காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Thursday, September 3, 2009

பாரசீக வளைகுடாவுக்கு அப்பால்- கடற்கரையில் ஓர் உரையாடல்


வாழ்க்கை முழுவதும் காந்த விசைகளால் நிரம்பி இருக்கிறது அதன் துருவங்களோடு நம்மை ஈர்க்க வைக்கிறது. இரையை தேடி பறவைகள் எல்லை தாண்டுவது மாதிரி மனிதன் எல்லை தாண்டுவது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. நான் எல்லை தாண்டிய கதையும் அது தான். வளைகுடா நாடொன்றில் என் வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது. இங்கு பல நாட்டு மனிதர்களை பார்க்க முடிகிறது. அந்த வகையில் எனக்கு பிரான்சை சேர்ந்த ஒருவரிடம் சில வருடங்களுக்கு முன்பு தற்செயலாக அறிமுகம் ஏற்பட்டது. ஐரோப்பியர்களுக்கு கோட்பாடு, இலக்கிய ரீதியான பாதிப்பு இயல்பாகவே இருக்கும். பிரான்சில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றில் உறுப்பினராக இருக்கும் இவருக்கு கோட்பாடு, இலக்கியம், அரசியல் போன்ற துறைகளில் ஈடுபாடும், ஆழ்ந்த அறிவும் இருக்கிறது. பிரெஞ்சு பத்திரிகைகளில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வருகிறார். சிவில் பொறியாளராக பிரான்சில் பணிபுரியும் இவர் கம்பெனிகளுக்கிடையேயான ஒப்பந்த அடிப்படையில் இங்கு பணியாற்றுகிறார். எங்களுக்குள் பல்வேறு விஷயங்கள் குறித்து நேரடியாக உரையாட வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. பாரசீக வளைகுடாவின் அழகான கடற்கரையோரம் அமர்ந்து ஒரு நாள் விரிவான உரையாடல் நடத்தினோம்.குறிப்பாக ஐரோப்பிய விவகாரங்கள், மத்திய கிழக்கு, படைப்பிலக்கியம், பின் நவீனத்துவம் குறித்து நிறையவே பேசினோம். ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த உரையாடலை வலைப்பதிவு வாசகர்களுக்காக இங்கு பதிகிறேன்.

பீர்முஹம்மது:- மத்திய கிழக்கின் ஒரு மூலையில் பாரசீக வளைகுடாவின் கரையில் உட்கார்ந்து கொண்டு உரையாடுவது நமக்கு நல்ல அனுபவம் தான்.அதோ பாருங்கள் அல்-கோபார் தெரிகிறது.இங்குள்ள அரபு பெட்ரோலிய கழகத்தின் மீது தான் சமீபத்தில் அல்-கொய்தாவின் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலை நாம் அரபு-மேற்கு பின்னணியில் வைத்து பார்க்க வேண்டியதிருக்கிறது. மேற்குலகம் காலங்காலமாக இஸ்லாத்தை அதன் எதிரியாக பார்த்து வருகிறது. ஸ்பெயின் அனுபவத்திலிருந்து நாம் இதனை தொடங்கலாம்.

ழீன் கிறிஸ்டோப்:- என்னை பொறுத்தவரை பெரும்பான்மை எப்பொழுதுமே தனக்கு எதிரிணையை தேடி கொள்கிறது. பல மில்லியன் ஆண்டு உலக வரலாறு நமக்கு இதைத்தான் காட்டுகிறது. நடப்பு உலகில் மதங்கள் சாமானிய மனிதனின் வாழ்வாதாரமாக இருக்கின்றன. முதலாளித்துவம் சில சமயங்களில் மதத்தை தன்னுடைய ஒடுக்குமுறை கருவியாக பயன்படுத்தி கொள்கிறது. கி.பி ஆறாம் நூற்றாண்டில் ரோம் மன்னன் காண்ஸ்டாண்டைன் கிறிஸ்தவத்தை தன்னுடைய அதிகாரபூர்வ மதமாக அறிவித்தான். அன்றைய நிலையில் கிறிஸ்தவம் அவனுக்கு ஓர் அதிகார கோல். அதனை மையமாக வைத்தே அவன் மற்ற நாடுகளின் மீது படையெடுத்தான். திருச்சபையின் ஆதரவும் அதற்கு இருந்தது. கலிலியோவில் இருந்து கோபர் நிகஸ் வரையிலான அனுபவம் நமக்கு அதன் சுயத்துவத்தை வெளிப்படுத்துகிறது. ஐரோப்பியர்களுக்கு 18 ஆம் நூற்றாண்டு வரையிலான விஞ்ஞான முடிவுகளை ஏற்பதில் சிக்கல் இருந்தது. அவர்கள் பெளதீக உலகை மதத்தின் துணையோடு அணுகினார்கள். சூரிய கிரகணத்திற்கு கூட ஆசாரம் பார்ப்பது ஐரோப்பாவில் சில பகுதிகளில் நடைமுறையில் இருந்தது. புரட்டஸ்டாண்ட் இயக்கம் ஐரோப்பிய வரலாற்றின் துவக்க புள்ளி. வைதீக
கிறிஸ்தவத்தின் பிடியில் இருந்து மக்களை விடுவித்த பெருமை அதற்கு உண்டு. அன்று பாவமன்னிப்பு கூட மேலடுக்கு முறையில் இருந்தது.இன்று எல்லாமே மாறிவிட்டது. இஸ்லாமை பொறுத்தவரை அது செமிடிக் ஆன்மாவை கொண்டது. (கிறிஸ்தவம் கூட) மத்திய கிழக்கின் அவசியமான கட்டத்தில் தோன்றிய மதம் அது. அன்றைய கட்டத்திலேயே மத்திய கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே கலாசார வேறுபாடு இருந்தது.உடை அமைப்பு தொடங்கி சதாரண நடத்தையில் கூட வேறுபாடு இருந்தது. இஸ்லாம் தோன்றியது அவசியமான மற்றும் தற்செயலான நிகழ்வு. அக்காலகட்டத்தின் அரசியல், கலாசாரம் நிலவிய நிலையில் ஒரு பொறுப்புள்ள நம்பிக்கை முறையை உருவாக்கி அதன் வழி சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றிணைக்கும் பொறுப்பு அதற்கு இருந்தது. இதை செயல்படுத்துபவராக நபி இருந்தார். அந்த இலக்கை அடைவதற்காக முஸ்லிம் அல்லாதவர்கள், நம்பிக்கையற்றவர்கள் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.அதன் வரலாற்று அணுகுமுறை , ஜிகாத் பற்றிய பார்வை இன்று பல பயங்கரவாத அமைப்புகளுக்கு செயல்திட்ட மூலாதாரமாக இருக்கிறது. அடி பணிய வைத்தல், ஏற்றுகொள்ள வைத்தல் ஆகிய குரானிய விளக்கங்களை இவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றன. இன்னொரு புறத்தில் கிறிஸ்தவ பயங்கரவாதம் பற்றியும் சொல்ல வேண்டியதிருக்கிறது. பார்த்தலோமியா தின படுகொலைகள், தென்னாப்ரிக்க கரு கலைப்பு மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், அமெரிக்க பழங்குடியினரை ஒடுக்குதல் ஆகியவற்றை குறிப்பிடலாம். இருந்தும் கிறிஸ்தவம் அதன் போக்கில் தன்னை சுய விமர்சனம் செய்து கொண்டு விட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இஸ்லாம் அதன் போக்கில் தன்னை என்றைக்குமானதாக கருதி கொள்கிறது.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நிகழ்த்திய கொடூரங்கள் பதிவு செய்யப்பட வேண்டியவை. மத விரோதிகள் என்று ஏராளமானோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.விபச்சாரிகள் என்று முத்திரை குத்தப்பட்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.

பீர்முஹம்மது:- இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் தங்களின் செயல்பாடுகளுக்கு மத அடிப்படையை எடுத்து கொள்வது பற்றி சொன்னீர்கள். ஆனால் பாலஸ்தீன யூத பயங்கரவாதம் தன்னுடைய செயல்களுக்கு தன் பிரதியை நியாயப்படுத்திக்கொள்கிறது. ஆக மத அடிப்படைவாதிகளுக்கு அவர்களின் பிரதியே தூண்டுகோலாக இருக்கிறது எனலாம்.அடுத்ததாக லெளகீக உலகிற்கு வருவோம். ஒடுக்கு முறைகள், மனிதனை மனிதன் சுரண்டுதல் ஆகியவற்றால் இவ்வுலகம் நிரப்பப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் மீதான அழுத்தமே மற்றொருவனுக்கான இருப்பு என மாறுகிறது. இதிலிருந்து சமூகத்தை விடுவிப்பது அவசியமாகிறது. 19 ஆம் நூற்றாண்டில் மார்க்ஸின் கனவும் அதுவாக தான் இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக சுரண்டலற்ற சமூகம் என்ற மார்க்ஸின் கனவில் இடறல் ஏற்பட்டது. சோவியத் தகர்வு நமக்கு அதை வெளிப்படுத்துகிறது. உங்கள் நாட்டிலும் (பிரான்சு) 1968 ல் மாணவர் புரட்சி நடைபெற்றது. அதன் பிறகு உலகம் முழுவதும் புதிய சோசலிச கட்டுமானம் பற்றிய உற்சாகம் பிறந்தது. அதன் தோல்வி எதிர்பாராதது. அந்த புரட்சியின் அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியதிருக்கிறது.

ழீன் கிறிஸ்டோப்:- சோவியத் தகர்வு என்பது சோசலிச உலகத்திற்கான பெருஞ்சறுக்கல். அது ஒரு துன்பியல் நிகழ்வு கூட. அக்டோபர் புரட்சியானது புதிய உலகை நிர்மாணிப்பதற்கான தூண்டுகோலாக இருந்தது. புரட்சியின் அர்த்தம் அதுவே. பாரிஸ் கம்யூனின் (1871) பின் தொடரல் இது. சோவியத் புரட்சிக்கு பின் லெனின் தலைமையிலான அரசுக்கு சோசலிச கட்டுமானத்தை நிர்மாணிப்பதில் சில தடங்கல்கள் இருந்தன. அது சரி செய்யக்கூடியதாக இருந்தாலும் குறுகிய காலகட்டத்தில் லெனினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லெனினை பொறுத்தவரை சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு சோசலிசத்தை நிர்மாணிப்பது அவசியமான ஒன்றாக இருந்தது. அவரின் மறைவுக்கு பிறகு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும் குழப்பங்கள், சச்சரவுகள் ஏற்பட்டன. ட்ராஸ்கி தலைமையில் ஒரு குழு தனியாக இயங்கியது.லெனினுக்கு பிறகு ஆட்சியதிகாரம் ஸ்டாலின் கைக்கு மாறியது பெரும் துரதிஷ்டம். அவரின் இயல்பான ராணுவ குணமே அவரை சர்வாதிகாரத்திற்கு இட்டு சென்றது. சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கி கொண்டே அரசியல் எதிரிகளை பழிவாங்க ஆரம்பித்தார். அவர் காலத்தில் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தது.ஒருவர் கடையில் "இறைச்சி ஏன் கிடைக்கவில்லை"என்று சுவரில் எழுதியதற்காக வதை முகாமுக்கு அனுப்பப்பட்டார். கட்சி நிர்வாகிகள் பலருக்கு உணவுப்பொருட்கள் இலவசமாகக் கிடைத்தன. பொது அங்காடிகளுக்குசெ சென்று பொருட்களை எடுப்பார்கள். எடுத்த வேகத்தில் வெளியில் வருவார்கள்.இதை க்ரெம்லின் ரேசன் என அரசியல் விமர்சகர்கள் அழைத்தார்கள்.ஸ்டாலினுக்கும் ட்ராஸ்கிக்கும் இடையேயான முரண்பாடு அதிகாரப்போட்டியின் விளைவே.ஆட்சியதிகாரம் தனக்கு வரவேண்டுமென்ற தீவிர ஆர்வம் இராணுவ தளபதியாக இருந்த ஸ்டாலினுக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்தது. இதன் தர்க்க ரீதியான தொடர்ச்சியே பின்னாளில் டிராஸ்கிக்கு எதிராகத் திரும்பியது. இது வேகமாக பரவி புகாரின், காம்னேவ், ஜினோவ் போன்றோர்களின் மீதும் திரும்பியது. இவர்களில் புகாரின் சிறிதுகாலம் ஸ்டாலினின் நண்பராக இருந்தார். பின்னர் இருவருக்கிடையே உராய்வு வெடிப்பாக மாறியது. ஸ்டாலின் தன் அரசியல் எதிரியாக டிராஸ்கி இருந்த போதிலும் அவர் மீது நடத்திய தாக்குதல்கள் கொடூரமானவை. ஹிட்லர் யூதர்கள் மீது நடத்திய தாக்குதல்களோடு இதனை ஓரளவு ஒப்பிட முடியும்.மெக்ஸிகோவிற்கு நாடுகடத்தப்பட்ட பின் அவரின் தலையை வெட்டிக்கொண்டு வர வேண்டுமென்றும் அதனைப்பார்த்து தான் காரி உமிழ வேண்டும் என்றும் தன் படைகளுக்கு ஸ்டாலின் உத்தவிட்டார். மெக்ஸிகோவில் டிராஸ்கி தங்கியிருந்த இடத்தில் ஸ்டாலின் படைகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தின. தாக்குதலில் டிராஸ்கி படுகாயம் அடைந்தார். சிறிது நாட்களுக்கு பின் அவர் மரணமடைந்தார். பின்னர் தொடர்ச்சியாக புகாரின், ஜினோவ், காம்னேவ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். புகாரின் மாஸ்கோ இறுதி விசாரணையின் போது பின் வருமாறு குறிப்பிட்டார்."நீங்கள் என்னை சோசலிச எதிரி என்றோ, மக்கள் விரோதி என்றோ முதலாளிய பிரதிநிதி என்றோ குறிப்பிடுங்கள். அது உங்கள் வசதியை பொறுத்தது. எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் இந்த சோவியத் என்னை புரிந்து கொள்ளும். என் மரணம் சோவியத்தின் வீழ்ச்சியாக இருக்கும். இது தவிர ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.ஸ்டாலின் காலத்து வரலாறுகள் பல மறைக்கப்பட்டன.சோவியத் தகர்வுக்கு பிறகே அவை அனைத்தும் வெளிவந்தன. பிரான்சில் இதற்கு முன்பே இது பற்றிய விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.ஸ்டாலினுக்கு பிறகு வந்த குருசேவ், பிரஸ்னேவ், ஆகியோர் சோவியத்தை மீட்க விரும்பினர். குருசேவ் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் கட்சி மாநாட்டில் ஆற்றிய உரை வெளியிடப்படாமல் நீண்ட காலத்திற்கு பிறகே வெளிவந்தது. குருசேவின் செயல்திட்டமும் சோவியத்தை சீரமைக்க முடியவில்லை. பண்ணை அமைப்பு முறையை மாற்றி அமைத்தார். விளைவு விவசாயம் பின்னுக்கு சென்றது. இந்நிலையில் தான் மாவோவுடன் மோதல் ஏற்பட்டு சோவியத் - சீனா பிளவு ஏற்பட்டது. மேற்கண்ட நிகழ்வுகள் மூலம் பல்வேறு படிப்பினைகள் இருக்கிறது. மார்க்சிய கோட்பாடு 19 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பியச் சூழலை மையமாக கொண்டது. அக்காலகட்டதிலேயே மேற்கிற்கும், கிழக்கிற்கும் வேறுபாடு இருந்தது. மார்க்சின் இதுவரையிலான வரலாறுகள் அனைத்தும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறே என்பது கூட ஜெர்மனியில் நடந்த விவசாய போராட்டங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது தான். இறுதியில் அவரே அயர்லாந்து பிரச்சினையில் மாறுபட வேண்டியதாயிற்று. மரபார்ந்த ஜெர்மானிய கோட்பாட்டிற்கு எதிர்கோட்பாட்டை கண்டுபிடிப்பது அன்றைய நிலையில் அவருக்கு அவசியமானதாக இருந்தது.புருதோனும், பயர்பாக்கும், டூரிங்கும் இதற்கு உதாரணங்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் இதை சரிவர புரிந்து கொள்ளவில்லை.
புரட்சியின் விளிம்பில் பிரான்சின் 1968 ஆம் ஆண்டின் மாணவர் புரட்சி ஓர் துவக்கப்புள்ளி. அந்நேரத்தில் பிரான்சு புரட்சியின் விளிம்பில் நின்றது. நான் அப்போது குழந்தை. என் மூத்த சகோதரர் கூட இந்த புரட்சியில் பங்கேற்றார். 1968 மார்ச் 22 ல் பிரான்சு அரசாங்கம் ஐந்து மாணவர்களை போராட்டத்தின் பேரில் கைது செய்தது.வியட்நாம் போரைக் கண்டித்து அவர்களின் போராட்டம் இருந்தது. அன்று மாலையே மாணவப்பிரதிநிதிகள் பாரிஸ் பல்கலைகழக வளாகத்தில் கைதை கண்டித்து கூட்டம் நடத்தினார்கள். விரிவுரை வளாகத்தில் சேகுவரா பற்றிய படங்கள் திரையிடப்பட்டன. இந்நிலையில் பிரான்சு கல்வி அமைச்சரின் பேச்சு மாணவர்களை மேலும் தூண்டி விட்டது. பல்கலைகழக வளாகத்தில் சேகுவாரா, பிடல் காஸ்ட்ரோ, மாவோ போன்றோர்களின் பெயர்கள் அடிக்கடி உச்சரிக்கப்பட்டன. மே 3 ஆம் நாள் சில மாணவர்கள் பல்கலைகழகத்தினரால் நீக்கப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டனர். அன்றைய தினம் மாணவர்கள் மீது போலீஸ் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது. சில மாணவர்களை கைதும் செய்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். மே 10 ஆம் நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்தார்கள், "கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய் , சோபோன் பல்கலைகழகிலிருந்து போலீஸை வாபஸ் வாங்கு , போன்ற கோரிக்கைகள் உள்ளடங்கி இருந்தன. பேரணி சோபோன் பல்கலைகழகத்தை நெருங்கியதும் தயாராக நின்ற போலீஸ் அவர்கள் மீது தடியடி பிரயோகம் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இறுதியில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவியது. பல இடங்களில் மாணவர்கள் போராட்டங்கள் நடந்தன. பள்ளி மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர். இதற்கிடையில் மாணவர்கள் ஸோபர்ன் பல்கலைகழகத்தை மக்கள் பல்கலைகழகமாக அறிவித்தனர். இனி மாணவர்கள் அடங்கிய குழுவே அதை நிர்வகிக்கும் என்றனர். பல தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு பிரான்சு அரசு அந்த மாணவர்களை விடுதலை செய்தது. இந்த புரட்சி உலகம் முழுவதும் புதிய பார்வையை கொடுத்தது. நவ மார்க்சிய சிந்தனையாளரான அல்-தூசரால் கூட இப்புரட்சியை விளக்க முடியவில்லை. இதற்கிடையே பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியானது புரட்சியை குறைகூறியது. குறுங்குழுக்கள், குழப்பவாதிகள், திருத்தல்வாதிகள் என்றது. போலீஸ் அராஜகம் நடந்து கொண்டிருந்த போது கூட கம்யூனிஸ்ட் கட்சி மாணவர்களை விமர்சித்தது பெரும் அபத்தம். வரலாற்று தவறு கூட.புரட்சி முடிவுக்கு வந்த பின்னரே தன்னுடைய நிலைபாட்டை மாற்றிக்கொண்டது. சில நேரங்களில் கட்சி இது மாதிரியான திரிபுத்தனத்தில் இறங்குகிறது. இன்றைய சூழலில் உலகம் மனிதன் மீதான அழுத்தத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கான மாற்று வழிகளின் தேடலும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

பீர்முஹம்மது:- பிரான்சின் மாணவர் புரட்சியை பற்றி குறிப்பிட்டீர்கள். கருத்தியலின் பிறப்பிடமான பிரான்சு ஓரு வானவில்லாக இருக்கிறது. இதனோடு தான் பின்நவீனத்துவ கோட்பாட்டையும் காண வேண்டியதிருக்கிறது. ஐம்பதுகளுக்கு பிறகான இந்த லெளகீக உலகில் மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைக்கு பிறகு ஐரோப்பாவில் எழுந்த கருத்தியல் பின்நவீனத்துவம்.முரண்பாடுகளும், அதிகார மையங்களும் குவிந்துள்ள இந்த உலகில் பின்நவீனத்துவம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது? ஏற்படுத்துகிறது? நடைமுறை உலகில் மனித வாழ்வின் நுண்தளங்களில் நுழைந்து அதிகார மையங்களை தகர்ப்பது என்பது ஒரு கடினமாக செயல்முறையே. இதன் சாத்தியப்பாடு எந்த அளவிற்கானது? அதன் எல்லை என்பது என்ன?

ழீன் கிறிஸ்டோப்:- பின்நவீனத்துவம் என்ற கருத்தியல்போக்கு இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பாவின் புதிய தொடக்கமாகும். அதற்கு முன் நாம் நவீனத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நவீனத்துவம் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி காலத்திற்கு பின்னர் எழுந்தது. 19 ம் நூற்றாண்டு இறுதியில் இலக்கிய உலகில் படைப்பாளிகளிடையே அது அறிமுகமானது. ரொமாண்டிசம், சிம்பாலிசம், க்யூபிசம், உருவவாதம் போன்றவை நவீனத்துவத்தின் கூறுகள். எஸ்ரா பவுண்ட், எலியட், டி.எச் லாரன்ஸ், ஜோசப் கான்ராட், ராபர்ட் புரூஸ்ட், இ.இ கும்மிங்ஸ், எலைன் பிளாங், ராபர்ட்லோயல், இ.டிக்கின்ஸன் போன்றோர்களை குறிப்பிடலாம்.பின்னர் படிப்படியாக அரசியல், பொருளாதார, கலாசார தளங்களில் ஊடுருவியது. ஆனால் அது சிறிது காலம் வரையே நீடித்தது. இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பின்னர் 1888ல் லண்டனை தலைமையிடமாக கொண்டு பிரிட்டன் கலை மற்றும் கைவினைஞர் மையம் உருவானது. இது ஓவிய மற்றும் சிற்ப கலைகளில் வித்தியாசமான வடிவமைப்பைப் புகுத்தியது. ஏக காலத்தில் இது மாதிரி பல தளங்களில் மாறுதல்கள் ஏற்பட்டன. அறிவின் ஆதிக்கம் வலுப்பட்டது. மனம் சார்ந்த முற்கோள்கள் தான் ஒன்றை தீர்மானிக்கிறது என்ற முடிவிற்கு நவீனத்துவவாதிகள் வந்தார்கள். Modern என்றால் Just now என்பதாக அர்த்தம். ஐரோப்பியர்களின் உடையமைப்பு வித்தியாசப்பட்டது. கலாசார முறைகளில் மாறுதல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் நவீனத்துவத்தின் காலத்தை 1880-1940 என வரையறுக்கலாம்.Post modernism என்ற சொல்லுக்கு After just-now என்று அர்த்தம். 1960 களில் ஐரோப்பாவில் பின்நவீனத்துவம் எழுந்தது. பிரெஞ்சு தத்துவவாதி லியோதர்தை நாம் இதன் தந்தை எனலாம். நான் லியோதர்த்தின் விரிவுரைகளை கேட்டிருக்கிறேன். எதிர்-அறிவு கோட்பாட்டாளர் அவர். அறிவு அதன் செயல்தளம் குறித்த பின்நவீனத்துவ அணுகுமுறையை வடிவமைத்தவர். பிந்தைய தொழிற்புரட்சி காலத்திற்கு பின்னர் (தானியக்க இயந்திரங்கள்) சமூகமானது புதிய தளத்திற்குள் நுழைகிறது.கலை, இலக்கிய, அரசியல், பொருளாதார, கலாசார தளங்களில் ஒரு தகர்வு ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.இருபதாம் நூற்றாண்டு தொழில்நுட்ப மாறுதல்கள் அறிவுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.இயந்திரங்களின் குறைமையாக்கல் மற்றும் சந்தைப்படுத்தல் அவற்றின் திசையை திருப்பி விட்டன. இயந்திரங்கள் தகவல் இயந்திரங்களாக (Machine of information) குறுகி விட்டன. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் போக்குவரத்து (Transportation) என்ற சொல்லாடல் திசைமாறி ஒலி, பிம்பம் மற்றும் பிரதியை குறிக்கும் பல்லூடகமாக மாறிவிட்டது. கணிப்பொறியின் வருகை அறிவுலகை தலைகீழாக புரட்டிப்போட்டு விட்டது. தற்போது மனிதன் அறிவின் உற்பத்தியாளன் என்ற நிலை மாறி கம்ப்யூட்டர் அதன் உற்பத்தியாளராக மாறிவிட்டது. அறிவு தானாகவே அதன் பயன்மதிப்பை இழக்கிறது. இப்போது 0, 1 என்ற தர்க்கத்திற்குள் தான் அதன் பயணம். லியோதர்த்துக்கு அடுத்ததாக நாம் போதிலாரை குறிப்பிடலாம். இவருடைய சிந்தனைகள் பின்நவீனத்துவத்திற்கு எதிரானவை என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் பரவலாக பின்நவீனத்துவவாதியாக அறியப்பட்டவர். குறிப்பாக பொருளாதார, தகவலிய தளங்களில் இவரின் சிந்தனை பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை விமர்சித்த இவர் மரபான அரசியல் பொருளாதாரம் முடிவுக்கு வந்து விட்டதை குறிப்பிடுகிறார். மதிப்பு தலைகீழாக மாறிவிட்டது. பொருளுக்கு பரிமாற்ற மதிப்பு என்பதல்ல, மாறாக குறியீட்டு மதிப்பே அதை தீர்மானிக்கிறது. பார்க்கர் பேனா ஒருவரின் கவுரவத்தை குறிக்கிறது. கிளியோபட்ரா சோப்பின் அடக்கவிலைக்கும் அதன் விற்பனை விலைக்குமான வித்தியாசம்.பாரிஸ் நகரின் சில கடைகளில் விற்கப்படும் சில வகை Sandwich களை குறிப்பிடலாம். இந்த யுகமே பாவனைகளின் (Simulation) யுகம் தான். பாவனைகளின் யுகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாரிஸின் Disney World இதற்கு உதாரணம். மால்கள் மற்றும் ரோபோக்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம். பின்நவீனத்துவ்வாதிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் Hyper realism என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தியவரும் அவரே.எல்லா வீடியோ விளையாட்டுகளும் hyper realism தான். நான் காரை ஓட்ட தேவையில்லை. கார் ஓட்டுவது மாதிரியான அனுபவம் கிடைக்கும்.விமானத்தை இயக்க தேவையில்லை. அதே அனுபவம் கிடைக்கும். விர்ச்சுவல் அனுபவங்கள் என்னை லெளகீக உலகில் மிதக்க வைக்கின்றன. Pataphysics இன் விளைவு இது.மின்வெளியில் நாம் பயணம் செய்யும் போது நம்மையே இழக்கிறோம். நமக்கு கனவிற்குள் புகுவது மாதிரி இருக்கிறது.இந்நிலையில் மரபான மார்க்ஸியத்திற்கும் பின் நவீனத்துவத்திற்கும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. மரபான மார்க்சியம் நவீனத்துவத்திலிருந்து கூட மாறுபடுகிறது. சுரண்டல் என்பது கூட மார்க்சின் பார்வையில் அறிவு செயல்பாடு தான். வரலாறு குறித்த அணுகுமுறை, அரசியல் பொருளாதார முறை இவற்றில் இரண்டிற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன.
இறுதியாக நவீனத்துவம் - பின் நவீனத்துவம் ஆகியவற்றின் வித்தியாசங்களை கீழ்கண்டவாறு தொகுக்கலாம்.
நவீனத்துவம் - பின் நவீனத்துவம்
நோக்கம் - விளையாட்டு
வடிவமைப்பு - வாய்ப்பு
வரிசைமுறை - ஒழுங்குலைவு
புறப்பொருள்,
முடிந்து விட்ட வார்த்தை - செயல்முறை, செயல்திறன்
தூரம் - பங்களிப்பு
முழுமையாக்கல் - தகர்ப்பமைப்பு
தேர்ந்தெடுத்தல் - சேர்ப்பு
ஆழம் - மேற்பரப்பு
விளக்கீடு - எதிர் விளக்கீடு
வாசிப்பு - கோணலான வாசிப்பு
கதையாடல் - எதிர் கதையாடல்
பெரும் வரலாறு - சிறு வரலாறு
பாரநோயா - சீசபெரனியா
முடிவு - முடிவின்மை
மூலம் -காரணம் - வித்தியாசப்படுத்தல், ஒத்திவைத்தல்

அனைத்தையும் புரட்டி போடும் பின்நவீனத்துவத்தை ஐரோப்பாவிலுள்ள மனித உரிமை அமைப்புகள், பெண்ணிய இயக்கங்கள், சுற்றுச்சூழல் இயக்கங்கள், பிற சிவில் அமைப்புகள் வரவேற்றன. தங்களின் செயல்திட்டத்திகான ஆதாரமாக அவற்றை பின்பற்றின. பின்நவீனத்துவம் அறிவை தலைகீழாக்குகிறது அல்லது பன்முகப்பட்ட
நிலைபாட்டை முன்வைக்கிறது. சிலந்தியின் வலையோடு இதனை ஒப்பிடலாம்.அறிவைப்பற்றிய பின்நவீனத்துவ அணுகுமுறையும் இணையதளங்களின் அமைப்பும் ஒரே மாதிரி தான். நவீனத்துவம் மொழி சுட்டுதல் மூலம் அதற்கான அர்த்தம் பெறும் என்றது. ஆனால் பின்நவீனத்துவம் மொழி அதன் சமூக பயன்பாட்டில் சூழலில் அர்த்தம் பெறும் என்றது. மேலும் நவீனத்துவம் முக்கியத்துவம் கொடுத்த மையத்திலிருந்து விலகி பரவுதலை வலியுறுத்தியது. நவீனத்துவம் முற்போக்கை நம்பியது. பின்நவீனத்துவம் முற்போக்கு சாத்தியமில்லாதது என்றது. இவ்வாறாக நவீனத்துவம், மரபான மார்க்சியம் இவற்றிலிருந்து மாறுபட்டு பின்நவீனத்துவம் அதற்கான அடையாளத்தை உலகில் பெற்று விட்டது. சாத்தியபாட்டின் கணங்கள் எவ்வாறு கோட்பாட்டை பாதிக்கின்றன என்பதற்கோர் உதாரணம் பின் நவீனத்துவம்.

பீர்முஹம்மது:- பின்நவீனத்துவம் குறித்து பார்த்தோம். படைப்பிலக்கியத்திற்கு திரும்புவோம். இலக்கியம் அல்லது எழுத்து மனிதனின் வாழ்வை பிரதிபலிப்பது ,மனிதனின் ஆழ்மன வெளிப்பாடு. அது வெறும் மனப்பதிவு தான் என்பதான பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. எங்கள் மொழியில் பழங்காலத்தில் சாதாரண உரையாடல் கூட கவிதை வடிவில் இருந்திருக்கிறது. கவிதை, சிறுகதை, நாடகம் என்ற கலையின் வடிவங்கள் சக மனிதனை ஏதாவது ஒருவிதத்தில் பாதிக்கின்றன. Virtual உலகில் கலை அடையும் மாறுதல் எவ்வாறாக இருக்கும் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டியதிருக்கிறது. பெளதீக வெளி கூட ஒருவகை எழுத்து தான்.இயற்கை நமக்கு தெரியாமல் எழுதி கொள்கிறது. பாறைகளை செதுக்கி எழுதுவதற்கும், காகிதத்தில் எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. காகிதத்தில் படியும் நிழல் இன்று எழுத்தின் வடிவம் பெறுகிறது. வாசிப்பிற்கும் எழுத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்து பல்வேறான கருத்துக்கள் நிலவுகின்றன. ஒலி-ஏற்பு முறை (Speech recognition system) இந்த வித்தியாசத்தை அகற்றி விட்டது.

ழீன் கிறிஸ்டோப்:- எழுத்து ஒருவனுக்கு அளிக்கும் ருசி அலாதியானது. அன்றாட வாழ்வின் நெருக்கடிகள், அழுத்தங்கள், தவிப்புகள் இவற்றிலிருந்து விடுபட அவன் எழுத்தை நாடுகிறான். வேறொரு அர்த்தத்தில் சொன்னால் அது ஒரு நல்ல உளவியல் மருத்துவமாக இருக்கிறது.வாழ்விலிருந்து தப்பிப்பதற்காக எழுத்தை நாடியவர்கள் உண்டு. அதுவே அவர்களின் முடிவாக மாறிய நிகழ்வுகள் இருக்கின்றன. ஐரோப்பாவில் தற்கொலை எழுத்தாளர்கள் என்ற தனிப்பட்டியலே இருக்கிறது. அவர்களில் முக்கியமானவர் சில்வியா பிளாத். சில்வியா ஓர் உணர்வுபூர்வமான கவிஞர். மனிதனின் ஆழ்மனதேடலை கவிதை மூலம் வெளிப்படுத்தியவர். அவருடைய கணவர் டெட் ஹெக்ஸ் சிறந்த கவிஞர். சிறந்த வாழ்க்கை பின்னணி கொண்டவர்.
சில்வியாவின் மனநெருக்கடிக்கு மேல் அவருக்கு படைப்பு சுதந்திரம் இருந்தது. சில்வியாவை பொறுத்தவரை நான் மிகவும் நேசிக்கும் கவிஞர். அவரின் அனுபூத கவிதைகள் மிகவும் ஆழமானவை.அது போன்றே பிம்பம், குழந்தை, மரங்கொத்தியின் சிலாகனை, இருள்வீடு, வார்த்தை, சேற்றில் செம்மறியாடு, சிசபெரனியா, பலூன் போன்ற கவிதைகளும் உள்மனதோடு உரையாடுபவை. அவரின் மரணம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் அவரின் கணவர் டெட் ஹெக்ஸ் தான் காரணம் என்றார்கள். டெட் ஹெக்ஸ் சில்வியாவின் மரணம் பற்றி எழுதிய கடிதம் ஒன்றில்
சில்வியா தற்கொலைக்கு தூண்டும் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டதால் தான் தற்கொலை முடிவுக்கு வந்ததாக குறிப்பிடுகிறார். இன்னும் கூட அவரின் மரணத்திற்கான காரணம் பற்றி தெளிவு இல்லை. முஹம்மது நீங்கள் மிலன் குந்தராவின் Ignorance நாவலை படித்திருக்கிறீர்களா? சமீப காலங்களில் வெளிவந்த படைப்புகளில் சிறந்த படைப்பு எனலாம். மனித மனம் அறியாத உலகம் எங்கோ இருக்கிறது. அதனுடையே தேடலே அது புதிர்பாதைக்குள் நெளிந்து உலவும் மனிதனின் பயணம் முடிவில்லாதது. நான் மிகவும் ஆர்வத்துடன் படித்த நாவல் இது. எழுத்தே வாழ்க்கையாக கொள்ளும் மனிதர்களை பொறுத்தவரை உண்ணாமல், உறங்காமல், சிந்தனை சாத்தியம் இல்லை என்ற ஏங்கல்சின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது. யதார்த்தத்திற்கும் , மாயாஜாலத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. நமக்கான
வித்தியாசமே இது தான்.

பீர்முஹம்மது:- தேடல் மனிதனுக்கு மட்டுமல்ல. சகல ஜீவராசிகளுக்கும் தான். பாதுகாப்பு மணியை இயக்கிய கரப்பான் பூச்சியைப் பற்றி சமீபத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். வாழ்க்கை அதன் போக்கில் நகர்கிறது. இந்த அலைகளை பாருங்கள். வெகு அரிதாக மணல் வெளியை தொட்டு விட்டு போகிறது. அதன் சலனங்கள் நமக்கு கவிதையின் வரிகள் மாதிரி இருக்கிறது.

3 comments:

இளைய அப்துல்லாஹ் said...

காத்திரமான கலந்துரையாடல் பீர்

இளைய அப்துல்லாஹ் said...

பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன. அதை பொறுக்குவதற்காக எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். அது உதிர்வதற்கும் நான் பொறுக்குவதற்குமான இடைவெளியில் உருவாவதே என் எழுத்துக்கள்



இது இன்னும் நல்லா இருக்கு

M.Rishan Shareef said...

நல்லதொரு பதிவு. பின்னவீனத்துவம் பற்றிப் பல விடயங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

பகிர்வுக்கு நன்றி நண்பரே !