பெண்கள் தங்கள் இயல்பான நடத்தையை கட்டுப்படுத்த வேண்டும். உறவினர் ஆண்களின் துணையில்லாமல் வெளியே செல்லக்கூடாது என்பது போன்ற மிகைக்கட்டுப்பாடுகள் வழக்கில் இருக்கும் சவூதி அரேபியாவில் பல்வேறு காலகட்டங்களில், அவசியமான தருணங்கள் பெண்கள் எழுத முன்வருகின்றனர். அவர்களில் பலர் மனித உரிமை செயற்பாட்டாளர்களாக, எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, கல்வியாளர்களாக மாறுகின்றனர். இந்த மாற்றம் சில நேரங்களில் புற அழுத்தத்தால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த அழுத்தம் அதற்கு எதிர்வினையாற்றும் சூழலுக்கு இயல்பாகவே பெண்களை தயார்ப்படுத்துகிறது. வாழ்க்கை சார்ந்த இயல்பான ஓட்டத்திலிருந்து பெண்களை தடுக்கும் சவூதியின் இம்மாதிரியான அதீத கட்டுப்பாடுகள் பல்வேறு கட்டத்தில் பல தரப்பினராலும் விமர்சிக்கப்படுகிறது. மனித இனத்தில் ஆண் பெண் என்ற இருமை தரப்படுத்துவதற்கானதல்ல. மாறாக உயிரியல் சார்ந்த வித்தியாசப்படுத்தலே. இதன் தொடர்ச்சியில் இதற்கான குரல்கள் சவூதியில் அவ்வப்போது ஏதாவது ஒரு வடிவத்தில் எழுகின்றன. புனித நகரமான மெக்காவின் பெற்றோர்களுக்கு மலேசியாவில் பிறந்து சவூதி அரேபியாவில் வசிக்கும் நிம்மா அல் நவாபும் இதில் ஒருவர். இவரின் கவிதைகள் சவூதிய அரேபிய அகவயம் சார்ந்த சிறந்த பிரதிபலிப்பு பிம்பமாக இருக்கின்றன. ஒரு வகையில் சவூதிய குடிமகனின் தன்னிலை வெளிப்பாடு என்று கூட சொல்லலாம்.
தற்போது தன் கவிதைகளால் உலகம் முழுக்க அறிமுகமாகி இருக்கும் நிம்மா அல் நவாப் மலேசியாவில் 1981 ஆம் ஆண்டு சவூதிய பெற்றோர்களுக்கு மகளாக பிறந்தார். இவரின் பெற்றோர் புனித நகரமான மெக்காவை சார்ந்தவர்கள். பிறந்த சில வருடங்களுக்குப்பின் சவூதிக்கு புலம் பெயர்ந்த நிம்மா அங்கு தன் கல்வியை கற்றார். பின்னர் அங்குள்ள பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். ஆங்கில இலக்கியம் மீது அவருக்கு இளமைகாலத்திலேயே மிகுந்த ஆர்வம் இருந்தது. இளமைகாலம் சார்ந்த அறிவின் தேடல் இவருக்கு சவூதிய சமூகம், கலை, கலாசாரம், கட்டடக்கலை, கவின்கலை மற்றும் இஸ்லாம் சார்ந்ததாக இருந்தது. அதனோடு தன் இயல்பை மேற்கண்ட அம்சங்களோடு நகர்த்திக்கொண்டார். இதன் தொடர்ச்சியில் இது சார்ந்து தான் அவதானித்த விஷயங்களை எழுத்தில் பதிவு செய்தார் நிமா. அந்த அவதானம் ஒரு சிறந்த கலை படைப்பிற்கான வாயில்களை திறந்தது. இது நிமாவின் கவிதைக்கான படைப்பு வெளியாகவும் இருந்தது. மிகச்சிறந்த கவிதைகள் இவரிடமிருந்து வெளிவந்தன. நிமா ஸ்கார்ட்லாந்தின் எடின்பர்க்கில் படித்த போது பல்வேறு மதங்கள் குறித்த அறிவை வளர்த்துக்கொண்டார். மேலும் புதிய சிந்தனைகள் மற்றும் அறிவுத்தேடல் அவருக்கு இயல்பாக வந்தன. நவாப் குழந்தையாக இருக்கும் தருணத்தில் அவரின் தந்தை அவருக்கு ஷேக்ஸ்பியரின் கவிதைகளை அறிமுகப்படுத்தினார். மேலும் அவரின் வீட்டில் அரபு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர்கள் வருகை தந்து பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். அவரின் வீட்டை அவர்களின் தங்குமிடமாக மாற்றினார் நவாபின் தந்தை. அதன்மூலம் பல விஷயங்கள் குறித்த விவாதகளமாக அவரின் வீடு இருந்தது. மேலும் சவூதிய அமெரிக்க கவிஞரான நவோமி சிஹாபின் சவூதி குறித்த பயணநூலால் அதிகம் தாக்கமுற்றார். அதில் சவூதியின் பண்பாடு, நடைமுறை வழக்கங்கள் போன்றவை குறிக்கப்பட்டிருந்தன. அதன் மூலம் தன் கவிதைகளுக்கான படிமக்கூறின் நதிமூலத்தை அடைந்தார் நவாப். தன் ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த பின் நவாப் ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் அரபி ஆகிய இருமொழிகளில் இருந்தும் படைப்புகளை மொழிபெயர்க்கும் பணியை தொடங்கினார். பின்னர் கவிதைகளால் தாக்கம் பெற்ற நவாப் அரபு பத்திரிகை மற்றும் இதழ்களில் தன் படைப்புகளை வெளியிட்டார். அவரின் முதல் தொகுப்பு unfurling 2004
ல் வெளிவந்தது. இதன் வெளியீட்டு சவூதியில் நடந்த போது சவூதிய வஹ்ஹாபிய முல்லாக்களும், பிற அடிப்படைவாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரின் உடல் கூட அப்போது கண்காணிக்கப்பட்டது. அவரின் தலைமுடி தெரிகிறது என்று கூட சிலர் கூச்சலிட்டனர். அதை நிமா பொருட்படுத்தவில்லை. மேலும் ஒருவர் கோபத்துடன் நிமா முன்வந்து முக்காடு வழியாக தலைமுடி தெரிவதைப்பற்றி கேட்டார். அதற்கு நீங்கள் அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சாதாரணமாக பதிலளித்தார் நிமா. மேலும் சில பழமைவாத ஊடகங்கள் இதை விமர்சித்தன. மேடையில் இதெல்லாம் சகஜம் என்றார் அதற்கான விளக்கத்தில் நிமா. இதற்கு பிந்தைய கட்டத்தில் சவூதியின் உணவு விடுதியில் முகமூடி அணிந்த ஒரு சவூதி பெண் இவரின் கையை பிடித்துக்கொண்டு உங்கள் கவிதைகளையும், இணைய விவாதங்களையும் நான் தொடர்கிறேன். நீங்கள் எங்களுக்காக குரல் கொடுக்கிறீர்கள். இதை தொடருங்கள். நான் உங்களின் வாசகி என்றார். பின்னர் நிமா அவரை அடையாளம் கண்டார். அவர் ஒரு கல்லூரியின் ஆங்கில இலக்கிய பேராசிரியை.
தற்போது உலக அளவில் பிரபலமாகி வரும் நிமா தனக்கு பிடித்தமான, தான் மிகுந்த மனப்பதிவு அடைந்த கவிஞர்களாக பாப்லோ நெரூதா, மஹ்மூத் தர்வீஷ், யஹுதா அமிச்சி, அமீரி பரக்கா, லுசிலி கிளிப்டன் போன்றவர்களை குறிப்பிடுகிறார். இவர்களின் படைப்புகளோடு மிகுதியாக பயணம் செய்தார். மேலும் சூபிகள் மீதும் அவர்களின் தத்துவ கவிதைகள் மீதும் நிமாவிற்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதை வெகு இயல்பாக ரசித்தார். அதன் படைப்பு வெளிக்குள், விகசிப்பில் ஆழ்ந்து அனுபவித்தார். இதன் வெளிப்பாடு நிமாவிடமிருந்து Canvas of the Soul (Mystic poems from the
heartland of Arabia)என்ற தொகுதியாக வெளிவந்தது. இந்த தொகுதி நிமாவை மற்றொரு உயரத்திற்கு செல்ல வைத்தது. சூபிகளின் , குறிப்பாக ரூமி, இப்னு பாரித் மற்றும் இப்னு அரபி ஆகியோரின் கவிதைகளின் தாக்கமாக இது இருந்தது. அதன் ஸ்பரிசம் அரபுலகை தாண்டி மேற்குலகம் வரை நீண்டது.
நிமா ஒரு கவிஞராக மட்டுமின்றி புகைப்பட கலைஞர், எழுத்தாளர், ஓவியர் போன்ற பன்முக ஆளுமைத்திறனோடு விளங்கினார். மேலும் நான் வெறுமனே ஒரு கவிஞர் இல்லை. மாறாக கலைஞர். கலையின் அழகு என்பது அதன் அர்த்தம் தான். ஆக ஒரு கலைஞனின் பணி என்பது பலதரப்பட்ட அர்த்தங்களை கொண்ட அடுக்குகளில் அதன் அர்த்தங்களை தேடுவது தான். அதன் நுண்மயங்களில் ஆழத்தை தேடுவது அதன் கலை என்றார் நிமா. ஒரு தேர்ந்த ஆளுமைக்கான முழு தகுதியும் இதன் மூலம் நிம்மாவிடம் வெளிப்பட்டது.
நிமாவிற்கு கவிதைக்கான உள் ஊட்டத்தை அளித்தவர் அமெரிக்க அரபு கவிஞரான நயோமி சிகாப் நை. இவரின் கவிதைகள் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக தானும் அதை பரிசோதிக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த பரிசோதனை அவரை கவிதைக்கான தளம் அமைத்துக்கொடுத்தது. இதுகுறித்து ஒருகட்டத்தில் நிமா இவ்வாறு குறிப்பிட்டார். " ஆங்கில இலக்கியம் மற்றும் ஷேக்ஸ்பியரின் எழுத்துக்கள் என்னை இலக்கியம் நோக்கி பிணைத்தன. இதன் தொடர்ச்சியில் ஷெல்லி, லார்ட் பைரன், கீட்ஸ், வேர்ட்ஸ்வொர்த் மற்றும் டென்னிசன் ஆகியோர் என்னை அதிகம் பாதித்தனர். நயோமி எனக்குள் சிறந்த ஆழ் அமைதியாக இருந்தார். என்னை அதிகமும் தூண்டினார். மேலும் வாழ்க்கையின் உள்ளார்ந்த தத்துவம் என்ன என்பதையும் விளக்கினார். இவ்வாறு அவர் சிறந்த உள்ளூட்டமாக இருந்தார். அதன் மூலம் நான் கவிதைகளை அதிகம் எழுதினேன். வாசகர்களுக்கு அதை பகிர்ந்தேன் என்றார்".
சூபிச கருத்தியலில் அதிக தாக்கமும், ஆர்வமும் கொண்ட நிமா அதன் தொடர்ச்சியாக அவரின் சூபிசம் பற்றிய தொகுப்பில் அதனை வெளிப்படுத்தினார். மேலும் அதன் அட்டைப்படம் பற்றிய கேள்வி வந்த போது அதை தன் வாசகர்களுக்கே விட்டுவிடுவதாக நிமா சொன்னார். முக்கிய கருத்து என்பது அமைதி, சலனமற்ற மனம் ஆகியவற்றின் ஒருங்கிணைவு தான். இதன் உள்ளார்ந்த விஷயங்கள் என்பது தேடுதல், கேள்வியடைதல், ஒன்றை தேடுதல் போன்றவைகள் தான். ஆக கவிதையின் செய்தி என்பது வாசகர்களின் தேடல் சார்ந்த மாறுபடும் தளங்கள் தான் என்றார்.
நிமாவின் ஆன்மீக கவிதைகள் அவருக்கான படைப்பு வெளியில் மிகுந்த தனித்துவம் வாய்ந்தவை. படிம கருக்களை கொண்டவை. நடைமுறைவாழ்வில் மனித அந்தரங்கத்தின் உரையாடலை ஆன்மீகத்தனத்தோடு பிரதிபலிப்பவை. மரபான இறையியல் கவிதைகளை தாண்டி அதற்கான லௌகீக நுட்பத்தோடு கவிதையாக வெளிப்படுபவை. உயிரோட்டம் மிக்கவை. வாழ்வின் எல்லா சாத்தியப்பாடுகள் குறித்த பிரதிபலிப்புகளை உடையவை. இதனை உள்ளடக்கிய அவரின் canvas of soul மிக முக்கிய தொகுப்பு. அதனிலிருந்து சில கவிதைகள்
கொண்டாடப்படும் இரு உலகங்கள்
உங்கள் மாட்சிமையின் ஆசிகள்
இரைப்பறவைகள், சமாதான பறவைகள்
ரோஜா, மல்லிகை,தாமரை
மணல் துகள்கள், பாறைகள், கற்பாறைகள்
ஆறுகள் மற்றும் பெருங்கடல்கள்
அமைதியாக, உரத்த குரலாக உங்கள் பிரசன்னத்தை குறிக்க
மௌன பிரார்த்தனை உங்களின் முன்பு
மூச்சு காற்று மூலம் உயர்ந்து சுவாசிக்கும் போது
எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் உங்களின் மூச்சாக
இன்னும் இரு உலகங்கள் பிளவுபடும் போது
ஒரு தற்காலிக பிளவில்
இறுதி இணைவில்
முழு தன்மையை எடுக்கிறது
ஒவ்வொரு இதயத்துடிப்பிலும், ஆத்ம துடிப்பிலும்
கொண்டாடுகிறேன் உன் அதிகாரத்தை, அன்பை
ஒருமை, அன்பு, அன்பு மற்றும் இரக்கம் என்னை தழுவுகிறது
நாங்கள் குடிக்கிறோம், உன் படைப்பின் ரசத்தை, அதன் பேரின்பத்தை, அருள் அமைதியை....
இறை தேடல் குறித்த படிமங்களை, குறிப்பீடுகளை மேற்கண்ட கவிதைகளில் காண முடிகிறது. அதன் நுண்மங்களில், நுண் அசைவுகளில் ஆன்மாவின் குரலை கேட்க முடிகிறது. /மூச்சுக்காற்று மூலம் உயர்ந்து சுவாசிக்கும் போது/ சுவாச மூச்சிற்கும் ஆன்மாவிற்கும் இடையே உள்ள தொடர்பை இது குறிப்பீடு செய்கிறது. மாய வெளியில் பிளவுபடும் உலகமாக அதன் வரிகள் தொடர்கின்றன. அதன் விகசிப்பில் கவிதையின் உள்ளகம் விரிகிறது. உணர்வு நிலை மாறுகிறது. அது தொடர்ச்சியாக சில குறியீடுகளை வரைந்து கொண்டு செல்கிறது. இதன் தொடர்ச்சியில் அடுத்த கவிதை இவ்வாறு செல்கிறது. ஆன்மாவின் திரைச்சீலை என்ற தலைப்போடு பின்வருமாறு விரிகிறது.
ஈரமில்லாமல் உதிர்ந்த தரையில் இருந்து உயரும்....
உயரட்டும் உயரட்டும்
நனைந்து கொள்ளுங்கள்
அருள் என்ற மழைத்துளியில்
நடந்து கொள்ளுங்கள் அமைதி என்ற வானவில்லின் மீது
மலரும் பூக்களின் நறுமணத்தை உள்ளிழுக்க
உங்கள் ஆன்மாவின் திரைச்சீலையாக
கதிரியக்க வண்ணங்களில் அது வெடிக்கிறது
நம் பார்க்க முடியாத கண்களுக்கு அப்பால்
இறை தேடல் குறித்து உள்ளீடாக, முடிவற்ற தேடலாக இது தொடர்கிறது. அதை கதிரியக்கமாக அதலிருந்து விரியும் பல நிறங்களாக குறிப்பீடு செய்கிறது. மனம் பற்றிய உள்தேடலில் மற்றொரு கவிதை விரிகிறது.
உள் தாயகம்
உள் சுயத்தின் தாயகம்
மூச்சு வேகமாக
நம்பிக்கையின்மையின் ஒரு கணப்பொழுதில் தங்கியிருந்து
சிறைப்பட்டு
வெளியேறுகிறது விரக்தியின் மூச்சாக
ஒரு நொடியில்
ஊற்றுகிறது நம்பிக்கை
அதன் நகைச்சுவையின் மருந்தாக
வறண்டு விட்ட ஆன்மா மீது
மலேசியாவில் பிறந்து சவூதியில் வாழ்ந்து வரும் நிமா தன் எழுத்துக்கள் மூலம் மேற்குலக கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரின் படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் பாரசீக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. நுண்மையான கவிதை மொழி, அதன் சீரான இயங்குநிலை மற்றும் பன்முகப்பட்ட கலை ஆளுமை இவற்றால் அவரின் எழுத்துப்பயணம் தொடர்ந்து வருகிறது. இலக்கிய உலகம் அவரிடமிருந்து இன்னும் பல அற்புதங்களை எதிர்பார்க்கிறது.
No comments:
Post a Comment