காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, February 24, 2014

பொங்கல் பண்டிகையும் தமிழ் முஸ்லிம் அடையாள அரசியலும்


எந்த ஒரு பிரதேசமும் அடையாளங்களை மீறி வாழ்வதில்லை. வாழ்வியலின் அடிப்படையே அடையாளம் தான். வரலாற்றில் உலகம் முழுவதும் நடைபெற்ற, நடந்து கொண்டிருக்கிற தேசிய இனப்போராட்டங்கள் அனைத்துமே அடையாள அரசியலின் எழுச்சியே. இந்நிலையில் பூகோளத்தின் எந்த பகுதியும் அடையாளம் மற்றும் அதனோடு இயைந்த கலாசாரம் இவற்றோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. இவற்றை துறந்துவிட்டு வாழ்வது சாத்தியமல்ல. அவ்வாறு வாழ்வதாக நினைப்பதே ஒரு பாவ்லா தான். இந்நிலையில் இந்திய தேசியத்தின் ஒரு பகுதியான தமிழ்நாட்டில் தமிழ் அடையாளமும், கலாசாரமும் எப்போதுமே இருந்து வந்துள்ளன. ஆதித்தமிழர்கள் மதமற்ற மனிதர்களாக (Materialist) வாழ்ந்ததாக வரலாறு பதிவு செய்கிறது. இந்நிலையில் தமிழ்ச்சமூகத்திற்கான எல்லாவித தனித்த கலாசார நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கின்றன. அதன் ஒரு பகுதியான அறுவடைதிருநாளான பொங்கல் குறித்தும் அதனை தமிழ் முஸ்லிம் சமூகம் அடையாளமற்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது குறித்தும் நாம் விரிவாக ஆராய வேண்டியதிருக்கிறது.

தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் சங்ககாலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த ஒரு மத அல்லது பிராந்திய சமூகத்தின் பண்டிகைகளும் அதற்கான தகுந்த வரலாற்று காரணங்களோடும், முறையியலோடும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழர்களின் பொங்கல் பண்டிகையும் வரலாற்றுரீதியாக விவசாய செயல்பாடுகளோடு தொடர்புடைய ஒன்று.  தங்களின் நிலங்களில் விவசாயம் செய்துவிட்டு அதற்கான மகசூலை அவர்கள் தை முதல் நாளில் அறுவடை செய்கிறார்கள். அது இயற்கையின் வஸ்துக்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய பிற ஜீவன்களுக்கு  நன்றி சொல்லும் ஒன்றாக தொடங்கியது. இம்மாதிரி விவசாயத்தோடு தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக விழாக்கள் நடத்தப்படும் வழக்கம் உலகம் முழுக்கவே இருக்கின்றது. அதன் ஒரு பகுதி தான் தமிழ்நாட்டின் பொங்கல் பண்டிகை. காலத்தின் தொடர்ச்சியில் பல்வேறு பரிணாமங்களை எடுத்த  பொங்கல் பண்டிகையானது தற்காலத்திலும் பல வடிவ கொண்டாட்டங்களோடு தொடர்கிறது. உலகம் முழுவதுமே  பல நாடுகளில் இந்த அறுவடை சார்ந்த கொண்டாட்டங்கள் பல்வேறு பருவங்களில் நிகழ்த்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தின் உருவாக்கம் என்பது கி.பி எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பமாகிறது.கேரளத்தில் தொடங்கி  ஏறத்தாழ சமகாலத்தில் அல்லது அதற்கு சற்று பிந்தைய நிலையில் இஸ்லாம் இங்கு அறிமுகமாகியது. இந்த இரு மதங்களுக்கும் தங்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நெருக்கடி காரணமாக மாறியவர்களில் பெரும்பாலானோர் இங்குள்ள தமிழ் பேசும் சாதி இந்துக்களே.  மானுடவியல் அடிப்படையில் பார்த்தால் இது உளவியல் ரீதியான நகர்வே தவிர உடல்ரீதியான நகர்வல்ல. காரணம் இரு மதங்களும் அவற்றை ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாக ஆன்மீக ரீதியான நம்பிக்கைகளையும், செயல்பாடுகளையும் மட்டுமே முன்வைக்கின்றன. குறிப்பாக நம்பிக்கை தான் அதற்கு முக்கியம்.  இந்த இருமதங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் அறிமுகமாகி விட்ட  சமணமும், பௌத்தமும்  தமிழ் அடையாளத்தோடு தான் நகர்ந்து வந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் அது பெருந்தாக்கத்தை செலுத்தாவிட்டாலும் கணிசமானோர் இதற்கும் மாறி இருக்கின்றனர். தங்களை தமிழ் சமணர்கள் மற்றும் பௌத்தர்கள் என்று அழைத்த அவர்கள் தமிழ்பண்பாட்டோடு நகர்ந்தனர். பொங்கல் பண்டிகையும் அவர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கிறிஸ்தவம்  அதற்கான வரலாற்று கூறுகளோடு தொடர்ச்சியாக பல தமிழ் இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்தது. ஜி.யு. போப், வீரமாமுனிவர் , வேதசகாயம் பிள்ளை மற்றும் தனிநாயகம் அடிகளார் போன்றவர்கள் பல அற்புதமான தமிழ் இலக்கியங்களை படைத்தனர். இது மாதிரியே இஸ்லாமில் உமறுபுலவர், வள்ளல் சீதக்காதி, சேகனா புலவர், குணங்குடி மஸ்தான், பீரப்பா, சதக்கதுல்லா அப்பா போன்றவர்கள் தமிழுக்கு பல அரிய  தத்துவம் மற்றும் வரலாறு சார்ந்த இலக்கிய படைப்புகளை அளித்துள்ளனர். இந்த மரபு தொடர்ச்சியாக பல புலவர்கள் மற்றும் கவிஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. நவீன தமிழ் இலக்கியத்திற்கும் இஸ்லாமியர்கள் பலர் பங்களிப்பு செய்திருக்கின்றனர். முதல் தமிழ் சிறுகதை என்று அறியப்படுகிற வ.வே.சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம் என்பதற்கு முன்பாகவே சிங்கப்பூரில் சிங்கை நேசன் ஆசிரியராக இருந்த  மக்தூம் கான்சாகிப் என்பவரால்  விநோத சம்பாஷணை என்ற பெயரில் சிறுகதை எழுதப்பட்டு விட்டது. ஆக தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பு மிகுந்த பக்கங்களை இஸ்லாமியர்கள் நிரப்பி இருக்கிறார்கள். கலைமரபிற்கு பலர் சிறந்த பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இசை அவற்றில் ஒன்று. இருந்தும் துரதிஷ்டவசமாக தமிழ் மையநீரோட்ட சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட அடையாளமற்ற சமூகமாக தமிழ் இஸ்லாமிய சமூகம் மாறி விட்டது. இதன் காரணங்கள் மிக நெடியவை. வரலாற்றுப்பயணங்களின் நுட்பங்களையும், நெழிவு சுழிவுகளையும் உள்ளடக்கியவை.

அடையாளம் (Identity) என்பது வெறுமனே செயற்கையான, உடனடியான மனிதவியல் மாற்றம் அல்ல. மாறாக அடையாளம் என்பது இயல்பான மண் சார்ந்தும் அதனோடு இயைந்த உடலோடும் உருவாகி விடுகிறது. பிரபல மேற்கத்திய உளவியல் அறிஞரான டெல்யூஸ் இதனை குறித்து விரிவாக ஆராய்ந்தார். மண் சார்ந்த அங்கங்களற்ற உடலாக அவர் தனிமனிதன் மற்றும் சமூகத்தின் அடையாள உருவாக்கத்தை முன்வைக்கிறார்.  மேலும் மனித உடல் இதன் உருவாக்கத்தில் முதன்மை காரணியாக இருக்கிறது. இந்திய தத்துவங்களில் இது பிரகிருதி என்றழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மனித உடலமைப்பு ஒரே சீரானதாக இல்லை. அது பிரதேசங்களுக்கு தகுந்த படி மாறுபடுகிறது. இதன் தொடர்ச்சியில் மொழியே முதன்மை பெறுகிறது. உலகில் உள்ள எல்லா பிரதேச மொழிகளும் அதன் மனிதர்களும் அடையாளங்களோடு தான் இயங்குகின்றனர். பிறக்கும் குழந்தையானது தன் சாதி, மதம், தெய்வம் இவற்றை அறிவதற்கு முன்பாகவே தன் மொழியை அறிந்து கொள்கிறது. அது மொழி மூலம் மட்டுமே தன்னியல்பை அறிந்து கொள்கிறது. அதன் உடலியல் மற்றும் உளவியல் அதன் மூலம் மட்டுமே அமைக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழியோடு, அதன் மண்ணோடு, அது சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளோடு இயங்கும் அனைவரும் தமிழர்களே. இங்கு சாதி, மத எல்லைகள் அனைத்துமே அடுத்த கட்டம் தான்.  பல்வேறு சாதிகள் பல்வேறு காலகட்டங்களில் தங்களின் சமூக, பொருளாதார, கலாசார காரணங்களுக்காக இஸ்லாத்திற்கு மாறினார்கள். அது உளவியல் மாற்றமே. ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் கலிமாவை மொழிந்த உடன் ஒருவர் இஸ்லாமியனாகி விடுகிறார். ஆக இங்கு உடல் ரீதியான மாற்றம் நிகழவே இல்லை. அந்த அடையாளம் எப்போதுமே விரிந்து பரவும் சூரிய நிழலாக பின்தொடர்கிறது  இதன் தொடர்ச்சியில் மொழியால், அதன் கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அனைவருமே தமிழர்கள் தான். இதில் அடையாளமற்று தங்களை செயற்கையாக துண்டித்து கொள்வது அல்லது மற்றவர்களால் துண்டிக்கப்படுவது அபத்தமானது. துன்பியலும் கூட. முஸ்லிம்கள் தம்மளர்கள், தமிழ் ஆட்கள் என்று மற்றவர்களை அழைப்பதும், மற்றவர்கள் பாய், சாகிபு என்று உருது மொழிசார்ந்து இவர்களை அழைப்பதும் அடையாள விலக்கம் சார்ந்த சொல்லாடல்களே. வரலாற்று ரீதியாக இந்த பிளவு தமிழ்நாட்டில் சுல்தான்களாலும், நவாபுகளாலும் உருவான  உருது மொழி காரணமாக ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியில் தமிழ்நாட்டில் வடஆற்காடு  பகுதி  மற்றும் பிற மாவட்டங்களில் புலம்பெயர்ந்த உருது முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்களோடு சமூக ரீதியான உறவு கொண்ட தருணத்தில் இந்த சிக்கலான பிளவு ஏற்பட்டிருக்கிறது.  உருது முஸ்லிம்களின் வரலாற்று நகர்வில் ஒன்றை கவனிக்க வேண்டியதிருக்கிறது. நவாபுகளின் ஆட்சியதிகாரத்தால் வடக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் ஒருபிரிவினர். இவர்களுக்கு தமிழ் சரியாக பேச வராது. அதிகமும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவுடன் உறவு வைத்திருப்பவர்கள். குறிப்பாக ஆந்திராவை ஒட்டிய எல்லையோரங்களில் வசிப்பவர்கள். இரண்டாம் பிரிவினர் சாதி இந்துக்களாக இருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்கள். இவர்கள் இங்குள்ள மரபார்ந்த உருது முஸ்லிம்களின் தாக்கத்தால் தாங்களும் உருதுமொழியை கற்றுக்கொண்டு தங்களை உருது  முஸ்லிமாக மாற்றிக்கொண்டவர்கள். இவர்களுக்கு தமிழ் உச்சரிப்பும், பேச்சும் சரளமாக இருக்கும். பள்ளிகளில் தமிழை தான் பாடமாக படிக்கின்றனர். உருது முஸ்லிம் வரலாற்றை ஆராயும் போது அவர்களிடையே இந்த இருவித வரலாற்று மாற்றத் தன்மை இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இரு பிரிவினரும் கலந்த தருணத்தில் இருவருக்குமான பொது அடையாளம் தேவைப்பட்டது. இதற்கு தமிழ் அடையாள விலக்கம் செய்வது அவசியமான ஒன்றாக இருந்தது. இதன் மூலம் முஸ்லிம் என்ற மத அடையாளத்தை உலமாக்கள் முன்னெடுத்தனர். அதுவே பிற்காலத்தில் முன்னிலை பெற்றது. தமிழர் என்பது முஸ்லிம் அல்லாதவர்களை குறிக்கும் சொல்லாக மாறியது. தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் உருது மேன்மை மனம் வலுப்பெற்றது. இந்த உருக்குலைவின் காலத்தொடர்ச்சியில் உருது தெரியாதவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் அல்ல என்பதும், முஸ்லிம்கள் என்றாலே உருது தெரிந்தவர்கள் என்பதும்  சமூக மனோபாவமாக தமிழ்நாட்டில்  இதன் மூலம் உருவானது. ஆனால் திராவிடமொழிக்குடும்பத்தை சார்ந்த  கேரளாவில் இது இல்லை. அங்கு எல்லோருமே தங்களை மலையாளிகள் என்று அழைத்துக்கொள்வதில் பெருமை கொள்கின்றனர். பல இஸ்லாமிய மத அறிஞர்கள் கூட தங்கள் பேச்சுகளில் நாம் மலையாளிகள் என்பதை அடிக்கடி உச்சரிக்கின்றனர்.  அவர்கள் மொழியை வைத்தும், வாழிடத்தை வைத்தும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். அங்கு மலையாள அடையாளம் சார்ந்த விஷயத்தில் சாதி, மத எல்லையே கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் உலமாக்கள் தங்கள் உரைகளில் கூட தமிழ் என்ற சொல்லை  உச்சரிக்க தயங்குகின்றனர். தமிழ் முஸ்லிம் என்று கூட குறிப்பிட அதிக தயக்கம் காட்டுகின்றனர். உருது சார்ந்த கொலாஜ் சிந்தனையே அதற்கு காரணம். மேலும் தமிழ் உச்சரிப்பு கூட இங்கு சிக்கல் தான். உதாரணமாக இருக்குகின்றது,எட்டி வைத்தல், எத்தி வைத்தல் போன்றவை.  இந்நிலையில் வங்கதேச வரலாறு நமக்கு பல பாடங்களை  வழங்குகிறது. வங்கதேசத்திற்கும், பாகிஸ்தானிற்குமான முரண்பாட்டின் மூலே காரணமே மொழி சார்ந்த தேசியம் தான்.  இருவருமே இஸ்லாமியர்களாக இருந்த போதும் நிலவியல் அடிப்படையிலான தேசிய இன அடையாளமே அங்கு முதன்மை பெற்றது.    இந்த அம்சங்கள் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது முக்கியம்.

தமிழ் முஸ்லிம் சமூகம் பொங்கல் விலக்கலுக்கான காரணங்களாக சிலவற்றை முன்வைக்கிறது. 1. பொங்கல் என்பது இந்து மத பண்டிகை. அது சடங்குகள் மற்றும் வழிபாடுகளை கொண்டது. 2.  ரம்சான் மற்றும் பக்ரீத் ஆகிய இரு பண்டிகைகளை தாண்டி வேறு எதுவும் இஸ்லாத்திற்கு எதிரானது. இது குறித்து நாம்  விரிவாகவும், ஆழமாகவும்,  விவாதிக்க வேண்டியதிருக்கிறது.

இந்தியாவில் விவசாயம் சார்ந்து பல பிராந்திய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. கேரளாவில் ஓணம் மற்றும் பஞ்சாபின் வைசாகி இவற்றில் புகழ்பெற்றவை. கேரளாவின் உருவாக்கத்தோடு தொடர்புடைய ஓணம் சாதி மதம் கடந்து அங்குள்ள எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. கேரள முஸ்லிம்களில் கணிசமானோர் மரபார்ந்த சடங்குகள் அற்று ஓணத்தை  கொண்டாடுகின்றனர். அங்கு ஓண சந்தியா என்ற  மதிய விருந்து புகழ்பெற்றது.  அது மாதிரியே பஞ்சாபின் அறுவடை திருநாளான வைசாகி பண்டிகையை பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாபை சார்ந்த பஞ்சாபிகள் மதம் கடந்து கொண்டாடுகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் பொங்கல் மட்டும் காலங்காலமாக இந்து பண்டிகை என முஸ்லிம்களால் தவறாக நம்பப்படுகிறது. அது சூரிய வழிபாட்டை பிரதானமாக முன்வைக்கிறது என்பது தான் அது. இந்நிலையில் தமிழ் முஸ்லிம்களை வந்தேறிகள் என்று சித்தரிப்பதற்காக இந்துத்வ சக்திகளும் இதனை தங்களுக்கு சாதகமாக  எடுத்துக்கொள்கின்றன.இன்றைய நகரமயமாக்கல் காலகட்டத்தில் கிராமங்களில் மட்டுமே சாதி இந்துக்கள் சூரிய வழிபாட்டோடு இதனை கொண்டாடுகின்றனர். நகர்புறங்களில் பெரும்பாலும் இல்லை. இந்நிலையில்  பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சடங்குகள் மற்றும் வழிபாடுகள் என்பதை தாண்டி கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், இடது சாரிகள் என அனைவராலும் வழிபாட்டுச்சடங்குகள் ஏதுமின்றி  அவர்களுக்கான வடிவத்தில் பல ஆண்டுகளாக கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி இதனை கொண்டாடுகின்றனர்.  இஸ்லாமியர்களுக்கு அம்மாதிரியான வழிபாடு சார்ந்த கொண்டாட்டங்கள் தேவை இல்லைதான். ஆனால் வழிபாடு ஏதுமற்ற, சடங்குகள் ஏதுமற்ற ஒன்றாக இஸ்லாமியர்கள் அதனை கொண்டாட முடியும். வீடுகளில் விசேஷ உணவு வகைகளை தயாரித்தாலே அதுவே சிறந்த கொண்டாட்டம் தான். விருந்து உபசரிப்பு மற்றும் பகிர்ந்து உன்ணலை அந்த தினத்தில் முன்னெடுக்கலாம். ஜமாஅத்களில் செயல்படும் இளைஞர் அமைப்புகள் விளையாட்டுப்போட்டிகளை நடத்தலாம். உருது முஸ்லிம்களின் கலப்பு மேற்கண்ட விஷயத்தை மேலும் சிக்கலாக்குகிறது. உருது சார்ந்த தேவ்பந்த் உலமாக்கள் வட மாவட்டங்களில் பல ஜமாஅத்களை ஆக்கிரமித்து இருப்பதால் மேற்கண்ட அடையாள சிக்கல் மேலும் வலுபெறுகிறது. இரு பெருநாள் கொண்டாட்டங்களில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுவதை கூட பலர் ஹராம் என்கின்றனர். ஆரம்பகால இஸ்லாம் குறித்த, அதன் சமூக கட்டமைப்பு குறித்த வரலாற்று புரிதலின் குறைபாடு தான் இது. இந்நிலையில்  மத சார்பற்ற இந்தியாவில் பிராந்திய கொண்டாட்டங்களை மாநில அரசுகளே அதிகாரபூர்வமாக கொண்டாடுகின்றன. அப்படியிருக்க அது அந்த மொழிபேசும் மக்கள் தொகுதியினர் அனைவருக்குமானதாக தான் இருக்க முடியும். பொங்கல் பண்டிகை ஒட்டி  தமிழக அரசானது அரசு ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் பொங்கல் பை போன்றவற்றை எல்லோருக்குமே வழங்குகிறது. இங்கு எந்த வர்க்க பேதமும் இல்லை. எல்லோருமே அதனை வாங்குகின்றனர். மேலும் பண்டிகை கொண்டாட்டத்தையும் அரசு முன்னெடுக்கிறது. காரணம் இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் பண்டிகையாக இருப்பதால் தான். பல அரபு நாடுகளில் இரு பெருநாள் கொண்டாட்டங்களை தாண்டி தேசிய தின கொண்டாட்டம் வெகுவாக அரபு நாட்டவரால் முன்னெடுக்கப்படுகிறது. தேசிய தினம் அரபிகளால் பண்டிகை போன்றே கொண்டாடப்படுகிறது. இதற்காக தேசிய தின கொண்டாட்டம் ஹராம் என்று அங்கு எந்த முப்தியும் பத்வா வழங்கவில்லை. பல இஸ்லாமிய நாடுகளில் இவற்றை தாண்டிய தனிப்பட்ட கொண்டாட்டங்கள், கலாசார நிகழ்வுகள் உண்டு. சவூதி அரேபியாவில் கூட பழங்குடி சவூதிகளின் கலாசார நிகழ்வுகள் வருடந்தோறும் நடைபெறுகின்றன. இந்நிலையில் தமிழ் முஸ்லிம் சமூகம்  தமிழ் அடையாளங்களை துறப்பதை தவிர்த்து விட்டு மற்றவர்களால் அடையாள நிராகரிப்பு செய்யப்படுவதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டும். வாழும் பிரதேசத்திற்கான கலாசார நடவடிக்கைகளோடு தனக்கான வடிவத்தில் ஒன்றுபடுவதே பன்மயப்பட்ட சமூக வாழ்க்கைமுறை. சமூகத்தின் கலாசார நடவடிக்கைகளின் ஒரு பகுதியான உணவு பழக்கத்தில் பெரும்பாலும் வித்தியாசங்கள் இல்லை. இட்லி, தோசை எல்லோராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இந்நிலையில்  தமிழ்நாட்டில் தற்போது சில இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் தமிழ் சார்ந்த பல்வேறுவிதமான போராட்டங்களுக்காக களத்தில் இறங்கியிருக்கின்றன. அவர்கள் இதனை வெறுமனே குறியீட்டளவிலான வெகுஜன அரசியல் பங்களிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் சமூக பண்பாட்டு இணக்கம் சார்ந்த நடவடிக்கையாக மாற்ற வேண்டும்.  இதன் தொடர்ச்சியில் தமிழ் அடையாளம் மற்றும் சமூக உறவாடல் குறித்து இவை ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுக்க வேண்டும்.  அதற்கான சரியான தருணமிது.

4 comments:

Unknown said...

YES DEEP THINKING

குட்டிபிசாசு said...

வாசித்தேன்

thoaranam said...

மனிதன் பேசும் சிந்திக்கும் ஆற்றலாளனாக பரிணமித்த மொழி வழி அடையாளம் மிகவும் மதிக்கப்பட வேண்டியதும் தொன்மத்தை நீட்சியுடன் இணைக்கும் அடையாளத்தையுடையதும் ஆகும். ஆழமான சிந்தனைகள் பரிசீலிக்கப்பட்டு நடைமுறையானதுதானே மானுட இருப்பு!! தொடருங்கள்
-முகிலன்

தருமி said...

பார்க்க:

http://dharumi.blogspot.in/2007/01/197.html

http://dharumi.blogspot.in/2011/01/469.html