காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது
Showing posts with label ஹிசாம் சரபி. Show all posts
Showing posts with label ஹிசாம் சரபி. Show all posts

Wednesday, September 23, 2009

நவதந்தைவழி சமூகமும் அரபுலகமும்



வரலாறு ஓரே நேரத்தில் விடுதலையாகவும், தேவையாகவும் இருக்கிறது என்றார் கிராம்சி. புராதன சமூகம் அதன்கூட்டுத்தன்மையிலிருந்து தனித்த அமைப்பாக மாறி மாபெரும் உழைப்பு பிரிவினையில் சிதிலமடைந்தது. குடும்பம் என்ற அமைப்பு திடமான பிறகு அங்கு ஆண் முதன்மையானவனாக மாறினான்.இதன் தர்க்க ரீதியான தொடர்ச்சியே தந்தை வழி சமூகத்தின் உருவாக்கம். பெண் இரண்டாம் வகைக்கு உட்பட்டாள். ஆணாதிக்க அடக்குமுறை அவள் மீது திணிக்கப்பட்டது. இது பேரியல் மற்றும் நுண்தளங்களின் இயங்கியல் ரீதியான உறவாக இருக்கிறது. பேரியல் தளம் என்பது சமூகம், அரசு, பொருளாதாரம் ஆகியவற்றை குறிக்கிறது. நுண்தளம் என்பது தனி மனிதன் மற்றும் குடும்பத்தை குறிக்கிறது. வரலாற்றின் தொடர்ச்சியில் இந்த அமைப்பு முறை பரிணாமமடைந்து பிரபஞ்சம் முழுமைக்குமாக விரவி பரந்தது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் வித்தியாசமான குண இயல்புகளை அடைந்தது. இது அரபு சமூகத்தில் அடைந்த மாற்றமே பின்னர் இஸ்லாமிய சமூக அமைப்பில் பிரதிபலித்தது. அடிப்படையில் ஓரிறைக்கொள்கை (Monotheism) என்பது தந்தைவழி சமூகத்தின் பிரதியாக்கமே. இதனை குறித்து அரபு சிந்தனையாளர் ஹிசாம் சரபி விரிவாக ஆராய்ந்தார். அவரின் Neopatriarchy: A theory of Distorted arab society இதனை குறித்து விரிவாக ஆராய்ந்தது. தந்தைவழி சமூகம் என்பது பரிணாமமடைந்து அரபு சமூகத்தில் நவ தந்தைவழி சமூகமாக உருமாற்றம் அடைந்தது. சரபி இதை ஐரோப்பிய நவீனத்துவத்தின் தாக்கம் என்கிறார்.

நவீனத்துவம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரபு சமூகத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரபியில் இது நஹ்தா என்றழைக்கப்பட்டது. இது அன்றைய அரபு சமூகத்தில் உள்ளக மற்றும் தந்தைவழி சமூகத்தின் வடிவங்களில் மட்டும் மாறுதலை ஏற்படுத்தவில்லை. மாறாக நவீன சமூக கலாசார வடிவம் ஒன்றுக்கு வழி ஏற்படுத்தியது என்கிறார் ஹிசாம் சரபி. பொருளாதய நவீனமயமாக்கல் புதிய கலாசார ஒழுங்கிற்கு வடிவமளித்தது. அது கலாசாரம் மட்டுமின்றி சமூக, பொருளாதார அரங்கிலும் பிரதிபலித்தது. இதன் பரிணாம நீட்சியே நவ தந்தை வழி சமூகம். இது அக மற்றும் புற ஆகிய இரு வடிவங்களில் வெளிப்படுகிறது. இங்கு அடிப்படை கேள்வியே நவீனத்துவத்தின் பிரச்சினையை ஐரோப்பிய ஆதிக்க உலகில் எவ்வாறு எதிர்கொள்வது என்பதே? அது முதலாளித்துவத்துடன் இணைந்தே இருக்கிறது. மார்க்ஸ் முதலாளித்துவத்தின் எதிர் செயல்பாடாக புரட்சியை முன்னிறுத்தினார். மாக்ஸ் வெபர் இதனை அறிவுவாதத்தோடு தொடர்புபடுத்தினார். ஐரோப்பா அல்லாத சமூகங்களில் முதலாளித்துவம் பற்றிய நம்பிக்கை மேற்கண்ட இரு அம்சங்களும் இணைந்த ஒன்றாக இருந்தது. அரபுலகில் முதலாளித்துவம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அறிமுகமானது. அக்காலத்தில் அது ஒரு சுதந்திர முதலாளித்துவத்தின் வளர்ச்சியை நோக்கியதாக இல்லாமல் சிதிலமடைந்த, சார்புநிலை முதலாளித்துவ சமூகத்தின் அரசியல் பொருளாதார நிலைமைகளை உற்பத்தி செய்வதாக அமைந்தது.

அரபு சமூகத்தில் ஐரோப்பிய அறிவொளிகால கட்டத்தின் எதிரொலி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிபகுதியில் ஏற்பட்டது. அரபு அரசியல், சமூக வாழ்க்கை முறைமையில் மேற்கத்திய தாக்கம் முக்கியமானது. இது நவ தந்தை வழி சமூகத்திற்கு சரியான முன்தொடரலை ஏற்படுத்தியது. இந்த தொடரல் மூன்று கட்டங்களை சார்ந்து இருந்தது. ஒன்று துருக்கிய உதுமானிய ஆட்சி காலம். (இது முதல் உலகப்போருடன் முடிவுக்கு வந்தது)ஐரோப்பிய அரசியல் ஆதிக்கம் (இரு உலகப்போர் காலகட்டங்களுக்கு இடைப்பட்டது)இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கட்டம் முதல் தற்போது வரை. நவ தந்தைவழி சமூகத்தை பொறுத்தவரை அரபுலகில் சார்புநிலையான, நவீனமல்லாத சமூக, பொருளாதார அமைப்பை கொண்ட வளர்ச்சியடையாத சமூகமாகவே இன்னும் இருக்கிறது என்கிறார் ஹிசாம் சரபி. இதன் மைய சமூக உளவியல் என்பது குடும்பம் மற்றும் தேசத்தின் மைய உறுப்பினராக தந்தையே (ஆண்)செயல்படுகிறார். இதனடிப்படையில் ஆட்சியாளர் -ஆளப்படுபவர், தந்தை -குழந்தை ஆகியயோர் செங்குத்தான உறவு நிலையின் கீழ் வருகின்றனர். இங்கு சமூகத்திற்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் தந்தையின் விருப்பமே ஒருமையானதாக திணிக்கப்படுகிறது. தந்தையின் விருப்பமே அரசு என்ற புறநிலை சமூகத்திற்குள்ளும் நீள்கிறது. இரு அரசு முறையானது எல்லா நவ தந்தைவழி சமூகத்திலும் வழக்கிலிருக்கிறது. இராணுவ எதேச்சதிகார அரசுகள் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதோடு அதை கண்காணிக்கவும் செய்கின்றன. சிவில் மற்றும் அரசியல் இருத்தலில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு சாதாரண குடிமகன் அரசின் கண்காணிப்புக்குள்ளாகி விர்ச்சுவல் கைதியாக மாறுகிறான்.ஆக நவ தந்தை வழி சமூகத்தின் வெளிப்படையான வடிவம் என்பது பொருளாதய, சட்ட, கலாசார தளங்களில் வலுவாக இருப்பதுடன் அதன் உள்கட்டுமானமானது தந்தை வழி மதிப்பீடுகளை,மத மற்றும் இனக்குழு நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அமைகிறது.

குட்டி பூர்ஷ்வா வர்க்கமானது நவ தந்தை வழி சமூகம் மற்றும் அதன் கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது. இது அந்த சமூகத்தில் முரண்பாடான மதிப்பீடுகளையும், மனோபாவங்களையும் நனவான தீர்மானங்கள் ஏதும் இல்லாமல் செயல்படுத்த முயல்கிறது. வேறொரு வகையில் சொன்னால் குட்டி பூர்ஷ்வா வர்க்கமே நவ தந்தை வழி சமூகத்தின் சரியான பிரதிநிதி. எகிப்திய நாவலாசிரியான நகுப் மஹ்பூஸ் தன் நாவல்களில் இந்த குணாம்சங்களை பற்றி விவரிக்கிறார். " அவன் வாழ்க்கையின் நடப்புத்தன்மையோடு தன்னை தகவமைக்கிறான். அவன் சமூகத்தின் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களை ஏற்றுக்கொண்டு, சமூக பொருளாதார நடவடிக்கைகளுக்கான சட்டகத்தில் செல்கிறான். ஒரு நாள் குர் ஆனை படித்து இறைப்பக்தியை அடைகிறான். அவனின் நம்பிக்கைகள், தொழுகை, நோன்பு போன்றவை அவனை புனித செயல்பாடுகள் நோக்கி மாற்றுகின்றன. அவனின் மற்றொரு பகுதி கேளிக்கைகளிலும், தெருக்களிலும், நீதிமன்றங்களிலும் செலவாகின்றன." இவ்வாறான சுழற்சியே குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் இருப்பாக மஹ்பூஸ் காண்கிறார். அரபு சமூகத்தில் குட்டி பூர்ஷ்வா எழுச்சியானது இரு பின் மாற்றங்களை ஏற்படுத்தியது. 1940 க்கும் 1950 க்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கு மக்கள் தொகை வெடிப்பு நிகழ்ந்தது. அதன் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இது நகர்புற குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் தரத்தை இன்னும் உயர்த்தியது. இவர்கள் அதே காலகட்டத்தில் அல்ஜீரியா, ஈராக், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளில் அதிகாரத்தை கைப்பற்றினர். ஆனால் அவை வலுவற்றதாக, அதிகாரம் மங்கியதாக, உள் முரண்பாடுகள் அதிகம் கொண்டதாக இருந்தன.மேலும் இவை பூர்ஷ்வா வர்க்கமாகவோ அல்லது புரட்சிகர பாட்டாளி வர்க்கமாகவோ மாற முடியாமல் முடங்கின. ஏகாதிபத்தியம் மற்றும் சார்பு நிலை பொருளாதார அமைப்பிற்குள் இவை அகப்பட்டு கொண்டதால் அவற்றிலிருந்து மீள முடியாமல் தவித்தன. குட்டி பூர்ஷ்வாக்களின் சமூக மேலாண்மை அரபு சமூக கட்டமைப்பில் புரட்சிகர மற்றும் ஒருங்கிணைவு தோல்வியை ஏற்படுத்தியது. இவை அரபு சமூகத்தின் அரசியல் வாழ்க்கையை சீர்குலைத்து எதிர்மறையான, ஒன்றுக்கொன்று முரண்பாடான அரசுகளை ஏற்படுத்தின. சமூக மாற்றத்திற்கோ அல்லது கட்டமைப்பின் வளர்ச்சிக்கோ செல்ல இயலாமல் முடங்கின. அவற்றில் இடத்தில் அரச முதலாளித்துவமும், நுகர்வியமும் ஆக்கிரமித்துக்கொண்டன. இந்த பிளவு அரபு சமூகத்தில் ஒரு கட்டத்தில் அதிகார மற்றும் அரசியல்மயப்படுத்தப்பட்ட அடிப்படைவாதத்தின் எழுச்சிக்கு வழி வகுத்தது.

நவ தந்தைவழி சமூகத்தை பற்றி குறிப்பிடுகையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் மதநீக்க நவீனத்துவம் ஆகிய இரு அம்சங்களை பற்றி ஹிசாம் சரபி குறிப்பிடுகிறார். அடிப்படையில் நவீனத்துவத்தின் மாறும் பரிணாம கட்டம் என்பது அறிவின் ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு வித்தியாச கட்டத்திற்கு பயணிக்கும் செயல்பாடாகும். மரபான சிந்தனைகள் மீது சிறிய கீறலை ஏற்படுத்தி புதிய விஞ்ஞான பூர்வ சிந்தனைகளை ஏற்படுத்துவது. அரபு சமூகத்தில் இந்த அனுபவம் மூன்று விதமான நடைமுறை பிரச்சினைகள் மீது இருக்கிறது. அடையாளம் சார்ந்த பிரச்சினை, வரலாற்று பூர்வ பிரச்சினை, மேற்குலகம் சார்ந்த பிரச்சினை. அரபு சமூகத்தின் எழுச்சிக்கு இதனடிப்படையில் பின் தொடரும் இரு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று மேற்கத்திய நாகரீகத்தின் உள் மற்றும் வெளி சார்ந்த மாதிரியை ஏற்றுகொள்வது பற்றியது. இரண்டாவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கூறுகளை முழுமையாக உள்வாங்குவது. இந்த இடத்தில் மதநீக்க (Secularism)கோட்பாடு என்பது தாராளவாதம், தேசியவாதம், சோசலிசம் போன்ற உள்கருதுகோள்களை உள்ளடக்கி இருக்கிறது. அடிப்படைவாதத்தை பொறுத்தவரை மதசீர்திருத்தம், தூய்மைவாதம், இராணுவ இஸ்லாம் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது. இவை இரண்டும் அரபு சமூகத்தில் நவதந்தைவழி சமூக பிந்தைய கட்டத்தை பிரதிபலிக்கின்றன.
ஒரு வகையில் இவை உண்மையின் சமூக ஒழுங்காக (Regime of truth)இருக்கின்றன. அரபு இஸ்லாமிய சமூக போக்கில் அதாவது தூய்மைவாதம் மற்றும் இராணுவ இஸ்லாம் ஆகியவற்றின் போக்கில் வரலாறு மற்றும் மேற்குலகம் ஆகியவை கருத்தியல் ரீதியாக இஸ்லாத்தின் உண்மை என்ற அளவுகோலை அடிப்படையாக கொண்டே பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த காலம் பற்றிய வாசிப்பு என்பது சாத்தியமற்றது. 1980 களில் மேற்கண்ட இரு சொல்லாடல்களும் உச்சகட்ட நிலையை அடைந்தன.இஸ்லாமியம் துணைநிலையான அறிவுக்குழுக்களை கொண்டிருக்கவில்லை. ஆனால் மிகப்பெரும் வெகுஜன இயக்கத்தை கொண்டிருந்தது. மதநீக்க கோட்பாடு விமர்சன பூர்வ அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், தொழில் விற்பன்னர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரை உள்ளடக்கி இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை இதன் அறிவுஜீவிகள் மற்றும் கலாசார விவாதம் என்பது நகர்புறம் சார்ந்த கல்வி வட்டத்திற்குள் சுழன்று வந்தது. இறுதி கட்டத்தில் இதுவே சமூக விதியாகவும் மாறிப்போனது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பொறுத்தவரை அது நவதந்தை வழி சமூகத்தின் ஸ்திரமற்ற தன்மைக்கான கூறுகளை கொண்டிருந்த போதும் அந்த சமூகத்தின் கட்டமைப்பை ஒழுங்குலைப்பதற்கான நடவடிக்கைகளை உள்கொண்டிருக்கவில்லை என்கிறார் ஹிசாம் சரபி. இந்த சூழலில் மத நீக்க கோட்பாடு என்பது அரசியல் மற்றும் கலாசார நிலையில் அடிப்படைவாதத்திற்கு எதிரான ஒன்றாக இருக்கிறது. மதநீக்க கோட்பாட்டின் விதிப்படியான பலவீனம் என்பது அடிப்படைவாதத்தை போலல்லாமல் வெகுஜனதொடர்பை விட்டு வெகுதூரம் விலகி இருக்கிறது. இது அரசியல் எல்லைக்குள் குறைந்த செல்வாக்கே செலுத்துகிறது. மேலும் அரசின் தணிக்கை விதிமுறை, கட்டுப்பாடு இவற்றிற்கு உட்பட்டதாக இருக்கிறது. மேலும் மதரீதியான கருத்துக்கு நேர் எதிர்நிலையில் இருப்பதால் வெகுஜன செல்வாக்கு இதற்கில்லை. பெரும்பாலும் கருவிலே திருவுடைய புத்திலக்கியவாதிகளை (avant garde)கொண்டிருப்பதும் இதன் மற்றொரு பலவீனம். மாறாக அடிப்படைவாதம் என்பது மதகருத்தாக்கத்தின் பிரதிபலிப்பாக இருப்பதுடன் வெகுஜனத்தை இயங்க வைப்பதிலும் முக்கிய பங்களிப்பை செலுத்துகிறது. இந்த இடத்தில் மதநீக்க கோட்பாட்டாளர்களின் பின்னடைவு என்பது அடிப்படைவாதிகளுடன் அறிவுபூர்வ விவாதத்திற்கோ அல்லது உரையாடல்களுக்கோ சாத்தியமற்ற சூழல் நிலவுவதாகும். இவர்களின் உரையாடல், கருத்தியல் என்பது சட்டபூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் பின்னுக்கு தள்ளப்படுகிறது. ஆக அரபு வம்சத்தில் மதநீக்க விமர்சகர்கள் ஒடுக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் சிறைப்படுத்தப்பட்டு தீண்டத்தகாத ஒன்றாக மாற்றப்படுகின்றன. அடிப்படைவாத ஆதரவாளர்கள் இங்கு தங்கள் கருத்தை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் மட்டும் வெளிப்படுத்தவில்லை. மாறாக அரச அதிகார இயந்திரங்கள் மற்றும் ஊடகங்களின் நிலையான ஆதரவோடு தங்களின் காரியத்தை நிகழ்த்தினார்கள். இவ்வாறான நிலையில் அரபு சமூகத்தில் அடிப்படைவாதம் என்பது ஒடுக்குமுறை அரசுகளின் அதிகப்படியான பலத்தை உள்வாங்கியே வளர்ந்தது.

தந்தை வழி சமூகம் என்பது ஹிசாம் சரபியை பொறுத்தவரை தனிப்பட்டபொருளாதார நிறுவனங்களை அடிப்படையாக கொண்ட குறிப்பிட்ட வகையான சமூக அரசியல் கட்டமைப்பு, குறிப்பிட்ட ஒழுங்குமுறை, குறிப்பிட்ட சொல்லாடல் மற்றும் நடைமுறை வடிவமாகும். தந்தை வழி சமூகம் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தில் நிலவிய வரலாற்றடிப்படையிலான மைய சமூக உறவு முறையாகும். அரபு சமூகத்தை பொறுத்தவரை தந்தைவழி சமூகம் குறிப்பிட்ட மற்றும் பிரத்யேக தன்மைகளை கொண்டிருக்கிறது. அரபு கலாசாரத்தை குறித்து பிரெஞ்சு வரலாற்றாசிரியர் பெர்ணான்ட் பிராடல் இவ்வாறு குறிப்பிடுகிறார். " அரபு நாகரீகம் அல்லது இஸ்லாமிய நாகரீகம் என்பது வெற்று வெளியின் விளிம்பிலும், பாலைவன ஓரத்திலும், ஆறுகள் மற்றும் கடல்கள் வழி வளர்ச்சி பெற்றது. அரபுலகின் சில பகுதிகள் தவிர மற்ற பகுதிகளை பாலைவனம் ஆக்கிரமிக்கிறது. மேற்கு அரேபியாவின் மலைத்தொடர்கள், சிரியாவின் அடுக்கு மலைத்தொடர், ஓமன் மற்று யமனின் டெல்டா பகுதிகள், நைல் மற்றும் யூப்ரடீஸ் நதிக்கரையோரங்கள் ஆகியவற்றால் அரபுலகம் சூழப்பட்டிருக்கிறது. வரலாற்று ரீதியாகவே அரபுலகில் நகரத்தார்களும், பதூயீன் நாடோடிகளும் அதன் சமூக, கலாசார அரங்கை (அரசியல் மற்றும் வர்த்தகம்)ஆக்கிரமித்துக்கொண்டனர். இவை விவசாய உற்பத்தியாளர்களை கீழ்மட்டத்திற்கு மாற்றின. இந்த உருவாக்கம் பிராந்தியத்தின் புவி அரசியல் நிலைமையை தலைகீழாக்கியதுடன் மனித இனத்தை ஐரோப்பாவிலிருந்து வடக்கு மற்றும் மேற்கிற்கும், ஆப்ரோ-ஆசியா தெற்கு மற்றும் கிழக்காகவும் பிரிவினை செய்தது. அரபுலகின் இவ்வாறான நீண்டதூர வர்த்தகம் மற்றும் அந்நிய படையெடுப்பு காரணமாக அதன் அரசியல் பொருளாதாரம் இன்னொரு கட்டத்திற்கு நகர்ந்தது. ஆக தந்தைவழி சமூகத்திற்கும், மரபார்ந்த சமூகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.தந்தை வழி சமூகம் குறிப்பிட்ட நிலையில் சமூக பொருளாதார கட்டமைப்பாக இருக்கிறது. மரபார்ந்த சமூகம் இதற்கு வெளியே புராதன இனக்குழு கூட்டமைப்பாக இருக்கிறது. மார்க்ஸ் இதனை தொழில் சமூகத்தின் வளர்ச்சிக்கு முந்தைய சமூக உருவாக்கம் என்கிறார். மேலும் நவீனத்துவ கருத்தாக்கம் வளர்ந்த நிலையில் அதற்கும் தந்தைவழி சமூகத்திற்குமான உறவு முறையை ஹிசாம் சரபி விவரிக்கிறார்.
வகை நவீனத்துவம் தந்தைவழி சமூகம்

1.அறிவு சிந்தனை/ காரியவாதம் தொன்மம்/நம்பிக்கை

2.எதார்த்தம் விஞ்ஞானம் மதம்

3.மொழி பகுப்பாய்வு வாய்மொழிகூறு

4.அரசாங்கம் ஜனநாயகம்/ சோசலிசம் நவதந்தைவழி
சுல்தானியம்

5.சமூக உறவு கிடைமட்ட நிலை செங்குத்தான நிலை

6.சமூக தராதரம் வர்க்கம் குடும்பம்/கோத்திரம்

ஆக நவீனத்துவத்தை ஐரோப்பாவின் மூலக்கூறாக காணும் சரபி தந்தைவழி சமூகத்தை அரபுலகின் வார்ப்பாக காண்கிறார். மேற்குலகம் நாகரீகத்தை சமூகங்களுக்கிடையேயான உறவு முறை, பலதரப்பட்ட கலாசாரங்களின் ஊடலாக பார்த்து வந்திருக்கிறது. இந்நிலையில் நவீன ஐரோப்பா தந்தைவழி அரபு சமூகத்தின் மீது காலனியாக்கம் செய்ததன் மறு விளைவே நவ தந்தைவழி சமூக உருவாக்கம் என்கிறார் சரபி. அது ஏகாதிபத்தியம் மற்றும் தந்தைவழி சமூகம் ஆகிய இரண்டும் இயைந்த ஒன்றாகும். ஆண் முன்னிலை பெறும் தற்போதைய அரபு சமூகத்தில் அவனே சமூக அதிகார மையமாகவும் இருக்கிறான். இதனை குறித்து ஆராய்ந்த சரபி அரபுலகின் மானுடவியலாளராக இருக்கிறார்.

Tuesday, July 28, 2009

நிராதரவின் எல்லைக்கு வெளியே- ஹிசாம் சரபி ஓர் அறிமுகம்



உலக வரலாற்றில் ஒடுக்கப்படும் சமூகங்கள் அதன் நிலையில் அறிவார்ந்த சமூகமாக சில தருணங்களில் இருக்கின்றன. தாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்ற பிரக்ஞையிலிருந்து அதன் தாக்கம் எதிரொளிக்கிறது. ஒடுக்கப்படும் சமூகம் விழிப்படைந்த நிலைக்கு மாறும் போது அங்கிருந்து சில மாமனிதர்கள் உருவாகிறார்கள். இதன் வரலாற்று உதாரணமாக அயர்லாந்தை குறிப்பிடலாம். ஜேம்ஸ் ஜாய்ஸ், ஆஸ்கர் ஒயில்ட், பெர்னார்ட் ஷா, ஜோனதான்,வில்லியம் பட்லர் போன்றவர்கள் அயர்லாந்தின் இந்த ஒடுக்கப்படும் பின்னணியில் வந்தவர்கள். இதன் தொடர்ச்சியில் தான் நாம் பாலஸ்தீன் பிரதேசத்தையும் அணுக வேண்டியதிருக்கிறது. 1917 ஆம் ஆண்டின் பால்பர் பிரகடனத்திற்கு பிறகு 1948 ல் இஸ்ரேலிய உருவாக்கத்திற்கு பிறகு பாலஸ்தீன் ஏராளமான அறிவார்ந்த மனிதர்களை உற்பத்தி செய்திருக்கிறது. எட்வர்ட் செய்த், ஹனான் அஸ்ரவி, இப்ராஹிம் அபுலுகுத், ரோஸ்மேரி செஹலான், மஹ்மூத் தர்வீஷ், அதோனிஸ், ஹிசாம் சரபி போன்றவர்கள் குறிப்பிடதகுந்தவர்கள். இவர்களில் எட்வர்ட் செய்த்தை போலவே ஹிசாம்சரபி மத்தியகிழக்கு வரலாற்றில் தவிர்க்கமுடியாதவர். இவரின் பிறப்பு 1927 ல் பாலஸ்தீன் பகுதியான ஜபாவில் நிகழ்ந்தது.இவரின் குடும்பம் பரம்பரையான பாலஸ்தீன் பின்னணியை கொண்டது. பாலஸ்தீனின் ரமல்லாவில் பள்ளிப்படிப்பை முடித்த ஹிசாம் கல்லூரி படிப்பை லெபனானின் பெய்ரூட் நகரில் உள்ள அமெரிக்க பல்கலைகழகத்தில் முடித்தார். பின்னர் 1949 ல் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்த ஹிசாம் சிகாகோ பல்கலைகழகத்தில் வரலாற்றில் பட்டமேற்படிப்பை முடித்தார். இதனை தொடர்ந்து அதே பல்கலைகழகத்தில் கலாசாரத்தின் வரலாறு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்க புலப்பெயர்வும், தான் படித்த படிப்பும், அறிவார்ந்த உள்வாங்கலும் சரபிக்கு அரசியல் ரீதியான செயல்பாடு மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. அத்தருணத்தில் சிரிய சோசலிச தேசிய கட்சியில் (SSNP)இணைந்த ஹிசாம் சரபி அதன் தீவிர செயல்பாட்டாளராக மாறினார். அக்கட்சியின் நிறுவனரான அந்தன் சாதாவின் ஆளுமை குணாதிசயம் சரபியின் சிந்தனையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரின் உறுதிபாடு, திடமான மனநிலை, சமரசமற்ற பார்வை இவை எல்லாம் சரபியை ஈர்த்தன. அந்தன் சாதா சரபியை தன் கட்சியின் தூணாக கருதினார்.ஓரு வலுவான அறிவுஜீவியாக வருவதற்கான எல்லாவாய்ப்புகளும் சரபியிடம் இருப்பதாக சாதா நம்பினார். ஹிசாம் சரபி அமெரிக்காவில் படித்து கொண்டிருந்த காலத்திலேயே பாலஸ்தீனிற்கு எதிரான இஸ்ரேலின் முதல் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. அந்த துயர நிகழ்வு சரபியின் ஆழ்மன பிரக்ஞையை அதிகப்படுத்தியது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின்னர் SSNP யின் அதிகாரபூர்வ பத்திரிகையான Al-jil al jadid இன் ஆசிரியராக சிறிதுகாலம் பணியாற்றினார். SSNP அக்காலத்தில் சிரியாவின் தேசிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த நலன்களை முன்வைத்து போராடியது.இதை சிரிய எதேச்சதிகார அரசாங்கம் கடுமையாக ஒடுக்கியது. பிந்தைய ஆண்டுகளில் அக்கட்சியை தடை செய்தது. அதன் உறுப்பினர்கள் பலர் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இறுதியாக அந்தன் சாதாவும் கொல்லப்பட்டார். இத்தருணத்தில் ஜோர்டானுக்கு சென்ற ஹிசாம் சரபி அங்கிருந்து அமெரிக்காவிற்கு சென்றார். 1953 ல் ஜார்ஜ் டவுண் பல்கலைகழகத்தில் தத்துவவியல் துறையில் ஹிசாம் வேலைக்கு இணைந்தார். குறிப்பிட்ட சில ஆண்டுகளிலேயே அவருக்கு பேராசிரியர் பதவி கிடைத்தது. இதன் பிறகு சரபியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் வாசிப்பு ஆரம்பமானது. இது சார்ந்து ஆங்கிலத்தில் நிறைய எழுதினார். சரபி இந்த புலப்பெயர் வாழ்வை மௌன நாடுகடத்தல் (Silence Exile) என்றார்.1967 அரபு-இஸ்ரேல் போரும்,1968 மாணவர் இயக்கமும் சரபியை அறிவார்ந்தும், அரசியல்ரீதியாகவும் அதிகம் சிந்திக்க வைத்தது. அதே காலகட்டத்தில் அதுவரையிலான தன் தாராளவாத சிந்தனை போக்கை கைவிட்டு மார்க்சியத்தின் மீது ஈர்ப்பு கொள்ள ஆரம்பித்தார். மார்க்ஸ், பிராய்ட், லகான் குறித்து அதிகம் வாசிக்க தொடங்கினார்.
ஹிசாமின் இந்த ஆளுமைகள் மீதான வாசிப்பு அவரின் பார்வையை வெகுவாக கலைத்து போட்டது. அதுவரை அரபு சமூகம் குறித்து அவர் நம்பியிருந்த, கொண்டிருந்த பார்வை மாறியது. சமூகம் பற்றிய புரிதல் அவரின் தத்துவார்த்த வாசிப்பின் வடிவத்தில் வெளிப்பட்டது. வாசிப்பு மற்றும் சிந்தனை சார்ந்த அகப்பிரக்ஞை ஹிசாமின் போக்கில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. இந்த மாறுதல் பாலஸ்தீன் விவகாரங்கள் நோக்கி அவரை திருப்பியது. இது குறித்து பல்கலைகழக வட்டாரத்திலும், பிற அறிவுஜீவிகளுடனும் உரையாடல் நடத்திய ஹிசாம் சரபி 1970 ல் லெபனான் திரும்பினார். அங்குள்ள பாலஸ்தீன் திட்டமிடல் மையத்தில் இணைந்து விடுதலை போராட்டம் குறித்த செயல்திட்டங்களை வகுத்தார். அதே நேரத்தில் பெய்ரூட் அமெரிக்க பல்கலைகழகத்தில் வருகை பேராசிரியராக பணிபுரிந்தார். அந்த கட்டத்தில் அவரின் பல ஆங்கில ஆக்கங்கள் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. குறிப்பாக அவரின் Arab intellectuals and West அரபு மொழியில் வெளிவந்து அரபுலகில் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியது. மேலும் பாலஸ்தீன் சுயநிர்ணய உரிமை குறித்து பாலஸ்தீன் பிராந்தியத்திலும், அரபுலகிலும் மிகுந்த விழிப்பையும், முன்னோக்கு திட்டங்களையும் உருவாக்கியதில் சரபியின் பங்களிப்பு அதிகம். அதே காலகட்டத்தில் பாலஸ்தீன் பற்றிய ஆய்விதழ் ஒன்றை சரபி தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்தார். அதன் ஆசிரியராக இருந்து ஆய்விதழை கூர்மையாக முழுமைப்படுத்தினார். ஜார்ஜ் டவுன் பல்கலைகழகத்தில் "தற்கால அரபு சமூக ஆய்வு மையத்தை" சரபி தொடங்கினார். இது அமெரிக்க பல்கலைகழகங்களிலேயே முதல் ஆய்வு மையமாகும்.
ஹிசாம் சரபியின் ஆய்வு நூல்களில் குறிப்பிடதகுந்தது Neopatriarchy: A theory of distorted change in arab society . வெளிவந்த தருணத்தில் மத்தியகிழக்கு அரபுலகிலும், மேற்கத்திய அறிவுத்துறை வட்டாரங்களிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் புரட்சிக்கு பிந்தைய சமூகத்தில் சமூக மாற்றம் என்பது உடனடியான புரட்சியின் மூலமோ அல்லது வேறு நடவடிக்கைகள் மூலமோ சாத்தியமில்லை. அது மிகுந்த சிக்கலானதும், நுட்பமானதுமான நடவடிக்கை. ஆக சமூக மாற்றத்தை நீண்ட கால , கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அறிவார்ந்த வழிகளில் நாம் அடைவது அவசியம் என்றார். நவ தந்தைவழி சமூகத்தில் ஆண் முதன்மை பெறும் போது குடும்பத்தில் ஆணாதிக்கம் என்பது தர்க்க பூர்வமாக நீட்சியடைந்து சமூக மேலாண்மையாக மாறுகிறது என்றார் சரபி. இது அரபுலகில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த சர்பியின் பார்வை ஆழமானது. வேறொரு அர்த்தத்தில் சொன்னால் அரபு சமூகத்தையே தந்தை வழி சமூகமாக சரபி பார்த்தார். மேற்கில் நவீனத்துவம் பரிணாமம் அடைந்த போது மத்திய கிழக்கில் அதன் எவ்வித தாக்கமும் ஏற்படாததற்கு காரணம் அரபுலகின் கெட்டியான தந்தைவழி சமூக அமைப்பே என்றார் சரபி. மேலும் இது குறித்து அரபுலகின் அறிவுஜீவிகளுக்கு சரபியின் எச்சரிக்கை முக்கியமானது. அரபுலக அறிவுஜீவிகள் தங்களின் அறிவார்ந்த கோட்டை கவனமாக தேர்வு செய்யவேண்டும். அது சுதந்திரமாக இருப்பதுடன் கருத்துருவங்களையும், மற்ற கருவிகளையும் உள்ளடக்கியதாக நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவத்திற்கு மாறுவதை பற்றி இருக்க வேண்டும் என்றார் சரபி. புதிய விமர்சன சொல்லாடல் தானே நேரடியாக சமூக அரசியல் மாற்றத்திற்கு உட்படாது. அது தொடர்ச்சியான முரண்களுடன் பயணம் செய்து மாற்றத்தை அடையலாம் என்றார். அறிவுஜீவிகள் இந்த சமூக அரசியல் போராட்டத்தின் மீது அதிகம் தாக்கம் செலுத்த வேண்டும் என்றார் ஹிசாம் சரபி. தந்தைவழி சமூகம் என்பது வெறுமனே சடங்குகளாலும், சம்பிராதயங்களாலும் நிரம்பியது. அங்கு உரையாடல்களுக்கோ அல்லது விவாதத்திற்கோ இடமில்லை. ஆகவே அறிவுஜீவிகள் தங்களின் வாசிப்பு, சிந்தனை, எழுத்து ஆகியவற்றின் மூலம் மாற்று சமூகத்திற்காக போராட வேண்டும் என்றார். சமூகம் குறித்த பிரக்ஞை உடனடியாக வருவதில்லை. அது இயற்கையை அவதானித்தல் மூலமும், கலாசார ரீதியான பல்வேறு மனிதர்களின் மனவோட்டங்களை வாசிப்பதன் மூலமும் உருவாகிறது. சமூகம் பற்றிய அக மற்றும் புற பிரக்ஞையே ஓர் அறிவார்ந்த நபரின் ஆளுமை உருவாக்கத்தின் காரணி.இதை தெளிவாக வெளிப்படுத்திய ஹிசாம் அரபு அறிவுஜீவிகள் இதை பிரதிபலிக்க வேண்டும் என்றார். மேலும் அந்நிய மொழி ஒன்றை அறிதல் அவசியம். அதன் மூலம் மட்டுமே பிரபஞ்சம் பற்றிய நம் அனுபவ எல்லையை விரிவாக்கி கொள்ள முடியும் என்றார் சரபி. தந்தைவழி சமூகம் பற்றிய சரபியின் கோட்பாட்டு ஆய்வு முறையில் பெண்ணியம் முக்கிய இடத்தை வகித்தது. பெண்கள் மீதான ஒடுக்குமுறையை சரபி தந்தைவழி சமூகத்தின் மைல்கல்லாக பார்த்தார். அந்த சமூகத்தின் இதயத்தில் பெண் என்பது ஒரு கால வெடிகுண்டாக இருக்கிறது என்றார் சரபி. ஆக தந்தை வழி சமூகத்தின் மேலாண்மையை தகர்ப்பதற்கு பெண் விடுதலை சாத்தியப்பட வேண்டும் என்றார். இதை பற்றிய எல்லா அறிவுஜீவிகளின் செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகள் வெறும் உதட்டளவிலேயே இருக்கிறது. இது உடைபட வேண்டும் என்பது சரபியின் முக்கிய கருதுகோளாக இருந்தது.
ஹிசாமின் மற்ற நூல்களில் குறிப்பிட தகுந்தது Embers and Ashes: Memoirs of an Arab Intellectual என்ற சுயசரிதையாகும். இந்நூலில் ஹிசாம் தன் பள்ளி படிப்பு முதல் அமெரிக்காவின் உயர்கல்வி அனுபவம் வரை நுட்பமான அனுபவ ரீதியில் விவரிக்கிறார். அவரின் பள்ளிப்படிப்பு விசனகரமான, துயர நெடிவுகளால் நிரம்பியது. பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தருணத்தில் இவரின் அமெரிக்க உயர்படிப்பு நிகழ்ந்தது. கல்லூரி படிப்பிற்கு வெளியே இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் குறித்த ஆழ்ந்த வாசிப்பு மற்றும் செமிடிக் நாகரீகம் குறித்த உள்வாங்கல் இவற்றோடு ஹிசாம் நகர்ந்தார். அதன் பிறகான தத்துவவியல் சார்ந்த தீவிர அறிவுத்துறை நண்பர்களின் தொடர்பு காரணமாக அவரின் வாசிப்பு மறுமலர்ச்சி கால தத்துவம், அறிவுவாதம், நவீனத்துவம், மார்க்சியம், பெண்ணியம் பக்கம் திரும்பியது. காண்ட், தெகார்தே,ஹெகல், கேகார்ட், மார்க்ஸ், பிராய்ட் போன்றவர்களை அதிக உள்ளார்வத்தோடு வாசித்தார். தெகார்தேயின் அறிவுவாதம், ஹெகலின் கருத்துமுதல்வாதம், கேகார்ட்டின் உள்நோக்கிய எதார்த்த தன்னிலை போன்றவை அவரின் சிந்தனையாக்கத்தில் பொறியை தட்டியவை.மார்க்சின் கோட்பாடான "வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக அறிதல் மற்றும் வர்க்க போராட்டம் " அவரின் நேர்கோட்டில் மிகுந்த இடையீட்டை ஏற்படுத்தியது. அந்த தத்துவார்த்த அனுபவம் தனக்கு உயிரோட்டமாக இருந்ததாக ஹிசாம் இதில் குறிப்பிடுகிறார். இதன் தொடர்ச்சியில் பல தத்துவார்த்த நண்பர்கள் அவருக்கு உருவாயினர். அவர்களுடன் ஹிசாம் பலவிஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தார்.மனித சமூகம் ஒரு நிரந்தர போராட்டத்தின் பகுதியே. அதனை அவதானித்து எதிர்கொள்வது மூலமே நிரந்தர விடுதலை சாத்தியம் என்பது ஹிசாமின் சிந்தனையில் ஆழ்ந்து உறைந்து போனது. இதனை தொடர்ந்து ஹிசாமின் ஈடுபாடு மேற்கத்திய இலக்கிய படைப்புகள் மீது திரும்பியது. ஆல்டஸ் ஹக்லி, எர்னஸ்ட் ஹெமிங்வே, கிரஹாம் கிரீன், எவ்லின் வா சோமர்ஸெட் மாஹம்போன்றவர்களை அதிகம் விரும்பி படிக்க தொடங்கினார். ஹக்ஸ்லியின் point counter point அவரை அதிகம் பாதித்த நூலாகும். சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாக்கியமான " அறிவின் தொடக்கம் என்பதே ஒருவரின் அறிவாகும்" என்பதன் மீது ஹிசாம் நம்பிக்கை கொண்டு தன் அறிவார்ந்த தேடலை விரிவுபடுத்திக்கொண்டார். பாலஸ்தீன் சுயநிர்ணய உரிமை போராட்டத்திற்கான ஹிசாம் சரபியின் பங்களிப்பு மிகப்பெரியது. உசிதமானது. எட்வர்ட் செய்த், இப்ராஹிம் அபுலுகத் போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டார். தொண்ணூறுகளில் யாசர் அரபாத் தலைமையிலான அரசாங்கம் விரோதிகள் என்று சில அறிவுஜீவிகளை கைது செய்த போது அதை கடுமையாக கண்டித்ததுடன், மற்றவர்களுடன் இணைந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுகோள் விடுத்தார். அரபு மற்றும் மேற்குலகிற்கு அறிவுரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் பல பங்களிப்புகளை செய்த சரபியின் இறுதிகாலம் பெய்ரூட்டில் கழிந்தது. அங்குள்ள அமெரிக்க பல்கலைகழக மருத்துவமனையில் 2005 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். இவரின் நூல்கள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஹிசாமின் நூல்கள்
· Theory, Politics, and the Arab World: Critical Responses
· Governments and Politics of the Middle East in the Twentieth Century
· The Next Arab Decade: Alternative Futures
· Nationalism and Revolution in the Arab World (the Middle East and North Africa)
· Palestine and Israel: The Lethal Dilemma
· Arab Intellectuals and the West
· Palestine Guerillas: Their Credibility and Effectiveness
· Embers and Ashes
· Images of the Past: An Autobiography
· Neopatriarchy: A Theory of Distorted Change in Arab Society