காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Tuesday, December 31, 2013

ஊர்ந்து செல்லும் ஒட்டகங்கள் - சவூதியின் நிதாகத் சட்டம் குறித்து


                 வாழ்க்கையின் கனவுகள் மற்றும் இயல்பான தேடல்கள் மனிதர்களை புலம் பெயர வைக்கின்றன. இரையை தேடி தப்பியலையும் விலங்காக மனிதன் பிராந்தியங்களை தாண்டுகிறான். இந்த சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் மனிதர்கள் பெரும்பாலும் பொருள்சார் தேடலுக்காக புலம் பெயர்ந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பாலைவன பிரதேசங்களான வளைகுடா நாடுகள் பலரின் தேடல்களுக்கு வடிகாலாக அமைந்திருக்கின்றன. கடந்த 40 வருடங்களாக தெற்காசிய நாடுகளின் உழைக்கும் வர்க்கத்திற்கு அவை வாழ்வை அளித்தன.  அவற்றுள் வளைகுடா நாடான சவூதி அரேபியாவும் ஒன்று. இதனடிப்படையில்  சவூதி அரேபியாவில் அதற்கான தொடர்ச்சிக்கு தற்போது ஆபத்து வந்திருக்கிறது. உள்கட்டமைப்பு துறைகளில் வெளிநாட்டினரின் ஆதிக்கம் உள்ளூர் மக்கள் பலரின் வேலைவாய்ப்பை கேள்விக்குறியாக்கி விட்டது. இந்நிலையில் இதன் வரலாற்றை ஆராய நாம் சவூதி அரேபியாவின் உருவாக்கம் குறித்து காண வேண்டியதிருக்கிறது. எந்த ஒரு நாடும் அதற்கான விரிவான நாகரீக, வரலாற்றுப்பின்னணியை கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தான் அவற்றை நாம் அணுக முடியும்.




வஹ்ஹாபிய கோட்பாட்டின் ஊற்றான சவூதி அரேபியாவின் சரியான தொடக்கம் என்பது 18 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பமாகிறது. சவூதிய நிலப்பிரபுக்களான சவூது பரம்பரையினர் ரியாத் பிராந்தியத்தை ஆண்டு வந்தனர். (அப்போது இன்றைய முழு சவூதி அரேபியா உருவாகவில்லை) அந்த காலத்தில் அப்பிராந்தியத்தில் துருக்கிய உதுமானிய பேரரசானது மிக வலுவாக இருந்தது. மக்கா மற்றும் மதீனாவை உள்ளடக்கிய ஹிஜாஸ் மாகாணம் அதன் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஹிஜாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவர்களை புனிதமாக பார்க்கும் மனோபாவம் உலக முஸ்லிம்கள் பெரும்பாலானோரிடத்தில் இருந்தது. ஆசிய கண்டம் முழுவதையும் தன் காலனிய கட்டுப்பாட்டிற்கு உட்படுத்திய பிரிட்டனால் மத்தியகிழக்கில் வலுவான உதுமானிய பேரரசை அசைக்க முடியவில்லை. இதன் பிறகு பல்வேறு நீண்டகால இராஜ்ஜிய மற்றும் காலனிய தந்திரோபாய நடவடிக்கைகளுக்குப்பிறகு உதுமானிய பேரரசிடமிருந்து 1806 ல் சவூது குடும்பம் பிரிட்டிஷ் துணையோடு மக்கா மற்றும் மதீனாவை கைப்பற்றியது. இதன் உருவாக்கத்தில் பிரிட்டிஷ் வார்ப்பான இப்னு அப்துல் வஹ்ஹாப் (வஹ்ஹாபியத்தின் தந்தை)பெரும் மூளையாக இருந்தார். பின்னர் அவர்களின் தொடர்ச்சியான விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் போர்களின் விளைவாக 1932 ல் அப்துல் அஸீஸ் இப்னு சவூது சவூதி அரேபியாவை உருவாக்கினார். நவீன சவூதி அரேபியாவின் தந்தை இவரே. இது ஹிஜாஸ், திரிய்யா(ரியாத்), நஜ்ரான் மற்றும் ரப்புல்காலி ஆகிய பாலைவன பிரதேசங்களை உள்ளடக்கிய பெரும் பிராந்தியமாகும். அதற்கு முன்பே பிரிட்டனால் அங்கு பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போர்  காலகட்டத்தில் அமெரிக்க எண்ணெய் நிறுவனம் அங்கு அராம்கோ என்ற பெயரில்  உற்பத்தி நிலையத்தை அமைத்தது. இதன் பின்னர் சவூதி அரசு அந்நிறுவனத்தை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டது. இதன் தொடர்ச்சியில்  பிரிட்டன் துணையோடு சவூது நிலப்பிரபு குடும்பத்தாரின் ஆட்சியதிகாரம் சவூதி அரேபியாவை  மேற்குலக புவி அரசியல் நலன்களோடு இணைத்தது. மேற்கத்திய தொடர்பு காரணமாக  சவூதி அரேபியா தன் எண்ணெய் வளத்தை பகிர்ந்தளிக்கத் தொடங்கியது. இதன் மூலம் செல்வ பெருக்கம் ஏற்பட்டது. இதனை தொடரவும், தக்க வைக்கவும் அதற்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மலிவான உழைப்பாளி அடிமைகள் தேவைப்பட்டது. இதன் தொடர்ச்சியில் அதன் உட்கட்டமைப்பு துறை மேம்பாட்டிற்காக  50 களின் தொடக்கத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்,இலங்கை போன்ற நாடுகளில் இருந்து ஏராளமானோர் சவூதி அரேபியாவிற்கு வேலைக்குச்சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அடிமட்ட கூலித்தொழிலாளர்கள். நம் ஊரின் அன்றாடங்காய்ச்சிகளை போன்றவர்கள். பல கட்டுமான நிறுவனங்கள் இவர்களை வேலைக்கு அமர்த்தின. மிகக்குறைந்த கூலியும், அதிக வேலைநேரமும் இவர்களுக்கான அன்றாட பணி ஒழுங்காக இருந்தன. இதில் கட்டுமான வேலைக்கு சென்ற பலருக்கு மாதச்சம்பளம் ஒழுங்காக அளிக்கப்படவில்லை. சரியான உணவு இல்லை. ஒழுங்கான தங்குமிடம் இல்லை. புறாக்கூண்டுகளில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் பலருக்கு ஏற்பட்டது. பல கட்டுமான  மற்றும் அது சார்ந்த ஒப்பந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டன. தமிழ்நாட்டில் விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் சேலம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் தான் அதிகமும் கட்டுமான தொழிலாளர்களாக இருந்தனர். சவூதி உட்பட வளைகுடா நாடுகளில் அதிகமும் மோசடியிலும், சுரண்டலிலும் ஈடுபடுபவை கட்டுமான நிறுவனங்கள் தான். (பன்னாட்டு நிறுவனங்கள் தவிர) உட்கட்டமைப்பு சார்ந்து இருப்பதால் இவை அரசிடமிருந்து கூடுதல் பலத்தை பெறுகின்றன. இதன் காரணமாக மிக மலிவான கூலிக்கு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. மேலும் பாலைவன வெய்யில் தரும் வெப்பம் அகோரமானது. உச்சியை பிளந்து முகர்ந்து பார்க்கும் தன்மை கொண்டது  . இந்த தருணங்களை எல்லாம் இந்த நிறுவனங்கள் கருத்தில் கொள்வதில்லை. இதன் காரணமாக வெய்யிலில் சுருண்டு விழுந்து பலர் மரணிப்பது உண்டு. பிந்தைய கட்டத்தில் இது உச்சநிலை அடைவதை கண்ட சவூதிய அரசு கோடைகாலங்களில் கட்டுமான வேலைக்கு நேரக்கட்டுப்பாட்டை விதித்தது. இருந்தும் பல நிறுவனங்கள் இதை மீறுகின்றன.

                 1932 ல் உருவாக்கப்பட்ட சவூதியின் எண்ணெய் வர்த்தகம் உச்சநிலையை அடைந்து அபரிதமான வளத்தை அதற்கு அளித்தது. சவூதிகள் பலர்  டாலர்களில் குளித்தார்கள். இதன் காரணமாக வீட்டில் குப்பை பொறுக்க கூட   வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் சூழலுக்கு சவூதிகள் தள்ளப்பட்டார்கள். தெற்காசிய நாடுகளில் இருந்து அதிக அளவில் பெண்கள் சவூதிகளின் வீடுகளுக்கு வேலைக்காக நியமிக்கப்பட்டார்கள். இந்த நடைமுறை எண்பதுகளில் தொடங்கியது. தொடக்கத்தில் சில குடும்ப பெண்களின் வறுமைக்கு தீர்வாக இது அமைந்தது. ஆனால் பிந்தைய கட்டத்தில் சவூதிகளிடத்தில் செல்வ வளம் பெருக்கெடுக்க, வீட்டு வேலைக்காரிகள் மீதான சுரண்டலும் அதிகமானது. பாலியல் மற்றும் உடலியல் சித்திரவதைக்கு அவர்கள் ஆளானார்கள்.  அவர்களுக்கான மாத ஊதியம் ஒழுங்காக அளிக்கப்படவில்லை. வீட்டு வன்முறை குறித்து வளைகுடா நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வானது சவூதி அரேபியா தான் மத்திய கிழக்கு நாடுகளிலேயே அதிகமும் வீட்டு வன்முறை வழக்கில் இருக்கும் நாடு என்ற உண்மையை வெளிக்கொணர்ந்தது. இது குறித்து 2004 ஆம் ஆண்டு நடந்த அரபு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சவூதிய அரசானது வீட்டு வேலையாட்கள் குறித்த சட்டதிருத்தத்தை கொண்டுவந்தது.




 சவூதியர்களின் செல்வபெருக்கம் ஒரு பக்கம் தொடர்ந்த நிலையில் சவூதியின் வளர்ச்சி போக்கில் முக்கிய நிர்ணய சக்திகளாக இருந்த தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் வெளிநாட்டினராக இருந்தனர். மேலும் ஒரு கட்டத்தில் சவூதியின் மக்கள் தொகையில் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகமானது. மேலும் 90 களில் ஏற்பட்ட வளைகுடா போர் அப்பிராந்தியத்தில் சமூக பொருளாதார நிலைமைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.  1991 ல் நடந்த வளைகுடா போரில் சவூதியானது அமெரிக்க ராணுவத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது. இதுவே 2001 ஆப்கான் போர் மற்றும் 2003 ஈராக் போர் ஆகியவற்றிலும் தொடர்ந்தது. இதன் காரணமாக சவூதியின் செல்வபெருக்கில் சின்ன கீறல் ஏற்பட்டது. பல சவூதிகள் வேலையிழந்தார்கள். பலர் வேலையில்லாமல் கடும் அவதிக்குள்ளாயினர்.  குடும்ப ஆட்சி முறை பரம்பரையாக தொடரும் சவூதி அரேபியாவில் இது மக்கள் புரட்சியாக மாறிவிடக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள்  மிகக்கவனமாக இருந்தார்கள். இதனால் தனியார் நிறுவனங்களில் சவூதிகளை வேலைக்கு அமர்த்துவது குறித்து யோசிக்க ஆரம்பித்தார்கள். இதற்கான முதல் அமைச்சரவை கூட்டம் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் தற்போது சவூதியின் வேலைவாய்ப்பு நிலவரம் பற்றியும், தனியார் நிறுவனங்களில் சவூதியர்களை பணியில் அமர்த்துவது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இதனடிப்படையில் இதற்கான தகுந்த சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக தான் 2011 ல் நிதாகத் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. நிதாகத் என்பதற்கு வட்டாரமயமாக்கல் , வரைமுறைபடுத்தல் போன்ற அர்த்தங்கள் உண்டு. இதனடிப்படையில் தனியார் நிறுவனங்கள் பிரீமியம், பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற வகைப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. ஒவ்வொரு நிறுவனத்தின் வகைப்பாட்டிற்கும் சவூதியர்களின் நியமன சதவீதம் வரையறுக்கப்பட்டது.  (அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது). மேலும் பத்துக்கும் குறைவான பணியாளர்கள் உள்ள சிறிய நிறுவனங்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டது. 10 க்கும் குறைவான பணியாளர்களை கொண்ட நிறுவனங்கள் குறைந்த பட்சம் ஒரு சவூதி பணியாளரையாவது நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை குறிப்பிட்ட காலத்தில் நடைமுறைப்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த கம்பெனிகளின் உரிமம் ரத்துச்செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் 25 சதவீதம் சவூதியர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் அந்த சட்டம் குறிப்பிட்டது.

  நிதாகத் சட்டத்தை பொறுத்தவரை சொந்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீத ஒதுக்கீடு முறையின் தொடக்கம். நிதாகத் சவூதியர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தையை உருவாக்குவது மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள்  குறிப்பிட்ட துறையில் போட்டியிடவும், சவால்களை சந்திக்கவும் உதவும். மேலும் இந்த உள்ளூர் ஒதுக்கீடு முறையை அமல்படுத்த சில நிறுவனங்களுக்கு நடைமுறை ரீதியிலான தடைகள் இருந்தன. போதிய திறன் பெற்ற தொழிலாளர்களாக சவூதிகள் இல்லாதது தான் அதற்கு காரணம். ஆனால் இது  சவூதிகளை அதன் நீண்டகால ஓட்டத்தில் மாற்றத்திற்கு உட்படுத்தும் என்று குறிப்பிட்டது. தொழிலாளர் சந்தைக்கு தகுதியான நபர்களாக அவர்கள் காலத்தின் முடிவில் மாறுவார்கள் என்றும் நிறுவனங்களுக்கு விளக்கப்பட்டது. ஓர் உண்மையான பொருளாதார பலன் சவூதி தொழிலாளர்களை சந்தையில் போட்டியிட வைப்பதன் மூலம் ஏற்படும் என்றும் கணித்தது. மேலும் இதனை நடைமுறைப்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விசாவை பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த சட்டத்தின் அடிப்படையில் கூலி கண்காணிப்பு மற்றும் திறன் பரிசோதனை ஆகியவை நடத்தப்படும். இதன் மூலம் நிறுவனங்களின் நம்பகத்தன்மை சந்தையில் பிரதிபலிக்கும் போன்ற அம்சங்கள் நிதாகத் சட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

 குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் நபர்களின் பாஸ்போர்ட்டை நிறுவனங்கள் வாங்கி வைத்துக்கொள்ள கூடாது என்ற விதி பல நாடுகளிலும் இருக்கிறது. வளைகுடா நாடுகளிலும் இது இருக்கிறது. ஆனால் சவூதி உட்பட வளைகுடா நாடுகளில் பெரும்பாலான  நிறுவனங்கள் இதனை கடைபிடிப்பதில்லை. தங்கள் நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட நபர் வேலைக்காக நுழைந்தவுடன்  முதன் முதலாக பாஸ்போர்ட்டை தான் அவை வாங்கிக்கொள்கின்றன. இதன் தொடர்ச்சியில் மறைமுகமான கொத்தடிமை சூழலுக்கு சம்பந்தப்பட்ட நபர் தள்ளப்படுகிறார். நிறுவனத்தின் அல்லது உரிமையாளரின் எல்லாவித பணி சார்ந்த சித்திரவதைகளுக்கும், பணி அழுத்தங்களுக்கும் அவர் கட்டுப்பட்டாக வேண்டும். மாதச்சம்பளம் ஒழுங்காக அளிக்கப்படாத பட்சத்தில் இருந்து கொத்தடிமைத்தனமும் ஆரம்பமாகி விடுகிறது. இதனால் தப்பிக்க இயலாத பலர் தற்கொலைக்கு ஆளாகின்றனர். இப்படியான தற்கொலை சம்பவங்கள் பெரும்பாலும் வெளிவருவதில்லை. சாதாரண மரணமாக முடிக்கப்படுகிறது. மேலும் வளைகுடா  நாடுகளிலேயே அதிகமும் தொழிலாளர்களை சுரண்டுவது சவூதிய நிறுவனங்களும் அதன் முதலாளிகளும் தான். (சில விதிவிலக்குகள் தவிர) இதன் நீட்சியில் நிறுவனங்களின் பணிச்சூழலின் உச்சகட்ட அழுத்தத்தால் பலர் அதனை விட்டு ஓடிவிடும் நிலைமை ஏற்படுவதுண்டு. அவர்களின் பாஸ்போர்ட் முதலாளிகளின் கையில் இருப்பதால் இவர்களால் சட்டத்தை மீற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. ஒப்பந்தகாலம் முடிந்தாலும் பாஸ்போர்ட் மற்றும் ஒப்பந்த விதிகள் காரணமாக அதனை புதுப்பிக்க இயலாமல் பலர் சட்டவிரோத குடிமக்களாக மாறி விடுகின்றனர். இதில் பெரும்பாலும் கட்டுமான மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் அடிமட்ட தொழிலாளர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். சவூதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரில் குறிப்பிட்ட சதவீதம் சட்டவிரோத தொழிலாளர்களாக இருப்பது நிறுவனங்களுக்கும், அரசின் உள்ளூர்மயமாக்கல் கொள்கைக்கும் பெரும் சவாலாக இருந்தது. இதனால் நிதாகத் சட்டம் சட்டப்படியான பணி ஒப்பந்தம் என்பதை கடுமையாக்கியது. இதனை மீறுபவர்கள் தண்டிக்கப்பட்டு உடனடியாக சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டது. 2011 ல் அமலுக்கு வந்த இந்த சட்டம் நிறுவனங்களுக்கும், சட்டவிரோத வெளிநாட்டினருக்கும் இரண்டு ஆண்டுகாலம் அவகாசம் கொடுத்தது. அதாவது 2013 நவம்பருக்குள் இவை எல்லாம் அமலாக்கம் செய்யப்பட வேண்டும். மீறினால் சட்டப்படியான தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் பெருங்கனவொன்று சிதைந்து விட்ட சோகத்தில் பலர் வெறுங்கையோடு நாடு திரும்பியிருக்கிறார்கள். திரைகடல் ஓடியும் திரவியம் தேடுதல் மீன்களற்ற வலைகள் மாதிரி ஆக்கப்பட்டிருக்கிறது.

                 முதலாளித்துவ பொருளாதார நடைமுறை, ஏகாதிபத்திய சார்பு பொருளாதார அமைப்பு, வஹ்ஹாபிய இஸ்லாமிய விதிகள் ஆகிய மூன்று சக்கரங்களின் இணைவாக சவூதி அரேபிய மன்னர் குடும்பம் சவூதியை சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்திய இஸ்லாமியர்கள் குறிப்பாக தென்னிந்திய இஸ்லாமிய குடும்பங்களுக்கு இன்னும் முக்கிய வாழ்வாதாரமாக சவூதி அரேபியா இருந்து கொண்டிருக்கிறது. பல முஸ்லிம் இளைஞர்களின் தவிர்க்க முடியாத புகலிடமாக வளைகுடா நாடுகள் மாறிவருவதும் கவலைக்குரிய விஷயம்.  அது மட்டுமல்ல வஹ்ஹாபிய கோட்பாடுகளுக்கு சிறந்த சந்தையாகவும் , மூளை உற்பத்தி மூலமாகவும் இருக்கிறது. இந்த உற்பத்தி சாதனங்களின் விளைபொருட்களாக சவூதி வாழ் தமிழ்நாட்டு முஸ்லிம் இளைஞர்கள் மாற்றப்படுகின்றனர். சவூதி அரேபிய பொருளாதார பலம் இல்லாவிட்டால் (ஜகாத், ஸதகா)தமிழ்நாட்டில் பல வஹ்ஹாபிய இயக்கங்களின் வாழ்வாதாரம் கூட கேள்விக்குறியாகி விடும். ஆகவே அவர்கள் அங்கு மழைபெய்யும் போது இங்கு குடைபிடிக்கிறார்கள். உட்கார்ந்தால், நிமிர்ந்தால், நடந்தால் என சகலவிதமான அங்க அசைவுகளும் சவூதி மாதிரி இருக்க வேண்டும் என்கிறார்கள். நதிமூலத்திற்கான நன்றி விசுவாசம் இது.

 சவூதி அரேபியாவில் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் பலர் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார்கள். பலர் இன்னும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆளாகி உள்ளுக்குள் தவிக்கிறார்கள். இந்தியாவில் மொழியப்படும் வறுமைக்கோடு என்பதன் நடைமுறை அர்த்தத்தை சவூதியில் இந்த தொழிலாளர்கள் மத்தியில் காண முடியும். மேலும் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு நிவாரண உதவிகளை, மறுவாழ்விற்கான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. அங்குள்ள ஊடகங்கள் தினமும் இதைப்பற்றி விவாதிக்கின்றன. ஆனால் சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஊடகங்கள் மத்தியில் மட்டும் அதன் சிறிய சலனம் வெளிப்பட்டது. புதியதலைமுறை தொலைக்காட்சியில் இது பற்றி நடந்த விவாதத்தில் நான் கலந்து கொண்டு பேசினேன். ஆனால் ஆட்சியாளர்கள் மத்தியிலோ அல்லது அரசியல்வாதிகள் மத்தியிலோ இதுபற்றிய எவ்வித எதிரொலிகளும் இல்லை. தற்போது தான் நிதாகத் சட்டத்தின் படியான வெளியேற்றம் தொடங்கி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது இது பற்றிய எவ்வித விவாதங்களோ, உரையாடல்களோ அல்லது அரசியல் வாதிகளின் அறிக்கைகளோ எதுவுமே நடைபெறவில்லை. தமிழ்நாட்டு அதிகார வர்க்கம் பொருளாதார புகலிடம் தேடி புலம்பெயர்ந்தவர்களைப்பற்றி கவலைப்படுவதே இல்லை.  வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், புருனே மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நிரம்பியிருக்கிறார்கள். ஆனால் அப்படியான ஒரு மக்கள் தொகுதி இருப்பதாகவே அநேகம் பேருக்கு தெரிவதில்லை. பொதுவாக புகலிடங்கள் எப்போதுமே நிரந்தரமாக இருப்பதில்லை. கேரளாவைப்போன்று தமிழ்நாட்டிலும் உடனடியாக அதற்கான செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம். மேலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பிழைப்பு தேடி புலம்பெயர்வதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கான உரிய வழிவகைகள் ஆராயப்பட வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் யோசிக்க வேண்டிய விஷயம் இது.


Total no. of employees
                 Saudization percentage

Red
Yellow
Green
Premium
10 - 49
0 - 4%
5 - 9%
10 - 39%
≥ 40%
50 - 499
0 - 5%
6 - 11%
12 - 39%
≥ 40%
500 - 2,999
0 - 6%
7 - 11%
12 - 39%
≥ 40%
3,000+
0 - 6%
7 - 11%
12 - 39%
≥ 40%

No comments: