் நவீனத்துவ தொடக்க சிந்தனையாளரான லியோதர்த் மீதும் குறிப்பிட முடியும். அறிவு, அதிகாரம், பெருங்கதையாடல்-நுண்கதையாடல் குறித்து பேசிய லியோதர்த் பாலஸ்தீன் விவகாரத்தில் மாறுபட்டே நின்றார். இதை குறித்து எட்வர்த் செய்த் தன்னுடைய நூல்களில் விரிவாக பதிவு செய்திருக்கிறார். இந்த உரையாடல் மத்திய கிழக்கு குறித்து எட்வர் செய்த் மற்றும் தாரிக் அலி ஆகியோர் லியோதர்த்துடன் 1996 ல் (அவரின் மரணத்திற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு)கலிபோர்னியாவில் வைத்து நிகழ்த்தியதாகும்.இதை எனக்கு தந்துதவிய அரபு பல்கலைகழக ஆங்கில துறை பேராசிரியர் முனீர் ஹசன் மஹ்மூத் எப்பொழுதுமான நன்றிக்குரியவர். இரு ஆண்டுகளுக்கு முன் புதியகாற்று மாத இதழில் வெளியான இக்கட்டுரையை தற்கால சூழலின் அவசியம் கருதி வலைப்பதிவு வாசகர்களுக்காக மறுபதிவு செய்கிறேன்.

எட்வர்த் செய்த் :- லியோ, மத்திய கிழக்கு குறித்து உங்களோடு விவாதிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது எனக்கு திருப்திகரமான மனநிலையை அளிக்கிறது. உங்களின் Phenomonology,The Post modern condtion, Heidegger and Jews, Post modern Fables, மற்றும் The hyphen between judaism and christianity ஆகியவை நான் ஆர்வமாக படித்த நூல்கள். அதன் கோட்பாட்டு உயிர்ப்பு குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை. நீங்கள் ஏன் நடைமுறை விமர்சன முறை குறித்து எதுவும் சொல்வதில்லை.? இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கட்டத்தில் உலகம் அடைந்த மாற்றம் அலைவடிவமானது. அறிவு என்பது கணிப்பொறிமயமான கட்டத்தில் வந்திருக்கிறது என்கிறீர்கள்.அது பிந்தைய கட்டத்தில் முதன்மையான உற்பத்தி சக்தியாக மாறுகிறது. பயன் மதிப்பை இழந்து விட்டது. உங்கள் பார்வைக்கே நான் வருகிறேன். அறிவு என்ற கருத்தாக்கம் அதிகார சமூகமாக மாறும் கட்டத்தில் அடையும் மாற்றம் என்பது என்ன? ஐரோப்பிய சூழலில் பிந்தைய தொழிற்சமூகத்திலிருந்து ஏற்படுகிற பின் நவீன கருத்தாக்க முறைமைக்கு வருகிறீர்கள். ஓர் எதேச்சதிகார சமூகத்தில் மொழி எதனை சார்ந்து அமைகிறது. அது தனக்கான சுய அர்த்தத்தை கொண்டிருக்கிறது என்பதிலா? அல்லது வேறொரு தர்க்க நியாயத்தை கொண்டிருக்கிறது என்பதிலா? அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் நிகழ்தகவுகளை நானும் கூர்ந்து கவனித்து கொண்டு தான் வருகிறேன். இதை பற்றி எழுதவும் செய்திருக்கிறேன். லகானிலிருந்து உங்கள் பார்வை வேறுபடுகிறது. லகான் நனவிலி மொழி போன்றது என்றார். நீங்கள் நனவிலி காட்சி மற்றும் உருவம் சார்ந்தது என்கிறீர்கள். தாமஸ் அங்கோ வின் நாவலை உதாரணம் காட்டுகிறீர்கள். எனக்கு அந்த நாவல் பொருத்தப்பாடாக இருக்கிறதா என்பதே தெரியவில்லை. பொருத்தபாடான மொழி அல்லது இலகுவான மொழி என்ற பாரதூரமான சிக்கலிலும் நீங்கள் உட்பட்டிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்கள் சிலநேரங்களில் என்னால் கடக்க முடியாமல் கூட இருந்திருக்கின்றன. பெளதீகத்தில் வார்த்தைகள் எவ்வாறு பாவிக்கப்படுகின்றன என்பதை வைத்து கவிதையிலும் நாவலிலும் மொழி எவ்வாறு பாவிக்கப்படுகின்றது என்பதை பெளதீகத்தால் புரிந்து கொள்ள முடியாது என்று ஒரு விவாதத்தில் சொன்னீர்கள். என்ன செய்வதற்கு? என் Orientalism புத்தகம், புத்தக கடைகளில் மத்திய கிழக்கு பிரிவில் தான் கிடைத்தது. அறிதல் என்பது அந்தந்த துறைகள் சார்ந்தது தானா? நீங்கள் உங்களுக்குள்ளே சிக்கலாக இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. இப்போது மத்திய கிழக்கு பற்றி வருவோம். நீங்கள் பூக்கோ போன்றே மத்திய கிழக்கு விவகாரத்தில் இருக்கிறீர்கள். இஸ்ரேல் என்ற கருத்துருவத்தின் புனைவாக்கம் பற்றிய உங்களின் பார்வை குறைபாடுடையதாகவே நான் கருதுகிறேன்.. யூதம் என்றைக்குமே பேரரசு கனவாக இருக்கவில்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். அதன் டயஸ்போராவுக்கு ஒரு சாந்தமான எல்லையை வகுக்க முடியாது. சிலுவைப்போர்களின் எச்சங்கள் இஸ்ரேலில் இன்னும் இருக்கின்றன. ஜெருசலத்திற்கான போராட்டத்தில் அவர்கள் ரோமானியர்களுக்கு எதிராக நின்றார்கள். இந்த ரோம கிறிஸ்தவர்களை நீங்கள் எந்த வகைப்பாட்டில் கொண்டு வருகிறீர்கள். கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கின் மத்திய தரைக்கடல் பிரதேசங்களை ஆட்சி செய்த யூத அரசுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவர்களுக்குள்ளே ஏற்பட்ட உராய்வுகள் சுய அழித்தலில் கொண்டு போய் முடிந்ததையும் நாம் காண வேண்டியதிருக்கிறது. உலக இனவரைவியல் வரலாறு எதைச் சொல்கிறது? டெல்யூஸிலிருந்து நான் தொடங்கும் போது மண்ணின் மீது தன்னை பதித்து கொள்ளும் இனம் அடையாளங்களுக்கான சாத்தியபாட்டை தோற்றுவிக்கிறது. இஸ்ரேலுக்கான நிலம் உருவாக்கத்தின் மறுவிளைவைப் பற்றி தான் நாம் பார்க்க வேண்டும். மலை முகடுகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் நடுவே பிறந்தவன் என்ற காரணத்தால் எனக்கு அதன் மீதான மறு பார்வை தேவைப்படுகிறது. நான் இங்கு விவாதிப்பதே பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய யூத வெறுப்பைப் பற்றி தான். ஐரோப்பா 17 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து உலகின் மேன்மை குடிமகனாக தன்னை கருதிக்கொண்டது. ரோமானிய சீசர்களின் வார்த்தைகளைப் படிக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது. ஐரோப்பா கிழக்கை பற்றி அறிந்து கொண்டதில் இருந்து இதை தொடங்க முடியும். கிழக்கின் வாழ்நிலை, மதம், சமூக பொருளாதாரம், நடத்தையியல், வரலாறு இவற்றை தன் கண்காணிப்பில் கொண்டு வந்தது.இஸ்ரேலுக்கான தனி நாடு பிரகடனம் பால்பர் வழியாக வந்தது.1910 ல் பிரிட்டன் பொதுச்சபையில் உரையாற்றும் போது பால்பர் பின்வருமாறு குறிப்பிட்டார்."எகிப்து நம் கண் முன்பாக இருக்கிறது. அதை கையாள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். தொடர்ந்து பாலஸ்தீன் பற்றியும் காண வேண்டியதிருக்கிறது. நிலத்தை தேடும் நாடற்ற மக்களுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம்." பால்பரின் இந்த உரை முகடான அலை மாதிரி போய்க் கொண்டிருந்தது. சியோனிச தலைவர்கள் தங்கள் தேவையின் லட்சிய கனவைப்பற்றி தெளிவாக அறிந்திருந்தனர். அது வரலாற்றடிப்படையில் ஜெருசலத்தை சுற்றிய பகுதிகள் தான் என்றனர். அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தலுக்கிணங்க 1917 நவம்பர் 2 ல் பிரிட்டானிய அமைச்சரவை யூதர்களுக்கான தனி நாடு அறிவிப்பை வெளியிட்டது. பிரிட்டன் வெளியுறவு செயலரான பால்பர் தான் ஒப்பமிட்ட கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிட்டார். "

அன்புள்ள பிரபு ரோச்சில்ட்,

இந்த மேன்மைமிகு அரசின் சார்பாக ஒரு சந்தோஷ செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதில்
மகிழ்ச்சி அடைகிறேன். யூத சியோனிச உள்ளுணர்வுகளுக்கு கருணை காட்டும் அடிப்படையில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை பிரிட்டன் அமைச்சரவை அங்கீகரித்திருக்கிறது.
மேன்மைமிகு இந்த அரசானது பாலஸ்தீனில் யூதர்களின் தேசிய இருப்பிடத்தை அமைப்பதற்காகவும், அதனடிப்படையில் அவர்களின் இலக்கை அடைவதற்கான சிறந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எவ்விதத்திலும் இது அங்கு வாழ கூடிய யூதர் அல்லாத மக்களின் சிவில் மற்றும் மத உரிமைகளை பறிப்பதாக அல்லது மற்ற நாடுகளில் வாழும் யூத மக்களின் அரசியல் மற்றும் வாழ்நிலை தகுதிகளை பாதிப்பதாகவோ இருக்க கூடாது.

மேற்கண்ட பிரகடனத்தை நீங்கள் சியோனிச கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டு செல்வது மிகுந்த நன்றிக்குரியதாக இருக்கும்.

தங்கள் உண்மையுள்ள,

ஆர்தர் ஜேம்ஸ் பால்பர் (ரோச்சில்ட் என்பவர் பிரிட்டானிய
சியோனிச கூட்டமைப்பின் தலைவர்)


இந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட தேசிய இருப்பிடம் (National home) என்பதன் நோக்கம் அரசு (State)என்பதை பதிலீடு செய்வதே. ஆனால் பின் தொடர்ந்த வருடங்களில்
பிரிட்டிஷ் அதிகாரிகள் அது அரசமைப்பு தான் என்பதை ஒத்துக்கொண்டார்கள். வின்சன்ட் சர்ச்சில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இதை மறுத்திருந்தாலும் பின் விளைவுகள் அதை உறுதி செய்தன. மேற்கண்ட பிரகடனத்தில் முதலில் பாலஸ்தீனை குறிக்கும் that என்ற வார்த்தை குறிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது பாலஸ்தீனின் முழுப்பகுதியாகி விடும் என்பதால் in என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. அதைப்போலவே அங்கு வாழும் யூதர் அல்லாத மக்களின் உரிமைகளை பறிப்பதாக இருக்க கூடாது என்பதும் இணைக்கப்படவில்லை. பின்னர் எட்வர்ட் சாமுவேல் மாண்டேகுவின் எதிர்ப்பு காரணமாக தான் இணைக்கப்பட்டது.அன்றைய கட்டத்தில் பிரிட்டிஷ் மெக்கா நகரின் ஷெரிபானஹுஸைன் இப்னு அலியுடன் கடித தொடர்பு வைத்திருந்தது. அப்போது ஹுஸைன் அரபு பகுதிகளை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்த சமயத்தில் ஜெருசலம் பற்றிய கருத்து எழவில்லை. அதற்கு பதிலளித்த பிரிட்டிஷ் அதிகாரிகள் அரபு நிலங்கள் அரபுகளிடத்தில் தான் இருக்கும் என்றார்கள்.பாலஸ்தீன் யூதர்களின் தேசிய இருப்பிடமாக வேண்டுமென்று முன்மொழிந்தவரில் டாக்டர் செய்ம் விஸ்மென் முக்கியமானவர். பிரிட்டனில் சியோனிச தலைவர்களை ஒன்றிணைத்தவர். வேதியியல் விஞ்ஞானியான அவர் போர்கருவிகளுக்கும்,வெடிகுண்டுகளுக்கும் உதவக்கூடிய அஸிடோனை நுரைத்தல் மூலம் கூட்டிணைக்கும் செயல்முறையை கண்டறிந்தார். அதன் வழி பயன்மதிப்புமிக்க தலைவரானார். பிரிட்டன் தன் போர் தயாரிப்புகள்அதிகரிப்பின் தேவையை உணர்ந்து இவரை பயன்படுத்த முடிவெடுத்தது. பிரிட்டன் ராணுவ அமைச்சரான லார்டு ஜார்ஜ் இவரை சந்தித்து சியோனிச உணர்வு நிலைக்கு தன் ஆதரவை தெரிவித்தார். 1906 ல் இவருடனான முதல் சந்திப்பின் போது பால்பர் கேட்டார். " உங்களின் அசிடோன் கண்டுபிடிப்பை நாங்கள் பயன்படுத்துவதற்காக எவ்வளவு பணம் வேண்டும்? அதற்கு அவர் சொன்னார் " நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். "எங்கள் மக்களுக்கான தேசிய இருப்பிடம்". ஏன் நீங்கள் பாலஸ்தீனை யூதர்களின் தேசிய இருப்பிடமாக கேட்கிறீர்கள்? வேறு ஏதாவது உங்களின் திட்டத்தில் இருக்கிறதா? என்றார் பால்பர்.விஸ்மென் அதை எதிர்த்து விட்டு சொன்னார்
"பால்பர், ஒரு வேளை நான் உங்களிடத்தில் லண்டனுக்கு பதிலாக பாரிஸை தருகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துக்கொள்வீர்களா? பால்பர் சொன்னார் " லண்டன் எங்களிடத்தில் இருக்கிறது. நீங்கள் சொல்வது சரி தான். லண்டன் சகதியாக இருக்கும் போது நமக்கு ஜெருசலம் தேவை. இறுதியாக விஸ்மென் பணம் மற்றும் இருப்பிடம் ஆகிய இரண்டையுமே பெற்றார். அரசமைக்கப்பட்ட இஸ்ரேலின் முதல் ஜனாதிபதி கூட.

லியோ, நான் மேற்குறிப்பிட்ட கருத்தம்சங்களிலிருந்து தேசிய இருப்பிடம் , நிலம் குறித்து உங்களுக்கு ஏன் முரண்பட்ட அபிப்ராயங்கள் இருக்கின்றன.? ஐரோப்பிய யூத வெறுப்பை
வெறும் தன்னிலையின் காரணியாக பார்க்கிறீர்களா? மரபான அறிவிலிருந்து அதிகாரமிணைந்த அறிவுக்கு வெளி கடந்து விட்ட பிறகு இனங்கள் நிலை கொள்வதை வெறும் அருவமாக பார்க்க முடியாது. உங்களின் பெரும்/நுண் கதையாடலாக நான் எடுத்துக்கொள்ளலாமா?பின் காலனியமாக உலகம் உருவாகி உள்ளதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன். இஸ்ரேல் நடப்பு காலத்தில் மக்ரிப் பிரதேசத்துக்கான விரிவுபடுத்தலில் போய் நிற்கும் போது நாம் எதை விவாதிப்பது? உங்கள் பின் நவீனத்துக்கே அதை விட்டு விடுகிறேன்.

லியோ தர்த்:- உலகம் அதன் அர்த்தத்தை இழந்து விட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியிலான நவீன காலகட்டம் மீதான அவநம்பிக்கை எனக்கு இப்போதும் உண்டு. அறிவு வாதத்தின் இயலாமை மனித சுய உணர்வு நிலைகள் மீது எதையுமே ஏற்படுத்தவில்லை. செய்த் நீங்கள் எதிலிருந்து தொடங்குகிறீர்கள்? லெளகீக மாற்றம் குறித்த உங்களின் போதாமையை நான் எவ்வாறாக முறைப்படுத்துவது.? பின்
நவீன கட்டத்தில் மாற்றமடைந்த அறிவு,எப்படி அறிவது?
எப்படி வாழ்வது? வாழ்வதை எப்படி கவனிப்பது என்பதில் அடங்கியிருக்கிறது. Hyper பரப்பிற்குள் நகர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள் இதை பிரதிபலிக்கின்றன. அறிவு அதிகார சமூகத்தின் இடத்தில் வரும் போது இடம் பெயர் அறிவாக மாறுகிறது. வலை (Web) மாதிரி தான் இதுவும். அறிவு பயன் மதிப்பை இழந்து விட்டது. குறியீட்டியல் பரிமாற்றத்துக்கு உட்பட்டிருக்கிறது. பொருத்தப்பாடான மொழி அல்லது இலகுவான மொழி என்ற சிக்கலைப் பற்றி சொன்னீர்கள். அலன் சோகலோடு பிரான்சில் நடந்த விவாதம் அது. அவரின் அறிவு ஜீவி வேஷங்கள் (Intellectual Imposture) என்ற புத்தகம் பற்றியதாக இருந்தது. அதில் நான் உட்பட பல பிரெஞ்சு சிந்தனையாளர்களை பற்றி அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். பிரான்சில் உள்ள தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. எழுத்தில்புரியாமை, கூடா அர்த்தம் பற்றி நான் சிறிது நேரம் பேசினேன். பிரதி அவ்வாறாக இருப்பதால் தான் புரிந்து கொள்வதற்கான பல்வேறு சாத்தியப்பாடுகள் அதில் இருக்கின்றன. அதீத காப்பு நிலைபாடு தான் இது. கவிதையிலும், நாவலிலும் மொழி எவ்வாறு இருக்க வேண்டும் என்று பாவிக்க பெளதீகத்திற்கோ அல்லது மற்ற இயற்கை அறிவியல்களுக்கோ உரிமை இல்லை. அதை புரிந்து கொள்வதற்கான சாத்தியபாடும் பெளதீகத்திற்கு இல்லை. வெறுமனே அர்த்தத்தை நகர்த்தி விட்டு போவதல்ல அது என்றேன். அவர்சொன்னார் " அந்த வார்த்தைக்கு ஒரு தர்க்கம் இருக்க வேண்டும். தன்னளவில் அது மற்ற வார்த்தைகளோடு உறவு கொள்வதாக இருக்க வேண்டும் என்றார். வார்த்தை அதன் சமூக பயன்பாட்டில் அர்த்தம் கொள்ளும் போது இது சாத்தியமில்லாதது. இத்தகைய வார்த்தை விவாதங்களை நான் கடந்து தான் வந்திருக்கிறேன். அறிவுத்துறை வட்டாரங்களில் இந்த எதிரிணை போக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.நீங்கள் எனக்குள்ள சிக்கலைப்பற்றி சொன்னீர்கள். எட்வர்ட் செய்த் தெளிவாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள எனக்கு சிக்கலாக இருக்கிறது.

இஸ்ரேல் உருவாக்கம் போருக்கு பிந்தைய உலக போக்கில் ஏற்பட்ட மாறுதல். யூத டயஸ்போரா பற்றி நீங்கள் என்ன மாறுபாட்டை வைத்திருக்கிறீர்கள். 5000 வருடத்தின்
தொடர்ச்சியின்மை எதை காட்டுகிறது.? மத்திய தரைக்கடல் வேறொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து விட்டதா?கனான் பகுதியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தொல்லியல் முடிவுகளின் நீட்சியில் ஒரு பரிணாம தன்மை வெளிப்படுகிறது. செமிட்டிக் மதங்களின் பிரதிகளில் யூத இடப்பெயர்வு குறித்து தெளிவாக இருக்கிறது. கி.மு ஆயிரம் ஆண்டில் அரசர் டேவிட் கனான் பகுதியில் அரசமைப்பை ஏற்படுத்தினார். நிலம் முழுமையாக தோற்றம் கொள்ளாத நிலையில், இனங்கள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இனங்கள் பற்றிய பிரக்ஞை பூர்வநிலை ஏதும் இல்லை. அந்த அரசமைப்பு வடக்கு, தெற்கு என்ற இரு திசைகளை நோக்கியதாக இருந்தது. வடக்கு பகுதி யூதா என்றும், தெற்கு பகுதி இஸ்ரேல் என்றுமாக அறியப்பட்டது. அசிரியர்களும், பாபிலோனியர்களும் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளில் இரு பகுதிகளையும் கைப்பற்றினர். அந்த தருணத்தில் அநேக யூதர்கள் கொல்லப்பட்டும், மிஞ்சியவர்கள் நாடு கடத்தலுக்கும் உள்ளானார்கள். ஜெருசலத்தில் உள்ள சாலமனின் ஆலயம் அழிக்கப்பட்டது. ஐம்பது வருடங்களுக்கு பிறகு பார்சி மன்னன் சைரஸ் பாபிலோனை கைப்பற்றிய பிறகு யூதர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர். இதன் மூலம் முதல் டயஸ்போரா ஏற்பட்டது. கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் இஸ்ரேல் மற்றும் யூத பகுதிகளைஹெரோடிற்காக கைப்பற்றிய பிறகு யூத அழிப்பின் வேகம் இன்னும் தீவிரமானது. அவர்கள் மிகுந்த எண்ணிக்கையில்
நாடுகடத்தப்பட்டனர். தொடர்ச்சியான வருடங்களில் ரோமானியர்களால் யூதர்கள் நகர்வதற்கு நிர்பந்திக்கப்பட்டனர். அந்த காலகட்டத்தில் தான் ரோமர்கள் ஹெரோடிஸிலிருந்து அப்பகுதி முழுவதையும் பலஸ்தீன் என்று பெயரிட்டனர். இது சிரியாவின் தெற்கு பகுதி முழுவதையும் குறித்தது. அந்த கட்டத்தில் அங்கிருந்து வெளியேறிய யூதர்கள் தான் இரண்டாம் டயஸ்போராவுக்கு உள்ளானார்கள். ரோமர்கள் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை பலஸ்தீன் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பின்னர் பைசாண்டிய பேரரசின் கீழ் வந்தது. தொடர்ச்சியற்ற துண்டுகளாக்கப்பட்ட நிலம் பன்முக கலாசாரங்களின் தகவமைப்பாக ரூபமெடுத்தது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் கலீபா உமர் அப்பகுதியை கைப்பற்றிய பிறகு பாலஸ்தீன் முழுவதும் அரபு வசமானது.மீட்சியற்ற அந்நியப்படுத்தலுக்கு கொண்டு சென்றது.

பதினெட்டாம் நூற்றாண்டைய பிரெஞ்சு புரட்சி யூதர்களின் வாழ்வில் குறிப்பிடதக்க திருப்பம். புதிய கருத்துருவங்களை நோக்கி அவர்களின் நெளிவுகள் திரும்பின. சியோனை நேசித்தல் அப்பொழுது தான் ஆரம்பமானது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் புதிய கருத்துருவங்களின் தாக்கத்தில் தங்களை நகர்த்தினர். யூகோஸ்லோவியாவை சேர்ந்த யஹூதா அகாலய் இதைப் பற்றி முதன் முதலாக எழுத ஆரம்பித்தார். இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனி,கிழக்கு ஐரோப்பா ஆகிய இடங்களில் யூத எதிர்ப்புணர்வு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சி அங்குள்ள யூதர்களின் வெளிப்படையான சியோனிய பிரக்ஞைக்கு வழி வகுத்தது. இது கூட்டுணர்வானது 1897 ல் தான். அகாலயின் பேரரான தியோடர் ஹெர்ஸ் அது பற்றிய கருத்துருவங்களைவடிவமைத்தார். தன் பாட்டனாரின் எழுத்துக்கள் அவருக்கு துணையாய் இருந்திருக்க கூடும். அது சாதாரணத்தனமானதல்ல. மிக சிக்கலானதும்,
நெகிழ்வூட்டக்கூடியதுமானதாகும். முதல் உலகப்போர் இப்பிராந்தியத்தில் ஓர் எதிர் திருப்பத்தை ஏற்படுத்தியது. உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிட்டன் - பிரான்சு ஆகியவை பங்கிட்டு கொண்டன. முதல் உலகப்போர் தொடங்கிய காலகட்டத்தில் துருக்கியர்களால் மிகுந்த எண்ணிக்கையிலான யூதர்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் ரஷ்ய குடியுரிமை பெற்ற யூதர்கள். இதற்கிடையில் ஐரோப்பாவில் யூத எதிர்ப்பின் தீவிரம் இன்னும் அதிகமானது. அது தொடர்ந்த நிலையில் ஹிட்லர் யூத இனத்தை நிர்மூலமாக்கியது வெளிப்படையான விஷயம். அவர்கள் நாடற்றவர்களான பிறகு எந்த ஐரோப்பிய நாட்டிலும் அவர்கள் வேர்கொள்ள இயலவில்லை. ஆஸ்திரியாவிலும், ஹங்கேரியிலும் அலைந்து நகர்ந்ததைப்பற்றி இன்னமும் தெரிவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.பால்பர் பிரகடனத்திற்கு பிறகான பாலஸ்தீனில் யூத குடியேற்றம் அரபுகளை தாங்கள் வேர்களற்று விடுவோம் என்ற உணர்வு பூர்வ நிலைக்கு தள்ளியது. அதற்காக அவர்கள் ஹிட்லரோடு இணைந்ததை எட்வர்ட் செய்த் அறியாமலில்லை. அந்த பிரகடனத்திற்கு பிறகு ஹிஜாஸ் ஆளுநரான அரசர் பைசலுக்கும், சைம் விஸ்மனுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தமும், உரையாடலும் ஏன் வெளிப்படவில்லை? 1919 பாரிஸ் ஒப்பந்தம் என்ன சொல்கிறது. இருதரப்பிலுமான புரிதலோடு குடியேற்றம் நிகழ வேண்டும். யூதர்கள் வருவதன் மூலம் அரபு குடியானவர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். அதன் பிறபாடு பைசல் மெக்காவில் சொன்னார்." நாட்டின் வளம் புனித மண்ணாக இருக்கிறது. யூதர்கள் குடியேற்றம் மூலம் பாலஸ்தீன் பொருளாதார மற்றும் ஆன்மீக ரீதியாக உயரும். அவர்கள் அந்த நிலம் தங்கள் மூதாதையருக்கானது என்பதை அறிந்திருந்தார்கள்."A Land without people for a people without Land என்பது ஒர் ஒழுங்குலைவு தான். பின் நவீன காலகட்டத்தில் இனங்களின் சிதைவார்ந்த ஒருமை அவசியம் தான். முழுமை பகுதியை விட அதிகமாக இருக்கிறது. தவிர்க்க முடியாத கட்டத்தில் எழுகிற இனங்களின் எழுச்சி மோதல்களை ஏற்படுத்துகிறது என்பது சாத்தியமான ஒன்றே. கதையாடல்களின் உலகில் வெளி ஏற்படுத்தும் சலனம் விகசிக்க தகுந்ததே. பெருங்கதையாடல்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகில் நான் நுண்கதையாடல்களை குறிக்கிறேன். எட்வர்ட் செய்த் எதை எடுத்து கொள்கிறார் என்பது தெரியவில்லை.


எட்வர்ட் செய்த்:- லியோ தர்த் தன் பூப்போன்ற உரையாடலை நிறைவு செய்து விட்டார் என கருதுகிறேன். லியோ மத்திய தரைக்கடல் குறித்த வரலாறுகளின் புனைவுருவாக்கத்திற்கு சென்றுவிட்டார். உலகில் இனங்களின் இடப்பெயர்வை பற்றி அதிகமாக அவர் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ஐரோப்பிய மேட்டுக்குடி வர்க்க வரலாறு எதைக்காட்டுகிறது? அது முடிந்து விட்ட வார்த்தைகளா? தூர கிழக்கு நாடுகளின் இனங்களின் இடப்பெயர்வு குறித்து நீங்கள் அறிந்ததுண்டா? ஹிட்லர் உயர்த்திய ஆரிய இனம் பற்றிய தொன்மம் என்பது கதையாடலா? கோட்பாட்டை நிராகரிக்கும்
நீங்கள் தொன்மங்கள் பற்றி மட்டும் குழம்புவதேன்? பூர்வ காலத்தில் யூதர்கள் டயஸ்போராவுக்குஉள்ளானார்கள் என்றால் உலகில் அதே அந்தஸ்தை அடைய கூடிய இனங்கள் எத்தனை? அமெரிக்க பூர்வ குடிகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? யூதர்கள் தேசிய இருப்பிடம் என்ற கருத்தாக்கமே 19 ஆம் நூற்றாண்டில் தான் வலுப்பெற்றது. அதன் தொடக்கமே ஜெர்மனும், இத்தாலியும் இணைந்தது தான். பிரஞ்சு புரட்சி அதற்கான ஒரு தூண்டு கோல் தான். யூத ராணுவ அதிகாரியான டைரபஸ் ஜெர்மன் உளவாளி ஒருவரால் வேவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இதை தொடர்ந்த விசாரணையில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தொடர்ச்சியான கட்டங்களில் அவர்கள் பெருவாரியாக கொல்லப்பட்டனர். பாரிஸில் அப்போது புகழ்பெற்றிருந்த வியன்னா இதழியலாளரான தியோடர் ஹெர்ஸ் சியோனுக்கு திரும்புதல் கருத்தாக்கத்தை முன்வைத்தார். 1895 ல் அவர் எழுதினார்

" பாரிஸில் நான் சொன்னது போன்று யூத எதிர்ப்பை முன்னோக்கும் வகையிலான தாராள மனப்பான்மையை அடைந்து விட்டேன். அதை வரலாற்று பூர்வமாக புரிந்து கொள்ள
தொடங்கினேன். எல்லாவற்றிற்கும் மேலாக யூத
எதிர்ப்புத்தனத்தை எதிர்கொள்வதான முயற்சியின் வெறுமையையும்,ஏமாற்றத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்." இதை தொடர்ந்து அவர் பிரெஞ்சு சோசலிஸ்டுகளை
விமர்சித்தார். யூத எதிர்ப்பாளர்களை நண்பர்களாக கருதினார். 1903 ல் அன்றைய சாரிஸ்ட் ருஷ்யாவின் உள்துறை அமைச்சரான பிளவ்ஹே வை சந்தித்தார். ரஷ்யா அப்போது புரட்சிக்கான கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் தருணம். பிளவ்ஹே அங்குள்ள சோசலிஸ்டுகளுக்கு எதிராக பெருங் கூட்டத்தை திரட்டி கொண்டிருந்தார். அது ஒரு வகையில் புரட்சி பற்றிய நெருடலாகவும் இருந்தது. தியோடர் ஹெர்ஸ் அவரிடம் யூதர்களை அங்கிருந்து எடுத்து கொள்வதாக கூறினார். அதன் மூலம் புரட்சிக்கான அணிதிரளலை பலவீனப்படுத்த முடியும். அதில் வெற்றியும் கண்டார். இந்த தருணத்தில் தான் டிராஸ்கி போல்ஸ்விக் கட்சியில் யூதர்கள் அதிகம் சேர்த்து கொள்ளப்பட வேண்டும் என்று சொன்னார்.
இருபதாம் நூற்றண்டின் தொடக்க காலகட்டங்களில் பாலஸ்தீனில் குடியேறிய யூதர்கள் பலரும் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் தான். அது மேற்குறிப்பிட்ட திட்டத்தின் பலன் தான்.
யூத தேசிய இருப்பிடமும், அது பாலஸ்தீன் தான் என்பதும் வெறும் வரலாற்று காரணமல்ல. அது புவி அரசியலோடு இணைந்தது. மத்திய தரைக்கடல் பகுதி முழுவதுமாக அரபுகளிடம் வந்து விட்ட பிறகு அன்றைய ஏகாதிபத்தியம் ஓர் அதிகார தொடரலுக்கு வழி வகுத்தது. அது இஸ்ரேல் மூலம் மட்டுமே சாத்தியப்படும் என்பது தவிர்க்க இயலாததாக இருந்தது. ஐரோப்பிய யூத வெறுப்புக்கான காரணங்கள் என்பது என்ன? அது வெறுமனே இனங்கள் சம்பந்தமானதா?லியோ எவ்விதமாக இதை மதிப்பிடுகிறார்? யூதர்களான அறிவு ஜீவிகள் சொன்னதென்ன? யூத மார்க்சிய சிந்தனையாளரான அனா அரந்த் என்ன சொன்னார்? அவரின் சிந்தனைகள் சியோனிஸ்ட்களால் மிகுந்த எதிர்ப்புக்குள்ளாயின.அவரின்"Origin of Totalitarianism" தான் அதை பற்றி ஆராய்ந்த நூல். பத்தொன்பதாம் நூற்றாண்டு கால ஐரோப்பா வர்க்க, தேசிய இன அரசுகளின் மோதல்கள் நிறைந்ததாகவே இருந்தது. இத்தருணத்தில் ஐரோப்பிய யூதர்கள் நிலப்பிரபுத்துவம் சார்ந்த வங்கியாளர்களாகவும், சமூக பொருளாதார நிலையில் உயர்பதவியை பெற்றவர்களாகவும் முன்னுக்கு வந்தார்கள். அக்காலகட்டத்தில் அரசுகள் அதிகரித்த படியால் அவர்களின் பணத்தேவைக்கு முதலாளிகளும் அதிகரித்தார்கள். இவர்கள் அரசுகளின் நிதிப்பங்கீட்டை மேற்கொண்ட போது பணக்கார யூதர்களுக்கான பாத்திரம் குறையத்தொடங்கியது. அவர்கள் சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களானார்கள். அதன் தொடர்ச்சியில் அதிகரித்த அளவில் பணத்தை கொண்டிருந்தார்கள். எவ்வித சமூக பாத்திரமற்ற நிலையில் அவர்களுக்கான குணாதிசயங்கள் எல்லா வர்க்கத்தினரிடத்திலும் அவர்கள் மீது அதிருப்தியை தோற்றுவித்தன. இது எல்லாவித கண்ணிகளையும் அறுத்தது. சுரண்டலுக்கு பயன்படாத சொத்துடைமையால் சுரண்டுபவனுக்கும், சுரண்டப்படுபவனுக்கும் இடையேயான உறவு கூட அற்று போயிருந்தது. மேற்கண்ட இருமைகள் கூட கோட்பாட்டுக்குள் வராத வர்க்கம் என்ற பிரக்ஞையை ஏற்படுத்தவில்லை. இதன் தர்க்க ரீதியான தொடர்ச்சி தான் பிற்காலத்தில் ஹிட்லரின் யூத வெறுப்புக்கான முகாந்திரமாக அமைந்தது என்றார் அனா. அவர்கள் சமூகமாக இணைந்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பல நாடுகளில் வேர்களற்ற நகரத்து கும்பல்களாக மாறி போனார்கள். அவர்களுக்கு எதிரான வன்முறை தோன்றிய போது அவர்கள் கும்பல்களாக பிளவுண்டு போனார்கள். யூத வெறியுணர்வு கொண்டவர்கள் ஒரு கூட்டமாகவும், சிந்தனையாளார்கள், கலைஞர்கள் ஆகியோர் மறு கூட்டமாகவும் ஆனார்கள். மரபான வியபாரிகள் வியபாரத்தில் ஆழ்ந்து போய் எவ்வித சமூக, பொருளாதார பங்களிப்புமற்றவர்களாக இருந்தார்கள். ஐரோப்பாவில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை யூதர்களிடையேயான இந்த பிரிவினை இருந்து கொண்டிருந்தது. அனாவின் மேற்குறிப்பிட்ட தரவுகளே யூத வெறுப்பின் அடிப்படை.லியோ இதற்கு என்ன சொல்ல வருகிறார்? யூத வெறுப்பை புறநிலை மறுப்பின் மூலம் திருப்ப விரும்புகிறாரா? nation என்பதற்கு வெறும் நிலம் தான் என்று ஏன் அர்த்தம் கொள்கிறீர்கள்? அது பன்னோக்கு தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது. நான் பாலஸ்தீன் தேசிய கவுன்சிலில் உறுப்பினராக இருந்த நேரம். எடின் பாலிபர் இஸ்ரேலிய பல்கலைகழகத்தில் உரையாற்றுவதற்காக வந்திருந்தார். அவருடனான உரையாடலின் போது நான் கேட்டேன். " நீங்கள் ஏன் யூத வெறுப்பு கருத்தாக்கத்தை இயந்திர உள்ளடக்கத்திற்கு உட்படுத்துகிறீர்கள்.? அனாவும், டோனி கிளிப்பும் சொன்ன அடிப்படைகளை நீங்கள் மறுக்கிறீர்களா? என்றேன். அவரால் அத்தருணத்தில் சரியான பதிலளிக்க முடியவில்லை. பெர்டிணான்ட் ரஸ்ஸல் எழுபதுகளில் சொன்னார். " மத்திய கிழக்கு சிக்கல் வளர்ந்த முறைகள் ஆபத்தானவை. கடந்த இருபதாண்டுகளில் இஸ்ரேல் போர்த்தளவாடங்களால் தன்னை பெருக்கி கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அது தன்னை விஸ்தரிக்கும் போது பகுத்தறிவுக்கு அழைப்பு விடுத்தும், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கலாம் என்றும் சொல்லி கொண்டு வந்திருக்கிறது. இது ஏகாதிபத்திய சக்திகளின் வழக்கமான பாணி. ஏற்கனவே போர்வலிமையினால ஆக்கிரமித்ததை உறுதிப்படுத்திக் கொள்ள பேச்சுவார்த்தை ஒரு கருவியாகிறது. இஸ்ரேலின் இத்தாக்குதலை நாம் கண்டிக்க வேண்டும். அது வெறும் ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆக்கிரமிக்க கூடாது என்பதில் அல்ல. மாறாக ஒவ்வொரு ஆக்கிரமிப்புமே எந்த அளவு ஆக்கிரமிப்பை உலகம் பொறுத்துக்கொள்ளும் என்று ஆழம் பார்க்கும் சோதனை முயற்சி என்பதால் தான்."அவர் சொல்லி விட்டு சென்றவை இன்னமும் கலையாமல் இருக்கின்றன. என்னுடைய முதன்மையான புள்ளியே பாலஸ்தீன் ஆக்கிரமிப்பும் அவர்கள் அகதியானதும் தான். அதற்கு தேசிய இருப்பிடம் ஒரு பதிலீடாகுமா என்பது தான். சியோனிஸ்ட் மற்றும் பிற அறிவு ஜீவிகளுடனான உரையாடல்களின் போது இதை தெளிவாக சொல்லி இருக்கிறேன். இருபதாம் நூற்றாண்டில் தொடக்க கட்டத்தில் எப்படி இருந்ததோ அதை பராமரிக்கலாம் என்றேன். ஐரோப்பிய சூழலில் சியோனிசம் எழுச்சி பெற்ற காலத்திலேயே யூதர்களின் குடியேற்றம் அங்கு பரவலாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டு உலகில் மிகுந்த அதிர்வை ஏற்படுத்திய மார்க்சிய தத்துவவாதிகள் பலரும் யூதர்கள் தான். Truth Claim ஆக நுண்கதையாடல்களை நீங்கள் உங்களுக்காக வாசித்து
கொள்ளுங்கள். வாழ்விலிருந்து பிரிக்கப்பட்ட துயரம் ஒன்றின் மறுகட்டமைப்புக்காக என்னை நானே ஈடுபடுத்தி இருக்கிறேன்.

தாரிக் அலி:- உங்கள் இருவருக்குமான உரையாடலில் நான் எனக்கான அனுபவத்தை பதிவு செய்வது அவசியமாகிறது. எழுபதுகளில் என் பாலஸ்தீன் பயண அனுபவம் நெகிழ்வூட்டக்கூடியதாகவும், வாசிப்பனுபவமாகவும் இருந்தது.இரண்டாம் உலகப்போர் புதிய காலனிய தகர்ப்பை ஏற்படுத்தியது. அச்சமயத்தில் நிகழ்ந்த யூதப்படுகொலை யூத இருப்பிட கொள்கைக்கான நியாயப்பாட்டை தோற்றுவித்தது. எகிப்தை ஆங்கில-பிரான்சு படைகள் குறிவைத்தன. நான் பிரிட்டனுக்கு அறுபதுகளில் வந்த போது 1948 ல் நிகழ்ந்த பாலஸ்தீன் துயரத்தின் காரணத்தை புரிந்து கொண்டேன். எனக்கு ஆசிரியர்களாக சோசலிஸ்ட்கள், மார்க்ஸிஸ்ட்கள், தாராளவாத யூத சிந்தனையாளர்கள் ஆகியோர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தான் யகேல் கிளக்டின் என்ற டோனி கிளிப். அவர் பாலஸ்தீனில் பிறந்த யூத மார்க்ஸிய சிந்தனையாளர். இஸ்ரேலின் போக்கை கடுமையாக விமர்சித்தார். அரபுகளுக்கு ஏற்பட்ட அகதித்தனத்திற்காக அனுதாபம் கொண்டார். என்னிடத்தில் ஒரு தடவை சொன்னார் " உங்களுக்கு தெரியுமா? மேற்குலகிற்கு ஏன் இஸ்ரேல் தேவைப்படுகிறது? "எண்ணெய், எண்ணெய்". தியோடர் ஹெர்ஸ் திட்டமிட்டது மாதிரி அர்ஜென்டினா, மெளரிசியஸ், உகாண்டா ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் ஹெர்ஸை பின் தொடர்ந்தவர்கள் பாரம்பரிய தந்தைவழி கோட்பாட்டை முன்வைத்தனர். அது பழைய ஏற்பாடு படி இஸ்ரேல் தான் என்றனர். அந்த நிலம் யாருமற்றது என்று புனைவுருவாக்கப்பட்டது. பூர்வ குடி கலாசார பின் நவீனத்துவத்தை லியோதர்த் தொடரட்டும். அகிவா ஓர் 1931 ல் பெர்லினில் பிறந்த யூத சிந்தனையாளர். எனக்கு நல்ல நண்பரும் கூட. பிரிட்டனில் பல வருடங்கள் வாழ்ந்த அவர் எண்பதுகளில் ஜெருசலத்திற்கு பக்கத்தில் வசித்தார். இடது சியோனிஸ்ட்களை விமர்சித்தார்.தன்னுடைய "Isreal: Politics and Culture" என்ற நூலில் தியோடர் ஹெர்ஸ்க்கு முந்தியவரான அஸ்கர் கின்ஸ்பர்க் சொன்னதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். கின்ஸ்பர்க் 1891 ல் (தியோடர் ஹெர்ஸ்க்கு ஆறு வருடம் முன்னால்) குறிப்பிட்டார் " நாம் பாலஸ்தீனை இன்றைய நாட்களில் வளமற்றது, அநாந்திரமானது என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். யாராவது அங்கு நிலம் வாங்க விரும்பினால் அவர்கள் வெறுமையையே வாங்க முடியும். அந்த நிலப்பகுதி முழுவதும் பண்படுத்தப்படாத, விளைச்சலுக்கு உதவாத ஒன்றாக இருக்கிறது. அவை மணற்பகுதிகளும், பாறைகளும் நிரம்பியதாக இருக்கின்றன. அப்பகுதி மரங்களுக்கு மட்டுமே ஏற்றதாகும். அவற்றை நேர்படுத்த மிகுந்த உழைப்பும், செலவும் அவசியம். காரணம் அரபுகள் தூர எதிர்காலத்திற்காக உழைக்க விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலும் நாம் அரபுகள் பாலைவனத்தின் அடிமைகள் என்றும் ஒன்றுமற்ற மிருகங்கள் என்றும் நம்பவைக்கப்படுகிறோம். ஒருவருமே அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதைப்பற்றி புரிந்து கொள்ளவில்லை. அரபுகள் மற்ற செமிட்டிக் இனத்தவர்களை போலவே கூர்மையான மனம் படைத்தவர்கள். ஆக ஜெர்மானியர்கள் போன்றோ பிரஞ்சுகாரர்கள் போன்றோ யூதர்களுக்கு அரசு தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. இந்த செயல் முறை பாலஸ்தீனில் முன்பே வழக்கில் இருந்தது. வரலாறு நமக்கு ஹெரோடின் யூத அரசைப்பற்றி கற்பிக்கிறது. அங்கு யூத கலாசாரம் சிதைக்கப்பட்டது. அப்படிப்பட்ட யூத அரசு என்பது மக்களுக்கு விஷத்தன்மை நிரம்பியதாகவே இருக்கும். இது தற்போதைய மக்களுக்கு பொருத்தமானதல்ல. விசனகரமானது. மேலும் அவர் சொன்னார் " நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டேன். நாய் கூடையில் விழுந்தது மாதிரி தான் இதுவும். அமெரிக்காவின் செவ்விந்தியர்களுக்கு, ஆஸ்திரியாவின் கருப்பின மக்களுக்கு ஏற்பட்ட நிலைமை பலம் பொருந்திய, உயர்ந்த யூத இனத்திற்கு வர வேண்டாம். அரபுகளுடன் கலப்பது என்பது நிரந்தர மோதலுக்கே வழி வகுக்கும். அவ்வாறு ஒரு நிலை ஏற்பட நான் அனுமதிக்கமாட்டேன்."ஹிப்ரு மொழியில் எழுதப்பட்ட கின்ஸ்பர்க்கின் இந்த ஆவணமானது சியோனிஸ்ட்களால் மறைக்கப்பட்டது. அகிவா ஓர் தான் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சமூக மாற்றம் என்பது ஒன்றின் மீது ஏறி செல்வதல்ல. அது இயல்பான போக்கில் வருவது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரமற்றதன்மையை, நிரந்தர உட்போர்களை ஏற்படுத்துவதற்கான முயற்சி தான் இது. பால்பர் பிரகடனம் அளித்த எல்லை வரைபடம் என்ன? தற்போது எப்படி விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது? நான் ஏன் கம்யூனிஸ்ட் அல்ல என்று சொன்ன பெர்டிணான்ட் ரஸ்ஸல் குறிப்பிட்டார் " நாசிகளால் யூதர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்பதற்காக இஸ்ரேலுக்கு பரிந்து பேச வேண்டும் என்று என்னிடம் அடிக்கடி சொல்லப்படுகிறது. இதன் காரணமாக ஒடுக்குமுறையை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஒரு காரணத்தையும் என்னால் இந்த அறிவுரையில் பார்க்க முடியவில்லை. கடந்த கால கொடுமைகளுக்காக நிகழ்கால கொடுமைகளை நியாயப்படுத்த முடியாது. இது குரூரமான போலித்தனம். இஸ்ரேலின் நடத்தையினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். அரபு நாடுகளில் ராணுவ ஆட்சி தொடர்வதற்கான காரணமாய் இது இருப்பது மட்டுமல்ல, காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிடாமல், வறுமை ஒழிப்புக்கு செலவிடாமல் ராணுவ கட்டமைப்புக்கு செலவிட சபிக்கப்பட்டிருக்கிறார்கள்". வியட்நாம் போர் எதிர்ப்பு குழுவில் ரஸ்ஸலுக்கு துணையாக இருந்த சார்த்தர் எதிர்மாறலாகி விட்டார். அவருடனான அனுபவங்கள் எப்படி இருந்தன என்பது பற்றி செய்த்துக்கு நன்றாகவே தெரியும். அதை லியோவிடம் கடத்தாமல் இருப்பதே உசிதமானது. கலாசார சார்பு நிலை என்று உங்களிடமிருந்தே இதை நான் தொடங்கி கொள்ள விரும்புகிறேன்.