காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Thursday, February 5, 2009

மூன்றாம் உலகமும் மாற்று கோட்பாடும் - சமீர் அமீன் பற்றிய அறிமுக குறிப்புகள்


இருபதாம் நூற்றாண்டு உலகம் இரு பெரும் பிரிவாக பிரிந்து கிடந்தது. ஒன்று அமெரிக்க தலைமையிலான மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய, காலனிய சார்பான உலகம். மற்றொன்று சோவியத் யூனியன் தலைமையில் கிழக்கு ஐரோப்பிய சோசலிச பெயர் கொண்ட உலகம். இவை ஒன்றுடன் ஒன்று மறைமுகமாக உராய்ந்து கொண்ட காலகட்டம் பனிப்போராக கோட்பாட்டாளர்களால் வரையறுக்கப்பட்டது. இந்த இரண்டிற்குள் எந்த உறவும் கொள்ளாத அல்லது உறவு கொண்ட ஆசிய, ஆப்ரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலகம் என்ற வகைப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. இதில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மூன்றாம் உலகத்திற்குள் சேர்க்கப்பட்டன. ஒரு கோட்பாட்டிற்கும் அதன் நடைமுறை செயல்பாட்டிற்குமான இடைவெளியை பதிலீடு செய்ய இயலாததன் பின் விளைவாக இருந்தது அந்நாடுகளின் வீழ்ச்சி. மூன்றாம் உலகம் என்ற கருத்துருவத்தை பிரதிபலிக்கும் இந்நாடுகள் இன்றைய சூழலில் தங்கள் இருப்பிற்காகவும் அதன் உறுதிப்பாட்டிற்காகவும் கடுமையாக போராடி கொண்டிருக்கின்றன. இரண்டாம் உலக வீழ்ச்சியின் பிற்பாடு சர்வதேச ஊடகங்களால் வளரும் நாடுகள் என்பதாக வர்ணிக்கப்படும் இவை இன்னும் மூன்றாம் உலக நாடுகள் என்றே கோட்பாட்டாளர்களால் அழைக்கப்படுகின்றன. ஆப்ரிக்காவின் தொடர்ச்சியான வறுமை, மேற்கத்திய காலனி நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதன் பின்பு ஆசிய நாடுகள் தங்களுக்கான சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த தனித்த பாதை ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. பெரு, சிலி, அர்ஜென்டினா, பிரேசில் போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகள் அங்கு ஏற்கனவே நிலவி வரும் வறுமையோடு கடுமையான போராட்டத்தை நடத்தி வருகின்றன. மூன்றாம் உலகின் இத்தகைய உள்முரண்பாடுகள், பொருளாதார விகசனங்கள் அரசியல், பொருளாதார,கலாசார கோட்பாட்டாளர்கள் மத்தியில் தீவிர அவதானிப்பையும், கோட்பாடு சார்ந்த உணர்வூட்டத்தையும் ஏற்படுத்துகின்றன. தனி மனித வாழ்க்கையின் பிரக்ஞையிலிருந்து சமூக பிரக்ஞை நோக்கி இந்த முரண்பாடுகள் அந்த கோட்பாட்டாளர்களை நகர்த்துகின்றன. மூன்றாம் உலகம் பற்றிய இந்த சிந்தனை மரபின் தொடர்ச்சியில் அரசியல், சமூக பொருளாதாரம் குறித்த கோட்பாடுகளை முன்னெடுத்தவர்களில் அரபுலக சிந்தனையாளரான சமீர் அமீன் முக்கியமானவர். இவரின் அடிப்படை சிந்தனை மரபு மார்க்ஸிலிருந்து தொடங்கினாலும் அதன் காலபொருத்தப்பாடு, இயக்க முறை, தர்க்க தொடர்ச்சி இவற்றை குறித்து சமீர் அமீன் அதிகம் சிந்தித்தார். சமீரின் இந்த மாற்று சிந்தனை முறை தான் மற்ற மரபான மார்க்சிய சிந்தனையாளர்கள் மத்தியில் இருந்து அவரை வேறுபடுத்தியது.

இருபதாம் நூற்றாண்டு இடைப்பகுதி வரை அரபுலகம் ஆங்கில, பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் எகிப்து பிரெஞ்சு மற்றும் பிரிட்டனின் ஆளுகையின் கீழ் இருந்தது. இந்த ஆதிக்க கட்டத்தில் 1936 ல் சமீர் அமீன் எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் பிறந்தார். அவரின் குடும்ப பின்னணி விசாலமானதாக இருந்தது. அறிவியல், தொழில்நுட்ப, சமூகம் பற்றிய அறிவற்ற அன்றைய சூழலுக்கு மாறாக சமீரின் குடும்பம் பாரம்பரியமான உலக அறிவை கொண்டிருந்தது. 19 ஆம் நூற்றாண்டு உதுமானிய பேரரசு கட்டத்தில் சமீரின் உறவு முறையினர் சிறந்த வரலாற்றாய்வாளர்களாக, அறிவு ஜீவிகளாக இருந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் மிகேல் அப்துல் சயித் என்ற அரபு வரலாற்றாசிரியர். மேலும் இவரின் குடும்ப பரம்பரையினர் அரபு மொழியை தவிர்த்து பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றை அறிந்திருந்தனர். இந்த மொழிவிரிவாக்கமே அவர்களை அறிவுஜீவி பரம்பரையாக மாற்றியது. பள்ளி கல்வியை எகிப்தில் கற்ற சமீர் உயர்கல்வியை பிரான்சில் முடித்தார். பிரான்சு இவருக்கான அறிவுலக வாழ்க்கையின் தொடக்கம் குறித்தது. பிரபஞ்சம் பற்றிய விசாலமான அவதானமும், படிப்பும் இங்கிருந்து தான் அவருக்கு கிடைத்தது. இதன் தொடர்ச்சியில் 1957 ல் பாரிஸ் பல்கலைகழகத்தில் அரசியல் பொருளாதாரத்தில் ஆய்வு படிப்பை நிறைவு செய்தார். பின்னர் அது accumulation on a world scale என்ற பெயரில் பிந்தைய ஆண்டுகளில் புத்தகமாக வெளிவந்தது. உலக முதலாளித்துவ சமூகத்தின் மூலதன குவியல் எவ்வாறு மூன்றாம் உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை மையமாக கொண்ட ஒன்றாக அது இருந்தது. பின்னர் எகிப்துக்கு திரும்பி நாசரின் அரசாங்கத்தில் அதிகார மட்டத்தில் சிலகாலம் பணிபுரிந்தார். அதன் பின்னர் புதிதாக சுதந்திரமடைந்த மாலி அரசில் திட்டமிடல் துறையில் சிலகாலம் இருந்தார். பின்னர் பிரான்சுக்கு திரும்பி சென்று பாரிஸ் பல்கலைகழகத்தில் சமூகவியல் துறை பேராசிரியர் பணியில் சேர்ந்தார். அங்கு தான் அவருக்கு ழீன் பால் சார்த்தரும், மிஷல் பூக்கோவும் அறிமுகமானார்கள். அவர்களோடு உலக சமூகம், அறிவு, அதிகாரம், தனிமனித இருப்பு, விடுதலை கோட்பாடுகள் போன்ற பல விஷயங்களில் உரையாடல்களை நடத்தினார். அவர்களுடனான தர்க்க ஈடுபாடு சமீர் அமீனுக்கு மூன்றாம் உலக நாடுகள் மீதான கரிசனத்தை ஏற்படுத்தியது.

சமீரின் கோட்பாட்டு தரிசனத்தை அவரின் பார்வை அடிப்படையில் நான்கு வித வகைப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். 1. மூன்றாம் உலக நாடுகளின் அல்லது அரபு நாடுகளின் வளர்ச்சிஅதன் அனுபவம் பற்றிய கோட்பாட்டு விமர்சனம்.2. எதார்த்தத்தில் நிலவுகின்ற உலக முதலாளித்துவத்தை பற்றிய மாற்று முன்மொழிவும், அதன் பகுப்பாய்வும். 3. சமூக உருவாக்கங்கள் பற்றிய வரலாற்றை மறு வாசிப்பு செய்தல்.4. முதலாளித்துவத்திற்கு பிந்தைய சமூகம் பற்றிய மறுபார்வை. மேற்கண்ட அம்சங்களின் அடிப்படையில் சமீர் நவீன உலகம் பற்றிய மாற்று கருத்தியலை விரித்து செல்கிறார். அவரின் ஏகாதிபத்தியம் மற்றும் சமனற்ற வளர்ச்சி (Imperialism and unequal development) மதிப்பு விதியும் வரலாற்று பொருள்முதல்வாதமும் (The law of value and historical materialism) என்ற இரு நூல்கள் இதனை குறித்து விவரிக்கின்றன. இதில் இருவித பார்வைகள் அழுத்தம் பெறுகின்றன. முதலாவது உச்சபட்ச அருவமான முதலாளித்துவ உற்பத்தி முறையில் பூர்ஷ்வாக்களுக்கும் பாட்டாளிவர்க்கத்துக்கும் இடையேயான அடிப்படையான வர்க்க போராட்டம். இரண்டாவது முதலாளித்துவ எதார்த்தத்தின் மற்றொரு பரிமாணமும் அதன் உலகளாவிய சமனற்ற வளர்ச்சியும் பற்றியது. இந்த சமனற்ற வளர்ச்சியின் பின்விளைவுகள் அரசியல் மற்றும் சமூக மட்டத்தில்பலமானோர், பலவீனப்பட்டோர், ஒடுக்குபவர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் என்ற துருவங்களை ஏற்படுத்துகின்றன. இந்த துருவங்களை சமீர் நிலவுகின்ற எதார்த்த முதலாளித்துவத்தில்ஒட்டி கொண்டிருக்கும் விளைபொருள் என்கிறார். இதில் வளர்ச்சியடைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகள் , வளர்ச்சி குன்றிய ஆப்ரிக்க நாடுகள் இவற்றிற்கிடையேயான பாரதூர முரண்பாடுகள் இவற்றின் பிரதிபலிப்பே. சோமாலியா, நைஜீரியா, அல்ஜீரியா, மாலி, டுனீசியா, தென்னாப்ரிக்கா, எகிப்து போன்ற நாடுகளின் பொருளாரதார பார்வையோடு சமீர் இதனை ஆராய்கிறார். எதார்த்த உலக முதலாளித்துவ சமூகத்தில் மதிப்பு கோட்பாடு கூலி உழைப்பை புறந்தள்ளிய, துண்டிக்கப்பட்ட சந்தையின் அடிப்படையில் விளைபொருட்களின் வர்த்தகம் மற்றும் மூலதன இயக்கம் ஆகியவற்றோடு ஒருங்கிணைந்த ஒன்றாக இருக்கிறது. மதிப்பின் இந்த உலகளாவிய விதிக்கு அப்பால் இயற்கை வளங்களை அடைவதில் சமனற்ற நிலை, தொழில்நுட்ப ஏகபோகம், அரசியல் மற்றும் ராணுவ ஆதிக்கத்தின் கூடுதல் பொருளாதார நுட்பங்கள், இதன் விளைவாக வாழ்க்கை முறையில் ஏற்பட்ட ஆதிக்கம், நுகர்வு ஆகியவை மேற்கண்ட துருவங்களை (வளர்ச்சியான- வளர்ச்சியற்ற, ஒடுக்கும்-ஒடுக்கப்படுகிற) மேலும் பாரதூரமாக கூர்மைப்படுத்துகின்றன.

சமீர் சமனற்ற வளர்ச்சி கோட்பாட்டை வரலாற்றின் அடிப்படையில் விளக்குகிறார். இதில் அவரின் பார்வை கிழக்கத்திய தளம் சார்ந்து இருக்கிறது. இதன் மூலத்தை சமீர்முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகத்தின் எதார்த்தத்திலிருந்து தொடங்கிறார். முதலாளித்துவத்திலிருந்து அதன் முந்தைய சமூகத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி போக்கின் வித்தியாசம் என்பது அளவினுடையதன்று. மாறாக தர வித்தியாசம் கூட. இதில் தான் சமீர் மரபான மார்க்சிய பார்வையிலிருந்து விடுபடுகிறார். முதலாளித்துவ சமூகத்தில் உபரி மதிப்பானது மதிப்பு விதியின் பொருளாதார நுட்பத்தோடு பெறப்படுகிறது. ஆனால் முந்தைய சமூகத்தில் உபரியானது பொருளாதார நுட்பமற்ற வழியில் உருவாக்கப்பட்டு இனக்குழு சமூக வடிவத்தை எடுக்கிறது. இந்த இரு சமூகங்களிடையேயான ஊடுபாவல் முரண்பாடு அதிகார படிநிலையை ஏற்படுத்துவதில் கொண்டு சேர்க்கிறது. மார்க்ஸ் இந்த முரண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை அடிப்படை மற்றும் மேற்கட்டுமானத்திற்குமான உறவாக பார்த்தார். அதனடிப்படையில் முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகங்கள் எல்லாவற்றுக்குமான இன்றியமையா குணாதிசயங்களை ஆராய்ந்தார். மார்க்சின் இந்த சிந்தனை தொடர்ச்சியை இன்று தங்களுக்குள் கொண்டிருக்கிற மரபான மார்க்சியர்கள் மேற்கட்டுமானத்தின் இயக்கத்தை மறுக்கிறார்கள் என்கிறார் சமீர். மேலும் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகங்கள் கொண்டிருந்த பன்முக உறவு முறைகளான அரசியல், கலாசாரம், மதம் இவற்றின் அமைப்பு முறையை மரபான மார்க்சியம் சரியாக ஆராயவில்லை என்கிறார். இதன் மூலம் சமீர் ஓரளவு அல்தூசரின் சிந்தனையோடு ஒன்று சேர்கிறார். மேற்கட்டுமானம் பற்றிய மேற்கண்ட அம்சங்களை கணக்கில் எடுக்காமல் முதலாளித்துவத்தின் மாறுதல் கட்டத்தை குறித்து செய்யப்படும் ஆய்வானது தவறான திசையை நோக்கியே செல்லும் என்கிறார் சமீர். மார்க்ஸின் இந்த பகுப்பாய்வானது தப்பிக்க முடியாத தொன்மையான இரு சாலைகள் கொண்ட முரண்பாடுகளை உருவாக்கியது. ஒன்று திறந்த மேற்கத்திய வழி (அடிமை முறை சமூகம்- நிலபிரபுத்துவ சமூகம்-முதலாளித்துவ சமூகம்) இரண்டாவது முடிவுறுகிற வழியான ஆசிய உற்பத்தி முறை. சமீர் இந்த இரு ஆய்வு முறைகளையும் நிராகரித்து அவற்றின் யுரோ மையவாத குணத்தை (Eurocentric Character) வெளிப்படுத்த முயற்சித்தார். இவரை பொறுத்தவரை முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகமானது இரு வித அதிகார புள்ளிகளோடு வேறுபட்டுள்ளது. அதாவது மையம் மற்றும் உபகருவிகள். இதில் அரசு அதிகாரம் என்பதை மையமாகவும், அரசியல் மற்றும் கலாசாரம் என்பதை உபகருவியாகவும் சமீர் காண்கிறார். உலக முதலாளித்துவ உருவாக்கத்தில் இந்த மையம் மற்றும் உபகருவிகள் என்பவை குறிப்பிட்ட பொருளாதார பகுதியில் வெளிப்படுகின்றன. இதன் நீட்சியில் சமீரை பொறுத்தவரை நிலப்பிரபுத்துவம் என்பது குறிப்பிட்ட உற்பத்தி முறை அல்ல. மாறாக இனக்குழு சமூகத்தின் உபகருவி சார்ந்த வடிவமே.இந்த உபகருவி வடிவத்தை சமீர் காட்டுமிராண்டிகள் காலத்திலிருந்து மத்திய கால ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ சமூக உருவாக்கம் வரை விரித்து செல்கிறார். அரசு அதிகாரம் என்ற மையமும், அதனிலிருந்து வெளிப்படுகிற கலாசாரம், மதம் போன்ற உபகருவிகளும் உலக சமூகத்தின் இன்னொரு வெளிப்பாட்டிற்கு துணை புரிகின்றன. இவை நாடுகளிடையே செல்வமும் அதிகாரமும் (Wealth and power) என்ற இருவித துருவங்களை தோற்றுவிக்கின்றன. இந்த இரு துருவங்களுமே முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் சோசலிச சமூக மாற்றத்திற்கு தடையாக இருக்கின்றன. இந்த துருவங்கள் உலக வரலாற்றில் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக கடந்து சென்றிருக்கின்றன. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் அட்லாண்டிக் ஐரோப்பா வணிக நடவடிக்கையாக கிழக்கத்திய சமூகங்களை ஆதிக்கத்திற்குட்படுத்தியது. 19 ஆம் நூற்றாண்டில் தொழில் புரட்சியாகவும் ஏகாதிபத்தியமாகவும் பரிணாமமடைந்த துருவங்கள் தொழில்வள நாடுகள் மற்றும் தொழில் வளமற்ற நாடுகள் என்பவற்றிற்கிடையே ஆழமான முரண்பாட்டை தோற்றுவித்தன. சமீர் தன் ஆய்வு முறையை சமகால சமூகத்தின் அமைப்பு சார்ந்த நெருக்கடியோடு இணைத்து பார்க்கிறார். எழுபதுகளில் உலக அளவில் ஏற்பட்ட மாறுதல்களோடு இதனை துவங்குகிறார். புதிய தொழில் நுட்பங்களின் வருகை, நிதி மூலதனம் இவை இந்த துருவங்களை மேலும் மோசமடைய செய்திருக்கின்றன. சமீர் இவற்றை மூன்றாம் உலக கண்ணோட்டத்தோடு ஆராய்கிறார். இந்தோனேசியாவின் பந்தங் பகுதியில் அறுபதுகளில் நடைபெற்ற ஆசிய-ஆப்ரிக்க தலைவர்களின் மாநாட்டில் தங்கள் நாடுகளுக்கான அரசியல் பொருளாதார உட்கட்டமைப்பு வளர்ச்சி குறித்த வரைவு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. சமீர் தற்கால சூழலில் இதன் மறு மதிப்பீடு தேவை என்கிறார். அதாவது உற்பத்தி சக்திகள் பற்றிய பார்வை, சர்வதேச உழைப்பு பிரிவினை, தேசிய வள கட்டுப்பாடு, உள்நாட்டு சந்தையின் மீது கட்டுப்பாடு, இதன் மூலம் உலகளாவிய போட்டியை சமன் செய்தல், உபரியை மையப்படுத்தல் மற்றும் அவற்றை உற்பத்தி நோக்கங்களுக்கு திருப்புதல், தொழில்நுட்பங்களின் பயன்பாட்டில் கட்டுப்பாடு ஆகியவை குறித்த மறுமதிப்பீட்டை மூன்றாம் உலக நாடுகள் செய்து கொள்வது அவசியம். சமீபத்தில் வந்த அவரின் நூலான "The world we wish to see. revoultions in the 21th century " இதை குறித்து அதிகம் விளக்குகிறது.

நடப்பு உலகம் பற்றிய சமீரின் சிந்தனை முறையில் சந்தை முக்கிய கவனம் பெறுகிறது. சமீர் சந்தை முறையை முதலாளித்துவ சமூகத்தின் நிர்வாக வடிவமாக பார்க்கிறார். மேலும் அதை அவர் அடிப்படைவாதத்தோடு ஒப்பிடுகிறார். அடிப்படைவாதத்திற்கு கடவுள் உலக பொறுப்பாளி. அவருக்கே அடிபணிதல் வேண்டும். அவரின் முடிவிற்கே எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும். அதே மாதிரியே சந்தையும் உலகிற்கு அதன் விதிகளை பின்பற்ற கட்டளையிடுகிறது என்கிறார் சமீர்.உலக சந்தையின் இந்த விநோத அறிவு சமூக வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இதில் தனி மனிதனும், சமூகமும் தன்னிலைகளாக்கப்பட்டு, சந்தைக்கு இயற்கையை மீறிய அற்புத சக்தியை கொடுக்கின்றன. அவை சந்தையை மட்டுமே நம்புகின்றன. மற்றவர்களையும் நம்ப செய்கின்றன. மேலும் சரியான மதிப்பு என்ற முறையில் ரொட்டியும், வாகனமும், பெருநகர மனையின் சதுர மீட்டர் பரப்பும், நெல் வயலில் ஹெக்டேர் பரப்பும், பீப்பாய் பெட்ரோலும், டாலரின் பரிமாற்ற மதிப்பும், ஆசிய நாடுகளில் தொழிற்சாலை பணியாளரின் வேலை நேரமும், அமெரிக்க பங்கு சந்தை தரகரின் வேலை நேரமும் உலக சந்தை மட்டத்தில் வெளிப்படுகின்றன. சமீர் சந்தையை அடிப்படைவாதத்தோடு ஒப்பிடும் நிலையில் ஏக இறை கோட்பாட்டை ஏக பண கோட்பாட்டோடு ஒப்பிடுகிறார். (monotheism vs moneytheism)ஓர் இறை நம்பிக்கையாளன் இறைவன் தன் வரலாற்றை தானே உருவாக்குவதற்கு அனுமதித்திருப்பதாக நம்புகிறான். அதே நேரத்தில் ஒருவர் சந்தையை ஒழுங்குபடுத்துவது குறித்து யூகிக்க முடியும்.எதார்த்தத்தில் சந்தையானது ஒழுங்குப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் எதார்த்த தேர்வு என்பது ஒழுங்குபடுத்தலா அல்லது நிலைகுலைவா என்பதல்ல. மாறாக எம்மாதிரியான ஒழுங்குமுறை, யாருடைய நலன்களுக்கான ஒன்று? என்பது தான். இவ்வாறாக சமீர் சந்தை பொருளாதாரத்தை அரசியல் பொருளாதார கோட்பாட்டு அணுகுமுறையில் காண்கிறார்.

சந்தையின் இன்னொரு நீட்சியில் உலகமயமாக்கல் குறித்த மரபான பார்வையிலிருந்து சமீர் வித்தியாசப்படுகிறார். உலகம் எவ்வளவு பழைமையானதோ, அவ்வளவு உலகமயமும் பழையது என்கிறார். கிமு 500 க்கும் கி.பி 1500 க்கும் இடைப்பட்ட யுரேசியா மற்றும் ஆப்ரிக்காவின் வரலாற்றை எடுத்து கொண்டால் இது தெரியும். பட்டு வணிகம், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் மதங்களின் பரவல் ஆகியவை பண்டைய உலகமயத்திற்கு சாட்சியாக விளங்குகின்றன. மேலும் வாஸ்கோ டகாமா 1498 ல் கேரளாவின் கோழிக்கோடு துறைமுகத்தில் வந்திறங்கிய போது அங்கு கிறிஸ்தவர்கள் இருப்பதை காண்கிறார். அவருக்கு அந்த கட்டத்தில் ஆச்சரியமானதாக அது இருந்தது. மேலும் ஐரோப்பிய உயிகர்கள் இஸ்லாத்திற்கு மாறும் முன்பு நெஸ்டோரிய கிறிஸ்தவர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும் இஸ்லாம் சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய இடங்களுக்கும், பெளத்தம் சீனா, ஜப்பான், இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. இதன் தொடர்ச்சியில் சமீரின் பார்வையில் நடப்பு உலகமயமாக்கல் என்பது பழையவற்றின் தர்க்க ரீதியான தொடர்ச்சியே. இந்த பழைய உலகமயமுறையில் கொலம்பசின் அமெரிக்க உட்படவில்லை. அது பிந்தைய கட்டத்தில் தான் முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு உட்படுகிறது. பழைய உலகில் சீனா, இந்திய துணை கண்டம், மத்திய கிழக்கு ஆகிய மூன்று மையங்களே பிரதானமாக இருந்தன.இவை இன்றைய உலக மக்கள் தொகையில் 80 சதவீதமாக இருக்கின்றன. இவை அந்த கால கட்டத்தில் நாகரீகங்களிடையே துருவங்களில் எவ்வித பெரிய வித்தியாசங்களையும் ஏற்படுத்தவில்லை. அவை வளர்ச்சி அடிப்படையில் 2-1 என்ற விகிதத்தில் இருந்தன. கி.பி 10 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பெரும்பகுதி உலகின் உபகருவியாகவே இருந்தது. மிக குறுகிய காலத்தில் அதாவது 18 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க பகுதியிலும் அது மற்ற மையங்களை(இந்தியா, சீனா, மத்திய கிழக்கு) கைப்பற்றி அதனை முந்தி விட்டது. தொழில்புரட்சி தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் இறுதி பகுதி வரை அதன் வளர்ச்சி நிலபிரபுத்துவத்திற்கும் முதலாளித்துவத்திற்குமான போராட்டத்தின் தொடர்ச்சியில் புதிய உலகமயமாக உருவாகி விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகிய மும்முனைகளாக அவை மற்ற மையங்கள் மீது அதிகாரம் செலுத்துகின்றன. உலக மக்கள் தொகையில் 20 சதவீதம் மட்டுமே கொண்டிருக்கும் அவை உலகின் மற்ற மையங்களை 60-1 என்ற விகிதத்தில் வைத்திருக்கின்றன. இந்த விகிதாச்சாரம் உலகின் பெரும் பகுதி நாடுகளை அவற்றின் செயற்கைகோள்களாக மாற்றியிருக்கின்றன. இந்த நவீன உலகமயத்தை சமீர் மனிதகுல வரலாற்றின் முன்முடிவுகளற்ற நிகழ்வுமயமாக காண்கிறார். வளர்ச்சி மற்றும் வளர்ச்சி குன்றிய நிலை ஆகிய துருவங்களிடையேயான இந்த இடைவெளி உலக முதலாளித்துவத்தின் உடனடி விளைவாக இருக்கிறது. மற்றொரு நிலையில் உலக மூலதனத்தின் உடனடி விளைவான உலக சந்தையை இது பிரதிபலிக்கிறது. சமீபத்திய பெட்ரோல் விலையும், உலகளாவிய அத்தியாவச பொருட்களின் விலை உயர்வும் இதற்கு சிறந்த உதாரணம்.

சமீர் அமீன் கருத்தியல் அடிப்படையில் மூன்றாம் உலக நாடுகள் மீது தன் கவனத்தை குவிக்கிறார். மாற்று உலக சிந்தனைகளை முன்னெடுப்பதற்காக லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட உலக சமூக மாமன்றத்தின் (World Social Forum) ஆலோசகராகவும், செயற்பாட்டாளராகவும் சமீர் இருக்கிறார். கடந்த வருடம் அரபு பல்கலைகழகத்தில் அரபுலகமும், ஐரோப்பாவும் என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு சமீர் வந்திருந்த போது அவருடன் நான் நடத்திய நேர்காணல் கடந்த வருடம் உயிர்மை இதழில் வெளிவந்தது. பிரான்சில் இருந்த போது அறிவுஜீவிகளின் கோட்பாட்டு வறட்சியும், போலித்தனமும் சமீரை மாற்று சிந்தனை நோக்கி நகர்த்தின. இவரின் அரபு சமூகங்கள் மற்றும் அரபு தேசியவாதம் குறித்த சிந்தனைகள் முக்கியமானவை. மூன்றாம் உலகம் மற்றும் மத்திய கிழக்கு குறித்த சிறந்த சிந்தனையாளராக இருக்கும் சமீர் அமீன் தற்போது ஆப்ரிக்க நாடான செனிகலில் ஆப்ரிக்க வளர்ச்சி மையத்தின் இயக்குநராகவும், பொருளாதார ஆலோசகராகவும் இருக்கிறார்.

No comments: