காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, September 29, 2014

ஆக்கிரமிப்பும் இன அழிப்பும் - வலியின் ரணங்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்து

   எங்கே பட்டாம் பூச்சி செல்கிறது

மின்னல் எப்போது விழுகிறது

இடி எப்போது இடிக்கிறது

பனிக்கட்டி உருகும் போது

குளிர்காலம் நம்மை சுழிக்கும் போது

இரவு பனிக்கட்டியால் மூடும் போது

இந்த பட்டாம் பூச்சிகள் எங்கே செல்கின்றன?
     


         பிரபல பாலஸ்தீன் கவிஞர் மஹ்மூத் தர்வீஷின் வரிகள் இவை. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு காரணமாக காசா பகுதிகளில் குழந்தைகள் கொல்லப்படுவதை   அவரின் கவிதை வரிகள் மேற்கண்டவாறு விவரித்தன.



காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசி அப்பாவி குழந்தைகளையும், மனிதர்களையும் கொன்று வரும் இந்த தருணத்தில் பாலஸ்தீன் விவகாரம் குறித்த புரிதல் நமக்கு முக்கியமானது. பாலஸ்தீன் என்று அழைக்கப்படும் மேற்கு ஆசிய பிராந்தியம் மிக நீண்ட நாகரீகத்தையும், வரலாற்று பாரம்பரியத்தையும் உள்ளடக்கி இருக்கிறது. பாலஸ்தீன் பிராந்தியம் அடிப்படையில் கானான்கள் என்ற பழங்குடியினரின் புராதன பூமி. கி.மு 12 ஆம் நூற்றாண்டில் கிரேக்க பழங்குடியினர் மத்திய தரைக்கடல் வழியாக இங்கு குடியேறினர். எகிப்திய ஆவணங்களில் இவர்கள் பிலஸ்தீன் என்று குறிக்கப்படுகின்றனர். அதாவது கடலின் மக்கள். இதுவே பாலஸ்தீன் ஆக பரிணாமம் பெற்றது. கி.பி ஏழாம் நூற்றாண்டு கால அரபு இஸ்லாமிய ஆட்சி காலத்தின் போது இது சிரியாவை உள்ளடக்கிய பெரிய பிராந்தியமாக இருந்திருக்கிறது. காலனிய ஆட்சி காலத்தில் தான் இதன் எல்லை மறுவரையறை செய்யப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த முதலாம் உலகப்போரின் போது பிரான்சு மற்றும் பிரிட்டன் காலனிய அரசுகளால் இதன் எல்லைகள் கூறு போடப்பட்டன.

ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மத்திய கிழக்கில் தீராத துயரமாக, இரணங்களின் தொடர்ச்சியாக, பிறப்பை விட மரணம் அதிகம் நிகழும் பிராந்தியமாக இருந்து வரும் பாலஸ்தீன் வித்தியாசமான பூகோள அமைப்பை கொண்டது. காலனியாக்கத்திற்கு முந்தைய துருக்கிய உதுமானிய பேரரசின் கீழ் இருந்த பாலஸ்தீன் பிராந்தியத்தின்  மொத்த பரப்பளவு 27009 சதுர கிலோ மீட்டர்.(704 கிலோ மீட்டர் கடல் பரப்பு உட்பட). இந்த பிராந்தியம் நான்கு விதமான பூகோள அமைப்பை உள்ளடக்கி இருக்கிறது.

1.கடற்கரை பகுதி : மத்தியதரைக்கடல் பகுதியை உள்ளடக்கிய சமவெளி பகுதி. இது வடக்கிலிருந்து தெற்காக கடல்மட்டத்திலிருந்து 180  மீட்டர் உயரம் கொண்டது. பாலஸ்தீன் பிராந்தியத்தின் மிக வளமான பகுதி இது. விவசாய பூமி

2. மலைப்பகுதிகடற்கரை பகுதிக்கு இணையான கிழக்கு பகுதி. கடல் மட்டத்திலிருந்து 1208 மீட்டர் உயரம் கொண்ட அல் ஜர்மக் மலைப்பகுதியை கொண்டது. வளமான பகுதி. அபூர்வ தானியங்களின் விளை மையம். அதிகமும் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தப்படுகிறது.

3. அல் கௌர் (பள்ளத்தாக்கு):  இது ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதி என்றழைக்கப்படுகிறது. காரணம் ஜோர்டானிய ஆறு இதனை கிழக்கு மேர்காக பிரிக்கிறது. வளமான பூமியாக இருப்பதால் விவசாயம் இங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 395 மீட்டர் தாழ்வான பகுதியாக இருக்கிறது.

4. பாலை நிலப்பகுதி :  பாலஸ்தீனின் கணிசமான பகுதிகள் பாலைவனமாக இருக்கின்றன. அல் நகாப் மற்றும் அல் சாப் ஆகிய இரு பாலைவனங்கள் இங்கு முக்கியமானவை. இது கிழக்கில் அல் காலில் பகுதியையும், மேற்கில் காசா பகுதியையும் உட்கொண்டிருக்கிறது. சில சோலைகளை உள்ளடக்கி இருந்தாலும், இந்த பாலைவனப்பகுதிகள் பெரும்பாலும் சூடான பிரதேசமாகவே இருக்கின்றன.

மேற்கண்ட நான்குவிதமான பூகோள அமைப்பைக்கொண்ட பாலஸ்தீன் ஏரிகளையும், உப்பு அதிகம் மிகுந்த உயிர்வாழ தகுதியற்ற சாக்கடல் மற்றும் மத்திய தரைக்கடலையும் உட்பொதிந்திருக்கிறது. பிராந்திய ரீதியாக ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆகியவற்றை தொட்டுக்கொள்கிறது.

வரலாற்றின் பாரம்பரிய தொடர்ச்சியில் பாலஸ்தீன் பல புராதன நகரங்களை கட்டியெழுப்பி இருக்கிறதுபழங்குடிகளின் வாழிடமான ஜெருசேலம் அவற்றில் ஒன்று. கி.மு 8000 ஆம் ஆண்டில்  நிறுவப்பட்டதாக கூறப்படும் ஜெருசேலம் பாலஸ்தீனின் முதல் வரலாற்று நகரம் மற்றும் உலக பெருமதங்களின் ஆன்மீக நகரம். யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றின் ஆன்மீகம் சார்ந்த புனித குறியீடுபாலஸ்தீன் வரலாற்றின் பெரும்பாலான நாகரீக செயல்பாடுகள் அனைத்தும் கடற்கரை  மற்றும் மலைப்பகுதிகளை ஒட்டியே நிகழ்ந்திருக்கின்றன. உலக வரலாற்றில் பெரும்பாலான நகரங்கள் இந்த பூகோள அமைப்பை தான் உட்கொண்டிருக்கின்றன. மேலும் யபாஅகா, கைபா,காசா, இசாத், ரமல்லா, மேற்குகரை, நபஸ், பெத்லேகம், நாசரேத் மற்றும் சபாத் ஆகியவை பாலஸ்தீன் பிராந்தியத்தின் முக்கிய நகரங்கள். இவை ஒவ்வொன்றும் குறிப்பான, தனித்துவம் மிக்க வரலாற்று பதிவுகளை கொண்டிருக்கின்றன.

பாலஸ்தீன் பகுதியில் யூதர்களின் நுழைவு என்பது வரலாற்றை காட்டிலும் தொன்மைங்களை அடிப்படையாகக்கொண்டது. இந்தியாவின் புராதன தொன்மங்களோடு இது தொடர்பு கொண்டது. வரலாறு என்பது  காலத்தின் அடிப்படையில் உலக  நிகழ்வுகளை பதிவு செய்யும் முறை. வரலாறு என்பது பகுதி உண்மையாகவோ அல்லது முழு உண்மையாகவோ இருக்கிறது. அதை நிரூபிப்பதற்கு அகழ்வாய்வுகள், செப்பேடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள் வாய்மொழி வழக்காற்று சான்றுகள் போன்ற தரவுகள் தேவைப்படுகின்றன. ஆனால் தொன்மம் (Myth)என்பது அறியப்பட்டவற்றிற்கும், அறியப்படாதவற்றிற்குமான இடைவெளியே. அது புனைவு வகைப்பட்ட ஒன்று. கற்பனை வடிவில் எழுந்து கொள்வது. மேலும் தொன்மம் என்பது உண்மையான கதைக்கும், கண்டுபிடிக்கப்பட்ட கதைக்குமான இலக்கிய முறைமை . ஆக கடந்து போன ஒன்றை பதிவு செய்யும் போது வரலாறு என்பது வரலாற்று வடிவில் பதிவு செய்யப்பட வேண்டும். தொன்மங்கள் காலத்தோடு புனைவு வடிவில் பயணம் செய்பவை. (மத்திய பிஜேபிஅரசு இதனடிப்படையில் இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை தொன்மம் என்பதிலிருந்து வரலாறாக மாற்ற முயற்சிக்கிறது )இந்நிலையில் யூதர்கள் பற்றிய தெளிவான, வலுவான வரலாறுகள் இன்று இல்லை. அதை சில வரலாற்றாசிரியர்கள் வரலாறாகவும், சிலர் தொன்மங்களாகவும் பார்க்கின்றனர். தொன்மங்களை வரலாறாக மாற்றும் போது தான் பெருஞ்சிக்கல்கள் எழுகின்றன.

 யூதர்களின் வரலாற்றை பொறுத்தவரை கி.மு 13 ஆம் நூற்றாண்டு தீர்க்கதரிசி மோசஸ் எதிரிகளிடமிருந்து தன்னை பின்தொடர்ந்த மக்கள் தொகுதியை காப்பாற்ற அவர்களை செங்கடல் பகுதியிலிருந்து  இந்த பிரதேசத்திற்கு அழைத்து வந்ததாக ஒரு தொன்மம் நிலவுகிறது. இங்கு கி.மு 13 ஆம் நூற்றாண்டு என்பது ஒரு தொன்மமே. இங்கு தொன்மங்கள் வரலாறாக மாற்றப்பட்டது தான் மத்தியகிழக்கு பிராந்தியத்தில் மூன்று மதங்களின் உருவாக்கம்தற்போதைய இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் கூட இதன் அடிப்படையில் ஆனது தான். அதே நேரத்தில் இந்த காலகட்டத்திற்கு முன்பே பாலஸ்தீன் பகுதியில் பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்திருக்கின்றன. கானான்களின் பிரதேசமான பாலஸ்தீன் பின்னர் எகிப்திய, கிரேக்க பழங்குடிகள் உள்ளிட்ட பல்வேறு பழங்குடிகளின் வாழிடமாக மாறியது. மேலும் அமோரைட், ஜெபுசைட்  உட்பட பல இனக்குழுக்கள் கானான்களின் துணை குழுக்களாக இருந்தன. முதல் நாகரீகம் இங்கு கிமு 8 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. நதுபியன் நாகரீகம் என்று வரலாற்றில் அது அறியப்படுகிறதுஅவர்கள் தான் இன்றைய ஜெருசேலத்தை உருவாக்கினர். கானான்கள் பாலஸ்தீனின் மிகப்பெரும் மக்கள்தொகுதியாக மாறினார்கள். பாலஸ்தீனின் புகழ்பெற்ற மலைப்பகுதிகளில் அவர்கள் வாழ்ந்தனர். புகழ்பெற்ற 200 நகரங்களை அங்கு உருவாக்கினர். அன்றைய காலகட்டத்தில் நகர உருவாக்கம் என்பது வலுவான கிராம அமைப்பே. இன்றைய நகர அமைப்பு முறைகளிலிருந்து அவை முற்றிலும் வேறுபட்டிருந்தன.

பாலஸ்தீன் பிராந்தியத்தில் யூதர்களின் வருகைக்கு பிறகு பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. கி.மு 923-721 ல் ஜெருசலத்தை தலைமையிடமாகக்கொண்டு அரசு அமைந்தது. பின்னர் அவர்களுக்கிடையே நடந்த இனக்குழு சண்டையின் விளைவாக அது வீழ்ச்சியடைந்து சமாரியனை தலைமையிடமாகக்கொண்டு இரு இனக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றொரு அரசு அமைந்தது. சுமார் 200 ஆண்டு காலம் நீடித்த அவர்களின் அரசானது கிமு 500 ல் அசிரிய மற்றும் பாபிலோனிய படையெடுப்பால் மொத்தமாக வீழ்ந்தது. இந்த வீழ்ச்சியும் ஒரு வகையில் வரலாற்று இயங்கியல் தான். அந்நிய படையெடுப்பு காரணமாக அவர்களின் அரசுகள் வீழ்ந்து யூதர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டனர். இந்த இடத்தில் அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்களா? அல்லது இயல்பான சமூக, பொருளாதார காரணங்களால் புலம்பெயர்ந்தார்களா? என்ற தெளிவான வரலாறு இல்லைஇதன் தொடர்ச்சியில் யூதர்கள் எகிப்து, பாபிலோனியா மற்றும் அரேபிய பாலைவனங்களில் குடியேறினர். இது Diaspora என்றழைக்கப்படுகிறது. உலக வரலாற்றில் கிரேக்க பழங்குடியினர், மெசினிய பழங்குடியினர், ஆப்ரிக்க கருப்பின அடிமைகள் மற்றும் அமெரிக்க செவ்விந்தியர்கள் ஆகியோர் இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

யூதர்கள் அங்கிருந்து அரசியல் மாற்றம் காரணமாக புலம்பெயர்ந்த பிறகு பாலஸ்தீன் கி.மு 539 ல்  பாரசீக மன்னன் இரண்டாம் சைரசின் கட்டுப்பாட்டில் வந்தது. இதனைத்தொடர்ந்து பாபிலோனியாவில் உள்ள யூதர்கள் மீண்டும் பாலஸ்தீனில் குடியேறினர். அங்கு அவர்கள் குறிப்பிட்ட சதவீதம் குடியேற சைரஸ் அனுமதி அளித்தார். பின்னர் கிமு 332 ல் கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் அதனை கைப்பற்றினார். இது ஹெலனிய ஆட்சிக்கு வழிவகுத்தது. பின்னர் அலெக்சாண்டரின் வீழ்ச்சிக்கு பிறகு கிமு 213 ல் கிரேக்க செலுசியர்கள் இதனை கைப்பற்றினர். அவர்கள் அங்கிருந்த யூதர்களை கிரேக்க மரபுகளை பின்பற்றுமாறு வற்புறுத்தினர். குறிப்பிட்ட சதவீதம் யூதர்கள் மட்டுமே அதற்கு சம்மதித்தனர். மற்றவர்கள் அங்கிருந்து புலம்பெயர்ந்தனர்பின்னர் கிமு 63 ல் ரோமானிய படை பாலஸ்தீனை கைப்பற்றியது. அவர்கள் கி.பி 6 ம் ஆண்டு வரை அப்பகுதியை ஆட்சி நடத்தினர். இந்த காலகட்டத்தில் ரோமானியர்களால் யூதர்கள் கடும் நெருக்கடிக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாயினர். பின்னர் கி.பி 135 ல் யூதர்கள் அங்கிருந்து முழுமையாக வெளியேறினர். அதன் பிறகு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பாலஸ்தீனுடன் அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தற்செயலாக, உடனடியாக ஏற்பட்ட யூத வெறுப்பே  அவர்கள் மீண்டும் புலம்பெயர காரணம். பாலஸ்தீனை பொறுத்தவரை கானான்கள் மற்றும் பிலிஸ்தீனியர்கள் ஆகிய இரு பூர்வகுடிகளே அங்கு நிரந்தரமாக வசித்தனர். கி.பி 2 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட அவர்கள் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை தழுவினர். இந்த கால கட்டம் முழுவதும் பாலஸ்தீன் பைசாண்டிய பேரரசின் கீழ் இருந்தது.

புராதன கால தொன்மங்களின் அரசியல் நெளிவு சுழிவு காரணமாக  யூதர்கள் பல்லாண்டு காலம் ஐரோப்பாவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் வாழ்ந்தனர். குறிப்பிட்ட மண்ணின் பூர்வ குடிகளாக மாறி அந்த பிராந்தியங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமாயினர். இதன் தொடர்ச்சியில்  அன்றைய காலகட்டத்திலேயே ஐரோப்பிய யூதர்களுக்கும்இனக்குழுக்களுக்கும் மோதல்கள் ஏற்பட்டன. யூத வெறுப்பு என்ற அர்த்தத்தை கொடுக்கும் Anti semitism என்ற சொல்லே இந்த கட்டத்தில் இருந்து தான் உருவானது. பணம் என்ற பொருளாதார பரிமாற்ற பண்டத்தின் பிதாமகர்களே யூதர்கள் தான்

உலகின் பெரும் மாற்றத்தை நோக்கிய அடையாளமாக கி.பி 3 ஆம் நூற்றாண்டில் ரோமாபுரி மன்னர் காண்ஸ்டாண்டைன் கிறிஸ்தவத்தை அரச மதமாக அறிவித்த காலத்தில் இருந்து கிறிஸ்தவம் ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளில் பரவியது. இந்நிலையில் யூதர்கள் அல்லாதவர்கள், கிறிஸ்தவ இறையியலை ஏற்றுக்கொண்ட ஐரோப்பியர்கள் கிறிஸ்தவர்களாக அறியப்பட்டனர். இவர்கள் Gentiles என அறியப்பட்டனர். Gentiles என்பது யூதர் அல்லாத கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பியர்களை குறிக்கும். இந்நிலையில் ஐரோப்பிய கிறிஸ்தவர் மற்றும் யூதர்களிடையே பல்வேறு விஷயங்களில் முரண்பாடு ஏற்பட்டன. ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் மற்றும் பிற இனத்தவர்கள் தங்களுக்கென தனி செயல்பாடுகளை , நடைமுறைகளை வகுத்துக்கொண்டனர். யூதர்கள் கந்து வட்டி மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டனர்குறிப்பாக கந்து வட்டி தான் அவர்களின் பிரதான தொழிலாக இருந்ததுஇதைத்தான் காரல் மார்க்ஸ் தன்னுடைய நூல் ஒன்றில் On Jewish question என்ற பகுதியில் "யூதர்களுக்கு பணம் தான் பிரதான கடவுள். அதைத்தவிர அவர்களிடம் வேறு கடவுள் எஞ்சியிருக்கவில்லை" என்றார்.மேலும் வங்கி முறையின் ஸ்தாபகர்களும் யூதர்கள் தான். இதன் தொடர்ச்சியில் இவர்கள் வந்தேறிகள் என்ற எண்ணம் ஐரோப்பியர்களிடம் இருந்ததால் காலத்தின் நகர்வில் பெரும் இனவெறுப்பை உருவாக்கிய நிலைக்கு சென்றது. யூதர்கள் தங்களுக்கான  அடையாள எதுவும் இல்லாததால் ஒரு கட்டத்தில் ஐரோப்பாவில் வேர்களற்ற தொல்குடிகளாக மாறிப்போனார்கள். இதுவே பின்னாளில் ஹிட்லரின் இன சுத்திகரிப்பிற்கு காரணமாக அமைந்தது

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் பாலஸ்தீன்  பிராந்தியத்தில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை 5000. அதுவும் பணக்காரர்கள் மற்றும் வியாபாரிகளாக இருந்தனர். பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்ததுயூதர்கள் தங்களின் புராதன பிறப்பிடத்திற்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதி பகுதியில் ஐரோப்பாவில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக உருவானது. இந்நிலையில் 1862 ஆம் ஆண்டு மோசஸ் என்பவர் ரோமமும் ஜெருசேலமும் என்ற நூலை எழுதினார். அது தான் ஐரோப்பிய யூதர்களிடத்தில் முதன் முதலில் யூதவாதம் குறித்த உணர்வு ஏற்பட காரணமாக அமைந்தது. யூத தேசியம் குறித்த பார்வையும் அப்போது வெளிப்பட்டதுஇதன் பின்னர் தியோடர் ஹெர்ஸ் என்பவர் 1896 ல் யூதநாடு என்ற நூலை வெளியிட்டார். இது தான் சியோனிசம் குறித்த முதல் நூல். அதில் யூதர்களின் தேசிய இருப்பிடம் குறித்த கருத்தாக்கம் வெளிப்பட்டது. பின்னர் அதற்கு அடுத்த ஆண்டு அவர் ஜெர்மனியில் ஒரு மாநாட்டை கூட்டினார். அதில் உலகம் முழுவதிலும் இருந்து யூத பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் யூதவாதம் குறித்தும், யூதர்களுக்கான தேசிய இருப்பிடம் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன. அதில் கலந்து கொண்டவர்கள் அல்ஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளை தேசிய இருப்பிடமாக முன்வைத்தார்கள். ஆனால் பெரும்பாலானோர் தங்களின் ஆதி இருப்பிடமான பாலஸ்தீன் தான் இதற்கு சரியான தேர்வு என்பதை முன்வைத்தனர். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான முயற்சிகள் இன்று முதலே தொடங்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மான ஷரத்துகள் பின்வருமாறு இருந்தன.

1.யூத விவசாயிகளும், தொழிலாளிகளும் பாலஸ்தீனில் குடியேறுவதை தக்க வழிகளில் மேம்படுத்த வேண்டும்.

2.ஒவ்வொரு நாட்டின் சட்டங்களுக்கும் ஏற்றாற்போல் ஸ்தல மற்றும் சர்வதேச அளவில் தகுந்த அமைப்புகளை உருவாக்கி இந்த ஸ்தாபனத்தை ஏற்படுத்துவது, அனைத்து யூதர்களையும் ஒன்றிணைப்பது

3. யூத தேசிய மன உணர்வை பலப்படுத்துதல்

4.யூத வாதத்தின் நோக்கங்களை அடையும் பொருட்டு எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அரசாங்கத்தின் சம்மதத்தைப் பெற ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுப்பது.

இதன் பிறகு பாலஸ்தீன் ஆக்கிரமிப்புக்கான வியூகம் வகுக்கப்பட்டது. ஹெகனா, இவான் சுவிங், ஸ்டெர்ன் ஹங் ஆகியோர் தலைமையில் இஸ்ரேல் மீட்பு படை உருவாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து யூத பிரதிநிதிகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி ஐரோப்பிய யூதர்கள் பலர் பாலஸ்தீன் மற்றும் ஜோர்டான் பகுதியில் நிலங்கள் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பாலஸ்தீன் விவசாய பகுதியை தவிர்த்து மற்ற சமவெளி, குன்று பகுதிகளையும் வாங்கினர். அப்போது பாலஸ்தீன் பகுதி துருக்கிய உதுமானிய பேரரசின் கீழ் இருந்தது. அதே காலகட்டத்தில் உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த அரபு பகுதிகளில் அரபு தேசிய உணர்வுகள் மேலோங்கி இருந்தன. அதன் தாக்கம் பாலஸ்தீன் பகுதிகளிலும் இருந்தது. இந்த உணர்வை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அறுவடை செய்ததன் காரணமாக தான் சவூதி அரேபியாவில் வஹ்ஹாபியம் உருவானது. அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அதன் பகடைக்காயாக இருந்தார். இந்நிலையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த முதல் உலகப்போரில் துருக்கிய பிடியில் இருந்து எங்களுக்கு விடுதலை பெற்று தாருங்கள் என்று பிரிட்டனிடம் பேரம் பேசிய அரபு தலைவர்கள் இருந்தார்கள். சவூதிய மன்னர் பரம்பரை இதில் முன்னணியில் இருந்தது. ஹிஜாஸ் மாகாணம் தவிர (மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு புனித தலங்கள் ஹிஜாஸ் என அழைக்கப்படுகிறது) எஞ்சியிருக்கும் பகுதிகளை மீட்பதற்கான வியூகமாக இருந்தது சவூது பரம்பரையினரின் வேண்டுகோள்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட நெருக்கடி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பாலஸ்தீனை நோக்கி எல்லா யூதர்களும் திரும்ப வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. பூர்வீக இடத்தை நோக்கி திரும்புதலை முன்வைக்கும் கோட்பாடே சியோனிசம். இந்த கோட்பாட்டாளர்கள்  தியோடர் ஹெர்ஸ் தலைமையில் பாலஸ்தீனில் யூதர்களுக்கான பாதுகாப்பான தாய்நாடு பொதுச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட வேண்டும் என்றனர்தியோடர் ஹெர்ஸ் அன்றைய பாலஸ்தீன் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த உதுமானிய பேரரசிற்கு யூதர்களை அங்கு குடியேற்றினால் அரசியல், பொருளாதார உதவி செய்வதாக வாக்களித்தார். இதன் தொடர்ச்சியில் முதல் உலகப்போர் காலகட்டத்தில் உதுமானிய பேரரசு வீழ்ந்து அப்பகுதியை பிரான்சு மற்றும் பிரிட்டன் அரசுகள் ஆக்கிரமித்தன. இந்நிலையில் ஐரோப்பிய யூத தலைவர்கள் பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசிற்கு பாலஸ்தீன் குடியேற்ற நலனிற்காக பலவகைகளிலும் உதவி புரிந்தனர். இதனால் முன்னை விட வேகமாக பாலஸ்தீன் பகுதியில் யூத குடியேற்றம் நிகழ்ந்தது. பலர் அங்கு நிலங்களை வாங்கினர்.

ஐரோப்பிய அரசியல் நெருக்கடி காரணமாக யூதர்கள் பிரிட்டிஷ் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை  வைத்ததன் பலனாக 1917 ல் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பால்பர் என்பவரால் இதற்கான பிரிவினை திட்டம் முன்வைக்கப்பட்டது. பின்னர் யூத தலைவர்களின் நீண்ட முயற்சியின் விளைவாக 1948 ல் பாலஸ்தீன் இரண்டாக பிரிக்கப்பட்டு இஸ்ரேல் - பாலஸ்தீன் என இரு புதிய நாடுகள் உருவாக்கப்பட்டன. இதன் படி உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் இஸ்ரேலில் குடியேற வேண்டும் என்று யூத தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன் படி ஜெர்மனி, ஹங்கேரி போன்ற பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யூதர்கள் இங்கு குடியேறினர். யூத குடியேற்றத்தின் எண்ணிக்கை அதிகமானதால் அவர்கள் பாலஸ்தீனில் இன்னும் கூடுதலான நிலப்பரப்பு தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தனர். அது புறக்கணிக்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் சுயமாக அதனை நிறைவேற்றியது. 1948 காலம் முதல் இன்று வரை இஸ்ரேல் ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பாலஸ்தீன் நிலப்பரப்பை ஆக்கிரமிக்க தொடங்கியது. யூத அடிப்படைவாத தலைவர்கள் வெளிப்படையாகவே இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தூண்டினர். இதன் தொடர்ச்சியில் 1950 களில் பாலஸ்தீன் அரபிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீன் அரபிகள் இடம் பெயர்ந்தனர். பலர் சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாயினர்.

இஸ்ரேல் தனிநாடாக உருவானதற்கு பின்னால் அதன் ஆக்கிரமிப்பின் உக்கிரம் மேலும் தீவிரமடைந்தது. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவை அது ஆக்கிரமித்துக்கொண்டது. ஜெருசேலம் உட்பட பல புனித தலங்கள் அவற்றுள் ஒன்று. அமெரிக்கா எப்போதுமே இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வருகிறது. காரணம் அமெரிக்காவின் இரு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்கள் அதனை கட்டுப்படுத்துபவர்கள் அனைவரும் யூதர்கள். இந்நிலையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையும், இன அழிப்பும் இஸ்ரேலை பிற அரபு நாடுகள் வெறுக்க காரணமாக இருந்தன. உலகின் பல முக்கிய தலைவர்களும் தொடக்க கால இஸ்ரேல் மீது அனுதாபம் கொண்டிருந்தனர். காரணம் ஹிட்லரின் யூதர்களுக்கு எதிரான இனசுத்திகரிப்பு நடவடிக்கை. ஆனால் அதற்கு பின்னர் இஸ்ரேலை ஆதரித்த பெரும்பாலானோர் அதன் பாலஸ்தீனத்திற்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்தனர். குறிப்பாக இந்திய தலைவர்களான நேரு , காந்தி, விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மற்றும் வரலாற்றாசிரியர் அர்னால்ட் டாயின்பீ போன்றோர் முக்கியமானவர்கள். குறிப்பாக காந்தி பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்தார். நாசிகளால் ஒடுக்கப்பட்டவர்கள் மீண்டும் மற்றொரு மக்களை ஒடுக்குவது சரியில்லை என்றார். இதன் தொடர்ச்சியில் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பனிப்போர் நட்ந்தது. இது 1967 ல் அரபு இஸ்ரேலிய போராக உருமாறியது. ஆறு நாட்கள் நடந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலர் மேலும் அகதிகளாயினர். இஸ்ரேலிடம் பிற அரபுநாடுகள் தோற்றன. இன்றைய காசா எகிப்திடமிருந்து இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
1959 முதல் 1967 வரை காசா பகுதியானது எகிப்தின் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. இது 1994 ல் யாசர் அராபத் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட ஒஸ்லோ ஒப்பந்தம்  மூலம் மீண்டும் பாலஸ்தீனின் ஆட்சி பகுதியின் கீழ் வந்தது.


பாலஸ்தீன் பிராந்தியத்தின்  சர்ச்சைக்குரிய காசா திட்டு என்பது 139 சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. எகிப்து, லெபனான் ஆகியவற்றை எல்லையாக கொண்டிருக்கிறது. மேலும் உலகிலேயே அதிக மக்கள் தொகை அடர்த்தியை கொண்ட பகுதிகளில் இதுவும் ஒன்று. இதன் மக்கள் தொகை ஒவ்வொரு வருடம் 12.5 சதவீதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயர்ந்த கட்டிடங்களையும், கணிசமான தொழிற்சாலைகளையும் உள்ளடக்கியது காசாஒஸ்லோ ஒப்பந்தத்தை அடுத்து இஸ்ரேல் காசா பகுதியில் பாதுகாப்பு வேலியை அமைத்திருந்தது. இந்நிலையில் பாலஸ்தீனில் இன்திபாதா எனப்படும் எழுச்சி 1987 ல் ஜபாலிய அகதிகள் முகாமில் ஏற்பட்டது. இஸ்ரேலிய ராணுவம் அங்கிருந்த பாலஸ்தீனியர்கள் சிலரை கொன்றதன் காரணமாக ஏற்பட்ட செய்தி பாலஸ்தீன் முழுவதும் பரவியது. இதனால் இஸ்ரேலிய ராணுவ வீரர்களை அங்கிருந்தவர்கள் தாக்கினர். பதிலுக்கு இஸ்ரேலிய இராணுவமும் அவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டது. இது 1991 வரை நீண்டது. காசா துயர பூமியாக உருமாற தொடங்கியது இந்த காலகட்டத்தில் தான். யாசர் அரபாத் தலைமையிலான பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் 1981 ல் பெய்ரூட்டில் சந்தித்த தோல்விக்கு பிறகு பாலஸ்தீன் விடுதலை போராட்டம் ஹமாஸ் போன்ற இயக்கங்களின் பிடியில் சென்றதுமேலும் இந்த எழுச்சி காலகட்டத்தில் இஸ்ரேல் காசா பகுதி மக்கள் மீது பெரும் அடக்குமுறைகளை ஏவியது. ஏராளமான குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. பலர் அகதிகளாக மற்ற அரபு நாடுகளுக்கு சென்றனர். ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டாலும் இஸ்ரேலிய ராணுவத்தின் மூர்க்கமான தாக்குதலில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

1991 ல் முடிவுக்கு வந்த முதல் எழுச்சிக்கு பின்னர் போருக்கு பிந்தைய மாயான அமைதியை போல பாலஸ்தீன் பகுதி இருந்தது. எஞ்சியிருந்த மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மிகவும் சிரமப்பட்டனர். காசா பகுதியில் அதிகரித்த மக்கள் தொகை இருப்பிட நெருக்கடியையும், மித மிஞ்சிய வேலைவாய்ப்பின்மையையும்  ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ஹமாஸ் அந்த பகுதியில் வலுவான அடிப்படைவாத போராளி அமைப்பாக வலுப்பெற்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாம் எழுச்சி என்பது 2000 ஆண்டில் ஏரியல் சாரோன் ஜெருசேலத்திற்கு வருகை புரிந்த போது ஏற்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ளவர்கள் கல்வீசினார்கள். பதிலுக்கு இஸ்ரேலியர்களும், இராணுவமும் இவர்களை நோக்கி தாக்குதல் நடத்தினார்கள். இது பாலஸ்தீன் பகுதி முழுவதும் பரவியதன் காரணமாக பெரும் உயிரிழப்புகள், வாழ்விட இழப்புகள் ஏற்பட்டன. து உச்சகட்டம் அடைந்த நிலையில் இஸ்ரேல் பெண்கள், குழந்தைகள் உட்பட பலரை கொன்றுகுவித்தது. இந்த உச்சநிலையில் 2002 ல் இஸ்ரேலுக்கு எதிராக போராடிய காசா மக்கள் ஏந்திய பதாகைகள் கீழ்கண்ட வாசகங்களை உள்ளடக்கி இருந்தன.

" நீ என் தண்ணீரை எடுத்துக்கொள்

எங்கள் ஆலிவ் மரங்களை எரி

என் வீட்டை அழி

என் வேலையை எடுத்துக்கொள்

நிலத்தை அபகரி

என் தந்தையை சிறைப்படுத்து

என் அம்மாவை கொல்

என் நாட்டின் மீது குண்டு வீசு

எங்களை பட்டினிப்படுத்து

எங்களை கொடுமைப்படுத்து


 இஸ்ரேலை எதிர்ப்பதே தங்கள் உயிர் காப்பு லட்சியம் என்பதை காசா பகுதி மக்கள் நன்கு அறிந்துள்ளனர். இதே காலகட்டத்தில் போரில் தன் மகனை பறிகொடுத்த தாய் பின்வருமாறு குறிப்பிட்டார். " நான் மகன் இறந்தது பற்றி கூட கவலைப்படவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக நான் கையில் வைத்திருக்கும் இந்த சிறுகல்லாவது உதவட்டும், அது ஏவுகணையாக மாறட்டும் என்பதே என் இலட்சியம் என்றார். காசா மீதான இஸ்ரேலின் முதல் ஆக்கிரமிப்பு யுத்தம் 2005 வரை நடந்தது. பின்னர் சினாய் தீபகற்பத்தில் நடந்த உச்சி மாநாட்டின் போது ஏரியல் சாரோனிற்கும், மஹ்மூத் அப்பாஸிற்கும் இடையே  ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பாலஸ்தீனின் பல பகுதிகள் வெறிச்சோடின. மிருகங்கள் இல்லாத வனங்கள் போன்றும், ஒட்டகங்கள் இல்லாத பாலைவனங்கள் போன்றும் பல பகுதிகள் காட்சியளித்தன.

காசா பகுதி கடந்த 20 ஆண்டுகளாகவே துயரத்தின் பிரதேசமாக இருக்கிறது. காலத்தின் நகர்வில் இஸ்ரேலின் அரச பயங்கரவாத ஒடுக்குமுறை காரணமாக பெர்முடா முக்கோணம் மாதிரியான உயிர்வாழ்வதற்கு தகுதியற்ற பிரதேசமாக மாறி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் அங்கு கொல்லப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை தற்போது வரை (குழந்தைகள் உட்பட)சுமார் 50000 க்கும் மேல். லட்சக்கணக்கானோர் பல நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து விட்டனர். துவரை இஸ்ரேல் காசா பகுதி மீது மட்டும் ஏழு போர்களை தொடுத்திருக்கிறது. கடந்த ஜுனில் தொடங்கிய அதன் சமீபத்திய  போரில் இதுவரை 2500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 3000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்திருக்கின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் போன்றோர் குறிவைத்து கொல்லப்பட்டிருக்கின்றனர். உயிர்காக்கும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்றவை ஏவுகணை தாக்குதலில் தகர்க்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் 2007 ல் அல் பத்தா கட்சியினரிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றிய ஹமாஸ் நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. தன் கருத்தியல் என்பது தூய மதவாத அரசமைப்பாகும்.  பல தருணங்களில் இஸ்ரேலுக்கு எதிரான அதன் தற்கொலை படை தாக்குதல்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்கின.  மேலும் யூதர்கள் இஸ்லாமிய அடிப்படையிலேயே தங்களுக்கு எதிரானவர்கள் என்ற எண்ணம் பாலஸ்தீன் உட்பட பிற அரபு பகுதிகளில் கணிசமானவர்களிடையே வேரூன்றி இருக்கிறது. யூதர்கள் இங்கிருந்து முழுவதுமாக விரட்டப்பட வேண்டும் அதுவே உண்மையான ஜிஹாத் என்பதும் சில போராளி இயக்கங்களின் நிலைபாடாக இருக்கிறது. இதனை அறிந்து கொண்ட இஸ்ரேல் காசா மீதும் பாலஸ்தீன் மீதும் இன்னும் மூர்க்கத்தனமாக கொடூர தாக்குதல்களை நிகழ்த்துகிறது. பாலஸ்தீன் என்பது எங்களின் பூர்வீக பூமி. ஆகவே பாலஸ்தீனியர்கள் முழுவதும் இங்கிருந்து விரட்டப்பட வேண்டும் என்பதே பல அரசு சார்பான யூத மத தலைவர்களின் எண்ணமாக இருக்கிறது. அவர்கள் இஸ்ரேலிய அரசை தூண்டி விடுகிறார்கள். இஸ்ரேலிய இராணுவத்தால் காசா பகுதி குழந்தைகள் கொல்லப்படுவதன் முக்கிய காரணம் இது தான். காசா பகுதியில் பெண்களின் வயிற்றில்  கருவாகும் குழந்தைகள் தாங்கள் உடனடியாகவோ அல்லது சற்று தாமதமாகவோ கொல்லப்படுவோம் என்பதை அறிந்திருக்கவில்லை

அரபிகளில் பலர் யூதர்களை மத ரீதியான நிரந்தர எதிரியாக கருதியதன் விளைவு இன்று இஸ்ரேலிய அரசும் அரேபிய முஸ்லிம்களை நிரந்தர எதிரியாக பார்க்க ஆரம்பித்திருக்கிறது. இப்படி இரு தரப்பிலும் எதிரி மனோபாவம் தொடர்ந்து வளரும் நிலையில் இந்த பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு எப்போதும் உருவாக போவதில்லை. சமீபத்தில் இஸ்ரேலிய அரசு கூட காசா பகுதி தரைமட்டமாக்கப்பட வேண்டும், நிர்மூலமாக்கப்பட வேண்டும் என்று (Flatten and Eradiction)தன் குரூர மனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. த்தியகிழக்கில் எண்ணெய்வளம் சார்ந்த தன் புவி அரசியலை வலுவாக்க வேண்டும் அதனை தக்கவைக்க வேண்டும் என்று விரும்பும் அமெரிக்கா பாலஸ்தீனுக்கு தோழனாகவும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குபவனாகவும் இருக்கிறது. சமீபத்தில் ஒபாமா காசாவில் உடனடியான, நிரந்தரமான போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றார். அதே நேரத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் மறைமுக ஆதரவு அளிக்கிறார். இது தான் ஏகாதிபத்தியம் மத்தியகிழக்கில் வேர்கொண்டிருக்கும் முறையியல்.

பாலஸ்தீன் பிராந்தியம் தங்களின் பூர்வீக பூமி என்று கூறி அதனை தொடர்ந்து ஆக்கிரமித்து வரும் இஸ்ரேலின் பிராந்தியத்தில் உலகம் முழுவதுமிருந்து குடியேறியூதர்களின் எண்ணிக்கை சமீபத்திய புள்ளிவிபரப்படி சுமார் 40 சதவீதம் தான். ஆக உலகின் பெரும்பாலான யூதர்கள் தங்களின் தாய்நாட்டிற்கு திரும்பு சியோனிச கொள்கையை ஆதரிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாக உணர முடிகிறது. மேலும் இஸ்ரேல் இதுவரை பாலஸ்தீனில் ஆக்கிரமித்த பகுதிகளை பேச்சுவார்த்தைகள் மூலம் சிறிதளவு மட்டுமே விடுவித்திருக்கிறது. அதன் விபரம் பின்வருமாறு........ அட்டவணையை பார்க்கவும்.

இஸ்ரேலின் தொடர்ந்த ஆக்கிரமிப்புகள், படுகொலைகள் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பாலஸ்தீனிய மக்களை அகதிகளாக்கி இருக்கிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர்களில் எட்வர்ட் செய்த் முக்கியமானவர். பிறப்பால் பாலஸ்தீனியரான அவர் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து நியூயார்க் பல்கலைகழகத்தில் பேராசிரியாக பணிபுரிந்தார். கீழைத்தேய சிந்தனையாளரான எட்வர்ட் செய்த் இதற்காகவே Question of Palestine என்ற நூலை எழுதினார். சில காலம் பாலஸ்தீன் தேசிய கவுன்சிலின் உறுப்பினராக இருந்தார். பாலஸ்தீன் என்பது இறையாண்மை பெற்ற தனிநாடாக எல்லோரையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே அவரின் கருத்தாக இருந்தது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்களிடம் உரையாடிய அவர் நேர்காணல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டார் "ஹமாஸ் தலைவர்களிடம்  நான் உங்களின் அரசியல் பொருளாதார நிலைபாடு என்ன? என்று கேட்கும் போது பல நேரங்களில் மௌனங்களையும், சில நேரங்களில் தெளிவற்ற பதில்களையே தருகிறார்கள் என்றார்வாழ்நாள் முழுவதும் பாலஸ்தீன் விடுதலைக்காக குரல் கொடுத்தார். இன்றைய நிலையில் பாலஸ்தீன் மீதான இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். எதிரி என்பதன் அளவுகோல் மாற்றப்பட வேண்டும். ஸ்ரேல் ஆரம்பகாலத்தில் இருந்து ஆக்கிரமித்த பகுதிகளை விடுவிக்க வேண்டும். போர் என்ற பெயரில் குழந்தைகளை, அப்பாவி மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும். .நா சபை கௌரவ உறுப்பினராக பாலஸ்தீனை 2012 ல் அங்கீகரித்திருக்கும் நிலையில் இருதரப்பிலும் பன்முகத்தன்மையை, சமூக அமைப்பை ஏற்றுக்கொண்ட அமைதிப்பேச்சுவார்த்தையே பாலஸ்தீன் பிரச்சினைக்கு சரியான தீர்வாகும். அதுவே மற்றொரு அரபு வசந்தத்தை உருவாக்கும்.



இடம்

மொத்த நிலப்பரப்பு
(சதுர கிலோமீட்டரில்)
திரும்ப பெற்ற நிலப்பரப்புகள்
(சதுர கிலோமீட்டரில்)
விகிதம்

காசா முனை

363
200
55 %
மேற்கு கரை

5876
1000
17 %
மரபான பாலஸ்தீன்

(.நா பாதுகாப்பு சபை தீர்மான படி)

6239
1200
19.3 %
வரலாற்று பாலஸ்தீன்

(பிரிட்டிஷ் அரசால் 1948ல் வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி)

27009
1200
4.4 %