ஆலிவ் மர கிளையில் படரும் பேரீச்ச மர நிழல் - யமுனா ராஜேந்திரனின் அரசியல் இஸ்லாம் குறித்து
உலக வரலாற்றில் மதங்கள் அதற்கான வரலாற்று தேவையாலும் அவ்வாறு தேவையென அவைகள் உணர்வதாலும் உருவாகுகின்றன. இதன் பின்னால் சமூக, பொருளாதார, பிரதேச ரீதியான காரணங்கள் இருக்கின்றன. செமிடிக் மதங்கள் அவ்வாறு உருவானவை. இன்றைய உலகில் ஆதிக்கம் செலுத்துபவைகளும் அவைகள் தான். செமிடிக் சமூகம் ஒரே வேர் கொண்ட குடும்பத்தை சார்ந்தது. அதன் மொழிகள் ஒரே வழக்கியல்பை சார்ந்தவை. அராமிக், அக்காடியன், அம்ஹாரிக், கேனான், அரபி, மால்டீஸ், பொனிசியன் போன்றவைகளாக அவை நீள்கின்றன. வட ஆப்ரிக்காவையும், மத்திய கிழக்கு பிரதேசத்தையும் உள்ளடக்கிய செமிடிக் மொழி பிரதேசம் இன்று சிதைந்து சில மொழிகள் மட்டுமே உயிர்கொண்டிருக்கும் கோளமாக உருமாறி இருக்கிறது. செமிடிக் மதங்களான யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்றவை இதன் கலாசார ஒழுங்கின் வடிவமே. மத்திய கிழக்கின் ஓர் அவசியமான, தற்செயலான கட்டத்தில் தோன்றிய இவை பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்து தனக்குள் முரண்பாடுகளையும், உராய்வுகளையும் கொண்டிருக்கின்றன. அவைகள் இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்ந்து வேறுபட்ட நாகரீகங்களை பதிலீடு செய்பவைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இதில் ஒரு துருவத்தில் இஸ்லாமும், மறு துருவத்தில் கிறிஸ்தவ மற்றும் யூதமும் வரிந்து நிற்கின்றன. மத்திய கிழக்கில் தோன்றி ரோமாபுரியில் வேர்கொண்ட கிறிஸ்தவம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஐரோப்பாவில் வலுவாக நிலைகொண்ட அரசியல் சக்தியாக தான் இருந்தது. 11 ஆம் நூற்றாண்டு தொடங்கி 14 ஆம் நூற்றாண்டு வரை நீடித்த சிலுவைபோர்களானது மத்திய கால ஐரோப்பிய வரலாற்றில் புதிய பேரரசு கட்டமைப்பிற்கான தொடக்கம் குறித்தது. கிழக்கு பகுதியில் தாங்கள் இழந்த பகுதிகளை உதுமானிய பேரரசிடம் இருந்து மீட்கவும், ஜெருசலத்தை கைப்பற்றவுமாக இருந்தது அந்த போர். அக்காலத்தில் திருச்சபை பேரரசை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்ததாக இருந்தது. திருச்சபையின் கட்டளைபடி ஜெருசலத்தை மீட்பதற்காக ஆசியா மைனர் நோக்கி வந்த கிறிஸ்தவ படையானது துருக்கியின் அனதோலியா வரை கைப்பற்றியது. ஜெருசலத்தை அவைகள் நெருங்க முடியாதவாறு தடுக்கப்பட்டன.அக்காலகட்டத்தில் மதரீதியான இரு பெரும் பேரரசுகளுக்கிடையேயான உருவான மோதல்களானது கிழக்கு-மேற்கு என்ற வரலாற்று துருவ அடிப்படையை உருவாக்கியது. கிறிஸ்தவம் இடைக்காலத்தில் மறுமலர்ச்சியுக மதிப்பீடுகளை உள்வாங்கி கொண்ட போது இஸ்லாம் அதன் காலத்தை பின்னோக்க தொடங்கியது. தொடக்க கால மதிப்பீடுகளே தனக்கு உசிதமானது என்பதை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தது. 10 ஆம் நூற்றாண்டு தொடங்கி 14 ஆம் நூற்றாண்டு வரை அது அறிவியல் கோட்பாடுகளை முன்னகர்த்திய போதும் அதன் இடைக்கட்டம் மிகுந்த தேக்க நிலையை சந்திக்க ஆரம்பித்தது. இந்த வரலாற்று தேக்கமே இன்று வரை அதன் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகிறது.
யமுனா ராஜேந்திரன் தமிழின் முன்னணியான சினிமா விமர்சகர் மற்றும் மார்க்சிய கோட்பாளர். இவரின் இந்த புத்தகம் அரசியல் இஸ்லாம் பற்றிய அறிதல் முறை, செப்டம்பர் 11 நிகழ்வு, ஈரானிய திரைப்பட சூழல்கள், ஆப்கானிய தலிபான்கள், சதாம் உசேன், பூக்கோவின் ஈரானிய பயணம் மற்றும் அவரின் ஆன்மீக அரசியல், பிரெஞ்சு சிந்தனையாளரான ழீன் போதிலாரின் பிம்ப அரசியல் வெளி ஆகிய தளங்களை தொட்டுக்கொண்டு செல்கிறது. இவற்றை வரலாறு, கலாசாரா தகவமைப்புகளோடு ஆராய்கிறது. இது சார்பான பல்வேறு திரைப்பட, குறும்பட காட்சிபதிவுகளையும் விமர்சன பார்வைக்கு உட்படுத்துகிறது. அரசியல் இஸ்லாம் என்பது மத்தியகிழக்கு சமூகத்தில் அதன் அரசுகளின் மதரீதியான ஆட்சி வழிமுறைகள் இணைந்த ஒரு கோட்பாடு. மேற்கில் அடிப்படைவாதம் (Fundamentalism) என்றழைப்பதை தான் இங்கு அரசியல் இஸ்லாம் என குறிப்பிடுகிறார்கள். அடிப்படையில் இரண்டும் ஒன்றே. அரசியல் இஸ்லாம் விடுதலை இறையியலுக்கு மாறானது. அடிபணிதலை முன் வைக்க கூடியது. 19 ஆம் நூற்றாண்டில் நவீனத்துவ வடிவில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் இடைக்கட்டத்தில் ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வேர்கொண்ட விடுதலை இறையியல் கோட்பாடானது மரபான கிறிஸ்தவ திருச்சபைக்கு மாற்றாக எழுந்தது. 1971 ல் பெரு நாட்டை சேர்ந்த கத்தோலிக்க மத குருவான கொஸ்தாவா என்பவர் எழுதிய விடுதலையின் இறையியல் (Theology of liberation)என்ற நூல் இக்கோட்பாட்டுக்கு மேலும் வலுசேர்த்தது. மூன்றாம் உலக நாடுகளில் இந்த கோட்பாடு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இவர்கள் மதம் என்பது மனித விடுதலைக்கான ஒரு நிலை கருவி என்றும் அதை ஒடுக்கப்பட்ட மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களுக்கு சாதகமாக திருப்பவேண்டும் என்றார்கள். இந்த இயக்கம் அந்த காலகட்டத்தில் கத்தோலிக்க அடிப்படைவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளானது. நவீனத்துவத்துக்கு முந்தைய ஐரோப்பா அரசும் மதமும் பிரிக்கப்படாத நிலையில் மத ரீதியான அரசாகவே இருந்தது. ரோமாபுரி கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தேசம், ஆட்சியதிகாரம் என்பதை மதப் பிரதிகளே தீர்மானிப்பதாக நம்பியது. இந்த சூழலில் மறுமலர்ச்சி யுகமும், பிரெஞ்சு புரட்சியும் அதை முற்றிலும் தலைகீழாக மாற்றின. அங்கு நவீனத்துவ கோட்பாடு உருவாகி மனித சமூகமே அவற்றின் சொந்த வரலாற்றுக்கு உத்தரவாதம் என்றது. அது கூட்டாகவோ அல்லது தனியாகவோ நிகழலாம். மனித அறிவு முன்னிலை பெற்றது. ஜனநாயகம், மதசார்பின்மை போன்ற கருத்துருவங்கள் எழுந்தன. இது இன்னொரு சூழலில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு தொடக்கமிட்டதாகவும் மாறியது. தேச நிர்ணயத்தில் அரசும் மதமும் பிரிக்கப்படவேண்டும் என்பதை நவீனத்துவம் தான் முதன் முதலில் வலியுறுத்தியது. ஆக ஒரு தேசத்தில் ஆத்திகரோ அல்லது நாத்திகரோ, உருவ வழிபாட்டாளரோ அல்லது ஓரிறை வழிபாட்டாளரோ, மதவாதியோ அல்லது மதசார்பற்றவரோ இருக்கலாம். ஆனால் அரசுக்கு அதைப் பற்றி அறிய வேண்டிய அவசியம் இல்லை. ஐரோப்பா நவீனத்துவத்தின் போக்கில் நிற்க அதன் மறுபுறத்தில் மத்திய கிழக்கு இஸ்லாமிய சமூகம் நின்றது. அது அரசும் மதமும் ஒன்றே என்றது. காலனித்துவ காலகட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்ட மௌதூதி இயக்கம் இதற்கு உதாரணமாகும். அது உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் இஸ்லாமிய அரசின் கீழ் தான் செயல்பட வேண்டும் என்றது. மேலும் இஸ்லாமிய அடிப்படை பிரதிகளே ஆட்சியதிகாரத்தையும், தேச இறையாண்மையையும் தீர்மானிக்கும் சக்தி. அதை முழுமையாக அமல்படுத்துவதன் வழியே ஓர் அரசின் வெற்றியும் தோல்வியும் இருக்கிறது என்பதாக நம்பியது. மேலும் பல நூற்றாண்டுகளாக மத்திய கிழக்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த துருக்கிய உதுமானிய பேரரசு இதற்கு செயல்வடிவம் கொடுக்க தொடங்கியது. அதன் தொடக்க காலம் லௌகீகமாக இருந்த போதும் இறுதி கட்டம் அடிப்படைகளை நோக்கி நகர தொடங்கியது. இதன் மறுபுறத்தில் 19 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய வஹ்ஹாபிய இயக்கமும் அரசியல் இஸ்லாத்தின் தூண்டுகோலாக மாறியது. அது அதுவரை இஸ்லாமிய சமூகத்தில் நிலவி வந்த அனைத்தையும் மதவிரோதமான ஒன்றாகவும், மாற்று கலாசாரமாகவும் கருதியது. அதனால் கலை மற்றும் இலக்கிய செயல்பாடுகள் மத அடிப்படைக்கு எதிரானதாக பார்க்கப்பட்டன. இதுவே கலைகள் மீதான நடப்பு இஸ்லாமிய சமூகத்தின் இதுவரையிலான அந்நியபாடிற்கு காரணம்.(இசை, திரைப்படம், நாடகம், நாட்டியம் போன்றவை)சவூதி அரேபியா தான் இதன் தலைமையகம். 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் உதவியோடு அரேபியாவின் ஹிஜாஸ் மாகாணங்களை (மெக்கா, மதீனா) கைப்பற்றிய சவூத் குடும்பமே இன்றளவும் சவூதியில் அதிகாரத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அங்கு குர் ஆன் மட்டுமே அதன் அரசியலமைப்பு அடிப்படைகளை தீர்மானிக்க கூடிய ஒன்று. அது மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக அந்த அரசதிகாரம் நம்புகிறது. இதன் நீட்சியில் அதன் ஏகாதிபத்திய சார்பு நிலைக்கும் காலனிய தாக்கத்திற்கும் ஓரு வழிதிறவு ஏற்படுகிறது. இதனால் தான் எகிப்திய மார்க்சிய சிந்தனையாளரான சமீர் அமீன் இதை அரசியல் இஸ்லாம் என்று குறிப்பிட்டார். சூடானின் நவீனத்துவ இஸ்லாமிய சிந்தனையாளரான மஹ்மூத் தாஹா இஸ்லாமை மனித விடுதலை கோட்பாட்டின் அடிப்படையில் விளக்கம் செய்ததற்காக அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டார். இதற்கு எந்த நவீன, முற்போக்கு இஸ்லாமிய அறிவுஜீவிகளோ, இயக்கங்களோ கண்டனம் தெரிவிக்கவில்லை. எந்த மேற்கத்திய ஊடகங்களும் இதை பதிவு செய்யவில்லை. மாறாக தந்திரமான மௌனம் காத்தார்கள். இதன் பின்னணியை நாம் நோக்கும் போது அவ்வாறு மௌனித்த எல்லா இயக்கங்களுக்கும் ஒரே நோக்கமே இருந்தது. அவை இறையியலோ அல்லது அடிப்படை பிரதிகளோ அல்ல. மாறாக இனரீதியான அணுகுமுறை. இவை தான் சூடான் விஷயத்தில் நடந்தேறியது. இதுமாதிரியான காரணங்கள் இஸ்லாமிய இயக்கங்களுக்கு அரசியல் இஸ்லாம் என்று பெயரிடுவதற்கு பொருத்தமாக இருக்கின்றன என்கிறார் சமீர் அமீன்.
அரசியல் இஸ்லாம் நூலில் யமுனா ராஜேந்திரன் சமீர் அமீன், தாரிக் அலி ஆகிய மார்க்சிய சிந்தனையாளர்களின் இஸ்லாம் பற்றிய கோட்பாடுகளை ஆய்வு முறைக்குட்படுத்துகிறார். சமீர் அமீன் அரசியல் இஸ்லாமை ஏகாதிபத்தியத்தோடும், நவ தாராளவாதத்தோடும் தொடர்புபடுத்தி காண்கிறார். தாலிபானியத்தின் தொடக்கத்தோடு இதனை நாம் அடையாளப்படுத்த முடியும். சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கானை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஆப்கானிய தாலிபான்கள் இன்று அதற்கெதிராக திரும்பியிருக்கிறார்கள். இதுபற்றிய வரலாற்று மற்றும் கோட்பாட்டு பின்புலத்தை சமீர் அமீனிடமிருந்து விரித்து செல்லும் யமுனா அதை ஆழமான பரிசீலனைக்குட்படுத்துகிறார். மேலும் தாரிக் அலியின் ஆரம்ப கால இஸ்லாம் பற்றிய வரலாற்று தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார். ஆரம்ப கால இஸ்லாம் பற்றிய வரலாற்று விமர்சன கண்ணோட்டம் மேற்கத்திய வரலாற்றாசிரியரான மாண்ட்கெமரி வாட்டால் முன் வைக்கப்படுகிறது. அவரின் muhammed, prophet and statesman என்ற நூல் முக்கியமானது. அந்நூலில் மாண்ட்கெமரி வாட் ஆரம்ப கால இஸ்லாமை அரேபிய பழங்குடிகளின் பொருளாயத நலன்களோடு பொருத்தி காண்கிறார். இஸ்லாமின் தோற்றம் பற்றிய தன் ஆய்வுரையை கீழ்கண்ட அம்சங்களில் முன் வைக்கிறார் வாட்.
1. சமூக வாழ்க்கையின் உருவாக்கத்திற்கான சூழலை பொருளாயத காரணிகள் தீர்மானிக்கின்றன. இது அந்த சமூகம் வாழும் நிலப்பகுதியின் புவியியல் சூழல், அது அறிந்திருக்கும் தொழில் நுட்பம், அண்டை சமூகத்துடனான அதன் உறவு முறை ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது.
2. எந்த பொருளாயத, புவியியல் சூழலிலும் சில சமூக அமைப்பு முறைகளே மற்ற முறைகளை விட பொருத்தமாக இருக்கின்றன. இஸ்லாமுக்கு முந்தைய அரேபிய பாலைவனத்தில் ஓர் ஆண், ஒரு பெண், சில குழந்தைகள் கொண்ட எளிய குடும்ப அலகு என்பது சாத்தியமான ஒன்றல்ல. அந்த வாழ்க்கையின் கடின செயல்முறைகளையும், இடர்பாடுகளையும் ஏற்பதற்காக பெரிய அலகே தேவைப்பட்டது. இது இனக்குழு அல்லது குலம் (Tribe or clan)என்றழைக்கப்படுகிறது. இதனுடைய பொருளாயத சூழலில் இனக்குழு சார்ந்த கருத்துக்கள், நடத்தை முறைகள் மற்றும் நடைமுறை வழக்கங்கள் அதனுள் எச்சமாக நிற்கின்றன.
3. பொருளாயத சூழலில் மாற்றம் ஏற்படும் போது அது புதிய தொழில்நுட்ப உத்திகளின் கண்டுபிடிப்பிற்கும், மற்ற சமூகத்துடனான உறவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் மாறுகிறது. இவை ஏற்படும் போது நிலவும் சமூக அமைப்பு முறை கேள்விக்குள்ளாகிறது. சமூக போதாமை ஏற்பட்டு மக்கள் திருப்தியற்ற மனநிலைக்கு உட்படுகிறார்கள். இறுதியில் புதிய சூழலுக்கு ஏற்ற மாற்று வழி முறை ஒன்றை தேடக்கூடிய ஒன்றாக அது மாறுகிறது.
4. ஒரு நிலையான சமூகத்தில் அதன் பொருளாயத சூழலுக்கு சமூக முறை ஒத்துவரும் சமயத்தில் அது தன் கருத்துக்களையும், நடத்தை முறைகளையும் தக்க வைத்து கொள்கிறது. அதன் உறுப்பினர்களுக்கு இந்த கருத்துக்கள் உணர்வுரீதியான மனோபாவத்தை ஏற்படுத்துகின்றன. இந்த மனோபாவம் இல்லாத தருணத்தில் அந்த சமூக உறுப்பினர்களின் வாழ்க்கை முறை முழுவதும் திருப்தியற்றதாக இருக்கிறது.
5. கருத்துக்கள், குறிப்பாக மதம் மாறுகின்ற பொருளாயத சூழலில் மாற்று சமூக அமைப்பு முறையின் வடிவமைப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. மாறும் பொருளாயத சூழலின் உடனடியான விளைவு என்பது சமூக தவிர்ப்பின்மை. இது சமூக உறுப்பினர்களிடையே திருப்தியின்மையையும், மோதலையும் உருவாக்குகிறது.
6. உணர்வுரீதியான மனோபாவம் இந்த சமூகத்தின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தும் தாக்கம் ஆழமானதும், மாற்றதகுந்ததுமானதாகும். இதுவே புதிய கருத்துக்களை நோக்கி அவர்களை முன் தள்ளுகிறது.
இவ்வாறாக அரேபிய பாலைவனத்தில் இஸ்லாத்தின் தோற்றத்தை பற்றி விவரிக்கும் வாட் அந்த இனக்குழுக்களின் நலன்கள் மக்கா நகரின் உள்ளமைப்போடு தொடர்புடையது என்கிறார்.மெக்கா நகரம் அன்றைய காலகட்டத்தில் அரபுகளின் முக்கிய வணிகதலமாக இருந்தது. அது பண்டமாற்று முறையின் முக்கிய கேந்திரமாகவும், மேய்ச்சல் நிலங்களை பரிமாறி கொள்ளும் இடமாகவும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் மெக்கா நகரம் மலை முகடுகள் , கடினமான பாறைகள் போன்றவற்றை உள்ளடக்கி இருந்தது. அங்கு விவசாயம் மற்றும் பிற உற்பத்தி செயல்பாட்டுக்கான புவியியல் சூழ்நிலை இருக்கவில்லை. இதனால் வியபாரமே அங்குள்ளவர்களின் பிரதான பொருளாதார செயல் திட்டமாக இருந்தது. மெக்கா நோக்கிய புனித யாத்திரை என்பது இதனின் தர்க்க ரீதியான தொடர்ச்சியே. அரேபிய பழங்குடியினரின் மதத்தை மான்கெமரி வாட், இனக்குழு மனிதவாதம் என்கிறார். (Tribal humanism). இஸ்லாம் இந்த சமூக முரண்களிலிருந்து தான் தோன்றியது. இதன் நீட்சியில் இஸ்லாமை வரலாற்று அடிப்படையில் மூன்று காலகட்டங்களாக வகைப்படுத்தலாம். 1. ஆரம்ப கால இஸ்லாம் 2. இடைக்கால இஸ்லாம் 3.நவீன கால இஸ்லாம். ஆரம்ப கால இஸ்லாம் என்பது கி.பி எழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டமாகும். இதில் அதன் தோற்றம் முதல் அப்பாஸிட் வம்சத்தின் ஆட்சியோடு முதல் பகுதி கடந்து போகிறது. இடைக்காலகட்டம் என்பது 11 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை. இது உமய்யத் வம்ச காலம் முதல் துருக்கிய உதுமானிய பேரரசின் காலகட்டம் வரை. இந்த கால கட்டம் தான் இஸ்லாமிய வரலாற்றில் முக்கிய கட்டமாகும். உமய்யத் வம்சத்தின் பேரரசு விரிவாக்க முறைமை, அறிவியல், தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள், சமூக புனருத்தானம் போன்றவை. இவை பதினைந்தாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தன. ஸ்பெயினின் வீழ்ச்சி மற்றும் அரசும் மதமும் பிரிக்கப்படாத நிலையில் அரசின் கொள்கை செயல் திட்டங்களில் மத குருமார்களின் ஆதிக்கம் போன்றவை சமூக இயக்கத்தில் பெரும் தேக்க நிலையை உருவாக்கின. இதன் பின்னர் முதல் உலகப்போரில் உதுமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு நவீன கால இஸ்லாம் தொடங்குகிறது. இது சமூக நிலையில் நவீனத்துவத்தை உள்வாங்காத அதே நேரத்தில் லௌகீக உலகின் சில சாரம்சங்களை கிரகித்து கொண்ட ஒன்றாக மாறியது. சவூதி அரேபியாவை மையப்படுத்திய அது நிலவில் இருப்பவற்றை கேள்விக்குட்படுத்தி இஸ்லாமியர்கள் அனைவரும் ஆரம்ப கால இஸ்லாமின் மதிப்பீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்றது. இதனின் நீட்சி தான் இஸ்லாமின் பெயரால் உலகம் முழுவதும் இன்று இயங்கும் பயங்கரவாத அல்லது போராளி இயக்கங்கள் மற்றும் தலிபானியம் .
இந்நூலில் யமுனா நவீன கால இஸ்லாமின் வெவ்வேறு போக்குகள் மற்றும் சிந்தனை செயல்பாடுகளிலிருந்து தன் ஆய்வை தொடங்குகிறார். அவர் தற்போதைய இஸ்லாமில் உலகளாவிய நிலையில் ஐந்து விதமான சிந்தனை முறைமை இருப்பதாக காண்கிறார்.
1. முதலாவதாக அரபு நாடுகளில் நடைபெற்ற தேசிய புரட்சிகள் குறித்தும், சமூக மாற்றம் குறித்தும் இயங்கியல் முறையில் ஆய்வு மேற்கொள்ளும் இடதுசாரி மற்றும் தாராளவாத மரபினர். சமீர் அமீன், தாரிக் அலி, இங்கிலாந்து பல்கலைகழக பேராசிரியர் பிரட் ஹாலிடே மற்றும் இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியை சேர்ந்த நீல் டேவிட்சன் போன்றோர் இந்த வகையினர்
2. இரண்டாவதாக ஆரம்ப கால இஸ்லாமிய இறையியல் அம்சங்கள் அனைத்துமே சிறிதும் பிசகாமல் சம காலத்திற்கும் பொருந்துபவை என வாதிப்பவர்கள். சவூதி அரேபியா வழிபட்ட இஸ்லாமிய வகையினர் மற்றும் பிற அடிப்படைவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் இதில் வருகிறார்கள்.
3. மூன்றாவதாக, இஸ்லாமிய சமூகத்திலிருந்து தோன்றி குடிபெயர்ந்து ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வாழ்பவர்கள். இவர்கள் மேற்கத்திய தாராளவாத மரபையும், முதலாளித்துவ சமூக அமைப்பையையும் ஏற்பவர்கள். இஸ்லாமை மேற்கத்திய வாழ்முறைக்கு தகுந்தவாறு தகவமைத்து கொள்வது தொடர்பாக இவர்கள் விவாதிக்கிறார்கள். இங்கிலாந்தில் வாழும் பாகிஸ்தானியரான ஜியாவுதீன் சர்தார், எகிப்தியரான தாரிக் ரமதான், ஈரானியரான ஸவ்ரோஸ் போன்றவர்கள் இந்த வகைப்பாட்டிற்குள் வருகின்றார்கள்.
4. நான்காவதாக இஸ்லாமின் இறையியல், அரசியல் அம்சங்களை வரலாற்றில் வைத்து ஆய்வு செய்கிற கல்விதுறை சார்ந்த ஆய்வாளர்கள். பிரான்சை சேர்ந்த கெப்பல், அமெரிக்கரான பேராசிரியர் எஸ்பாஸிட்டோ முதலானோர் இவ்வகையில் இணைகிறார்கள். இவர்கள் இஸ்லாத்தை பன்முகத்தன்மை கொண்ட மதமாக காண்கிறார்கள்.
5. ஐந்தாவதாக, இஸ்லாம் அடிப்படையிலேயே வன்முறையையும், வெறுப்பவையும் போதிக்கிறது என்று நம்புபவர்களும்,பிரச்சாரம் செய்பவர்களும் . இவர்கள் ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கு ஏற்றபடி மேற்கண்ட கருத்தியலை பரப்புகிறார்கள். யூத மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள், இந்தியாவின் இந்துத்துவவாதிகள் போன்றோர் இதில் அடங்குவர்.
மேற்கண்ட ஐந்து வகையிலான சிந்தனை போக்குகளை விரிவாக, ஆழமாக முன்னகர்த்தி கொண்டு இயக்கவியலின் துணை கொண்டு யமுனா ராஜேந்திரன் அரசியல் இஸ்லாம் பற்றி விவாதிக்கிறார்.
இந்நூலின் முக்கிய கோடிடும் பகுதி என்பது 1979 ல் நடந்த ஈரானிய புரட்சியை பற்றி அவர் விவாதிப்பதாகும்.ஷாவின் சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிய கொமேனி தலைமையில் நடந்த ஈரானிய புரட்சியானது மத்திய கிழக்கு வரலாற்றில் முக்கிய தடமாகும். சர்வாதிகார மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற நிலையில் நடந்த அப்புரட்சியானது அதன் பிறகு நேர்கீழான முறையில் ஈரானில் பெண்ணியவாதிகள், கலைஞர்கள், அறிவுஜீவிகள், தாராளவாதிகள், இடதுசாரியினர்,மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோரை குறிவைத்து வேட்டையாட தொடங்கியது. இதன் வரலாற்றுப் பின்னணி பற்றி விவரிக்கும் யமுனா இந்த புரட்சியை பற்றிய மரபான இடதுசாரிகளின் ஆர்ப்பரிப்பும், புரட்சிக்கு பிந்தைய கொமைனியின் செயல்பாடுகள் மீதான அவர்களின் மௌனம் பற்றியும் விமர்சன பூர்வமாக அணுகுகிறார். தன் விமர்சன அணுகுமுறையின் இன்னொரு தடத்தில் அறிவு, நுண்ணதிகாரம், அரசியல் ஒழுங்கு பற்றி பேசிய பிரெஞ்சு சிந்தனையாளரான மிஷல் பூக்கோவின் ஈரானிய புரட்சி மீதான ஆகர்ச நிலையை யமுனா விரிவான விமர்சன கண்ணோட்டத்தோடு அணுகுகிறார். ஆன்மீக அரசியல் என்ற நிலையில் ஈரானிய புரட்சியை ஏற்றுக்கொண்ட பூக்கோ ஈரானிய புரட்சி உலக வரலாற்றின் போக்கில் முக்கிய மாறுதலை ஏற்படுத்தும் என நம்பினார். ஆனால் பூக்கோவின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே பிந்தைய நிகழ்வுகள் இருந்தன. மேலும் சினிமா விமர்சகர் என்ற முறையில் அரசியல் இஸ்லாம் தொடர்பான பல்வேறு குறும்படங்கள், ஆவணங்கள், திரைப்படங்கள் குறித்த அணுகுமுறையை முன்வைக்கிறார் யமுனா. ஈரானிய , மேற்கத்திய திரைப்பட இயக்குநர்களின் பார்வை அவர்களின் அரசியல் போன்றவையும் இதனோடு ஒட்டிக்கொள்கிறது. தமிழ்ச்சூழலில் அரசியல் இஸ்லாம் பற்றிய வரலாற்று ரீதியான விமர்சன ஆய்வு முறையை முன்வைக்கும் முக்கிய நூலாக இதை குறிப்பிடலாம். இந்த ஆய்வு முறையின் நேர்த்தியும், தொடர்பயணமும் நம்மை குறிப்பிட்ட எல்லையில் அழைத்து செல்கின்றன. புத்தகத்தை நான் படித்து முடித்த நிலையில் நண்பர் ஒருவர் புத்தகத்தின் அட்டை படத்தில் "அரசியல் இஸ்லாம் - யமுனா ராஜேந்திரன்" என்பதை பார்த்து விட்டு "யமுனா ராஜேந்திரனா" எழுதியிருக்கிறார். அவர் அர்த்தம் கொள்ளும் தொனி எனக்கு உடனடியாக புரிந்தது. இந்த புத்தகத்தின் நோக்கம் நிறைவேறிய திருப்திகரமான மனநிலையில் அப்போது இருந்தேன்.
அரசியல் இஸ்லாம்
யமுனா ராஜேந்திரன்
உயிர்மை வெளியீடு.
No comments:
Post a Comment