காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது
Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Friday, January 31, 2014

தற்கொலைகளுக்கு அப்பால் - மரணம் என்னும் தண்டனை





வீரப்பன் கூட்டாளிகள் உட்பட 15 பேரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இங்கு ஆயுள் தண்டனை கூட ஒரு வகையான மரண தண்டனை தான். காரணம் இந்திய அரசியலமைப்புச்சட்டபடி ஆயுள் முழுக்க சிறையில் இருப்பதே ஆயுள் தண்டனை. குற்றத்தின் தன்மையை பொறுத்து இந்திய நீதிமன்றங்கள் ஆயுள் தண்டனைக்கு கால அளவை நிர்ணயிக்கின்றன. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சட்டங்களை இயற்றுபவர்கள் அதனை அமல்படுத்துபவர்கள் மற்றும் அதை கண்காணிக்கும் நீதிமன்றங்கள் இவற்றிற்கிடையேயான உறவு சங்கிலித்தொடரானது. ஜனநாயக கட்டமைப்பில் மக்களின் இயல்பான அசைவுகள் கூட சட்டத்தால் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை இருக்கிறது. மனிதன் உயிர்வாழ்வதும், வாழ முடியாததும் இரண்டையும் இப்போது சட்டத்தின் கண்காணிப்பாளர்கள் தீர்மானிக்கும் நிலை இருக்கிறது.

உலக வரலாற்றில் மனிதர்கள் தோன்றிய காலம் முதலே குற்றங்களும் தோன்றி விட்டன. புராதன கூட்டுக்குழுவாக வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் தங்களுக்குள் உணவுப்பங்கீட்டிற்காக சண்டையிட்டுக்கொண்டனர். பின்னர் அது பரிணாமம் கொண்டு வேட்டை, இருப்பிடம் இவற்றின் இயங்குதலுக்காக மாறிப்போனது. இந்நிலையில் மனிதர்கள் களம் மாறினார்கள். அவர்களுக்குள் உராய்வுகள், மோதல்கள் ஏற்பட்டன. புராணங்களும், தொன்மங்களும் பல மனித குற்றங்கள் குறித்து பேசுகின்றன. ஆபேல் காயின் மற்றும் கிரேக்க அரசர்களின் கதைகள் இவற்றின் குறிப்பிடத்தக்கவை.


மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் குற்றங்கள் என்பவை  அந்த  சமூகத்திலிருந்து உருவாகும் சூழ்நிலை காரணி தான். காரணம் சூழ்நிலையின் கைதி தான் மனிதன். இவை பரஸ்பரம் சங்கிலித்தொடர் போன்ற பிணைப்பைக்கொண்டிருக்கின்றன. குற்றம் செய்பவனின் மீது உளவியல், சமூகவியல், மானுடவியல் போன்ற அனைத்துமே தாக்கம் செலுத்துகின்றன. இங்கு குற்றவாளிகள் என்பவர்கள் இயல்பாக உருவாவதில்லை. குறிப்பாக பிறப்பின் அடிப்படையில் அது நிகழ்வதில்லை. பிறக்கும் குழந்தைகள் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. மாறாக சமூகமும் அதனோடு இயைந்த சூழலும் தான் அவர்களை குற்றவாளி ஆக்குகிறது. மேலும் உளவியல் காரணியும் இதில் உள்ளடங்கி இருக்கிறது. உளவியல் என்பது சமூகத்தின் கூட்டு மனத்திலிருந்தோ, அல்லது பொது அறச்செயல்பாட்டிலிருந்தோ தொடக்கம் பெறுகிறது. ஆக இந்த அம்சங்கள் காரணமாக ஒருவர்  குற்றச்செயலில் ஈடுபடும் போது அவரின் மீது இந்த குற்றம் என்ற அடையாளம் விழுந்து விடுகிறது. இன்றைய உலகில் குற்றங்கள் என்பதன் மீதான விசாரணைகள் அனைத்தும் புறவய சாட்சியங்கள் அடிப்படையிலே நடைபெறுகின்றன. இங்கு நிரூபணம், குற்றவாளி, நிரபராதி என்ற மூன்று சொல்லாடல்களும் ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டதாக மாறுகின்றன. பல்வேறு தருணங்களில் குற்றங்கள் மறைபொருளாக இருப்பதுண்டு.

குற்றவியலின் வரலாற்றில் மனிதனின் குற்றச்செயல்பாடுகள் நாடோடி சமூகத்திலிருந்து நிரந்த வசிப்பிடமாக சமூகம் உருவாகிய தருணத்தில் ஏற்பட்டன. முதலில் சிறைச்சாலைகள் இல்லை. அன்றைய சிறை முறையானது சக மனிதனின் கழிவு வெளியேற்ற தடை முறையில் இருந்தது. மலமும், ஜலமும் அவன் கழிக்க மறுக்கப்பட்டான் அல்லது ஒரே இடத்தில் நகர முடியாமல் கழிக்க அனுமதிக்கப்பட்டான். இன்றைய கால கட்டத்தில் கூட ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படும் அரசியல் கைதிகளுக்கு  மேற்கண்ட விதமான தண்டனையை அதிகாரபூர்வமற்ற முறையில் காவல்துறை அளிக்கிறது. இதன் தொடர்ச்சியில் உலகில் ரோமானியர்கள் தான் முதல் சிறைச்சாலையை அமைத்திருக்கிறார்கள். வீடுகளே சிறைச்சாலைகளாக இருந்து சிறிய உலோக கூண்டுகளுக்குள் குற்றவாளிகள் அடைக்கப்பட்டார்கள். இது அரசு என்ற நிறுவனம் சமூக  நிறுவனமாக உருவான தருணத்தில் ஏற்பட்டது.  சமூகத்தின் ஒரு பகுதி குற்றவாளிகளாகவே இருந்தது. உலகில் மனித இனம் இயல்பான மற்றும் இயல்பற்ற, அசாதாரண முறைகளில் தன் இழப்பை தேடிக்கொள்கிறது. இந்நிலையில் குற்றச்செயல்பாடுகள் காரணமாக அவனின் உயிர் பறிக்கப்படும் போது தொடர்ச்சியான கட்டத்தில் மனித இனத்தின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. வன விலங்குகளின் பல்லுயிர் தன்மையை போன்றே மனித இனத்தின் பரவலாக்கத்திற்கும் மரண தண்டனை பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. சமூகத்தின் ஒழுக்கம் மற்றும் பிற அற மதிப்பீடுகள் சார்ந்த காரணிகள் இந்த தண்டனை முறையை நியாயப்படுத்துகின்றன. எல்லா மதிப்பீடுகளுமே ஒரு கட்டத்தில் மாற்றம் பெறுபவை தான். பழிவாங்கல் மனம் ஏற்படுத்தும் உச்சம் மரண தண்டனை சார்ந்த கருத்துக்கு வலுசேர்க்கிறது. சகமனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு அவனை இல்லாமல் செய்ய துடிக்கிறது.  இங்கு பாதிப்பிற்கான நிவாரணமே குற்றவாளியின் மரணம் என்பதாகி விடுகிறது. இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று ஒரே இனத்தை சார்ந்த மிருகங்கள் மற்றொன்றை கொல்வதில்லை. உதாரணமாக ஒரு நாய் மற்றொரு நாயை கொல்வதில்லை. காகம் மற்றொரு காகத்தை கொல்வதில்லை. விதிவிலக்கான தருணங்களில் மட்டுமே இது நிகழ்கிறது. பிணந்திண்ணி கழுகுகளிலிருந்து மனிதன் பிணத்தை புதைக்கவோ அல்லது எரிக்கவோ கற்றுக்கொண்ட தருணத்திலிருந்து மரண தண்டனை என்பது சட்டவடிவம் பெற்று விட்டது.

இன்றைய உலகில் 110 நாடுகள் அதாவது உலகில் பெரும்பாலான நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. அரபு நாடுகள் தவிர மீதமுள்ள நாடுகள் அது பற்றி பரிசீலித்து வருகின்றன. அவ்வாறு மரண தண்டனை இல்லாத நாடுகளில் எல்லாம் மற்ற நாடுகளை விட குற்றங்கள் அதிகரித்து விடவில்லை. அங்கெல்லாம் குற்றங்கள் இயல்பாகவும், இயல்பற்றும் இருக்கின்றன. இருக்கின்ற அமைப்பை மாற்றுவதற்கு , அதுவும் குறிப்பாக  தொடர்ச்சியாக நிலபிரபுத்துவ மன்னராட்சி அமைப்பு மனோபாவத்துக்குள், அதன் எச்சங்களை கொண்ட இந்திய சமூகத்தில் மரண தண்டனை வேண்டும் என்பதே வெகுஜன உளவியலாக இருக்கிறது. இது மாறுவதற்கு இன்னும் சில காலங்கள் ஆகலாம். அதுவரை இது பற்றிய தொடர்ச்சியான உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கான மாற்றுத்தண்டனை என்ன என்பதும் தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும். இதுவே சிறந்த முன்மாதிரியான இந்திய ஜனநாயகத்தை  எதிர்காலத்தில் உருவாக்கும்.