அகில இந்திய ஜம்மியத்துல் உலமா அமைப்பின்
தலைவர் மஹ்மூத் மதானியின் சமீபத்திய பேச்சு இந்தியாவில் மதசார்பற்ற கட்சிகளின் சிறுபான்மை
ஆதரவு செயல்பாடுகள் குறித்த கேள்வியை எழுப்பியிருக்கிறது. சுதந்திரத்திற்கு பிந்தைய
இந்தியாவில் காங்கிரஸின் முஸ்லிம் ஆதரவு நடவடிக்கைகள் என்பவை வெறும் கண்துடைப்பு என்றும்,
மத நல்லிணக்கத்திற்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்றும், அதன் ஆட்சி காலத்தில்
தான் பெரும் வகுப்பு கலவரங்கள் நடைபெற்றன என்பதும் அவரின் கருத்து. இதை நரேந்திரமோடி
வரவேற்றுள்ளார். இடதுசாரி கட்சிகளும் இதை ஓரளவிற்கு ஆமோதித்திருக்கின்றன. முஸ்லிம்களுக்கு
இடஒதுக்கீடு கேட்டு ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய வரலாற்றில் மாபெரும் துயரமாக அமைந்த பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இம்மாதிரியான
கருத்துக்கள், விமர்சனங்கள், எதிர்வினைகள் எழுவது தவிர்க்க இயலாததாகி விட்டது. பாகிஸ்தான்
என்ற பெரும் நிலபரப்பு பிரிந்து சென்று விட்ட பிறகு எஞ்சியிருக்கும் முஸ்லிம் சிறுபான்மையினர்
இந்தியாவில் அடையாளச்சிக்கலுக்கு உட்படுகின்றனர். பிரிவினை துயரத்தின் எச்சங்கள் இன்னும்
வட இந்தியாவில் பெரும் சவாலாக இருக்கின்றன. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது
1923 ஆம் ஆண்டு இந்து மகாசபை தலைவரான வி.டி. சாவர்க்கர் இந்துத்வா என்ற கருதுகோளை முன்வைத்தார்.
அதாவது இந்தியாவிற்கென்று தனித்த கலாசார, நாகரீக, வரலாற்று பாரம்பரியம் இருக்கிறது.
மேலும் அது இந்து தேசியத்தை உள்ளடக்கி இருக்கிறது என்றார். பன்மயப்பட்ட இந்திய சமூகம்
என்பது அதற்கு அப்பால் ஒரே தேசியத்தை, பண்பாட்டை, இனத்தை கொண்டிருக்கிறது என்றார்.
வரலாற்று ரீதியாக , பன்மயப்பட்ட இந்தியாவில்
இப்படியான ஒற்றை தேசிய, கலாசார கருதுகோள்
என்பது செயற்கையான ஒன்றே. எப்போதுமே செயற்கையான கட்டமைப்பு ஒன்றாவதில்லை. பல என்பது
ஒன்றாக மாற முடியாது.
இந்திய இஸ்லாமியர்களை பொறுத்தவரை 95
சதவீதம் பேர் சாதி இந்துக்களின் தொடர்ச்சியே. அதாவது 8 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்
இருந்து பல்வேறு சமூக, கலாசார, பண்பாட்டு காரணங்களுக்காக மதம் மாறியவர்களே. நெருக்கடியான
காலத்தில் மாறியவர்களும் உண்டு. இந்த மாற்றம் அதற்குரிய வேகத்துடன் 19 ஆம் நூற்றாண்டின்
இறுதிவரை நடந்தேறியது. உலகின் பெரும் மதங்களை பொறுத்தவரை பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும்
இஸ்லாம் ஆகியவை மட்டுமே கருதுகோள்களை உடையவை. அதற்குரிய சட்டகங்களை கொண்டவை. இந்த மதங்களுக்கு
யார் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாற முடியும். பிறப்பில் அடிப்படையில் இவை உருவாவதில்லை.
இந்நிலையில் இந்தியாவை பொறுத்தவரை ஒரு சாதி இந்து இஸ்லாமுக்கு மாறும் போதும் அவனின்
மனம் மட்டுமே மாறுகிறது. உடலியல் ரீதியாக அவன சாதி இந்து தான். மானுடவியல் நோக்கில்
இந்திய இஸ்லாமியர்களின் மரபணுக்கள் இங்குள்ள சாதி மனிதர்களோடு ஒத்துப்போவதை நாம் கண்டறிய
முடியும். இந்நிலையில் அவனின் மண் சார்ந்த , வேரோடு கூடிய கலாசார கூறுகள், அடையாளங்கள்
பிராந்திய தன்மையோடு வெளிப்படுவது தவிர்க்க இயலாதது. உலகில் எந்த ஒரு மதப்பண்பாட்டையும்
நாம் பொதுமைப்படுத்த முடியாது. இந்நிலையில் பின்நவீனத்துவ சிந்தனையாளரான மிஷல் பூக்கோவின்
மதம் குறித்த கருதுகோள் முக்கியமானது. அவர் மதங்கள் என்பவை இறையியல் மற்றும் நம்பிக்கை
இவற்றிற்கு வெளியே உள்ளார்ந்த அறிவு -அதிகாரத்திற்கான போராட்டம் என்றார். இவற்றை வரலாற்று
அடிப்படையில் நாம் ஆராய வேண்டும் என்றார். மேலும் மதம் என்ற மருட்சிக்கு அப்பால் புறவய
நம்பிக்கைகளை அது கொண்டிருக்கிறது என்றார். இந்தியாவில் மதம் சார்ந்த அரசியல் மற்றும்
பண்பாட்டு கூறுகளை நாம் ஆராய முற்படும் போது மேற்கண்ட அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள
வேண்டியதிருக்கிறது.
இந்தியாவில் சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள்
காலம் வரை இஸ்லாமியர்களிடத்தில் துருக்கிய மற்றும் பாரசீக மரபின் தாக்கம் இருந்தது.
காரணம் முகலாய மன்னர்கள் துருக்கிய உதுமானிய
பேரரசின் உள்வாங்கலாக இருந்தனர். பாரசீக மரபின் மூலம் இந்தியாவில் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருது மொழி தோற்றம்
பெற்றது. அது பாரசீகம், அரபி மற்றும் இந்துஸ்தானி ஆகிய மூன்று மொழிகளின் கலவையாக இருந்தது.
உருது என்ற சொல்லுக்கு இராணுவம் என்று பெயர். தொடக்கத்தில் அது ராணுவ வீரர்கள் பேசும்
மொழியாக தான் இருந்தது. மேலும் பாரசீக மரபிற்கு சிறந்த கலை இலக்கிய வளம் உண்டு. பல
சூபி அறிஞர்கள் இந்த காலத்தில் தான் உருவாயினர். பக்தியார் காகி, ஹசரத் இனாயத் கான்,
ஹசரத் நிஜாமுத்தீன் மற்றும் காஜா முயினுத்தீன் ஸிஸ்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்த மரபானது இந்தியாவில் சாதி இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பெருமளவில் இணைத்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை இந்துஸ்தானி மொழியின் வரிவடிவம்
உருது லிபியாக தான் இருந்தது. பஞ்சாபில் பாபா மரபானது இரு சமூகங்களுக்கும் பொதுவாக
இருந்தது. இந்நிலையில் வரலாற்றில் இடைக்கால இந்தியா ஒரு வளமிக்க, இணக்கமான சமூக கட்டுமானத்தை
உள்ளடக்கி இருந்தது. இதன் தொடர்ச்சியில் இந்திய வரலாற்றில் பெரும் திருப்பு முனையாக
அமைந்த பிரிட்டிஷ் ஆட்சியானது இந்த ஒட்டுமொத்த அமைப்பையும் கலைத்து போட்டது. அதுவரையிலும்
எல்லைக்கோடுகள் அற்ற இந்திய சமூகங்கள் மத அடையாள
எல்லைக்குள் கொண்டு வரப்பட்டன. 1870 ஆம் நடந்த கணக்கெடுப்பில் கிறிஸ்தவ, முஸ்லிம்,
பார்சி, பௌத்த, ஜைன அல்லாத சாதிய குழுக்கள் எல்லாம் இந்து என்ற அடையாளத்திற்குள் கொண்டுவரப்பட்டன.
இது காலத்தொடர்ச்சியில் இந்தியாவின் பெரும் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய ஒன்றாக மாறியது.
அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்தவர் எல்லோரும் இது இன்னும் 60 ஆண்டுகளில் இந்தியாவின்
இரத்த சாட்சியாக மாறப் போகிறது என்பதை அறிந்திருக்கமாட்டார்கள். இந்தியாவில் தன் காலனியாதிக்கத்தை
நிறுவிய பிரிட்டன் மத்திய கிழக்கில் அசைக்கமுடியாத, மிக வலுவான சக்தியாக இருந்த துருக்கிய
உதுமானிய பேரரசை அசைத்து விட்டு அங்கு தன் காலனியை நிறுவ தன் உளவாளி மூலம் வஹ்ஹாபிய
இஸ்லாமிய கோட்பாட்டின் தந்தையான இப்னு அப்துல் வஹ்ஹாப் என்ற அரபு பழங்குடி தலைவனை கண்டுபிடித்தது.
நீண்ட கால காலனிய உபாயங்களுக்கும், செயல்தந்திரங்களுக்கும், போர்களுக்கும் பிறகு பிரிட்டன்
தன் முடியாட்சி பிரதிநிதியான சவூத் (தற்போதைய சவூதி அரேபிய மன்னரின் மூதாதையர்) என்பவரை
ஹிஜாஸ் மாகாணத்திற்கு (மக்கா மற்றும் மதீனாவை உள்ளடக்கிய பிராந்தியம்)நியமித்தது. முடியாட்சி
அடிப்படையில் இது அமைந்தது. அதே நேரத்தில் இந்தியாவில் அல்லது தெற்காசியாவில் மிர்சா
குலாம் அஹ்மத் காதியானி என்பவரை கண்டறிந்து அஹ்மதிய்யா என்ற புதிய பிரிவை ஊக்குவித்தது.
மத்திய கிழக்கில் வலுவாக இருந்த ஆலமரத்தை அசைத்ததன் மூலம் பிரிட்டன் தன் நீண்டகால கனவு
நிறைவேறிய திருப்தியில் இருந்தது. இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவரை உருவாக்கி, தூய்மையான
இஸ்லாம் என்ற எதிர் இஸ்லாமிய கோட்பாட்டு பிரிவை
உருவாக்கிய அது பல நூற்றாண்டாக ஆசியாவையும், ஆப்ரிக்காவையும் தன் கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருந்தது. நவீன உலகில் வஹ்ஹாபியம் என்றழைக்கப்படும் சவூதிய அரேபியாவை மையப்படுத்திய
தூய்மைவாத கோட்பாடு அரசியல் இஸ்லாமாக பரிணமித்து மத சார்பற்ற உலகிற்கு பெரும்சவாலாக
இருந்து கொண்டிருக்கிறது.
இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கட்டத்தில்
உலகில் பிரிட்டனின் இடத்தை அமெரிக்கா எடுத்துக்கொண்ட பிறகு மத அரசியல் இயக்கங்களின்
போக்கு இன்னும் பரிணாமம் அடைந்தது. பனிப்போர் காலகட்டத்தில் அமெரிக்கா சோவியத் ரஷ்யாவிற்கு
எதிரான தன் ஏகாதிபத்திய நலன்களை முன்னகர்த்த
பல அடிப்படைவாத, தீவிரவாத குழுக்களை கட்டியமைத்து, வளர்க்க தொடங்கியது. அவ்வாறான
முறையில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இயக்கங்கள் தான் தலிபான் மற்றும் அல்கொய்தா.
பனிப்போர் காலகட்டத்தில் உலகின் கணிசமான இடங்களை உட்கொண்டிருந்த இஸ்லாமிய பிரதேசங்கள்
மற்றும் இஸ்லாமிய மக்களை தன் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவர அது எடுத்த ஆயுதம் தான் கம்யூனிசம் இஸ்லாத்திற்கு எதிரானது என்ற வாதம். தன்
முகாமிற்குள் இருந்த, ஆதரவாளர்களாக மாறி இருந்த இஸ்லாமிய நாடுகள் மற்றும் தலைவர்களிடத்தில்
அமெரிக்காவானது மார்க்ஸின் மதம் பற்றிய பார்வையை எடுத்துகூறி அவர்களை சோவியத் ரஷ்யாவிற்கு
எதிராக திருப்பி விட்டது. இதில் அன்றைய சோவியத் யூனியனின் பகுதிகளாக , முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்த அசர்பைஜான், துர்மேனிஸ்தான்,
தஜிகிஸ்தான் மற்றும் கிஜிகிஸ்தான் ஆகிய பிரதேசங்களில் இருந்த இஸ்லாமிய தலைவர்களையும்
அது தன் ஆதரவு வளையத்திற்குள் கொண்டு வந்தது. ஸ்டாலின் காலத்து மத நிறுவனங்கள் மீதான
செயல்பாடுகளை சுட்டிக்காட்டி இந்த தொடர்ந்த பிரசாரத்தை மேற்கொண்டது. குர் ஆனின் ஆங்கில
மொழியாக்கத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்தது. இந்நிலையில் அமெரிக்கா ஆப்கானில்
நஜிபுல்லா ஆட்சிக்கு எதிராக பாகிஸ்தானில் இருந்து
மதரசா மாணவர்களை போராளிகளாக உருவாக்கியது. அவர்களுக்கு சகலவித ஆயுதப்பயிற்சிகளையும்,
உதவிகளையும் செய்து நஜிபுல்லாவிற்கு எதிராக கிளர்ச்சி செய்ய தூண்டியது. இதனால் எண்பதுகளில்
சோவியத் யூனியன் நஜிபுல்லாவிற்கு ஆதரவாக ஆப்கானுக்கு தன் படைகளை அனுப்பியது. இதன் மூலம்
சுதாரித்து கொண்ட அமெரிக்கா இந்த படைகளை மேலும் உறுதியாக கட்டமைத்து அவர்களை சோவியத்
யூனியனுக்கு எதிராக போராடுமாறு தூண்டியது. இவர்களே பின்னாளில் தலிபான்கள் என்றழைக்கபட்டனர்.
தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று பொருள். இவர்களை அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ரீகன்
உண்மையான போராளிகள் என்று பாராட்டினார். இதில் தலிபான் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த காட்சியை அமெரிக்க தொலைக்காட்சி ஒளிபரப்பியது. மேலும் எண்பதுகளில் நடந்த ஈரான்
-ஈராக் போரில் ஈராக்கிற்கு ஆதரவாக அமெரிக்க அதற்கு ஆயுதங்களை வழங்கியது. செப்டம்பர்
11 நிகழ்விற்கு சற்று முன்பு கூட அமெரிக்கா தலிபான்களுக்கு நிதியுதவி அளித்து வந்தது.
இந்நிலையில் பங்காளிச்சண்டை மற்றும் புவி அரசியல் நலன்கள் காரணமாக தலிபான்களும், அல்கொய்தாவும்
நவீன உலகில் அமெரிக்காவிற்கு எதிரியாக இருக்கின்றன. இவை இரண்டும் நடப்பு உலகில் அமெரிக்காவிற்கு எதிராக புனிதப்போர்
புரிவது ஒவ்வோர் முஸ்லிமின் கடமை என்கின்றன. 1991 க்கு முன்பு வரை இவற்றிற்கு சோவியத்
யூனியன் எதிரியாக இருந்தது. அந்த காலகட்டத்தில் இவை இரண்டும் சோவியத் யூனியன் மீது
புனிதப்போர் தொடுப்பது கடமை என்றன. இவற்றின் அரங்கில் நண்பர்களும், எதிரிகளும் வட்ட
சுழற்சியாக இருக்கிறார்கள். அடிப்படையில் வஹ்ஹாபிய கோட்பாட்டை கடைபிடிக்கும் இவை கனவு
காண்பது உலக இஸ்லாம் மற்றும் அதன் பேரரசு தான்.
இந்தியாவை பொறுத்தவரை வஹ்ஹாபிய மரபு
என்பது சுதந்திரத்திற்கு பிறகு தான் அதிகமும்
வேர்பிடிக்கத்தொடங்கியது. சவூதி அரேபியாவின் மதீனா பல்கலைகழகத்தில் மதக்கல்வி கற்று பட்டம் பெற்ற மதனிகள் என்பவர்கள்
ஒவ்வொரு நாட்டிலும் வஹ்ஹாபிய கோட்பாட்டை பிரசாரம் செய்யத்தொடங்கினர். இது சம்பந்தப்பட்ட
நாடுகளின் பன்மயப்பட்ட பண்பாடு மற்றும் அடையாளங்கள் மீது பெரும் தாக்குதலாக இருந்தது.
சவூதி அரேபிய வகைப்பட்ட இஸ்லாமிய அமைப்பு முறையை இவர்கள் முன்வைத்தனர். பெரும்பாலும்
சவூதிய அரேபியாவை, அந்நாட்டு மக்களை புகழ்ந்து பேசினர். இந்தியாவை பொறுத்தவரை வஹ்ஹாபியம்
பரந்து வாழும் இஸ்லாமியர்களின் பிரதேச அடையாளங்கள் மற்றும் பண்பாடு மீது பெரும் தாக்கத்தை
செலுத்தியது. இதற்கு பிந்தைய முரண்கள் ஏற்பட காரணமாக இருந்தது. ஏற்கனவே உருப்பெற்று
வலுவாகிக்கொண்டிருந்த இந்துத்துவம் இதற்கு எதிர் துருவமாக இருந்தது. இது பிரசாரம் செய்த
இடமெல்லாம் இஸ்லாமியர்களை ஒற்றை அடையாளத்திற்குள், செயற்கையான பண்பாட்டு கூட்டிணைவிற்குள்
கொண்டு வர முயற்சித்தது. மேலும் இந்தியாவை
பொறுத்தவரை பாபர் மசூதி என்பது இந்துத்துவ பரிணாம வளர்ச்சியின் அரசியல் குறியீடு. வழிப்பாட்டுத்தலங்கள்
மீது அரசியல் செய்வதன் மூலம் தங்களை வளர்த்துக்கொள்வது என்பது அதன் நீண்டகால அரசியல்
செயற்திட்டம். இந்தியாவின் பன்மயப்பட்ட சாதிய சமூகத்தில் தங்களின் வகுப்புவாத அரசியலை
முன்னிறுத்த அவர்கள் தேர்ந்தெடுத்த குறியீடு தான் ராமரும், பாபர் மசூதியும். இந்த நுண்ணரசியலை
புரியாத அல்லது புரிந்து கொள்ள இயலாத இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் தன்னை பலிகொடுத்து
விட்டது. இந்த விவகாரம் தொடங்கிய காலகட்டத்தில் பல்வேறு முற்போக்கு சக்திகளும், தலைவர்களும்
எடுத்த சமரச முயற்சியில் இருதரப்பினருமே உடன்படவில்லை. இதன் நீட்சியில் 1992 நிகழ்விற்கு
பிறகு இந்தியாவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் நிர்கதியாயின. போராட்டங்களிலும்,
கலவரங்களிலும் பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இறைவனுக்காக மக்கள் கொல்லப்படுவது இறைவனுக்கே ஏற்புடையதல்ல.
இந்திய சுதந்திரத்தின் துயரமான பாகிஸ்தான் பிரிவினை போன்றே மற்றொரு துயரமான காஷ்மீர் தினமும் பல உயிர்களை பலிகொடுத்து வருகிறது. இதனை ஒட்டி உருவான
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷே முஹம்மத், ஹர்ஹதுல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் தங்களை அல்கொய்தா
போன்றே முன்னகர்த்திக்கொள்கின்றன. இவற்றிற்கு ஒரே அடிப்படை என்பது அரசியல் இஸ்லாம்
தான். இது தவிர வேறு எந்த அரசியல், சமூக , பொருளாதார செயற்திட்டங்களும் இவற்றிடம் இல்லை. நவீன உலகம் என்பது விர்ச்சுவல்
தன்மையையும், அதிநவீன தொழில்நுட்ப கூறுகளையும் உள்ளடக்கி இருக்கிறது. உலகமயமாக்கல்
மூலம் பிரதேசங்கள் பரஸ்பர தொடர்புறுதலில் வந்து விட்டன. இந்நிலையில் உலகில் அரசுகள்
என்பவை மதங்களிலிருந்து பிரிக்கப்பட்டு அதற்கு அப்பால் இருக்க வேண்டும். அது மட்டுமே
உலக அமைதிக்கான , செழுமைக்கான முதற்கூறு. நாகரீகங்கள் மோதிக்கொண்டால் இவை எல்லாம் பின்னுக்கு
போய்விடும்.
இந்தியாவில் வஹ்ஹாபிய மரபின் தொடர்ச்சியும்,
அதன் பிந்தைய அரசியல் இஸ்லாமும் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட கட்டத்தில் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 80 களில் வஹ்ஹாபியம் மதனிகளின் வழியாக பரவுதலும் 90 களில் அதன் அரசியல்
இயக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் உருவாக்கமும் இதனோடு சேர்த்து கவனிக்கத்தக்கது.
அதற்கு முன்பு 1977 ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட, தற்போது மத்திய அரசால் தடை செய்யப்பட்ட சிமி எனப்படும் Students Islamic movement of
India என்ற அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த பி.ஜெய்னுல் ஆப்தீன், ஜவாஹிருல்லா, பாக்கர்
மற்றும் குலாம் முஹம்மது ஆகியோர் 1994 ல் குணங்குடி அனீபாவால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு
முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டு அதன் தலைமையை கைப்பற்றினர்.
இது அதற்கு பிந்தைய ஆண்டில் நடந்தது. இதில் குலாம் முஹம்மது பின்னர் பிரிந்து சென்றார்.
இதன் தலைவராக பி.ஜெய்னுல் ஆப்தீன் இருந்தார். தமிழ்நாட்டின் வஹ்ஹாபிய மரபின் ஸ்தாபகர்களில்
ஒருவரான இவர் பல்வேறு கட்ட கோட்பாடு பயணங்களுக்குப்பிறகு இதன் தலைவரானார். ஆரம்பத்தில்
கோட்பாடு வேறுபாடின்றி அனைத்து முஸ்லிம்களுக்கான இயக்கமாக இது தன்னை காட்டிக்கொண்டாலும்
தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியல், பொருளாதார நலன்கள் என்பதை தாண்டி தன் வஹ்ஹாபிய
கோட்பாட்டை டீன் ஏஜ் இளைஞர்களின் மூளைகளில் பதிய வைப்பது தான் இதன் மறைமுக செயல்திட்டமாக
இருந்தது. இவர்களின் வரவிற்கு பிறகு தமிழ்நாட்டு முஸ்லிம் இளைஞர்களின் முக மற்றும்
உடல் மொழியில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. முட்டு வரை தாடி என்பது இதன் பிறகு தான் உருவானது.
கோவையில் முஸ்லிம்கள் மீதான காவல்துறையின் அராஜகம், படுகொலைகள் மற்றும் அதற்கு பிந்தைய
குண்டுவெடிப்பு இவை அனைத்திற்குமான தொடக்கம் இந்த இயக்கத்தின் மோசமான அணுகுமுறையால்
ஏற்பட்டதே. வரலாற்றை தோண்டுவது ஒருவகையில் திசைமாற்றத்திற்கான கருவியாக இருக்கலாம்.
இதன் தொடர்ச்சியில் பல்வேறு பொருளாதாரம் சார்ந்த
காரணங்கள், தனிப்பட்ட பிரச்சினைகள் 2004 ல் பி.ஜெய்னுலாப்தீன் தலைமையில் இதிலிருந்து
பிரிந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் என்ற மற்றொரு தீவிர இயக்கத்தை உருவாக்கியது. இவர்கள்
வஹ்ஹாபியம் என்பதை தங்களின் முதல் வேலைத்திட்டமாக முன்வைத்தனர். பெரும் ரத்தக்களறிகள்
இவ்விரு இயக்கங்களின் மத்தியில் நடந்தேறின. இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் தவ்ஹீத்
ஜமாத் நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் சரியாக உள்வாங்கி தங்களின் வஹ்ஹாபிய பிரச்சாரத்திற்கு
பயன்படுத்தி வருகிறது. இதில் அதற்கு ஒருவேளை நல்ல பலன் கிடைத்திருக்கலாம். கோவை குண்டுவெடிப்பில்
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள்
இதன் தலைவரை தான் கைகாட்டினார்கள். இவரின் ஆவேசபேச்சு தான் தங்கள் மூளைகளை உணர்ச்சிவசப்பட
வைத்ததாக வெளிப்படையாக பேட்டிக்கொடுத்தனர்.
சுதந்திர போராட்ட காலந்தொட்டு தமிழ்நாட்டில் வலுவாக இருந்த முஸ்லிம் லீக் 90 களின் தொடக்கத்திலேயே பலவீனப்பட்டு விட்டது.
அதன் தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள், தனிப்பட்ட பிரச்சினைகள் இம்மாதிரியான
இயக்கங்களின் தோற்றத்திற்கும், பரிணாமத்திற்கும் காரணமாக மாறி விட்டன. இந்த 20 ஆண்டுகால
காலகட்ட தமிழ்நாட்டில் இஸ்லாமிய சமூகம் தன்னை மையநீரோட்டத்திலிருந்து விலக்கத்தொடங்கி
இருக்கிறது. வஹ்ஹாபிய தாக்கம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு முஸ்லிம் வீட்டின் தண்ணீர் குழாய்
வரை பரவும் அபாயம் இருக்கிறது. இது சமூக நல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் ஊறு விளைவிப்பதாகும்.
இதற்கு எதிரிணையாக இந்துத்துவம் சாதி இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒருமுகப்படுத்தும்
நிலையில் இரண்டுமே மதசார்பற்ற இந்திய சமூகத்திற்கு ஆபத்தானவை தான். இந்நிலையில் தமிழ்
இஸ்லாமிய சமூகம் இம்மாதிரியான இயக்கங்களின் நேரடியான, மறைமுக வேலைத்திட்டங்களை, கோட்பாடு
நடவடிக்கைகளை புரிந்து கொள்வதுடன், தங்களை பிரதேச அடையாளங்களோடு வலுவாக இணைப்பதும்,
தங்களின் மறுமலர்ச்சிக்காக மையநீரோட்டத்தில் இணைவதும் முக்கியம். இதனை புரிந்து கொள்வது
அதன் எதிர்கால நலன்களுக்கு உகந்தது.
குறிப்புகள்:
1.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக
தலைவர்கள் நாங்கள் வஹ்ஹாபியத்தை முன்நிறுத்தவில்லை. இதை விட்டு அன்றைக்கே வெளியே வந்து
விட்டோம் என்று சொல்வது சற்று வேடிக்கையானது.காரணம் அதன் தொண்டர்களில் பெரும்பாலானோர்
இன்னும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கின்றனர். முஸ்லிம்பொதுசமூகத்தோடு தங்களை இணைத்துக்கொள்ளவில்லை.
மேலும் அதன் ஒரு துணை அமைப்பான இஸ்லாமிய பிரச்சார பேரவையின் அடிப்படையே வஹ்ஹாபிய போதனை
தான். தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் சார்ந்த பல்வேறு மீலாதுவிழா கூட்டங்களுக்கு இந்த
இயக்க தலைவர்கள் அழைக்கப்பட்டும் அவர்கள் அதில் கலந்து கொள்ள மறுத்திருக்கிறார்கள்.
2. தமிழ்நாட்டு முஸ்லிம் இளைஞர்களின்
ஹைடெக் கனவுகளை பூர்த்தி செய்வதன் மூலம் தங்களையும், இயக்கத்தையும் வளர்த்துக்கொள்ள
முடியும் என்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நம்புகிறது. மேலும் எதிர்விமர்சனங்கள்,
விவாத அழைப்பு இதன் மூலமும் தங்கள் ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ளலாம் என்பது இதன் சமகால
திட்டம்.
3. மேற்கண்ட இயக்கங்கள் தமிழ்நாட்டின்
அனைத்து முஸ்லிம்களுக்கான பிரதிநிதிகள் அல்ல என்பதை திமுக மற்றும் அதிமுக தலைமை புரிந்து
கொள்ள வேண்டும். அப்படியான ஒரு மாயத்தோற்றத்தை இவை ஏற்படுத்தி வருகின்றன.
(உயிர்மை நவம்பர் 2013)
1 comment:
..இந்திய இஸ்லாமியர்களை பொறுத்தவரை 95 சதவீதம் பேர் சாதி இந்துக்களின் தொடர்ச்சியே.//
சாதி இந்துக்களா..? அவர்கள் யாரென என் பதிவில் கேட்டுள்ளேன் -
http://dharumi.blogspot.in/2011/06/508.html
//இந்தியாவை பொறுத்தவரை வஹ்ஹாபிய மரபு என்பது சுதந்திரத்திற்கு பிறகு தான் அதிகமும் வேர்பிடிக்கத்தொடங்கியது. //
நீங்களே சொன்னது போல் அது 80களில் தானே ஆரம்பித்தது - //(தமிழ்நாட்டில் 80 களில் வஹ்ஹாபியம் மதனிகளின் வழியாக பரவுதலும்...)//
Post a Comment