காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Wednesday, December 31, 2014

துப்பாக்கியின் மறுமுனையில் - மலாலாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

உலகில் போராளிகள் அவர்களின் நம்பிக்கைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக அந்த நம்பிக்கையின் வரம்பிற்குள் அது சோதிக்கப்படும் போது அதற்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினையால் தான் தீர்மானிக்கப்படுகிறார்கள்



பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய போராளியான மலாலாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பது உலக அளவில்  பெண் கல்வி குறித்த திடமான நம்பிக்கையையும், அடிப்படைவாதம் குறித்த மறுபரிசீலனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் போன்ற அடிப்படைவாதம் மற்றும் பழமைவாதம்  நிரம்பிய ஒரு நாட்டில், மிகவும் பின் தங்கிய பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பெண்கல்விக்காக ஒருவர் குரல் கொடுப்பது மிகவும் சவாலான ஒன்று. மலாலா அந்த சவாலை முறியடித்த ஓர் உருவகம்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணம் என்பது மலைப்பாங்கான பகுதிகளை உள்ளடக்கியது. பெரும்பாலும் பழங்குடி மக்களே அதன் குடிமக்கள். இந்த பகுதிகளில் பழங்குடி வாழ்க்கை முறை தான் பிரதானம். கல்வியறிவு மிகவும் குறைவு. அதனோடு இஸ்லாமிய பழமைவாத, அடிப்படைவாதமும் சேர்ந்து நிலவுகிறது. இதனால் எப்போதும் பெண் கல்வி குறித்த எதிர்மறையான எண்ணம் இங்குள்ள பழங்குடி ஆண்கள் மற்றும்  முன்னேறிய மேட்டுக்குடியினர் மத்தியில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானின் எல்லையோரமாக இருப்பதால் தலிபான்களின் தாக்கம் இந்த பகுதியில் எப்போதும் உண்டு. மேலும் 1979 ல் ஆப்கானில் இரஷ்ய படைகளை எதிர்த்து போரிட அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட தலிபான்கள் மத்தியில் பிந்தைய  கட்டத்தில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியில்  பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணங்களில்  தக்ரீக் தலிபான் என்ற தனியான பிரிவு உருவாகி காலப்போக்கில் அந்த இயக்கம் பிராந்தியம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பிராந்தியத்தில் இஸ்லாம் என்று தாங்கள் நம்பும் கருத்துகள் மற்றும் நடைமுறைகளை அந்த பகுதி மக்கள் மீது திணித்தல் அதனை கண்காணித்தல், மீறுபவர்களை தண்டித்தல் போன்ற செயல்பாடுகளை அந்த இயக்கம் மேற்கொண்டது. மேலும் பெண்களை இரண்டாம் தர ஜீவியாக பாவிப்பது அவர்களின் முக்கிய கருத்தாக்கமாக, நடைமுறை செயல்பாடாக இருந்தது. அதன் வெளிப்பாடு தான் பெண்கள் பருவமடைந்தால் அவர்கள் பள்ளிக்கூடம் செல்ல தடைவிதிப்பது. இங்கு கவனிக்க வேண்டியது தலிபான்கள் இந்த பகுதியில் பெண் கல்வியை அறவே தடைசெய்யவில்லை. மாறாக அவர்களின் தடை என்பது பருவமடைந்த பின்பேஇதனை மீறுபவர்கள் தண்டிக்கப்பட்டனர். எதிர்குரல்கள் மற்றும் மாற்றுக்கருத்துகள் ஒடுக்கப்பட்டன. போர்களத்தில் வெற்றிகொள்ள முடியாத வீரனை அடக்க வரும் சாதாரண மனிதன் போன்று இம்மாதிரியான ஒடுக்குமுறை பிரதேசத்திலிருந்து மாற்றுக்கருத்தை முன்னெடுக்கும் பெண்ணாக உருவானார் மலாலா. பரிதா அப்ரிதி, பீவி ஆயிஷா, ஷஹர் குல், கினா ஹான் போன்ற துணிச்சல் மிக்க பெண்ணிய போராளிகளின்  வரிசையில் பதின்பருவ பெண்ணான மலாலா மிக முக்கியமானவர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் கைபர் மாகாணத்தில் மலைப்பாங்கான ஸ்வாத் பள்ளத்தாக்கில் மினோரா என்ற கிராமத்தில் 1997 ல் பிறந்தார் மலாலா. இவரின் குடும்பமே கல்விப்பின்னணியை கொண்டது. தந்தை ஷியாவுதீன் யூசுப் இந்த பிராந்தியத்தில் பல பள்ளிகளை நடத்தி வருகிறார். சிறந்த கல்வியாளர், சமூக போராளி, தலிபான் எதிர்ப்பாளர், இலக்கிய ஆர்வலர் போன்ற பல முகங்களை கொண்டவர். மேலும் இடதுசாரி சிந்தனையின் சாய்மானம் இவரிடம் ஓரளவு உண்டு. அந்த நேர்கோட்டில் தான் தன் பிள்ளை மலாலாவையும் வளர்த்தார். தன் தந்தையின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் இளமைக்கால மலாலா மீது பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் தன் சகோதரிகளின் கல்வி பிற்போக்கு சக்திகளால் தடுக்கப்படுவதை நினைத்து கவலையுற்றார் மலாலா. எப்போதும் தன் தந்தையிடம் அது பற்றியே உரையாடுவார். வகுப்பறையிலும் கூட தன் சக மாணவிகளிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அடிக்கடி விவாதிப்பார். மேலும் வகுப்பறைக்கு வெளியேயும் அது பற்றி உரையாடுவார். இதற்கு அவரின் தந்தையும் துணையாக இருந்தார். இதன் தொடர்ச்சியில் 2008 செப்டம்பரில் அவரின் தந்தை மலாலாவை அங்குள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் அழைத்து சென்று உரையாட வைத்தார். அந்த பிரதேசத்தில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதில் உள்ள சிரமங்கள் குறித்தும், தலிபான்களால் பெண் கல்விக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்தும் விவரித்தார். இந்த செய்தி பாகிஸ்தானின் எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இது அங்குள்ள தலிபான்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தொடர்ச்சியில் மலாலா தலிபான்களால் குறி வைக்கப்பட்டார். புற சக்திகளால் அடிக்கடி அவரின் குடும்பம் மிரட்டப்பட்டது. இவரின் குடும்பம் பற்றிய அவதூறுகள் அப்பகுதியை சேர்ந்த அடிப்படைவாத பிற்போக்கு சக்திகளாலும், தலிபானிய தீவிரவாதிகளாலும் மாகாணம் முழுவதும் பரப்பப்பட்டன. இவர் பெண்ணியவாதி என்றும், மேற்கத்திய கைக்கூலி என்றும் தலிபான்களால் விவரிக்கப்பட்டார். மேலும் இவரின் தந்தை பலமுறை தலிபான்களால் மிரட்டப்பட்டார். அவரை சி.. ஏஜன்ட் என்று தலிபான்கள் வர்ணித்தனர்அவருக்கு சமூக மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடிகளை அளித்தனர். அந்த நெருக்கடி விரைவில் தன் மகளின் மீது பிரதிபலிக்கும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். அந்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த தக்ரீக்- தலிபான் இவர்களை மீறி அப்பகுதியை தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்தது. அதனால் மலாலா குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது. இவர்களை ஆதரித்தவர்கள் மிரட்டப்பட்டனர். இந்நிலையில் பிற்போக்கான தலிபானிய தீவிரவாதிகளால் இவரின் குடும்பம் பழிவாங்கப்பட்டது. மலாலா அதற்கு பலியானார். 2012 அக்டோபர் 9 ல் பள்ளிக்கு சென்று விட்டு பேருந்தில் வீடு திரும்பிய மலாலாவை அப்பேருந்தில் ஏறிய தலிபானிய தீவிரவாதி ஒருவன் இந்த கூட்டத்தில் மலாலா யார் என்று கேட்டு அடையாளம் கண்டு அவளின் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டான். இதனால் சுருண்டு விழுந்து மயக்கமடைந்த மலாலா உடனடியாக பெஷாவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேற்கொண்டு சிகிட்சைக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வு பாகிஸ்தானிய வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. அது மட்டுமல்ல உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமிய பெண்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்திய ஒன்றாக மாறியது.


தலிபான்களால் மலாலா சுடப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் உலக ஊடகங்களின் வெளிச்சத்திற்குள் கொண்டு வரப்பட்டார். முதலில் இதனை மேற்கத்திய ஊடகங்களின் சதி எனவும், கட்டுக்கதை எனவும்  குறிப்பிட்டு அடிப்படைவாதிகள் நம்ப மறுத்தார்கள். பின்னர் பாகிஸ்தானின் ஊடகங்கள் இதனை விரிவாக அம்பலப்படுத்தியதன் காரணமாக மௌனமானார்கள். சிலர் தலிபான்கள் அவரை சுடவில்லை வேறு எந்த இயக்கமோ சுட்டிருக்கிறது என்றார்கள். இன்னும் சிலர் அவர் பேருந்தில் செல்லும் போது தவறி கீழே விழுந்து அடிபட்டு இருக்கிறது என்றார்கள். இப்படியான வறட்டு நியாயங்கள், அவதூறுகள் தொடர்ந்தனதங்களுக்கு சாதகமாக இல்லாத ஒன்றை ஊடகத்தின் மீது சுமத்தி விட்டு தப்பிக்கும் மனோபாவமே இது.  இதனை தொடர்ந்து மேற்கத்திய மனித உரிமை அமைப்புகள் பல மலாலாவிற்காக குரல் கொடுத்தன. பல பெண்ணிய அமைப்புகளும் அவருக்காக களம் இறங்கின. அதே நேரத்தில் தலிபான்களும், தலிபான் ஆதரவு சக்திகளும் மலாலாவிற்கு எதிராக பிரசாரம் செய்தன. பெண்களை இழிவுபடுத்தும் வழக்கமான ஆணாதிக்க சொற்கள் மலாலா மீது வீசப்பட்டன. அமெரிக்க கைக்கூலி என்ற அவதூறு காரணமாக உலகம் முழுக்க இஸ்லாமிய நாடுகளில் மலாலா மோசமானவராக சித்தரிக்கப்பட்டார். அங்குள்ள பெரும்பாலான அல்லது கணிசமான இஸ்லாமியர்கள் மலாலாவை எதிரியாக பார்த்தனர். நடைமுறையில், சிந்தனையில்  மிகவும் திடமாக, அதிகமாக ஊடுருவியிருக்கும் ஆணாதிக்க வெறியே இதற்கு காரணம்ஒரு காலத்தில் பெண்களை கல்வியிலிருந்து விலக்கி வைத்திருந்த சமூக மனோபாவத்தின் எச்சமும் மற்றொரு காரணம். தமிழ்நாட்டிலும் இஸ்லாமியர்கள் மத்தியில் தலிபான் ஆதரவு குழுவினர் மலாலா பற்றிய எதிர்மறையான பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஆண்கள் தங்கள் மனைவியோடு திரையரங்கம் சென்றால் அந்த குடும்பத்திற்கு அபராதம் விதிக்கும் நடைமுறை இருந்தது. தலக்கட்டு என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஊர் நடைமுறை கட்டுப்பாடு சென்னை முதல் மதுரை வரை வழக்கத்தில் இருந்தது. ( நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி தவிர). மேலும் பல ஊர்களில் முஸ்லிம் பெண்கள் வயதுக்கு வந்தால் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்ற தடை இருந்தது. இதனை மீறும் குடும்பத்தினர் ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டனர். கடந்த இருபது ஆண்டுகளாக தான் இதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இன்னும் சில பின் தங்கிய கிராமங்களில் இந்த நடைமுறை இருக்கிறதுஇதனை குறித்து பேசுபவர்கள், அதற்காக போராடுபவர்கள் அனைவரும் மதவிரோதிகளாக பார்க்கப்படுகின்றனர். ஒட்டுமொத்த மதத்தையும் தாங்கள் குத்தகைக்கு எடுத்து அதனை நிர்வகித்து வருகிறோம் என்ற ஆதிக்க மனோபாவமே இதற்கு காரணம். இதில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு இன்னும் சிலகாலம் தேவைப்படலாம்.
மலாலாவை பொறுத்தவரை வயதை மீறிய அனுபவத்தைக்கொண்டவர். குழந்தை பருவத்திலேயே சமூகம் குறித்து சிந்தித்தவர். தன் தந்தையின் தொடர்ந்த வழிகாட்டலும், ஊட்டமுமே அதற்கு காரணம். அதனடிப்படையில் தான் அவர் உலகம் ஆச்சரியப்படும் வகையில் பதின்பருவ போராளியாக மாறினார். தன் 11 ஆம் வயதில் இருந்தே பெண் கல்விக்காக குரல் கொடுக்க தொடங்கினார். பிபிசியின் இணையதளத்தில் அதனை பற்றி எழுதினார். அவர் சுடப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன் உலக சிறுமிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி அந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மலாலா பங்கேற்று பெண் கல்வியின் அவசியம் குறித்தும், பெண்களின் முன்னேற்றம் குறித்தும் உரையாற்றினார். இதுவும் தலிபான்கள் இவர் மீது கோபங்கொள்ள ஒரு காரணம். தலிபான்களால் சுடப்பட்டதன் பின்னர் உலக அளவில் இவருக்கு கிடைத்த முக்கியத்துவத்தை அடுத்து .நா பொதுச்செயலாளர் பான்கிமூன் இவரை பாராட்டினார். மேலும் கடந்த ஆண்டில் தன் பிறந்த நாளின் போது .நா சபையில் இவரின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. “ஒரு குழந்தை, ஓர் ஆசிரியர், ஒரு புத்தகம் மற்றும் ஒரு பேனா ஆகியவை உலகை மாற்றும்என்றார். மேலும் இவரின் உதவியாளரான ஜுலி இவரைப்பற்றி குறிப்பிடும் போதுமலாலா படைப்பாற்றல் மிக்க, அன்பான, துணிச்சலான, உறுதியான சிறுமி. சேவை மனப்பான்மையை கொண்டவர். அவரின் நோக்கம் சமூக முன்னேற்றமே. மாறாக சமூக இழிவல்ல. தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக மலாலா தற்போது லண்டனில் படித்து வருகிறார். இவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற பரிந்துரை பலரால் செய்யப்பட்டது. கடந்த வருடமே இவருக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விளைவாக இவ்வருடம் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்திக்கும் இவருக்குமாக இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. “இந்த நோபல் பரிசு எனக்கு கிடைத்திருப்பது பெரும் வாய்ப்பு. கிடைக்காவிட்டால் எனக்கு அது முக்கியமில்லை. காரணம் என் நோக்கம் சமாதானம் மட்டுமே. மாறாக நோபல் பரிசு அல்லஎன்றார் மலாலா. இவரின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளிவந்திருக்கிறது.  உலக வரலாற்றில் மிக இளவயதில்  நோபல் பரிசு அளிக்கப்பட்டிருப்பது மலாலாவிற்கு மட்டுமே. அவருக்கு கிடைத்திருக்கும் இந்த பரிசு உலகம் முழுவதும் ஆணாதிக்கத்தின் பெயரால் ஒடுக்கப்படும் பெண்களுக்கான விடுதலை குறியீடு. அது விரைவில் முழுமைபெறும். அவர் இன்னும் நிறைய தூரங்களை கடந்து தான் சார்ந்த சமூகத்திற்கும், உலகிற்கும் சேவை செய்ய வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

mohammed.peer1@gmail.com