காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Tuesday, May 26, 2009

இடம்பெயர்ந்த மனிதர்கள்- அரபு நாவலாசிரியர் எலியாஸ் கவுர் - அறிமுக குறிப்புகள் மற்றும் நேர்காணல்










" அவன் ஒரு மனிதனாகவும், அந்நியனாகவும் இருக்கிறான், அவனின் கதைகளை அவன் யாரிடத்திலும் சொல்லவில்லை. அவனின் கதை சொல்லப்படுவதற்கானது என்பது கூட அவனுக்கு தெரியாது. அவன் சிந்திப்பது, அவன் சிந்தித்து வருவது எல்லாமே தானும் மற்றவர்களை போல் என்பது தான். அவன் யாரிடத்திலும் தன்னை பற்றி சொல்லவில்லை.ஏனென்றால் அவை மற்றவர்களிடத்தில் சொல்லப்பட முடிவதற்கான ஒன்றாக அவனுக்கு தெரியவில்லை. அவன் ஒரு மனிதனாகவும், அந்நியனாகவும் இருக்கிறான். அவனின் கதை எப்படி ஆரம்பிக்கிறது என்பது அவனுக்கு நினைவில்லை. அவனின் கதை மத்திய பகுதியில் இருக்கிறது என்பதை பார்க்கிறான். ஆனால் எப்படி ஆரம்பித்தது என்பதை பற்றி கேட்கவில்லை. அதன் இறுதி பகுதியில் அவன் இருக்கிறான்."
(எலியாஸ் கவுரியின் City Gates என்ற நாவலின் துவக்க வரிகள்)

நாடுகடத்தல், இடப்பெயர்வு சக மனிதனுக்குள் ஏற்படுத்தும் வலிகள், விகசனங்கள் முக்கியமானவை. கற்பிதங்களுக்கு அப்பாற்பட்டவை. அரபு இலக்கியங்கள் பெரும்பாலும் இந்த வெளிப்பாடுகளுக்கான முன் முடிவை தருபவை. வாழ்க்கை சார்ந்த நெருக்கடியான அனுபவங்கள், தனித்துவத்தின் வித்தியாசங்கள் இவற்றின் கூடலிலிருந்து தப்பிக்க இயல்வதன் தெறிப்புகளாக அரபு எழுத்துலகம் அமைந்திருக்கிறது. முன் தீர்மானிக்கப்பட்ட மரபான முடிவுகளாக இல்லாமல் மேற்சொன்ன தனித்துவத்தை படைப்புகளில் முன்வைப்பவை அவை.நகுப் மஹ்பூஸ் மற்றும் அப்துல் ரஹ்மான் அல் முனீப் ஆகியோரின் வரிசையில் எலியாஸ் கவுர் முக்கிய இடத்தில் வருகிறார். எட்வர்த் செய்த்தின் நெருங்கிய நண்பரான எலியாஸ் கவுர் நாடகத்திலும் குறிப்பிட்டதக்க பங்களிப்பை செலுத்தி இருக்கிறார். தன் நாவல்கள் மூலம் புலம்பெயர் மனிதனின் உளவியல் நெருக்கடிகள் குறித்த வாசக நுண்ணுணர்வை ஏற்படுத்தினார். ஒரு நெருக்கடியான தருணத்தில் 1948 ல் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் பிறந்த எலியாஸ் கவுர் இஸ்ரேல்- பாலஸ்தீன் ஒடுக்குமுறை விவகாரத்தின் தாக்கத்துக்கு உட்பட வேண்டியதிருந்தது. அவரின் அறிவுத்துவ வாழ்க்கையின் துவக்கமே அரபு தேசிய வாதம் மற்றும் பாலஸ்தீன் ஆதரவு நிலை என்ற துருவத்திற்கு உட்பட்டதாக இருந்தது. 1967 ல் நடந்த அரபு-இஸ்ரேல் போருக்கு பிறகு எலியாஸ் ஜோர்டானுக்கு பயணம் செய்தார். அங்குள்ள பாலஸ்தீன் அகதிகள் முகாமிற்கு சென்ற எலியாஸ் அந்த விவகாரம் பற்றிய படிப்பிற்கு வந்தார். பின்னர் தன்னை பாலஸ்தீன் விடுதலை அமைப்புகளுடன் இணைத்து கொண்டார். பாலஸ்தீன் கொரில்லா படைகளின் தாக்குதல் காரணமாக 1970 ல் அவர் ஜோர்டானை விட்டு பிரான்சுக்கு இடம்பெயர்ந்தார். பாரிஸ் பல்கலைகழகத்தில் உயர்கல்வியை முடித்த அவர் அங்கு 1860 இல் நடந்த லெபனான் உள்நாட்டு போரை குறித்து விரிவாக
எழுதினார். அது அவரை ஐரோப்பிய அறிவுலகில் முன்னோக்க வைத்தது. அந்த தருணத்தில் தான் மிஷல் பூக்கோவுடனான சந்திப்பு நிகழ்கிறது. பூக்கோவுடனான சந்திப்பு இவருக்கு அறிவுலகம் குறித்த ஒளியூட்டத்தை ஏற்படுத்தியது. பிந்தைய கட்டத்தில் லெபனானுக்கு மீண்டும் திரும்பி வந்தார். லெபனானில் பாலஸ்தீன் ஆய்வு மையத்தில் ஆய்வாளராக இணைந்தார். அப்போது லெபனானில் மீண்டும் உள்நாட்டு போர் ஏற்பட்டது. அந்த பாதிப்பினால் தன் கண்களில் ஒன்றை இழக்க வேண்டியதாயிற்று. பெய்ரூட் ஆய்வு மையத்தில் ஏற்பட்ட தாக்குதலின் பின் விளைவாக அது இருந்தது. பின்னர் அரபு கவிஞரான அதோனிஸ், ஹிசாம் சரபி ஆகியோர் இணைந்து மவாஹிப் என்ற இலக்கிய இதழை பெய்ரூட்டில் ஆரம்பித்தனர். அதன் ஆசிரியர் குழுவில் எலியாஸ் கவுர் இணைந்தார். இவரின் படைப்புலக வாழ்க்கை இதனிலிருந்து துவங்குகிறது எனலாம். பின்னர் இக்குழுவில் பாலஸ்தீன் கவிஞரான மஹ்மூத் தர்வீஷ் இணைந்தார். அங்கிருந்து தான் தன் முதல் நாவலான On the relations of the circle " என்பதை எழுதினார். அது 1975 ல் வெளிவந்தது. அரபுலகில் மிகுந்த அதிர்வை ஏற்படுத்திய அந்த நாவலானது தொடர்ந்த இரு ஆண்டுகளில் ஆங்கிலத்தில் வெளியானது. அதன் பின்னர் Little mountain வெளியானது. அதன் தொடர்ச்சியில் இரு நாடகங்களையும் , இலக்கிய விமர்சனம் என்ற புத்தகத்தையும் எழுதினார். இந்த புத்தகம் அவரின் படைப்பு பற்றிய நுண்ணுணர்வை வெளிக்கொணர்ந்தது. மேலும் அரபு சூழலில் ஒரு விமர்சகராக அறியப்படுவதற்கு காரணமான ஒன்றாக மாறியது.இது படைப்பின் சமூக பிரக்ஞை மற்றும் படைப்பின் தர நிர்ணய அளவு கோல் என்பதான கேள்விகளுக்கு பதிலளித்தது. இலக்கிய கோட்பாட்டை பற்றிய புரிதலை ஏற்படுத்திய ஐரோப்பிய மார்க்சிய விமர்சகரான டெரி ஈகிள்டன் நாவல் என்பதை மொழி உருவாக்கும் சமூக பிரக்ஞை என்கிறார். 18 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதி வரை ஐரோப்பிய உலகில் நாவல் என்பது புனைவாக்கம் குறைந்த வெறும் செய்திகளை உட்கொண்டதாக தான் இருந்தது. உருவவாதிகளின் வருகைக்கு பின்பு நாவலானது வேறொரு கட்டத்திற்கு நகர்ந்தது. ரஷ்ய உருவவாதியான விக்டர் ஸ்லோவ்ஸ்கி கலை படைப்பை ஒரு கருவியாக கருதினார். உள்ளடக்கம் என்பதை விட படைப்பின் வெளிப்படையான உருவமே முக்கியம் என்றார். இது ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்திற்கு முந்தைய கட்டம் வரை நீடித்தது. எலியாஸ் படைப்பின் விமர்சனம் என்பதை கோட்பாட்டு ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பார்த்தார். படைப்புகள் வெளி சார்ந்து ஒத்த தன்மையாக இருப்பதில்லை. வித்தியாச வாழ்க்கை சூழலின் நெகிழ்விலிருந்தும், நெருக்கடியிலிருந்தும் எழுத்து உருவாகிறது என்றார். தமிழ்ச்சூழலில் ஒரு காலகட்டத்திலும், தற்போதும் தொடர்கிற விவாதமான "படைப்பாளியே விமர்சகராக இருக்க முடியுமா? " என்ற கருதுகோளிலிருந்து எலியாஸ் கவுரும் தப்பவில்லை. இவரின் விமர்சன பார்வை மற்றும் அளவு கோல் சரியான ஒன்றல்ல என்ற விமர்சனம் அரபு படைப்பாளிகள் சிலரால் வைக்கப்பட்டது.இதன் பிறகு எலியாஸ் "palestine affaris" என்ற பாலஸ்தீன் பற்றிய ஆய்விதழின் ஆசிரியரானார். இதில் சில முக்கியவத்துவம் வாய்ந்த வரலாற்று ஆய்வுகள் வெளிவந்தன, அந்த தருணத்தில் அரபு சூழலில் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய "Gates of the Sun " என்ற நாவல் எலியாஸிடமிருந்து வெளிவந்தது. லெபனான் உள்நாட்டு போர் காரணமாக புலம் பெயர்ந்த ஒரு கூட்டத்தின் மன நெகிழ்வின் தடய தூரமாக அது இருந்தது. நான் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை படித்த அரபு நாவல்களில் இதுவும் ஒன்று. அதன் பிறகு சில நாவல்களின் கடப்பாட்டுக்கு பின்னால் 2002 ல் yalo வெளியானது. லெபனான் உள்நாட்டு போரின் போது குற்றவாளிகளாக்கப்பட்டு நீதித்துறையின் அதிகார சித்திரவதைக்கு உள்ளானவர்கள் பற்றிய கதை வெளியாக yalo பரிணமிக்கிறது. City gates மற்றும் Gates of the Sun ஆகிய நாவல்களை தொடர்ந்து இதுவும் அரபுலகில் முக்கியத்துவம் பெற்றது. City gates புறக்கணிக்கப்பட்ட, தூரமாக்கப்பட்ட ஒரு மனிதனின் உணர்வு கொதிநிலையோடு சம்பந்தப்பட்டது. நான் யார் என்ற பிரக்ஞையும், தன் கதை எதுவாக இருக்கும் என்ற அறிவும் அவனுக்கு கிடைக்க தாமதமாகிறது. அந்நியப்பட்டு போன தவிப்புகளிலிருந்து, முகிர்ந்த கதைவெளியாக City gates துவக்கம் பெறுகிறது. யதார்த்த சொல்முறையிலிருந்து நகர்ந்து இன்னொரு புள்ளியை நோக்கி செல்கிறது. இது இவருடைய நாவலின் பலம் கூட. இது எவ்விதத்திலும் பலவீனமான அம்சங்களோடு பயணம் செய்யவில்லை. இதை பற்றி எலியாஸ் கவுர் இஸ்ரேலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிடுகிறார். "நான் தொண்ணூறுகளுக்கு பிந்தைய நாவல்களை எழுதும் போது 'நான்' என்ற பிம்பத்திற்கு எதிர்நிலையில் மற்ற என்ற பிம்பத்தை கண்டேன். நான் என்பது பாலஸ்தீன் அனுபவமாகவும், மற்ற என்பது இஸ்ரேல் பற்றிய காட்சிப்படுத்தலாகவும் இருக்கும். இஸ்ரேல் என்பது ஒரு போலீஸ் அல்லது ஆக்கிரமிப்பாளர் என்பதை மீறி அதன் மனித அனுபவங்களை பார்க்க வேண்டும். இது தான் நான் என்ற பிம்பத்திற்குள் பிரதிபலிக்கும் மாறு பிம்பமாக இருக்கிறது.எலியாஸ் கவுரின் மொத்த நாவல்களை மதிப்பிடும் போது அரசியல் எடுகோள்கள் மற்றும் மனித நடத்தையை பற்றி அடிப்படை கேள்விகள் எழுப்பும் சிக்கலான அணுகுமுறையாக இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த Yalo நாவலும் அதைத்தான் வெளிப்படுத்துகிறது. நாவல்களுக்காக இவர் அரபு மற்றும் மேற்குலகின் இலக்கிய விருதுகளை வாங்கியிருக்கிறார். மற்ற அரபு படைப்பாளிகளை போல் அல்லாமல் இவரின் நாவல்கள் மற்றும் பிற படைப்புகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இதனால் மேற்குலகிற்கு அரபு மொழி படைப்பின் தூரத்தை விட மிக சமீபமாக இவரின் படைப்புகள் வந்தடைகின்றன. எட்வர்ட் செய்த் இவரை இரு நூற்றாண்டு அரபு புலம் பெயர் இலக்கியத்தின் அடையாளம் என்றார். இவரின் மொழியானது படைப்பின் எல்லைகளை கலைத்து , புதிய அடையாளங்களை தோற்றுவிக்கிறது. ஒரு கட்டத்தில் நகுப் மஹ்பூஸை விட என்னை அதிகம் தொடுபவர் எலியாஸ் தான் என்றார் செய்த்"மஹ்மூத் தர்வீஸ், யூசுப் இத்ரிஸ், அதோனிஸ் போன்ற அரபுலகின் முன்னணியுடன் இணைந்து ஜனநாயக சோசலிச அமைப்பை எலியாஸ் தோற்றுவித்தார். இவரின் எழுத்து மொழி செவ்வியல் அரபியிலிருந்து நவீனம் நோக்கி நகர்கிற ஒன்றாகும். தற்போது லெபனானின் தினசரியான அல் முஹ்லாக்கின் வாராந்திர இலக்கிய இணைப்பான அந்நஹாரின் ஆசிரியராக இருக்கும் எலியாஸ் கவுர், கொலம்பியா பல்கலை கழகம், பெய்ரூட் அமெரிக்க பல்கலைகழகம் ஆகியவற்றில் மத்திய கிழக்கு குறித்து பாடம் நடத்தியிருக்கிறார். மேலும் நியூயார்க் பல்கலைகழகத்தின் மத்திய கிழக்கு குறித்த ஆய்வு பிரிவின் கவுரவ விரிவுரையாளராகவும் எலியாஸ் கவுர் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு பெய்ரூட் ரிவியூ என்ற பத்திரிகை இவருடன் நேர்முகம் ஒன்றை நடத்தியது. அதில் எலியாஸ் தன்னுடைய எழுத்து முறையின் தொடக்கம், விரிவாக்கம், மற்றும் லெபனான் உள்நாட்டு போர் குறித்து சொல்லியிருந்தார். அதன் உரையாடல்கள் முக்கியமானவை.







பெய்ரூட் ரிவியூ:-உங்கள் எழுத்துக்கள் எப்படி தொடக்கம் பெற்றன.

எலியாஸ் கவுர்:- நான் பாலஸ்தீன் சமூக அரசியல் இதழில் வேலைக்கு சேரும் முன்பு பிரான்ஸ் பல்கலைகழகத்தில் சமூகவியலை கற்றேன். பல்கலைகழக காலங்களில் நான் விடுதலை இயக்க செயற்பாடுகளில் தீவிரமாக இருந்த காரணத்தால் இலக்கிய வகைப்பாட்டிற்குள் என்னால் வர இயலவில்லை. பின்னர் பாலஸ்தீன் சமூக அரசியல் ஆய்விதழில் வேலைக்கு சேர்ந்த பிறகு இலக்கிய விமர்சனம் குறித்த எழுத்துக்கள் எனக்குள் வர தொடங்கின. அதன் பிறகு நாவல் எழுத தீர்மானித்தேன். அது 1971 ல் On the relations of the circle ( ala ilaqaat al Daira ) என்ற பெயரில் அது வெளிவந்தது. அது பேசப்பட்டது அல்லது தாக்குதலுக்குள்ளானது இரண்டுமே சம அளவில் நடந்தது. அதன் பிறகு Little Mountain வெளிவந்தது. அப்போது தான் நான் எழுதக் கூடியவனாக இருக்கிறேன் என்பதை சுயமாக தீர்மானித்து கொண்டேன்.

பெய்ரூட் ரிவியூ:- நீங்கள் ஒரு எழுத்தாளராக, முன்னாள் போராளியாக லெபனிய சமூகத்தில் கலாசாரத்திற்கும் , அரசியலுக்கும் இடையே பிரிவினை கோடு இருப்பதாக நம்புகிறீர்களா? குறிப்பாக உள்நாட்டு போருக்கு பிந்தைய லெபனிய சமூகத்தில்..

எலியாஸ் கவுர்:- சூழ்நிலைகள் எல்லாம் மிகுந்த அரசியல் மயப்பட்டிருக்கும் இங்கு இந்த பிரிவினை சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். கோட்பாட்டின் அடிப்படையில் நாம் அரசியலையும், கலாசாரத்தையும் பிரிக்க முடியும்.ஆனால் லெபனான் மற்றும் பாலஸ்தீனில் இது சாத்தியமல்ல. காரணம் ஒவ்வொன்றுமே அரசியல் செயற்பாட்டை நோக்கியும், மறு சிந்தனையை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறது. இங்கு யாருமே எனக்குள் அரசியல் இல்லை என்று சொல்ல முடியாது. இங்கு ஐரோப்பிய அறிவு ஜீவிகள் சொன்னது போன்று மார்க்சிசத்திற்கு எதிரான படைப்புகள் எல்லாம் இலக்கியம் எனவும், அதற்கு ஆதரவானதெல்லாம் அரசியல் என்றும் சொல்ல முடியாது. உண்மையில் அவை இரண்டுமே அரசியல் படைப்புகள் தான். சமூகங்கள் தன் நிலையில் மாற்றமடையும் போது இவற்றை தெளிவாக பிரிக்க முடியாது.

பெய்ரூட் ரிவியூ:- ஆக உங்கள் நோக்கம் அரசியல் எழுத்துக்களை கலையாக மாற்றம் செய்வது....

கவுர்:- இல்லை. ஒரு போதும் இல்லை. நான் உள்நாட்டு போர் பற்றிய விஷயத்திற்குள் சென்றேன். எனக்கு அது தவிர்க்க முடியாதது. ஆனால் இலக்கிய படைப்பென்பது ஒவ்வொன்றை பற்றியும் மறு சிந்தனை செய்வது, அதனை வெளிக்கொள்வது. அது வெறுமனே அரசியல் பற்றியதல்ல.

ரிவியூ:- நீங்கள் சொன்னது போன்று இலக்கிய படைப்பு என்பது ஒவ்வொன்றையும் மறு சிந்தனை செய்வது என்பதாக இருந்தால் அது நிலவும் சமூகங்களில் மட்டுமே சாத்தியமாகும். இதன் நீட்சியில் லெபனிய சமூகத்தில் ஓர் எழுத்தாளராக இருப்பதன் அர்த்தம் என்ன?

எலியாஸ் கவுர்:- லெபனிய சமூகம் பிரிவினையையும் , ஒருமைப்பாட்டையும் ஒரே நேரத்தில் அளிக்கிறது. இதற்கு இஸ்லாமிய நாகரிகமே உதாரணம். இஸ்லாமிய நாகரீகம் இங்கு இதற்கு முன் வந்த நாகரீகத்தையோ அல்லது கலாசாரத்தையோ அழித்து கொண்டு வரவில்லை. மாறாக அதை ஒருங்கிணைத்தும், வேறுபடுத்தியும் இஸ்லாமிய எல்லைக்குள் வாழ்வதாக உருவானது. நீங்கள் இதை இன்றைய நவீன எகிப்து, சிரியா, லெபனான், பாலஸ்தீன் போன்ற இடங்களில் காண முடியும். லெபனானில் இதற்குள் ஓர் ஒருமைப்பாடு இருக்கிறது. சமூக மேலாண்மை சார்ந்த ஒருமைப்பாடல்ல இது. ஒத்த கூறுகளை கொண்ட ஒன்றானதாக இருக்கிறது. லெபனிய நாவல் இதனை பிரதிபலிப்பதன் செயல்பாட்டை கொண்டிருக்கிறது என நான் நினைக்கிறேன்.

பெய்ரூட் ரிவியூ:- நீங்கள் லெபனான் உள்நாட்டு போர்
பற்றிய நாவல்களை எழுதியிருக்கிறீர்கள். அது பற்றிய
நாவல் ஏதாவது சொல்ல முடியுமா? மேலும் அது மற்ற
நாடுகளின் போர் பற்றிய நாவல்களிலிருந்து எவ்வாறு
வேறு படுகிறது.

எலியாஸ் கவுர்:- லெபனிய போர் நாவல்கள் இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. உள்நாட்டு போர்கள் என்றுமே பிரமாண்ட படைப்பிற்கு வழி ஏற்படுத்தாது. மறந்து விடுங்கள். போர் என்பது ஒரு மனித அனுபவம். நீங்கள் சுலோகோவின் "And Quiet Flows the Don" என்ற நாவலை எடுத்து கொண்டால் அந்த நாவலின் முக்கிய அம்சம் ருஷ்ய உள்நாட்டு போரை பற்றிய தகவல்களை தருவதல்ல. மாறாக மனித நிலைமைகள் பற்றிய தகவல்களை தருவது. லெபனானை பொறுத்தவரை லெபனிய போரானது அங்குள்ள இலக்கியத்துக்கான புதிய தொடக்கம் குறித்தது. எனென்றால் மரபார்ந்த லெபனிய படைப்பானது கவித்துவம் மட்டுமே நிரம்பியதாக இருந்தது. அந்த நேரத்தில் நாவல் இலக்கிய படைப்பிற்கு புதிய தொடக்கம் குறித்தது.அது ஒரு சமூகத்தையோ அல்லது குழுவையோ சுய சிந்தனைக்குட்படுத்துகிறது. நாவல்கள் இல்லாத சமூகத்தில் தன்னை அறிவதற்கான காட்சிகள் இல்லை எனலாம். உள்நாட்டு போருக்கு முந்தைய லெபனிய நாவல்கள் முற்றிலும் வேறுபட்ட செவ்வியல் மொழியை தாங்கி வெளிவந்தன. இதில் யூசுப் அவ்வாத், மரூன் அப்பாத், பவத் கனான் போன்றவர்களின் படைப்புகள் விதிவிலக்காக இருந்தன. போரானது நாவல்களுக்கு புதிய சிந்தனை முறையையும், புதிய அலைத்தடத்தையும் ஏற்படுத்தியது. இவை லெபனிய சமூகத்திற்கு உள்ளடங்கிய சாட்சியமாக இருந்தது. ஆனாலும் கூட இவை மட்டுமே நல்ல இலக்கிய படைப்பை தந்து விட முடியாது. நல்ல இலக்கிய படைப்பானது இந்த அனுபவத்தை மனித நெகிழ்வுகள் மீது உரையாடுவதன் வாயிலாக தான் பிறக்கும்.

பெய்ரூட் ரிவியூ:- புகழ்பெற்ற லெபனிய எழுத்தாளர்கள் பலரும் ஆங்கிலத்தை விட பிரெஞ்சு மொழியில் எழுதுவதையே உசிதமாக கருதுகிறார்கள். அரபு மொழியில் எழுதும் நீங்கள் இதை எவ்வாறு அணுகிறீர்கள்..

எலியாஸ் கவுர்:- எந்த அனுபவமும் எந்த மொழியிலும் பிரதிபலிக்க முடியும். தற்போது லெபனானில் பிரஞ்சு எழுத்து மோகம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆங்கிலம் கூட. ஒரு சிலரை தவிர எல்லோருமே அரபு மொழியில் தான் எழுதுகிறார்கள். லெபனிய மையநீரோட்ட இலக்கியமானது இன்று அரபு மொழியில் தான் இருக்கின்றது. பிரஞ்சின் காலனிய உணர்வு படைப்பாளிகளிடையே நீடிக்கவில்லை.

பெய்ரூட் ரிவியூ:- நீங்கள் அல் முஹ்லாக் பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறீர்கள். அதில் கலாசார, சமூக, அரசியல் பற்றிய விஷயங்களை பிரதிபலிக்கிறீர்கள். இதில் உங்களுக்கான தனி வகை பிரசுர கொள்கை ஏதாவது உண்டா?

எலியாஸ் கவுர் :- எங்களுக்கு அதில் மூன்று விதமான
நோக்கங்கள் உள்ளன. 1. லெபனான் மற்றும் அரபுலகின் புதிய மற்றும் நல்ல இலக்கிய படைப்புகளை வெளியிடுவது 2.லெபனிய சமூக பிரச்சினைகளை வரலாற்று பூர்வமாக அணுகுவது. உதாரணமாக சிறைச்சாலை, அரசியல் புகலிடம் மற்றும் பாலியல் செயல்பாடுகள் போன்றவை. மேற்கண்டவற்றை விமர்சன பூர்வமாக அணுகுவது என்பது இதில் ஒன்று 3. வெகுஜன கலாசாரத்தை விமர்சன பூர்வமாக, மறுவாசிப்பாக, பகுப்பாய்வு முறையில் அணுகுவது. அல் முஹ்லாக்கை பொறுத்தவரை மேற்கண்ட எல்லாவற்றையும் வரலாற்று கண்ணோட்டத்துடனும், அது சார்ந்த புதிய புரிதலோடும் முன்னெடுக்கிறது. நாங்கள் மட்டும் தான் புதிய எழுத்துக்களை புதிய அறிமுகத்தோடு முன் வைக்கிறோம்.

பெய்ரூட் ரிவியூ:- இந்த பத்திரிகை ஆசிரிய பணி உங்களுக்கு நிறைய எழுத இடமளிக்கிறதா?

கவுர்:- நான் என்னுடைய நேரத்தை நிர்வகிப்பதில் மிகுந்த
கட்டுப்பாடாக இருக்கிறேன்
. அதிகாலையிலே எழும்பி வாசிப்பு மற்றும் எழுத்து என இரவு பதினொன்று மணிவரை அன்றாட செயல்பாடு தொடர்கிறது. நான் எதையும் எழுதா விட்டால் உட்கார்ந்து விஷயங்களை பற்றி சிந்தித்து கொண்டிருப்பேன். அதன் பிறகு முஹ்லாக் வேலைக்கு வந்து விடுகிறேன்
- வார்த்தை

1 comment:

M.Rishan Shareef said...

//நாடுகடத்தல், இடப்பெயர்வு சக மனிதனுக்குள் ஏற்படுத்தும் வலிகள், விகசனங்கள் முக்கியமானவை. //

மிகச் சரி..அதே போன்ற வலியையும் ஒரு வித விரக்தியையும்,வெறுப்பு மனப்பாங்கையும் விட்டுச் செல்வதுதான் போரும்.

போர்..மிகுந்த வன்முறையோடும் அதிர்வுகளோடும் இணைந்து பல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், கலைஞர்களையும் பெற்றெடுக்கிறது.

இங்கு எலியாஸ் கவுரியையும், மஹ்மூத் தர்வீஷையும் ஒரே களத்துக்குரியவர்களாகக் காண்கிறேன். அரபு இலக்கியத்தில் இருவரையும் விட்டொதுக்குதல் முடியாது.

நல்லதொரு கட்டுரை. உரையாடலையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே !