காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Thursday, October 3, 2013

இஸ்லாமிய தனிநபர் சட்டமும் பெண்களும் - இந்திய சூழலை முன்வைத்து



பெண்களுக்கான உரிமைகள் மற்றும் இயக்கம் சார்ந்த போராட்டங்கள் நவீன உலகில் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில் இஸ்லாமிய பெண்களும் இதில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். காரணம் இஸ்லாமிய பெண்கள் மதம் என்ற எல்லை மற்றும் சட்டகத்திற்குள்  அடைக்கப்பட்டு அதன் மூலம் சகல உரிமைகளும், மனித இனமாக வாழ்வதற்காக வாய்ப்பும் ஆண்களால் மறுக்கப்பட்டு இரண்டாம் தர இனமாக அவர்கள் அடையாளமிடப்படுவது இங்கு விவகாரமான ஒன்றாக இருக்கிறது. வரலாற்றின் அடிப்படையில் கூர்ந்து கவனித்தால் அது பெரும்பாலும் மத பிரதிகளுக்கு அப்பாற்பட்டு தான் இருக்கிறது. பிரதிகளை சில தனிநபர்கள் அல்லது இயக்கங்கள் தங்களுக்கான அதிகாரமிக்க ஒன்றாக மாற்றியதன் விளைவு இது.  தனிநபர் சிவில் சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் இந்தியாவில் இதன் உக்கிரம் இன்னும் அதிகமாக இருக்கிறது. காரணம் சமூக தளத்தில் அது ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள் தான். ஜனநாயக அரசியலமைப்பு சட்டத்தைக்கொண்ட ஒரு நாட்டில் அந்த சட்டம் குடிமக்களை கட்டுப்படுத்தும் போது அதன் வரிகளுக்கும், நடைமுறைக்கும் இடையே பாரதூர இடைவெளியும்,நெகிழ்வற்ற தன்மையும் உருவாவது இயல்பு தான். குற்றவியல் சட்டங்களில் தான் இம்மாதிரியான முறைமை அதிகம் காணப்படுகிறது. ஆனால் சிவில் சட்டங்களில் இது குறைவு என்றாலும் தந்தைவழி சமூக அமைப்பில் சிவில் உரிமைகள் எப்போதுமே ஆண்களை மையப்படுத்தியே இருக்கின்றன. இதன் நுண்மயங்களிலிருந்து தப்பிப்பது அல்லது எதிர்கொள்வது பெண்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது.

இந்தியாவில் கிரிமினல் சட்டங்கள் மட்டுமே எல்லா இனத்தவருக்கும் பொதுவாக இருக்கின்றன. சிவில் சட்டங்கள் முஸ்லிம், கிறிஸ்தவ, பார்சி, யூத ஆகியோருக்கு தனியாக இருக்கிறன. இவை தனிநபர் சட்டங்கள் (Personal Law)என்றழைக்கப்படுகின்றன. ஓர் இந்து வீட்டில் திருடும் முஸ்லிம் நபருக்கும் , முஸ்லிம் வீட்டில் திருடும் இந்து நபருக்கும் இந்தியாவில் ஒரே தண்டனை தான். ஆனால் சிவில் சட்டங்கள் தான் மாறுபடுகிறது.  இந்தியாவில் முகலாயர் ஆட்சிகாலத்தில் சிவில் சட்டங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவும், கிரிமினல் சட்டங்கள் குறிப்பிட்ட சமூகங்களின்கட்டுப்பாட்டில் விடப்பட்டன. பாபர் காலத்தில் இஸ்லாமிய சிவில் சட்டங்கள் தெளிவற்ற, பரிணமிக்காத வடிவில் இருந்தது. அக்பர் தன் ஆட்சிகாலத்தில் இந்திய சமூக அமைப்பை ஜனநாயகப்படுத்த முயன்றார். மதசார்பின்மை என்ற நவீனத்துவ கருத்தாக்கத்தை 16 ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அதற்காக தான் தீன் -இ - இலாஹி என்ற எல்லா தரப்பையும் உள்ளடக்கிய புதிய வெகுஜன இயக்கத்தை உருவாக்கினார். ஆனால் தற்கால வரலாற்றில் அது மதம் என்று தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அக்பரின் காலத்தின் சிவில் சட்டங்களில் ஜனநாயகத்தன்மை அறிமுகப்படுத்தப்பட்டது. அவரின் காலத்துக்கு பிந்தைய முகலாய பேரரசர்கள் முந்தையை நிலையை தக்க வைக்க முயன்றனர். பின்னர் ஒளரங்கசீப் காலத்தில் தான் இஸ்லாமிய சிவில் சட்டம் முறையாக தொகுக்கப்பட்டு பதாவா ஆலம்கீரி என்ற பெயரில் அறியப்பட்டது. இதனை தொகுப்பதற்காக ஒளரங்கசீப் உலகம் முழுவதில் இருந்து 200 மத அறிஞர்களை அழைத்திருந்தார். அவர்களின் முன்னிலையில் பல ஆண்டுகள் உழைப்பில் இது தொகுக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை எவ்வித பெரும் மாறுதல் எதுவுமின்றி தொடர்கிறது. முகலாயர் ஆட்சிகாலத்திற்கு பின் வந்த பிரிட்டானிய காலனிய அரசு சமூகத்தின் தனிநபர் விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று முதலில் சொன்னது.  இந்தியர்கள் அவர்களின்சொந்த கலாசாரங்கள் படி தங்கள் வாழ்க்கைப்போக்கை அமைத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது. பிந்தைய கட்டத்தில் ராஜா ராம் மோகன் ராய் தலைமையிலான பிரம்ம சமாஜம் போன்ற இந்து சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சி காரணமாக அவர்கள் முதலில் இந்து மதம் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் தலையிட ஆரம்பித்தனர். அவர்களின் பிறமதம் சார்ந்த தலையீட்டு நடவடிக்கைகளில் முதலாவது உடன்கட்டை ஏறுதலை தடை செய்தல், இரண்டாவது குழந்தை திருமணத்தை தடை செய்தல். மேற்கண்ட இரண்டு நடவடிக்கைகளும் 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் சமூக தளத்தில் மிகப்பெரும் மாறுதலை ஏற்படுத்தின.

காலனியாதிக்க காலகட்ட இந்திய முஸ்லிம் சமூகம் மிகப்பெரும் சமூக பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது. ஆரம்ப கல்வியும் , உயர்கல்வியும் அதற்கு சவாலாக இருந்தது. முஸ்லிம் ஆண்களும், பெண்களும் மக்தப் எனப்படும் ஆரம்ப பள்ளிப்படிப்பை பள்ளிவாசல்களில் கற்றனர். இங்கு அரபி மற்றும் பாரசீகம் ஆகிய இரு மொழிகளும் கற்பிக்கப்பட்டன. மேலும் வட இந்திய முஸ்லிம்களிடையே அஷ்ரப் என்னும் குடிபெயர்ந்த உயர்குடி முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. இவர்கள் மதக்கல்வியில் சிறந்து விளங்கினர். ஆனால் இந்த குலத்து பெண்கள் தங்களை மற்றவர்களின் பார்வையிலிருந்தும், உறவு முறைகளிலிருந்தும் தவிர்த்துக்கொண்டனர். இவர்கள் மதக்கல்வியை ஆழ்ந்து கற்றனர். பர்தா முறையும் இவர்களிடத்தில் வழக்கில் இருந்தது. மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய முஸ்லிம்கள் வட்டாரம், மொழி,மரபு, மதம், வம்சம், வர்க்கம் , தொழில்முறைமை மற்றும் சமூக கட்டமைப்பு சார்ந்து பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருந்தனர். மேலும் சமூக களத்தில் அவர்கள் அஷ்ரப் என்ற உயர்குடி முஸ்லிம்கள் மற்றும் இந்தியாவில் மதம் மாறிய சாதி இந்துக்கள் ஆகிய இருபிரிவுகளாக அறியப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசியல் மற்றும் சமூக தலைவர்களாக பழைய முகலாய அரசின் முக்கிய மையப்பிரதேசங்களை முன்வைத்து தங்கள் சமூக சீர்திருத்தப்பணிகளை தொடங்கினர். மேலும் இவர்கள் நகரத்து படித்த வர்க்கமாக இருந்து அரசு வேலை மற்று கல்வித்துறை சார்ந்த பணிகளில் தங்களை தொடர்ந்தனர். ஆனால் இதன் தாக்கம்  மற்ற இந்தியவகைப்பட்ட முஸ்லிம்கள் மத்தியில் எதிரொலிக்கவில்லை. அரபு நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த உயர்குடி முஸ்லிம்கள் உத்திரபிரதேச மாநிலத்தில் அதிகம் இருந்தனர். மேலும் இவர்களின் ஆதிக்கம் பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின்பு குறைந்தது. காலனியாதிக்கம் இவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மேலும் அன்றைய கட்டத்தில் இந்தியாவில் பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய கல்விமுறையை இந்தியாவின் பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பாரம்பரிய மதரசா கல்வி அவர்களுக்கு தங்களை மேற்கத்திய கல்விமுறையோடு தகவமைத்துக்கொள்ள பெரும் தடையாக இருந்தது. இதனால் 19 ஆம் நூற்றாண்டு இறுதிபகுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பல இந்திய முஸ்லிம் ஆண் பெண்கள் கல்வி கற்காமலே இருந்தனர்.மேலும் மதரசா கல்வியில் ஆண்களுக்கு மட்டுமே மொழியை எழுதப்படிக்க கற்பிக்கப்பட்டது. ஆனால் பெண்களில் பெரும்பாலானோர் வாசிக்க மட்டுமே தகுதியானவர்களாக  இருந்தனர். மேலும் அவர்களுக்கு அரபி மற்றும் பாரசீகம் ஆகிய மொழிகளில் எழுதுவதற்கான பயிற்சி அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு எழுத்து தேவையில்லை என்ற சிந்தனையே அக்காலத்தில் நிலவியது. மேலும் பிரிட்டிஷாரின் கல்வி முறையை ஏற்க மறுத்து அவர்கள் அதனை நிராகரித்தனர். இதனை மாற்றியமைக்க நவீனத்துவ சிந்தனையாளரான சர் சையது அகமது கான் பாரம்பரிய இஸ்லாமிய கல்விமுறையுடன் மேற்கத்திய அறிவியல் கல்விமுறையை அளிக்கும் கல்வி நிலையம் ஒன்றை உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் ஏற்படுத்தினார். இது தான் பிற்காலத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகமாக உயர்ந்தது. இது பாரம்பரிய கல்விமுறையின் மீது நம்பிக்கைக்கொண்ட இஸ்லாமிய மத அறிஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை காபிர் என்று பத்வா அளித்தார்கள். அவர் அதை பொருட்படுத்தாமல் தன் கல்விப்பணியை தொடர்ந்தார்.

இந்திய முஸ்லிம் தனியார் சட்டம் முகலாயர் காலத்திலிருந்து தொடர்ந்த நிலையில் இந்திய முஸ்லிம் பெண்கள் மீது அதிக  தாக்கம் செலுத்தியது. முகலாயர் காலத்தில் முஸ்லிம் சிறுவர் சிறுமியர் ஆரம்ப பள்ளிக்கல்வியை கற்றனர். இந்நிலையில் மேல்நிலைக்கல்வியானது முஸ்லிம் மேட்டுக்குடி பெண்களுக்கு மட்டுமே வாய்த்தது. அஷ்ரப்  பிரிவை சார்ந்த உயர்குடி பெண்கள் மேல்நிலைக்கல்வியை தங்கள் வீடுகளில் கற்றனர். மேலும் பெண்கள் மேல்நிலைக்கல்வியை தங்கள் வீடுகளில் மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும் என்று பத்வாக்கள் (மதத்தீர்ப்பு)அளிக்கப்பட்டன. இது பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டு இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. கல்வியில் புரட்சியை ஏற்படுத்த அலிகாரில் செய்யத் அகமது கான் ஏற்படுத்திய அலிகார் பல்கலைகழகத்திலும் கூட ஆரம்ப காலத்தில் முஸ்லிம் பெண்கள் அதிகம் இணையவில்லை. அது ஆரம்ப காலத்தில் முழுக்க முஸ்லிம் ஆண்களை மையப்படுத்திய ஒன்றாக தான் இருந்தது. இதன் தொடர்ச்சியில் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் பெண் சார்ந்த சமூக சிக்கல்கள் வெளிப்படையான சமூக உரையாடலுக்கு வந்தன.

பிரிட்டிஷாரின் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 1929 ல் அவர்கள் குழந்தை திருமணச்சட்டத்தை இயற்றினர். அதன் பின்னர் மதச்சட்டங்களை முறைப்படுத்தும் பொருட்டு அவர்கள் இந்திய முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த முடிவு செய்தனர். அதன் ஒருபகுதியாக 1937 ல் முதன்முதலாக முஸ்லிம் தனிநபர் சட்டத்தை பயன்படுத்தும் சட்டம் (Muslim personal Law application act 1937)அமல்படுத்தப்பட்டது. 1939 ல் முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் (Dissolution of Muslim marriages act)இயற்றப்பட்டது. இந்த தருணத்தில் தான் முதன்முதலாக முஸ்லிம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 15 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனோடு தொடர்புடைய சில ஷரத்துகளும் உருவாக்கப்பட்டன.  இவை எல்லாம் அதுவரையிலும் வரையறை செய்யப்படாமல் இருந்த முஸ்லிம் சிவில் சட்டத்தை ஒழுங்குபடுத்த கொண்டுவரப்பட்டதே. இதில் சிவில் கூறுகளாக பத்து அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

 1. உயிலிலா இறக்கம் (Intestate succession)2. திருமணம் (Marriage)3. திருமண இழப்பு (Dissolution of Muslim Marriage)4. திருமண அன்பளிப்பு (mahr)5. ஜீவானம்சம் (Maintenance)6. பெண்கள் சிறப்புச்சொத்து (Special Property of females)7. காப்பாளர் பொறுப்பு (Guardianship)8. கொடை (Gift)9. வக்பு (wakf)10. அறக்கட்டளை அமைப்பும் அதன் சொத்தும் (Trust and Trust properties). மேற்கண்ட பத்து அம்சங்களின் அடிப்படையில் தான் முஸ்லிம் தனிநபர் சட்டம் இந்தியாவில் இன்னும் தொடர்கிறது. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில்  இது குறித்த பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் 1973 ல் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (All India muslim personal law board)ஏற்படுத்தப்பட்டது.
இதில் இந்தியாவின் முன்னணி மத அறிஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட 200 மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதன் பணி என்பது முஸ்லிம் தனிநபர் சட்டத்தை காப்பதுடன் அதனை அமலாக்கத்தை கண்காணிப்பதுமாகும். இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் என்பது இந்தியாவை பொறுத்தவரை முஸ்லிம் தனிநபர் சட்டத்தை அமலாக்குவதும், அதனை தொடர்ந்து செயல்படுத்துவதும் ஊர் கூட்டமைப்பு என்றழைக்கப்படும் ஜமா அத்துகள், அதன் பின்புலமாக இருக்கும் மத அறிஞர்கள் மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் காஜிகள்.  இந்த அதிகாரபூர்வமற்ற கட்டமைப்பு இந்தியாவில் தொடர்ந்த நிலையில் பல இஸ்லாமிய குடும்பம் சார்ந்த சிக்கல்கள் பலமுறை நேரடியாக நீதிமன்றங்களுக்கு சென்றிருக்கின்றன. ஆனால் இதன் காரண காரியங்களை சமூகம் சரியான முறையில் ஆராய்வதில்லை. இந்தியாவில் உரிமையில் சட்ட இயல்பில் திருமணம் சார்ந்த பிரச்சினைகளே முன்னிலை பெறுகின்றன. குறிப்பாக மண முறிவு சம்பந்தப்பட்ட விவகாரம் தான் முக்கியத்துவம் பெறுகிறது.



இந்தியாவில் இஸ்லாமிய தனிநபர் சட்டம் தொடர்பான பிரச்சினைகளில் தலாக் என்னும் விவாகரத்து தான் முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக ஒரே மூச்சில் மூன்று தடவை தலாக் என்று சொல்லி திருமண உறவை முறிக்கும் விவகாரம் தான் இன்று இஸ்லாமிய பெண்கள் தளத்தில் மிகப்பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. இஸ்லாமிய சட்டப்படி மணமுறிவு இருவகையானது. ஒன்று ஆண்கள் முன்வைக்கும் தலாக். மற்றொன்று குலாஉ என்றழைக்கப்படும் பெண்களும் கோரும் மணமுறிவு. மேலும் தலாக் என்ற மணமுறிவு பல்வேறுபட்ட வடிவத்தில், பல்வேறுவித குணாதிசயத்தில் இருக்கிறது. இதில் தலாக் இ பிதாஹ் எனப்படும் முத்தலாக் முறைமை தான் இந்தியாவில் பெரும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கிறது. இதில் ஆண்கள் பெண்கள் முன்னிலையில் அல்லது அவர்கள் இல்லாமல் வாய்மொழியாக, எழுத்துபூர்வமாக, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து அடைய முடியும். (சட்டப்பள்ளிகளின் கருத்துப்படி மூன்றுமுறை உச்சரிக்கும் போது கணவனிடம் விவாகரத்து குறித்த உள்நோக்கம் இருக்க வேண்டும்.  தலாக் என்ற உச்சரிப்பில் மேலும் என்ற சொல்லையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்) நபிக்கு பிந்தைய கலிபாக்கள் எனப்படும் ஆட்சியாளர்களின் வழிமுறையை பின்பற்றி இந்தியாவில் இது முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் அன்றைய சூழலின் எதார்த்தத்தில் இருந்து இது மத அறிஞர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வியாக்யானம் செய்யப்பட்டது. இந்நிலையில் உலகின் பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது. ஒளரங்கசீப் காலத்து முஸ்லிம் ஷரியத் சட்ட வடிவமைப்பில் இது உள்நுழைக்கப்பட்டது. இந்தியாவில் 1937 ல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இந்திய முஸ்லிம் தனியார் சட்டம் புனரமைக்கப்பட்ட போது இந்த முத்தலாக் முறையை நீக்க அவர்கள் முயற்சித்தனர். ஆனால் டெல்லியை சார்ந்த தேவ்பந்த் என்னும் பிரபல இஸ்லாமிய மதப்பிரிவை சார்ந்த மத அறிஞர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அப்போது நீக்க முடியவில்லை. சமூக அதிகாரங்கள் அனைத்தும் ஆண்களின் கையில் இருக்கும் இந்திய சூழலில் இந்த முத்தலாக் முறையானது பல இந்திய முஸ்லிம் பெண்களின் வாழ்வை சாகடித்திருக்கிறது. இதன் காரணமாக பல இஸ்லாமிய பெண்கள் பல்வேறு காலகட்டங்களில் நீதிமன்றங்களுக்கு சென்றிருக்கிறார்கள். பல நேரங்களில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்புகளை நீதிமன்றம் அளித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் இந்த முத்தலாக் முறையை சட்டவிரோதம் என்று அறிவித்த போதும் கூட வட இந்தியாவின் பல பகுதிகளில் இது இன்னும் தொடர்கிறது. (பல வருடங்களுக்கு முன்னர் அலகாபாத் உயர்நீதிமன்றம் இதை சட்டவிரோதம் என்று அறிவித்த போது தேவ்பந்திகள் நீதிமன்றத்திற்கு எதிராக மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார்கள்.)மனைவியோடு மனஸ்தாபம், உரசல், மோதல் ஏற்படும் தருணங்களில் கணவன் மூன்று முறை இதை உச்சரித்து அவளின் வீட்டுக்கு அனுப்பி விடுகிறான் அல்லது அனுப்பி விட்டு கடிதம் மூலம் இதனை மூன்று முறை தெரிவித்து விடுகிறான். பின்னர் காஜிகளை சரிகட்டி அதற்கான சான்றிதழும் பெற்றுக்கொள்கிறான். இந்த சட்ட வழிமுறை தான் பல குடும்பங்களில் ஆண்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது.மேலும் இதனை விளையாட்டாக கூட உச்சரிக்க அனுமதி இல்லை. அவ்வாறு உச்சரித்தால் மனைவியுடனான உறவு முறிந்து விடுகிறது. இரு வருடங்களுக்கு முன்னர் கல்கத்தாவில் இதுமாதிரி ஒருவர் தூக்கத்தில் உளறிய காரணமாக அவரிடமிருந்து அவர் மனைவி வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டார். மேலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஜமா அத் என்னும் முஸ்லிம் கூட்டமைப்பு அல்லது காஜி முன்னிலையில் முறைப்படி மனு செய்து விவாக ரத்து செய்யும் முறையும் வழக்கில் இருக்கிறது. ஆனால் இந்திய அளவில் பெரும்பாலும் இது ஆண்களுக்கு சாதகமாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருக்கிறது. இதன் ஒவ்வாமை மற்றும் நீதிமுறையை கேள்விக்குள்ளாக்கி பல விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு வருகின்றன. ஆக எல்லா மதங்களை சார்ந்த சிவில் சட்டங்களும் நடைமுறையில் பெண்களுக்கு பாதகமான சூழலையே உருவாக்கின்றன.

1939 ல்  முஸ்லிம் மணமுறிவு சட்டம் (Dissolution of Muslim marriage act)இயற்றப்பட்ட போது அதன் முறைகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டன.

கணவனால் முன்வைக்கப்படும் மணமுறிவு

1. தலாக் (உரிமை துறப்பு)

2. இலாஅ (உறுதிமொழி சார்ந்த பிரிவு)

3. ஷிகார் (அறம் சார்ந்த இழப்பீடு)

மனைவியால் முன்வைக்கப்படும் மணமுறிவு

1. தப்வீத் (பிரதிநிதித்துவ மணமுறிவு)

2. குலாஉ (விடுவித்தல்)

பரஸ்பர மணமுறிவு

முபாராஹ் (பரஸ்பர விருப்பம்)

நீதிமன்ற செயல்முறை அல்லது காஜி சார்ந்த மண முறிவு

லியான் (பரஸ்பர குற்றச்சாட்டு)

பஸ்க் (நீதிமன்ற தீர்மானம்)

மேற்கண்ட முறைகளில் ஆண்கள் சார்ந்த தலாக் என்பதும், நீதிமன்றம் சார்ந்த பஸ்க் மற்றும் பரஸ்பரம் சார்ந்த முபாரஹா  போன்ற முறைகள் தான் இந்தியாவில் அதிகம் வழக்கில் இருக்கிறது.  இதில் பெண்கள் சார்ந்த மணமுறிவு முறையான குலாஉ  இந்தியாவில் மிக அரிதான சந்தர்ப்பங்களில் தான் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் ஆண்களே தீர்மானிக்கிறார்கள். முல்லாக்கள் என்னும் இஸ்லாமிய மத அறிஞர்களால் திரும்ப திரும்ப மொழியப்படும் ஆண் மையம் சார்ந்த சொல்லாடல்கள் இதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகின்றன. ஒரு காலத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விதவைப்பெண்களை பற்றி மோசமாக விமர்சித்தது, 18 ஆம் நூற்றாண்டின் கிறிஸ்தவம் பெண்களை நடத்திய விதம் ஆகியவை பெண்கள் சார்ந்த விஷயங்களில் எல்லா மதகுருக்களும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்திய முஸ்லிம் தனியார் சட்டத்தின்  மற்றொரு முக்கிய அம்சம் பலதாரமணம். அதாவது ஒருவர் தன் தகுதியை பொறுத்து நான்கு திருமணங்கள் செய்வதற்கு அனுமதி. இதுவும் பலவாறாக தவறாக பயன்படுத்தப்படுகிறது. முதல் மனைவி இருக்கும் போதே அவளின் சம்மதம் இல்லாமல், இயல்பான உடலியல் தேவைகளுக்காக, தனக்கு அத்தகைய தகுதி இல்லாமல்  இருந்தும் பலர் இரண்டாம் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்தியாவில் தற்போது இதன் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தாலும் இதுவும் இஸ்லாமிய அடிப்படையான வரலாற்றுச்சூழலில் தவறாக அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. போர்காலத்தில் கூறப்பட்ட இந்த முறைமை நவீன உலகின் சமாதான காலத்திலும் செயற்கையாக புரிந்து கொள்ளப்பட்டு சமூக நடைமுறையாக திணிக்கப்படுகிறது. இதனை மத அறிஞர்கள் கூட தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தவறான தீர்ப்பு வழங்கும் நடைமுறை இருக்கிறது. சமீபத்தில் டெல்லியில் திருமணம் செய்த ஒரு வாரத்தில் ஒருவர் மற்றொரு பெண்ணை பலாத்காரம் செய்தார். காஜியின் முன் இந்த பிரச்சினை சென்ற போது
அவனால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் இவனுக்கு மனைவி என்று தீர்ப்பளித்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற போது நீதிமன்றம் அந்த காஜியின் செயல் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்ததோடு மட்டுமல்லாமல் பலாத்காரம் செய்த நபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது.

இந்திய முஸ்லிம் பெண்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைமை பற்றி சமீபத்தில் தேசிய அளவில் புள்ளிவிபரம் வெளிவந்தது. அதில் பெண்கள் ஆரம்ப கல்வியோடு மட்டுமே இருப்பதாகவும், பெரும்பாலானோர் உயர்கல்வி கற்க இயலாதவர்களாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் பருவமடைந்த உடன் அவளின் பள்ளிப்படிப்பை நிறுத்தி விடும் அவலமும் வட இந்தியாவில் காணப்படுகிறது. (தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில கிராமங்களில் இம்முறைமை இருக்கிறது). இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தில் பெரும்பாலும் பிற்போக்கான தேவ்பந்த் உலமாக்களே இருப்பதால் அவர்கள் இது குறித்த எவ்வித சுயவிமர்சனமும், சுய சிந்தனையும் இல்லாமல் இருக்கின்றனர். இந்திய முஸ்லிம் சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு முறைமைகளை பற்றிய எவ்வித புரிதலும் இல்லாமல் இருக்கின்றனர். இந்த சிந்தனை கோளாறே பல விதமான நடைமுறைச்சிக்கல்களுக்கு காரணமாகின்றன. இந்நிலையில் முஸ்லிம் சிவில் விவகாரங்களை கவனிப்பதற்காக சிவில் கோர்ட்களில் தேவை இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதது. திருமணம் என்பது இருதனிநபர்கள் என்பதை விட குடும்பமே தீர்மானிக்கும் சூழலில் மண முறிவு என்பதையும் வெறும் தனிநபர்கள் தீர்மானிக்க முடியாது. தர்க்கரீதியாகவும் அது சரியான முறைமை அல்ல. மேலும் திருமணம் என்பது சாட்சிகள் முன்னிலையில் சட்டரீதியான ஒப்பந்தமாக இருக்கும் சூழலில் அதை முறிப்பதற்கும் சட்டரீதியான வழிமுறைகள் தேவையாக இருக்கிறது. அதேநேரத்தில் பெண்களுக்கான சட்ட உரிமைகளும் மீட்டெடுக்கப்பட வேண்டும். இந்திய சூழலில் பிற முஸ்லிம் நாடுகளை போன்று, இலங்கையை போன்று சிவில் நீதிமன்றங்கள் உருவாவதற்கான அவசியத்தை  நாம் உள்ளிருந்து உணர்வதுடன்  அதற்காக குரல் எழுப்புவதும் அவசியம்.

அடிக்குறிப்புகள்

1. நான் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டம் வரலாற்றில் திருத்தப்பட்டது என்று இங்கு குறிப்பிட்டிருப்பது அரசியல் அமைப்பு சார்ந்து உருவாக்கப்பட்ட முஸ்லிம் சிவில் சட்டத்தை. இஸ்லாமிய அடிப்படைகளின் மீது கட்டமைக்கப்பட்ட ஷரீஅத் சட்டம் பற்றியது அல்ல. இரண்டிற்கும் நுண்மயமான வேறுபாடுகள் இருக்கின்றன.

2. 1973  உருவாக்கப்பட்ட முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் போதாமைகள் காரணமாக 2005 ல் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சட்டவாரியம் உருவாக்கப்பட்டது. இது பெண்கள் நலன் சார்ந்து திருமண விதிமுறைகளை உள்ளடக்கிய நிக்காஹ்நாமா என்ற ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது.

3. பெண்கள் விஷயத்தில் முஸ்லிம் தனிநபர் சட்டம் பரிணாம வளர்ச்சி அடையாமலா இருக்கும்? என்ற அல்லாமா இக்பாலின் கூற்று இந்தியாவை பொறுத்தவரை இன்னும்  உயிர்பெறவில்லை என்பதை உணர முடிகிறது.

4. இந்திய முஸ்லிம் தனியார் சட்டம் பிற்போக்கான தேவ்பந்த் முல்லாக்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதால்  இன்னும் பெண்களின் சட்டப்பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத ஒன்றாக இருக்கிறது.

5. பாகிஸ்தான் அரசு அறுபதுகளில் முஸ்லிம் குடும்ப பாதுகாப்பு அவசர சட்டத்தை இயற்றியது. முஸ்லிம் பெண்களுக்கு குடும்ப வன்முறை மற்றும் விவாகரத்து ஆகிய விஷயங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பது இதன் நோக்கம்.
ஆனால் இந்தியாவில் இம்மாதிரியான சட்டத்திருத்தத்தை மத விவகாரங்களில் மேற்கொள்வது கடினம்.









No comments: