காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது
Showing posts with label அடிப்படைவாதம். Show all posts
Showing posts with label அடிப்படைவாதம். Show all posts

Monday, May 26, 2014

அடிப்படைவாதம் என்றால் என்ன?




அடிப்படைவாதம் (Fundamentalism) என்ற சொல்லாடல் தற்போது உலக அளவில் பிரபலமான ஒன்றாக மாறி வருகிறது. பெரும்பாலும் மதங்களை குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது  லௌகீக உலகின் எல்லாவித போக்குகளையும் குறிக்கும் ஒன்று. ஒன்றின் அடிப்படைகளை உள்வாங்கி அதன் நுனிமங்கள் மீது தொங்கிக் கொண்டிருப்பது. இதன்வழி வரலாற்றின் வளர்ச்சி போக்குகள் மீது எவ்வித நம்பிக்கைகள் அற்று இருப்பது. உலகின் போக்கை, இயக்கத்தை நிராகரிப்பது அல்லது ஏற்றுக்கொள்ள மறுப்பது. எல்லாவற்றையும் தான் நம்பும் அடிப்படைகள் மீது உரசி பார்ப்பது, அதன் மீது குழப்பமும், சந்தேகமும் கொள்வது இவற்றின் மொத்த கூறுகள் அடிப்படைவாதம் என்றழைக்கப்படுகின்றது. இந்நிலையில் சுய சிந்தனையற்ற நடைமுறை செயல்பாடுகள் அடிப்படைவாதிக்கு உரியதாக இருக்கின்றன. மேலும் வாழ்வின் எல்லாவித இயக்கங்களுக்கும் ஓர் அடிப்படைவாதி தான் நம்பும் கோட்பாடு அல்லது கொள்கையின் மீது உரசி உரசி நிற்பான். அது மட்டுமே உலகம் என்று நம்புவான்.

இன்றைய உலகில் அடிப்படைவாதம் பல கிளைகளாக, பல துறைகளை நோக்கி தன்னை வியாபித்திருக்கிறது. மத அடிப்படைவாதம், மொழி அடிப்படைவாதம், சந்தை அடிப்படைவாதம், பொருளாதார அடிப்படைவாதம், புரட்சி அடிப்படைவாதம் இப்படியாக பல தளங்களை நோக்கி தன்னை விரிவுபடுத்தி நிற்கிறது. மொழி அடிப்படைவாதம் என்பது மொழி மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும். மொழியை தூக்கி பிடித்தால் பிரதேசம் செழிப்பாகி விடும் என்று  நம்புவது. மேலும் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விடாமல் பழம்பெருமையின் பெயரில் தடுப்பது. இவையெல்லாம்  மொழி அடிப்படைவாதத்தில் உள்ளடங்குகிறது. தமிழ்நாட்டிலும் அத்தகையவர்கள் உண்டு. சந்தை அடிப்படைவாதம் பிந்தைய முதலாளித்துவ உலகின் நுகர்வு கலாசாரத்தை அடிப்படையாகக்கொண்டது. சந்தை தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். அது அடிப்படையில் சுதந்திரமாக இயங்கும்.  எல்லா சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது போன்ற அதீத நம்பிக்கைகளை சந்தை அடிப்படைவாதம் கொண்டிருக்கிறது. மேலும் ஒரு பிரதேசத்தில் அரசின் பங்களிப்பை குறைத்து  சந்தையை மையப்படுத்தி அனைத்தையும் ஒருமுகப்படுத்துவதன் மூலம் அதனை ஆளுமை செய்ய முடியும் என்ற கருத்தாக்கமும் இதில் நிலவுகிறது. தற்போதைய உலகில் சராசரி மனித வாழ்வை அழிக்கும் ஒன்றாக சந்தை அடிப்படைவாதம் இருக்கிறது. பொருளாதார அடிப்படைவாதம் என்பது பொருளாதாரத்தை மையமாகக்கொண்டது. குறிப்பாக ஊழல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். ஊழல் ஒழிந்து விட்டால் எல்லாவற்றையும் ஒழித்து விடலாம் என்று நம்புவது. இதன் அடிப்படையில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை அதிகம் நம்புகிறார். மற்ற பிரச்சினைகள் குறித்து யோசிக்க மறுக்கிறார். இந்நிலையில் நாம் அவரை பொருளாதார அடிப்படைவாதி என்று கூட என்றழைக்க முடியும். மேலும் பொருளாதாரம் செழித்து விட்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்றும் இவ்வகையான அடிப்படைவாதம் நம்புகிறது. புரட்சி அடிப்படைவாதம் என்பது வறட்டு மார்க்சியர்களை குறிப்பது. மார்க்சையும், ஏங்கல்ஸையும் கடவுளின் இடத்திற்கு கொண்டு போகும் நிலை. அவர்கள் இருவரையும் விட்டால் உலகம் ஏதுமில்லை என்று நம்புவது.  மார்க்சியர்களில் உலக அளவில் இம்மாதிரியான சிந்தனை கொண்டவர்கள் சிறிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக மத அடிப்படைவாதம் தான் மிக ஆபத்தானது. காரணம் மதங்களை பின்பற்றும் மனிதர்கள் மாறி மாறி தங்களை அழித்துக்கொள்ள மத அடிப்படைவாதம் காரணமாக அமைகிறது. மதம் தனிமனித அந்தரங்கமாக இருக்கும் பட்சத்தில் அது பெரும் மோதல்களை உருவாக்குவதில்லை. எப்போது சமூகத்தின்  கூட்டு பிரக்ஞையாக அது மாறுகிறதோ அப்போது முதல் அது ஆபத்தானதாக மாறி விடுகிறது.

அடிப்படைவாதம் என்ற சொல்லாடல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் கிறிஸ்தவ புரோட்டஸ்டண்ட் பிரிவை குறிக்கும் ஒன்றாக தான் இருந்தது. காரணம் அன்றைய ஐரோப்பாவில் திருச்சபை எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஒன்றாக, கடவுளை அணுக, அடைய ஒரே அதிகாரபூர்வ அமைப்பாக தன்னை நிறுவிக்கொண்டது. இதனை எதிர்த்து தான் புரோட்டஸ்டாண்ட் மற்றும் விடுதலை இறையியல் இயக்கங்கள் உருவாயின. இந்நிலையில் மேற்கண்ட இயக்கங்கள் பைபிளுக்கு புதிய விளக்கங்கள் கொடுத்து அதன் அடிப்படையோடு கிறிஸ்தவர்கள் இயைந்து கொள்ள வேண்டும் என்றன. மரபார்ந்த திருச்சபையின் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. நவீனத்துவ கோட்பாட்டின் உருவாக்கத்திற்கான தேவையும் இங்கிருந்து தான் தொடங்கியது. மேலும் தொடக்க கால நவீனத்துவம் இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவ சிந்தனைகளிலிருந்து மாறுபட்டு இருந்தது. பிந்தைய கால நவீனத்துவத்தின் முக்கிய அம்சங்களான மதசார்பின்மை, ஜனநாயகம், சமதர்மம் மற்றும் தேசியம் ஆகிய கருதுகோள்களுக்கு தொடக்ககால நவீனத்துவம் தான் அடித்தளம் அமைத்தது. கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிரான நிலைபாட்டிலிருந்து தனக்கான கருதுகோளை வடிவமைத்துக்கொண்டது. மேலும் இறைநம்பிக்கையை ஆரம்பகால நவீனத்துவ வாதிகள் ஏற்றுக்கொண்டனர். மேலும் அவர்களில் சிலர் உலக நகர்வுகள் அனைத்தும் இறைவனின் உருவமே என்ற Pantheism கோட்பாட்டில் நம்பிக்கைக்கொண்டிருந்தனர். இவர்கள் இம்மாதிரியான நம்பிக்கைக்கொண்டிருந்த போதும் கடவுளின் நிலைப்புத்தன்மை, நிலையான இருப்பு ஆகியவை குறித்து உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. மேலும் தொடக்ககால நவீனத்துவவாதிகள் பைபிள் மீது நம்பிக்கைக்கொண்டிருந்த போதும் அதன் லௌகீக பொருத்தப்பாடுகள் குறித்த சந்தேகம் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் நாத்திகர்களாக இல்லாத போதும் புனித பிரதிகளின் முழு போதனை குறித்த தர்க்கரீதியான கேள்விகளை கொண்டிருந்தனர். கிறிஸ்தவ திருச்சபையின் மத ஆதிக்கத்தை எதிர்த்து உருவான நவீனத்துவ இயக்கம் பிந்தைய கட்டத்தில் பரிணாம வளர்ச்சி பெற்று தெகார்தேயின் அறிவுவாத கோட்பாட்டை உள்வாங்கியது. அதற்கு பிந்தைய நவீனத்துவவாதிகள் எல்லாம் பகுத்தறிவு ரீதியான கருத்துக்கட்டமைப்பை உடையவர்களாக மாறினார்கள். இங்கு மத அதிகாரம் முழுவதும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. மத அடிப்படைவாதிகள் மற்றும் எதேச்சதிகாரிகள் எல்லாம் விமர்சிக்கப்பட்டார்கள். பைபிளின் நதிமூலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அதன் வசனங்கள் விமர்சிக்கப்பட்டன. மனித விடுதலைக்காக அதனை பயன்படுத்த வேண்டும் என்ற குரல் மேலோங்கி இருந்தது. இது உயர் விமர்சனம் (High Criticism)என்றழைக்கப்பட்டது. மேலும் அன்றைய நவீனத்துவ வாதிகள் பின்வருமாறு தங்களின் கருதுகோளை முன்வைத்தனர். " எல்லாவற்றையும் நிரூபணம் செய். எது நல்லதோ அதை பற்றிக்கொள்". இது அன்றைய கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. காரணம் எந்த ஒன்றையும் உண்மையென நிரூபித்து விட்டு தான் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருதுகோள் இறைவன் மற்றும் புனித பிரதிகள் சார்ந்த பல விஷயங்களுக்கு நெருடலாக இருந்தன.

கிறிஸ்தவ திருச்சபையில் ஆதிக்க மற்றும் அதிகார கருத்தியல்களுக்கு எதிராக உருவாகிய நவீனத்துவத்தின் இரண்டாம் கட்டம்  ஐரோப்பாவில் பல துறைகளுக்கும் பரவியது.  மனிதன் மதத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று நவீனத்துவவாதிகள் முன்வைத்தார்கள். மனித மனம் சுதந்திரமாக இயங்க வேண்டும். எந்த தனிநபருக்கும், நிறுவனத்திற்கும் கட்டுண்டு கிடக்கும் ஒன்றாக அது இருக்கக்கூடாது என்றார்கள். மேலும் படிப்படியாக அது பிற துறைகளுக்கும் பரவியது. குறிப்பாக மேற்கத்திய இலக்கியத்தில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியது. அதுவரை இருந்த மரபான இலக்கிய ஆக்கங்கள், வடிவங்கள் மறைந்து புதிய வடிவங்கள், உத்திகள் எழுத்துமுறையில் உருவாயின. தனிமனித வாழ்க்கை முறையிலும் அது மிகுந்த பாதிப்பை செலுத்தியது. தற்போதைய உலகம், மாறி வரும் உலகம் என்ற கருத்தாக்கங்கள் மேலோங்கி அதனோடு மனிதர்கள் இயைந்து கொள்ள வேண்டும் என்ற குரல் முன்வைக்கப்பட்டது. அதன் மூலம் மனிதவிடுதலை சாத்தியப்படுவதுடன், மனித உறவும் மேம்படும் என்று மொழியப்பட்டது. இதன் மூலம் ஐரோப்பிய கிறிஸ்தவத்தின் பல நூற்றாண்டு கால சர்வாதிகாரத்திற்கு  முடிவு கட்ட முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

ஐரோப்பிய வரலாற்றில் கிறிஸ்தவ திருச்சபை செய்த அக்கிரமங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. திருச்சபையை எதிர்த்தவர்கள், அதற்கு எதிராக கேள்வி 
எழுப்பியவர்கள், பாவ மன்னிப்பு சீட்டு முறையை நிராகரித்தவர்கள் அனைவரும் 14 ஆம் நூற்றாண்டு ஸ்பெயினில் விசாரணை கொலை (Inquisition)முறைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு இயந்திரத்தில் வைத்து அவர்களின் உறுப்புகள் துண்டாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் பைபிளுக்கு எதிராக இருக்கின்றன என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் பலர் தண்டிக்கப்பட்டனர். கலிலியோ மற்றும் கோபர்நிகஸ் ஆகியோர் அவ்வாறு தண்டனை பெற்றவர்களின் வரலாற்றில் முக்கியமானவர்கள். மேலும் புனித பார்த்தலோமியா தின படுகொலைகள், கருக்கலைப்பிற்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்கள், சூனியக்காரிகள் என்று குற்றஞ்சாட்டி பெண்களை 
கொன்றது, கருப்பர்கள் மீதான் ஒடுக்குமுறை இப்படியாக வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம். கிறிஸ்தவ திருச்சபையின் மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தும் கடவுளின் பெயராலும், பைபிளின் பெயராலும் நியாயப்படுத்தப்பட்டன. பைபிளை பொறுத்தவரை அவர்களால் இருவிதமான கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டன. 1. பைபிள் உலகில் மனிதனுக்கு 
தேவையான  அனைத்துவிதமான அறிவையும் கொடுக்கிறது. 2. இது லௌகீக  உலகின் எல்லா உண்மைகளையும் உள்ளடக்கி இருக்கிறது. இதன் பின்னணியில் நாம் கிறிஸ்தவ மத நிறுவனத்திற்கும் அரசிற்குமான தொடர்பை ஆராய வேண்டும். கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் 
ரோம அரசனான காண்ஸ்டான்டைன் கிறிஸ்தவத்தை அரச மதமாக அறிவிக்க தொடங்கிய போது அதன் நிறுவனத்தன்மையும் தொடங்கியது. போப்கள் அரசனின் ஊதுகுழல்களாக மாறினார்கள். அரசர்களுக்கும் போப்களுக்குமான கூட்டிணைவு ஒரு கட்டத்தில் மத எதேச்சதிகாரமாக மாறியது. பாப்பரசர்க்குரியதை பாப்பரசருக்கும், சீசருக்குரியதை சீசருக்கும் கொடுங்கள் என்ற கோஷம் இருவருக்குமான கூட்டிணைவை பிரதிபலித்தது. இதனால் தான் போப்பின் வயிற்றில் உருவாகும் ஒவ்வொரு அரசனையும் கொல்லுங்கள் என்றார் ஐரோப்பிய சிந்தனையாளரான ரூசோ. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி மற்றும் 20 ம் நூற்றாண்டின் தொடக்க பகுதி இரு காலகட்டங்களின் இடைவெளியில் தான் ரோம கத்தோலிக்க திருச்சபையில் மாற்றம் ஏற்பட்டது. புரோட்டஸ்டாண்ட் மற்றும் விடுதலை இறையியல் கோட்பாடுகளின் உருவாக்கம், நவீன சிந்தனை முறைகளின் தோற்றம் இவை அனைத்தும் திருச்சபையின் மாற்றத்திற்கு காரணமாக அமைந்தன. இதன் தொடர்ச்சியில் காலஞ்சென்ற போப் திருச்சபையின் கடந்த கால செயல்பாடுகளுக்கு மன்னிப்பு கேட்டதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆனாலும் அயர்லாந்திலும், அமெரிக்காவின் சில மாகாணங்களிலும் கிறிஸ்தவ அடிப்படைவாதம் இன்னும் வலுவாக இருக்கிறது. 
சொர்க்கத்திற்கு ஒரே அடியாக சென்று விடலாம் என்று கருதி ஒட்டுமொத்தமாக எல்லோரின் உடம்பையும் தீவைத்து எரித்த நிகழ்வும் சில ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் நடந்தேறியது.




இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பிரபலமான ஒன்று. பிரிட்டனின் காலனியாதிக்க பிடியிலிருந்து அரபு நாடுகளின் விடுதலையும், பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேலின் உருவாக்கமும், வளைகுடா நாடுகளில் பெட்ரோல் கண்டுபிடிப்பும் அதன் விளைவான மித மிஞ்சிய பணப்பெருக்கம் ஆகியவை இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் அதற்கு பிந்தைய பயங்கரவாத செயல்பாடுகளுக்கு காரணமாக அமைந்தன. மேலும் பெட்ரோலிய கண்டுபிடிப்பின் பயனாக தன் நலன் சார்ந்து அமெரிக்கா அரபு நாடுகளை தன் அடிமைகளாக மாற்றியது அடிப்படைவாத வளர்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது. இதன் தொடர்ச்சியில் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எகிப்து சவூதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் மதம் சார்ந்த கருத்தியல் எழுச்சி ஏற்பட்டது. 
ஈரானிய புரட்சிக்கு பிந்தைய காலகட்டத்தில் இது மேலும்  அதிகப்பட்டது. குறிப்பாக சல்மான் ருஷ்டிக்கு எதிரான கொமைனியின் மரண தண்டனை தீர்ப்பு உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இது திருத்தல்வாதம் என்றழைக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு முஸ்லிமின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் இஸ்லாம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற கோஷமே அது. அதன் படி ஐந்து கடமைகள், இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துக்கூறல், இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குரல், இஸ்லாமிய வங்கிகளை ஏற்படுத்துதல், இஸ்லாமிய அமைப்புகளை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை இதன் அம்சங்களாக இருந்தன. மேற்கண்டவற்றை அடைவதற்காக இஸ்லாமிய அரசுகள் உருவாக வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. அதன் படி லிபியாவில் கடாபி, பாகிஸ்தானில் ஜியா உல் ஹக், ஈரானில் கொமைனி போன்றவர்கள் இதற்கான உதாரணமாக அமைந்தார்கள். இதனடிப்படையில் ஹசனுல் பன்னா தலைமையில் 1928 ல் எகிப்தில் உருவாகிய இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மேற்கத்திய மத சார்பின்மை, ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிராக வலுவான இஸ்லாமிய அரசு என்பதை முன்வைத்தது. இது படிப்படியாக சிரியா, லெபனான் மற்றும் துனிஷியா போன்ற நாடுகளுக்கும் பரவியது. மேலும் 1935 ல் சவூதி அரேபியாவின் உருவாக்கம் உலக அளவில் இஸ்லாமிய திருத்தல்வாதத்திற்கு மேலும் உரமேற்ற செய்தது. காரணம் தற்போதைய சவூதி மன்னரின் பரம்பரையை தன் காலனிய நலன்களுக்காக உருவாக்கியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தான். 20 ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மத்திய கிழக்கில் அசைக்க முடியாத வலுவான பேரரசாக இருந்த உதுமானிய பேரரசை கைப்பற்றுவதற்காக பிரிட்டன் மத சீர்திருத்த இயக்கம் என்ற பெயரில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்துல் வஹ்ஹாப் என்பவரை உருவாக்கியது. பின்னர் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்கா நகரம் 1806 ல் பிரிட்டன் உதவியுடன் உதுமானிய பேரரசிடமிருந்து அங்கிருந்த சவூத் மன்னர் கைப்பற்றினார். தொடர்ச்சியான பல போர்கள், உள்நாட்டு குழப்பங்கள், கருத்தியல் போர்கள் இவற்றின் இயக்கமாக 19 ஆம் நூற்றாண்டு சவூதி அரேபியா இருந்தது. அன்றைக்கு அது இப்போதைய சவூதி மாதிரியான விரிந்த பரப்பில் இருக்கவில்லை. புனித தலங்களை உள்ளடக்கிய மிக குறுகிய பிரதேசமாக இருந்தது. ஒருங்கிணைந்த விரிந்த சவூதி அரேபியாவை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்த பிரிட்டன் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கட்டத்தில் உலக ஆதிக்கம் அமெரிக்காவிற்கு கைமாறியதால் சவூதிய அரேபியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது. இதுவே சவூதின் வீடு (House of saud) என்றழைக்கப்படுகிறது.

உலக அளவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் நீட்சியாக உருவான ஜிகாதிய பயங்கரவாதம் என்பது அமெரிக்காவின்  வார்ப்பு தான். காரணம் பனிப்போர் காலகட்டத்தில் அதன் எதிரியாக சோவியத் யூனியன் இருந்தது. அந்த காலகட்டத்தில் பெட்ரோலிய வளம்மிக்க இஸ்லாமிய அரசுகள் சோவியத் பக்கம் போய்விடக்கூடாது என்பதில் அமெரிக்கா மிகத்தெளிவாக இருந்தது. இதனை மீறி சோவியத் பக்கம் சென்ற நாடுகளை அமெரிக்கா அச்சுறுத்தியது. மேலும் இதை வெறுமனே புவி அரசியல் நிலைபாடாக சுருக்கி விடாமல் கருத்தியல் அரசியலாகவும் உருவாக்க வேண்டும் என்பதில் அமெரிக்க தெளிவாக இருந்தது. அதன் வெளிப்பாடு தான் கம்யூனிசம் இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமானது என்ற அதன் கோஷம். இதை இஸ்லாமிய நாடுகளில் மிகவும் லாவகமாக உட்புகுத்தியது அமெரிக்கா. அதற்கு சரியான பலனும் கிடைத்தது. குர் ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை அதிகம் அச்சிட்டு அந்த நாடுகளில் பரப்பியது. இதன் காரணமாக இஸ்லாமிய நாடுகளில் மாற்றுசிந்தனைகள், அரசிற்கு எதிரான புரட்சிகள் உருவாகாமல் அமெரிக்கா பார்த்துக்கொண்டது. இன்றும் கூட பல இஸ்லாமிய நாடுகளில் கம்யூனிசம் என்றால் அலறல் மனத்தோடு பார்ப்பதற்கு காரணம் அமெரிக்காவின் மேற்கண்ட வரலாற்று செயல்பாடு தான். மேலும் நஜிபுல்லா அரசாங்கத்தை ஆதரித்து ஆப்கானிஸ்தானில் இரஷ்ய ராணுவம் நுழைந்தது எல்லோரையும் விட அமெரிக்காவிற்கு அதிக பதட்டத்தை ஏற்படுத்தியது. காரணம் புவி அரசியல் ரீதியாக ஆப்கான் சோவியத் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்து விட்டால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் வரை நீண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது என்று அது கருதியதே. மேலும் பிராந்திய ரீதியாக தனக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அன்றைய பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரியான ஜியா உல் ஹக் பயந்தார். விளைவாக அமெரிக்கா துணையை நாடினார். அமெரிக்காவின் ஆலோசனை படி  பாகிஸ்தானிய மதரசா மாணவர்கள் சோவியத் ராணுவத்தை எதிர்த்து களம் இறங்க நிர்பந்திக்கப்பட்டனர். அவர்களை அமெரிக்க ராணுவம் மாதிரியே உருவாக்க அமெரிக்க உறுதியளித்தது. அந்த மாணவர்களின் மூளைகளில் ஜிஹாத் கருத்தாக்கம் வலுவாக திணிக்கப்பட்டது. இதனால் கருத்தியல் மயக்கத்திற்கு ஆளான ஆயிரக்கணக்கான மாணவர்கள்  சோவியத் ராணுவத்தை எதிர்த்து போராட முன்வந்தார்கள். அவர்களுக்கு பாகிஸ்தானில் எல்லாவித பயிற்சியும் அளிக்கப்பட்டது. இவர்கள் தான் பின்னாளில் தலிபான்கள் என்றழைக்கப்பட்டனர். தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று அர்த்தம். மேலும் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ரீகன் இந்த பயிற்சி பெற்ற ஜிஹாதிய தலைவர்களை தன் வெள்ளை மாளிகைக்கு அழைத்து அவர்களுடன் இணைந்து தொலைக்காட்சிக்கு  பேட்டி அளித்தது உலகம் முழுக்க கவனிக்கப்பட்டது. " கம்யூனிசம் என்பது இஸ்லாத்திற்கு எதிரானது. அதை புரிந்து கொண்டதால் தான் இந்த போராளிகள் தங்கள் நாட்டில் அதற்கு எதிராக போராடுகிறார்கள்" என்றார் ரீகன் அந்த பேட்டியில். இந்த சொற்களின் பின்னால் அமெரிக்காவின் வர்க்க நலன் ஒளிந்திருந்தது.

90 களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சி உலகை அப்படியே தலைகீழாக புரட்டி போட்டது. பனிப்போர் முடிவுக்கு  வந்து விட்டதன் காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரி தேவைப்பட்டது. எதிரிகளை வைத்தே அரசியல் செய்வதன் மூலம் தன் இருப்பை நிலைநாட்டிக்கொள்வது ஏகாதிபத்திய வழக்கம். இதனடிப்படையில் இஸ்லாமிய நாடுகள் முன்பு தான் உருவாக்கிய அதே ஜிஹாதிகளை தனக்கு எதிராக அமெரிக்கா உருவாக்க தொடங்கியது. ஒசாமா பின்லேடன் தொடங்கி முல்லா உமர் வரை அதன் எதிரிகளாக மாறினார்கள். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்  செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு சற்று முன்பு வரை அமெரிக்கா ஆப்கானிய தலிபான் அரசிற்கு நிதி உதவி அளித்து வந்தது என்பது தான். இதிலிருந்தே அதன் எதிரிகளை உற்பத்தி செய்யும் செயல்முறைகளை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும் ஏற்கனவே அரபு நாடுகளில் உருவாகிய பல்வேறு சீர்திருத்த, திருத்தல்வாத, அரசியல் இஸ்லாம் வகைப்பட்ட இயக்கங்கள், தலைவர்கள் உலக இஸ்லாம் என்பதை தங்கள் இலட்சியமாக வைத்தனர். மேலும் அநியாயக்கார ஆட்சியாளர்கள் மீது போர்தொடுத்தல், நம்பிக்கையற்றவர்கள் மீது போர் தொடுத்தல் போன்ற
குர் ஆனிய வசனங்களை தங்கள் அரசியல் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு பிரதியாக்கம் செய்து கொண்டனர். இதனடிப்படையில் எல்லா உலக மாற்றங்களுக்கு எதிரான போக்குகள், சிந்தனைகள், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், தேவையற்ற கட்டுப்பாடுகள், வரலாற்றை நிராகரித்தல், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை சந்தேகத்தோடு அணுகுதல் (இப்போதும் கூட செல்போனின் ரிங்டோன் குறித்த சர்ச்சை நடந்து வருகிறது)மதப்பிரதிகளை தங்களின் வறட்டு கோட்பாடுகளுக்கும், பிற்போக்கான சிந்தனைகளுக்கும் தகுந்தவாறு விளக்கம் செய்து " கூடாது" என்ற சொல்லோடு அன்றாட வாழ்வின் மனித செயல்பாடுகளை நீட்டுவது. உதாரணமாக இருப்பது கூடாது, படுப்பது கூடாது, நிற்பது கூடாது, நடப்பது கூடாது, பாடல் கேட்க கூடாது, திரைப்படம் பார்க்க கூடாது, பெண்கள் சிரிக்க கூடாது போன்றவை. மேலும் அறிவியல் வளர்ச்சியை இறைவனுக்கு சவால் விடும் ஒன்றாக தலிபான்கள் அணுகினர். இதனால் தங்கள் ஆட்சிகாலத்தில் ஆப்கானில் வானிலை ஆராய்ச்சி மையத்தை குண்டுவைத்து தகர்த்தனர். அதற்கு முன்பிருந்த பல அறிவியல் அடையாளங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு அவர்கள் மதப்பிரதிகளையே மேற்கோள் காட்டினார்கள். இந்த நாம் கவனிக்க வேண்டியது லௌகீக உலகின் இயல்பான இயக்கத்தை, அதன் வளர்சிதை மாற்றத்தை உள்வாங்க மறுத்து மதபிரதிகளில் அதற்கு விளக்கம் தேடும் முறை என்பதே தூய அடிப்படைவாதம். ஒரு மனிதன் இறைவன் மீது நம்பிக்கைக்கொண்டு, அதன் படி வழிபாடுகளை, சடங்குகளை தன் வாழ்வில் அமைத்துக்கொண்டால் அவனை நாம் அடிப்படைவாதியாக கருதி விட முடியாது. அவன் அதன் அடிப்படைகள் மீது தன்னை தகவமைத்துக்கொள்கிறான். அது அவனின் தனிமனித செயல்பாடு மற்றும் சுதந்திரம். ஆனால்  சராசரி மனித வாழ்வின் எல்லா இயக்கத்திற்கும் மதபிரதிகளில் விளக்கம் தேடி அதன் மூலம் தங்களுக்கான வறட்டு கருத்தியல்களை உருவாக்கி, அதனை சமூகத்தின் பொதுப்புத்தியாக, அரசியல் கோட்பாடாக திணிக்க முயலும் நபர்களை, சக்திகளை, ஆதிக்கவாதிகளை நாம் அடிப்படைவாதிகள் என்கிறோம். அவர்கள் எல்லோரையும் அதற்குள் உள்ளடக்க முயற்சிப்பார்கள். தங்களை ஏற்றுக்கொள்ளாத மனிதர்களை ஒதுக்குவார்கள். தாங்கள் மட்டுமே உலகின் உங்களை காப்பாற்ற முடியும் என்பார்கள். மேலும் தங்களைப்பற்றிய எவ்வித சுயவிமர்சனமும் இல்லாமல் எல்லாவற்றையும் பிடிவாதமாக அணுகுவது, அதற்காக கொந்தளிப்பது போன்றவையும் அடிப்படைவாதத்தின் குணாம்சங்கள். இதன் தொடர்ச்சியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பெயரால் பெண்கள் மீது உளவியல் மற்றும் உடலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது, அவர்களின் சகலவித உரிமைகளை மறுப்பது, சாக்குமூட்டைகளாக பாவிப்பது, அவர்கள் ஆண்களை கண்டால் தலை தெறிக்க ஓடவேண்டும் என்று கட்டளை இடுவது, பெண்கள் மத விஷயங்கள் ஆண்கள் சொல்வதை மட்டுமே எவ்வித சந்தேகமுமின்றி கேட்டு நடக்க வேண்டும் என்பன போன்றவை இந்தியாவிலும், சில இஸ்லாமிய நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கின்றன. பஸ்தூன் பழங்குடி மக்களிடையே பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய மலாலா என்ற சிறுமியை இரு ஆண்டுகளுக்கு முன்பு தக்ரீக் ஏ தலிபான் என்ற அமைப்பினர் சுட்டது போன்றவை இதற்கான உதாரணங்கள். மேலும் லௌகீக கோட்பாடுகளின் மீது ஒருவன் ஈர்ப்புகொள்வது, புரட்சியாளர்களின் கோட்பாடுகளை பின்பற்றுவது என்பதையும் மேற்கண்ட அடிப்படைவாதத்தையும் நாம் பிரித்து பார்க்க வேண்டும். இவர்கள் உலக இயக்கத்திற்கு அந்த புரட்சியாளர்களின் கோட்பாடுகளை முன்மாதிரியாக எடுத்துக்கொள்கிறார்கள். அதன் சாராம்சத்தை உள்வாங்குகிறார்கள். எல்லாவற்றிற்கும் அவர் என்ன சொல்கிறார் என்று தங்களை தாங்களே உரசிக்கொள்வதில்லை . உதாரணமாக செல்போன் மற்றும் பங்கு சந்தை குறித்து பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் இது நமக்கு சரியான ஒன்றா? ஆகுமானதா? என்று ஒரு பெரியாரிஸ்ட் பார்ப்பதில்லை. அவரின் பிரதிகளில் இது குறித்து தேடி அலைவதில்லை.  இது தான் இரண்டிற்குமான வித்தியாசம். மேலும்  மன்னர் ஆட்சி நடைபெறும் இஸ்லாமிய நாடுகளை பொறுத்தவரை ஒருவர் மன்னரையோ அல்லது அவரின் ஆட்சியையோ விமர்சித்தாலே அது இஸ்லாத்திற்கு விரோதமானதாக பார்க்கப்படும். ஈரானும், சவூதி அரேபியாவும் சமீபத்திய உதாரணங்கள்.

கிறிஸ்தவ அடிப்படைவாதத்தின் வீச்சு என்பது தற்போதைய உலகில் குறைந்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது அரசியல் இஸ்லாம் என்ற கருதுகோளின் வழியாக 
மேலும் வலுப்பெற்று வருகிறது. உலகம் முழுவதும் அரபிப்பெயர் கொண்ட பல்வேறு ஆயுதக்குழுக்கள் தங்களை ஜிஹாதிகள் என்றழைத்துக்கொண்டு அரசுகளுக்கு எதிராகவும், அப்பாவி மக்களுக்கு எதிராகவும் தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. தங்களின் எல்லாவிதமான ஈனச்செயல்களையும் அவர்கள் மதப்பிரதிகளைக்கொண்டே நியாயப்படுத்துகிறார்கள். எல்லா மதப்பிரதிகளையும் பன்முக தளத்தில் அர்த்தமாக்கி கொள்ளலாம் என்பது இதற்கு வசதியாக போய்விடுகிறது. இஸ்லாமும், இஸ்லாமியர்களும் உலகம் முழுக்க ஒரே மாதிரி இல்லை. ஆனால் இந்த குழுக்கள் எல்லா பிரதேச, வட்டார வேறுபாடுகளை அழித்து விட்டு இஸ்லாமிய உலகமயமாக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று முனைகின்றன. 
இது தான் இன்றைய பெருஞ்சிக்கல்களுக்கு காரணம்.


இந்தியாவை பொறுத்தவரை இந்துத்துவா என்ற கருத்தியல் மேற்கத்திய அறிவுஜீவிகளாலும், ஊடகங்களாலும் இந்து அடிப்படைவாதம் என்றழைக்கப்படுகின்றது. அதாவது 
எல்லாவற்றையும் செயற்கையாக ஒருங்கிணைப்பது, அதன் மூலம் லட்சிய சமூகத்தை உருவாக்குவது. குறிப்பாக இந்து கலாசாரம், இந்து மதம், இந்து தேசம் என்பதே அது. இந்தியா என்பது பெரும்பான்மை இந்துக்கள் வாழும் நாடு. அதில் மற்றவர்கள் கௌரவிக்கப்பட்ட விருந்தாளிகளாக மட்டுமே இருக்கலாம் அல்லது அவர்கள் தங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். தாய்மதத்திற்கு திரும்பி விட வேண்டும்.  இதற்கு இந்து மகாசபை தலைவரான வீரசாவர்க்கர் வடிவம் கொடுத்தார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்துத்துவாவை முதன் முதலாக முன்வைத்தார். இந்தியா அடிப்படையிலேயே இந்து மற்றும் முஸ்லிம் என்ற இரு 
கலாசார தேசியங்களை உள்ளடக்கி இருக்கிறது என்றும் அந்த அடிப்படையில் தான் பிரிட்டிஷ் இந்தியா பார்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும் பழம்பெருமை வாய்ந்த இந்திய கலாசாரத்தின் விழுமியங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். இதற்கு இருபதாம் நூற்றாண்டில் ஹெட்கோவார் தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் உயிர் கொடுத்தது. பின்னர் பாகிஸ்தான் கோரிக்கை முஸ்லிம் தரப்பிலிருந்து உருவானதும் அதற்கான வகுப்பு கருத்தியல் உயிர்பெற்றதும் இதன் தொடர்ச்சி தான். பெரும்பான்மை இந்துக்களை கொண்ட நாடான இந்தியா அடிப்படையில் இந்து நாடாக தான் இருக்க வேண்டும் என்றும் அது முன்வைக்கிறது. மேலும் சாதிகளை புறந்தள்ளி விட்டு எல்லா இந்துக்களும் ஒருங்கிணைய வேண்டும். தங்கள் 
குல தெய்வங்களை துறந்து விட்டு பெருந்தெய்வங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் அதன் செயல்திட்டம். அதில் இந்து அடிப்படைவாதம் ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறது. காரணம் தமிழ்நாட்டின் பல தலித் கிராமங்களில் கூட பிள்ளையார் சிலைகள் ஊர்வலத்திற்காக வைக்கப்படுகின்றன. பிள்ளையாரை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்ல என்று தன் வாழ்நாளில் பலமுறை வலியுறுத்தி சொன்ன அம்பேத்காரை இந்துத்துவா உள்வாங்கி கொண்டது அதன் அடிப்படைவாத அரசியல் நலனுக்காக தான். மேலும் இந்துவின் தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்க்கையும் இந்துத்துவா அடிப்படையில் அமைய வேண்டும் என்று அது விரும்புகிறது. காவி அணிதல், எப்போதும் நெற்றிப்பட்டையுடன் இருத்தல், பிற சமூகங்களை விலக்குதல், தாய்மதத்திற்கு பிற சமூக மக்களை திரும்ப முயற்சி எடுத்தல், வீடுகளில் கீதையை பாடுதல், இராமாயணத்தை பற்றி அதிகம் அறிந்து கொள்ளல், புலால் உணவை முடிந்த வரை தவிர்த்தல், பசுவை புனிதமாக மீண்டும் கருதுதல், குழந்தைகளுக்கு சமஸ்கிருத பெயர்களை வைத்தல், சமஸ்கிருதத்தை புனித மொழியாக கருதுதல் போன்ற பல மதம் சார்ந்த தனிமனித செயல்பாடுகளை அது முன்வைக்கிறது. ஆக இந்தியாவில் இந்துத்துவா என்பது வெறும் அரசியல் கோட்பாடல்ல. அது வாழ்க்கை வழி முறை (Way of Life)என்று அழைக்கப்படுவது மேற்கண்ட செயல்திட்டங்களின் அடிப்படையில் தான். இப்படி இந்தியாவின் ஒவ்வொரு தனிமனிதனும் கடைபிடிக்கும் நிலையில் பரிபூரண இந்து ராஜ்ஜியமாக இந்தியா மாறும் என்பதே அதன் நீண்டகால செயல்திட்டம்.

தமிழ் இலக்கிய சூழலிலும் அடிப்படைவாத தாக்கம் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. 
தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். அது மட்டுமல்ல குல தெய்வ நம்பிக்கை உடையவர்கள். இது தனிமனித செயல்பாடாக இருக்கும் வகையில் அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமையும், சுதந்திரமும் கூட. ஆனால் தங்கள் எழுத்துக்களில் இதனை அவர்கள் திணிப்பது தான்  அடிப்படைவாத செயல்பாடு. நான் பழனிக்கு 
பாதயாத்திரை சென்றேன். அதனால் எனக்கு வேலை கிடைத்தது என்று ஒருவர் வெளிப்படையாக எழுதுவது, நான் இந்த வருடம் சபரிமலைக்கு சென்றேன். அதனால் என் நாவல் வெளிவந்தது 
என்று எழுதுவதும்,  காலையில் சாமி கும்பிட்டேன். அதனால் கவிதை எழுத முடிந்தது என்பதும் அடிப்படைவாத செயல்பாடு தான்.  இதன் நீட்சியும் தொடர்ச்சியும் தான் தமிழ் எழுத்தாளர்கள் பலரை இந்துத்துவா பக்கம் சாய வைத்திருக்கிறது. இன்னும் பலர் முற்போக்கு வாதத்தை முன்னெடுத்துக்கொண்டே இந்துத்துவா சிந்தனைகளோடு இருப்பது, பெண்ணியம் பேசிக்கொண்டே பெரும் ஆணாதிக்க வெறியர்களாக இருப்பது, ஒடுக்கப்பட்டோருக்கு 
ஆதரவாக என் எழுத்துக்கள் இருக்கின்றன என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டே மோசமான ஆதிக்க சாதி வெறியர்களாக இருப்பது இவையெல்லாம் வகைமாதிரியான அடிப்படைவாத  சிந்தனை தான். ஆக அடிப்படைவாதம் என்பது இருபதாம் நூற்றாண்டில் மதத்தின் மீது உட்கார்ந்து கொண்டு மிகுந்த தாக்கத்தை செலுத்தியது. தற்போதைய உலகிலும் மனித சமூகங்களிடையே மோதல்களை உருவாக்குதல், நல்லிணக்கத்தை சீர்குலைத்தல், சமாதானத்தை நிராகரித்தல், தேவையற்ற பிளவுகள், போர்கள், குழப்பங்கள் இவற்றிற்கான மொத்த காரணியாக இருக்கிறது. ஆக மத நம்பிக்கையுள்ள மனிதர்கள் மதத்தை பின்பற்றுவதற்கும், அடிப்படைவாதத்திற்குமான நுண்ணிய, பேரளவிலான வித்தியாசத்தை அறிந்து கொண்டு தங்களை முன்னகர்த்துவது அவசியம்.




Thursday, April 17, 2014

வஹீதுதீன் கானுடன் ஒரு நேர்காணல் சந்திப்பு: எச்.பீர்முஹம்மது மற்றும் நதீம்


மௌலானா வஹீதுத்தீன் கான் இந்தியாவின் மிக முக்கியமான முற்போக்கு இஸ்லாமிய அறிஞர். ஆங்கில ஊடகங்களில் அடிக்கடி இவரின் உரையாடல் வெளிப்படும். அல் ரிஸாலா என்ற உருது மாத இதழின் ஆசிரியர். மத நல்லிணக்கத்திற்கான பத்மபூஷன் விருதை பெற்றவர். இந்தியாவில் சமூகங்களிடையே நல்லிணக்கத்திற்காக பாடுபடுபவர். அதற்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறுபட்ட சமூக தலைவர்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறார். மதங்களிடையே பரஸ்பர உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான பல முயற்சிகளை முன்னெடுத்து வருபவர். இது தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். பல துறை அறிவு பெற்றவர். கேரளாவிற்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்த அவரிடம் நான் நடத்திய நேர்காணல் தொகுப்பு சமநிலை சமுதாயம் இதழில் வெளிவந்தது. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வலைத்தளத்தில் மீள்பதிவு செய்கிறேன்.





தொண்ணூறு வயதை எட்டியுள்ள நீங்கள் உடல் நலத்துடன் வாழ முதலில் எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்?

நான் (இஸ்லாமிய மதக்கல்விக் கூடம்) மத்ரஸாவில் படித்து வந்து இருக்கிறேன். நான் மத்ரஸா தயாரிப்பு எனில் மிகையில்லை. கல்வி கற்று முடித்த பின் சமுகத்தோடு தொடர்பு கொண்ட போது எனது கல்வியின் போதாமைகளை உணர்ந்தேன். ஆகவே ஆங்கிலம் கற்க முடிவு செய்து, மேற்கத்திய சிந்தனைகளைப் பற்றிய புரிதல் அனைத்தையும் உள் வாங்கினேன். அதன் பிறகு எனது ஊழியப் பணியை துவங்கினேன். எனது பணி மிகவும் பழையது. “அல் மக்தபுல் தஃவதுல் இஸ்லாமி - இஸ்லாமிய அழைப்பு மையம்” என்ற அமைப்பை 1970-ல் நான் புது டில்லியில் தொடங்கினேன். அந்த அழைப்பு மையத்தின் அடிப்படை நோக்கம் ஒன்று மட்டுமே. நவீன ஊடகத்தில் இஸ்லாத்தை கொண்டு போய்ச் சேர்த்தல். அதன் மூலம் மட்டுமே நவீன மனங்களை எதிர்க் கொள்ள முடியும். ஆகவே நானும் எனது சக தோழர்களும் இதில் முழுமையாக எம்மை ஈடுபடுத்திக் வருகிறோம். அந்த வகையில் நாம் இரு நூறுக்கும் மேற்பட்ட நூல்களை உருது, ஆங்கிலம், அரபு என பல்வேறு மொழிகளில் வெளியிட்டு இருக்கிறோம். அதேப் போல் நாம் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்கிறோம். இதற்காக நான் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். நாம் அமைதியான முறையில் அரசியல் சார்பற்ற ஊழியப் பணியாற்றி வருகிறோம். திருக்குர்ஆன் மற்றும் நபிவழியில் அமைந்த அரசியல் சார்பற்ற நிலைப்பாடே எமது கொள்கை. அந்த முறையில் எமது நம்பிக்கைகளை, ஊழியப் பணியை அறிமுகப்படுத்தி வருகிறோம்.

நீங்கள் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர். தாங்கள் ஒரு காலத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தில் செயல்பட்டு பின்னர் அதிலிருந்து விலகி விட்டதாக அறிகிறோம். மௌலானா மௌதூதியுடன் இருந்து பிரிந்து வர எது உங்களை தூண்டியது? இது தொடர்பாக உருது மொழியில் தாங்கள் எழுதியுள்ள தஃபீர் கீ கல்தி (புரிதலின் தவறுகள்) என்ற நூலை நாம் வாசித்து இருக்கிறோம். இருப்பினும் உங்களின் இளமைக் காலம் தொடர்பான விஷயங்களைப் பற்றி இந்த தலைமுறை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வீர்களா?

ஒருங்கிணைப்பு என்ற அளவில் மட்டுமே நான் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்ப்பு வைத்திருந்தேன். காரணம் அதனிடம் வலுவான கிளைகளை கொண்ட பரந்த அமைப்பாக இருந்தது. அந்த காலங்களில் என்னிடமும் கோட்பாட்டு ரீதியான, அதாவது அரசியல் கொள்கை முடிவுகள் எதுவும் இருந்தது இல்லை. அப்பொழுது என்னிடமும் அரசியல் நிலைப்பாடு இல்லாமல் இருந்தது. அதே நேரம் நான் அரசியல் ரீதியான கோட்பாட்டை ஒரு போதும் ஆதரித்தது இல்லை. எனது அரசியல் நிலைப்பாடு அந்த காலக் கட்டத்தில் என்னவாக இருந்தது என தெரிந்துக் கொள்ள விரும்பினால் “குர்ஆன் கா மத்லூப் இன்ஸான் - திருக்குர்ஆன் விரும்பும் மனிதன்” என்ற நூலை வாசிக்கவும். அந்த நூலின் அத்தியாயங்களும், சொற்பொழிவுகளும் நான் ஜமாத்-இ-இஸ்லாமியுடன் தொடர்பில் இருந்த போது எழுதியவை.
அதேப் போல் எனது நிலைப்பாடுகளில் அன்றும், இன்றும் பெரியளவில் எந்த ஒரு மாற்றமும் அடையவில்லை. ஜமாத்-இ-இஸ்லாமியுடன் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே நான் இணைந்து செயல்பட்டேன். ஒவ்வொரு அமைப்புக்கும் என்று சில கட்டுப்பாடுகள் உள்ளன, சில வருட அனுபவத்தில் அவற்றோடு என்னால் ஒத்துப் போகவில்லை. எங்கு பார்த்தாலும் மனச்சார்புகளும், ஒரு தலைப்பட்சமான விருப்பு, வெறுப்புகளும் உள்ளன. சுதந்திர வெளி காணப்படவில்லை. ஜமாத்-இ-இஸ்லாமியை தவிர்த்து ஜமியத்துல் உலமா, ஜமியத்து தப்லீக் உட்பட மேலும் வேறு சில அமைப்புகளுடன் நான் செயல்பட்டு இருக்கிறேன்.
சில வருடங்களுக்கு பின், அழைப்பு பணியாற்ற அங்கெல்லாம் வழியில்லை என்பதை என் அனுபவத்தில் கண்டு கொண்டேன். எனது அடிப்படை இலக்கு அரசியல் சார்பற்ற இஸ்லாமிய அழைப்பு பணி. அரசியல் அழைப்பு பணியில் எனக்கு உடன்பாடில்லை. ஆகவே எந்த ஒரு ஜமாத்தும், அமைப்பும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பதை உணர்ந்தேன். அழைப்பு பணியென்பதே அரசியல் சாய்வுகளற்ற பணி. ஆகவே எந்த ஒரு குழுவின் தொடர்பும் இன்றி, அத்தனை அமைப்புகளையும் கைவிட்டு நானே ஒரு புதிய அமைப்பை நிறுவினேன்.

பெண்கள், இந்திய முஸ்லிம்கள், மதமும் இஸ்லாமும் என பல்வேறு நூல்களை எழுதியுள்ளீர்கள். நீங்கள் ஒரு புறமும் இன்ன பிற மார்க்க அறிஞர்கள் ஆற்றின் மறுகரையிலும் இருப்பதாக உணர்கிறோம். உண்மையைச் சொன்னால் அவர்களுடன் எங்களைப் போன்றவர்களால் ஒரிரு நிமிடங்களுக்கு மேல் உரையாடலை தொடர முடிவதில்லை. ஆனால் அதில் ஒரு புதிய நம்பிக்கையின் ஒளிக்கீற்றை காண முடிகிறது. 2013 ஆண்டு முழுவதும் உங்களின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் CPS ஊழியர்களுடன் நேருக்கு நேர் என தனி அமர்விலும், குழு உரையாடலிலும் ஈடுபட்டோம். அவர்களை புதிய வகைமையாக இனங்கண்டோம். கிட்டத்தட்ட 300 மணி நேரங்களுக்கும் மேல் இருந்தும், நடந்தும், இரவு, பகல் என்று பல அமர்வுகள் நீடித்த ஆழ்ந்த கருத்துப் பரிமாற்றம் அவர்கள் மரபை பேணக்கூடியவர்களாக இருந்த போதிலும் நவீன புரிதல் கொண்டவர்களாக சிந்தனையாளர்களால் அடையாளம் காணப்படுகிறார்கள். இது மகத்தான சாதனை என்பது நிச்சயம். அதன் இரகசியம் என்னவென்று சொல்ல முடியுமா?

மனித மனங்களின் இயல்பை ஒட்டி செயல்படுவதே எமது ஊழியப் பணியின் வெற்றி என்பது அடங்கியுள்ளது. ஒவ்வொரு மனிதனும் கேள்வியுடன் பிறக்கின்றான். நான் யார்? எதற்காக நான் படைக்கப்பட்டிருக்கிறேன்? என் வாழ்வின் நோக்கம் என்ன? இஸ்லாம் இதற்கான பதில்களை தன்னுள் வைத்திருப்பதாக நான் நம்புகின்றேன். ஆகவே அந்த முறையை நாம் கடைப்பிடிக்கிறோம். நாம் அரசியல் செய்வதில்லை, அதில் ஒரு போதும் ஆர்வம் காட்டுவதுமில்லை. பிரிவினை எண்ணங்கள், வகுப்புவாத பாகுபாடுகள் அதனால் எழும் மோதல்களை நாம் அறவே தவிர்க்கிறோம். அதைப் போல் எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளன. நாம் செய்வதெல்லாம் திருக்குர்ஆனிய வழிகாட்டுதலுக்கு ஏற்ப மனித மனங்களை நோக்கி பேசுவதை மட்டும் தான். நீங்கள் மனித மனங்களை நோக்கி அழைப்பு விடுக்கும் போது எந்த கருத்து வேறுபாடும் எழ வாய்ப்பில்லை. எப்பொழுதெல்லாம் நீங்கள் அரசியல் பிரச்சனைகள், வகுப்புவாத சாய்மானங்களை கொள்கின்றீர்களோ உடனே சச்சரவு ஆரம்பமாகி விடும். இயற்கையில் எந்த முரண்பாடும் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவரும் ஒன்றைப் போன்ற பிறிதொன்று, அவ்வளவு தான்.. இதுவே எங்கள் வெற்றியின் இரகசியமாக இருக்க கூடும்.

திருக்குர்ஆன் உண்மையில் இஸ்லாமிய அரசு என்பதை வலியுறுத்துகிறதா என்ன? சமகால  நவீன உலகம் அரசும், மதமும் தனியாக பிரித்து வைக்கப்பட வேண்டும் என கருதுகிறது. அதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
இந்த மாதிரியான எண்ணங்கள் சரியில்லை என்பதாக உணர்கிறேன். அரசு மற்றும் மதம் என்பதை தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும் என்பதும் பின்னர் அதே போன்றது தான். மத நிறுவனங்கள், அரசு அமைப்புகள் என இவைகளை தனித்தனியே மனிதன் எங்கு கொண்டு போடுவான்? மதம் இருக்கும் வரை அரசு என்பதும் இருக்கும். அதிகாரத்துக்கான அரசியல் என்பது தான் இங்கு இருக்கும் பிரச்சனை. ஆகவே அரசியல் என்பதே ஒதுக்கியும், விலக்கியும் வைக்க வேண்டிய ஒன்று. அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற விரும்பினால் தான் பிரச்சனையே உருவாகிறது. ஆகவே அரசியலையும், மதத்தையும் பிரிக்க முடியாது. அரசியல் கோட்பாடு என்பதில் எந்த விவகாரமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற விரும்பினால், குறிப்பிட்ட அந்த பதவியில் எவரேனும் ஒருவரை அங்கு காண்பீர்கள். அவர்களோடு மோதல் ஏற்படுகிறது. என் ஆய்வின் படி, அரசுக்கும் மதம் என்பதற்கும் எந்த வேறுபாடுகளும் இல்லை, இருப்பதெல்லாம் மதத்துக்கும் அதிகாரத்துக்கும் தான்.

தாங்கள் எழுதியுள்ள இரண்டு நூல்களில் இஸ்லாம் ஒரு போதும் பெண்களை ஒடுக்குவதில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றீர்கள். ஆனால் முஸ்லிம் சமுக நடத்தை எதார்த்தத்தில் வேறு மாதிரியாக உள்ளது. ஆணாதிக்கம் இந்திய முஸ்லிம் சமுகத்தில் பரவலாகவும், மத குருமார்களிடம் மிக அதிகமாகவும் உள்ளது. இதை எப்படி பார்க்கின்றீர்கள்? அதற்கான காரணம் என்ன?

இஸ்லாமிய வரலாற்றின் பிற்காலங்களில் உருவான பாகுபாடுகளே இவை. முஹம்மத் நபிகள் மற்றும் அவரின் தோழர்கள் காலத்தில் இவ்வகை பிரிவினைகள் இல்லை. இஸ்லாமிய வரலாற்றின் முதல் நூற்றாண்டின் பிற்சேர்க்கைகளே இவை.  இஸ்லாத்தில் பெண்களின் உண்மை நிலையை அறிந்துக் கொள்ள மிகப்பெரும் மார்க்க மேதை அல்லாமா நாசருத்தீன் அல்பானி  தொகுத்து எழுதியுள்ள “ஹிஜாப் அல்மிராஃஅ லில் இஸ்லாம் - இஸ்லாத்தில் பெண்களின் நிலை” என்ற நூலை வாசித்துப் பார்க்கவும். என்னுடைய கருத்தின் படி, இந்த துறையில் எழுதப்பட்டிருக்கும் நூல்களில் இது மிகச் சிறந்தது. அதனுடன் நான் முழுவதும் உடன்படுகிறேன். ஆகவே என் அறிவுக்கு எட்டியவரை ஆண், பெண் என எந்த வேறுபாடு இல்லை. ஆனால் நிர்வாணத்தை ஊக்குவிக்கும் கட்டற்ற சமுகத்தை நான் ஆதரிக்கவில்லை. முழுமையான சுதந்திரம் என்கிற தான் தோன்றித்தனத்தை நான் ஆதரிக்கவில்லை. அவை தடை செய்யப்பட வேண்டியவை. ஆனால் எந்த ஒரு பெண்ணாவது எளிமையான, இயல்பான, இயற்கையான முறையில் வாழ விரும்புவது எந்த பிரச்சனையுமல்ல. முஸ்லிம் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும், நிறைய படிக்க வேண்டும். மேற்கில் உள்ளது போல் இல்லாத வகையில் சமுக வாழ்வின் ஒவ்வொரு துறைகளில் பணியாற்ற பெண்களை அனுமதிக்க வேண்டும்.  மேற்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை பற்றி பேசுகிறது. அவர்கள் சுதந்திரம் என்பதை வரையறுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்கின்றனர். நான் ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய கட்டுப்பாடான சுதந்திரத்தை ஆதரிக்கின்றேன். இது தான் வேறுபாடு. இதை ஏற்றுக் கொள்ளும் பெண்கள் சுதந்திரமாக இருப்பதை உணரலாம். இதுவே இஸ்லாம் முன் வைக்கும் அளவுகோல். இந்திய சமூகத்தில் இந்த சுதந்திரம் முஸ்லிம் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.

சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளின் படி, இந்திய முஸ்லிம்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை இந்து மதத்தின் தாழ்த்தப்பட்ட தலித்களை விட மிகவும் பின் தங்கி இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. ஒரு அறிவு ஜீவியாகவும், மார்க்க மேதையாகவும் இதை எப்படி அணுகுகின்றீர்கள்? இதற்கான புறக் காரணங்களை விட அகக் காரணங்கள் இருப்பதாக நினைக்கின்றீர்களா? சிலர் இதற்கு காரணம் தேவ்பந்த் என குற்றம் சாட்டுகின்றனர். உதாரணமாக அந்த பழமைவாத மத்ரஸா ஆங்கிலம் கற்பது தடை செய்யப்பட்டது என்ற அளவுக்கு மிதமிஞ்சிய ஃபத்வா (மார்க்க தீர்ப்பு) கொடுத்தும், இன்ன பிற வளர்ச்சி சார் விஷயங்களில் படு பிற்போக்காக நடந்து கொண்டதும் காரணம் என்கின்றனர்? அதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?

நான் சச்சார் குழு பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த காலங்களில் இதைப் போன்ற எண்ணற்ற குழுக்கள் தங்கள் பரிந்துரைகளை அளித்திருந்தன.
"மனிதனுக்கு அவன் செய்த செயலை தவிர வேறொன்றும் கிடைக்காது" திருக்குர்ஆன் 53:39
சலுகைகளால் வளர்ச்சி என்பது சாத்தியமல்ல. நமது தலைவிதியை நாமே உருவாக்கி கொள்ள முடியும். நீதிபதி சச்சார் குழு பரிந்துரை என்பது புகார்களின் அடிப்படையிலும், குறைகளை சுட்டிக் காட்டியும் பேசுகிறது. சச்சார் குழு மதிப்பீடுகள் எதிர்மறையானவை. அது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற சில சலுகைகளை அளிக்க வேண்டும் என்கிற பரிந்துரை செய்கிறது. இதனால் முஸ்லிம்களுக்கு பலன்கள் கிடைக்கும் என நான் நம்பவில்லை. நான் கடும் முயற்சியிலும், சவால்களை எதிர்க்கொள்வதிலும், அயராத உழைப்பிலும் உறுதி கொள்கிறேன். ஆகவே நான் முஸ்லிம்களுக்கு அளிக்கும் அறிவுரை, இது போன்ற குழுக்களை பொருட்படுத்தாதீர்கள். குறை கூறும் வகையில் உள்ள பேச்சிலும், செயலிலும் ஈடுபடாதீர்கள். உடலளவில், அறிவார்ந்த ரீதியில் இறைவன் உங்களுக்கு ஆற்றலை வழங்கியுள்ளான். உங்களால் எதையும் சாதிக்க முடியும். இதற்கான நிறைய எடுத்துக்காட்டுகளை என்னால் அளிக்க முடியும். உதாரணமாக டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமை எடுத்துக் கொள்வோம். அவர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தார். கடும் உழைப்பால் அவர் இந்திய நாட்டின் குடியரசு தலைவராகவே அவரால் வர முடிந்தது. கஷ்ட காலத்தில் அவரை தூக்கி விட எந்த சச்சார் குழுவும் வந்து உதவவில்லை. இது போன்ற உதாரணங்களால் உத்வேகம் கொள்ளவும். இதைப் போன்று பலர் வாழ்க்கையில் எத்தனையோ துறைகளில் பெரும் சாதனை செய்திருக்கின்றனர். நான் கடும் முயற்சி, கடின உழைப்பில் நம்பிக்கை கொள்கிறேன். சச்சார் குழு அல்லது எந்த ஒரு குழுவின் பரிந்துரைகளின் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. முஸ்லிம்கள் விரும்பினால் தங்கள் தலை விதியை தாங்களே மாற்றிக் கொள்ள முடியும். சச்சார் குழு அல்லது வேறு ஏதோ ஒரு குழு வந்து இதை மாற்றப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

தேவ்பந்த் சிந்தனைப் பள்ளி பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன? குறிப்பாக ஒரே நேரத்தில் மும்முறை மணவிலக்கு கூறுதல் தொடர்பான விஷயங்கள். மிக மோசமாக கையாளப்பட்ட உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இம்ரானா என்ற அபலைப் பெண்ணின் வழக்கை அவர்கள் கையாண்ட முறை சரிதானா?

இந்த கேள்வி சட்டப் பிரச்சனை தொடர்பானது. ஸலஃபி (முன் சென்ற மூத்த தலைமுறையை பின் தொடரும் முன்னணியாளர்)களுக்கும் ஹனஃபி (இஸ்லாமிய சிந்தனைப் பள்ளியை மரபார்ந்து பின் தொடர்வோர்)களுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளதை ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். நான் ஹனஃபி பிரிவு குடும்பத்தில் பிறந்து, அதை கடைப்பிடித்துக் கொண்டும் வருகிறேன். இருப்பினும் இந்த விவகாரத்தை பொறுத்தளவில் ஸலஃபி கொள்கையே சரியானது என நினைக்கிறேன். பொதுவாக ஹனஃபி கோட்பாடு “(தஷதுத்) கடுமையான போக்கு மற்றும் தீவிரத்தன்மை (குலுஃ) அடிப்படையாக கொண்டது. இந்த விஷயத்தில் ஸலஃபி கோட்பாடே சரியானது. இது தொடர்பாக நான் சில கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். நான் ஹனஃபி பிரிவு முஸ்லிமாக இருந்தாலும் முத்தலாஃக் (மும்முறையாக ஒரே அமர்வில் செய்யப்படும் விவாகரத்து) விஷயத்தில் ஸலஃபி கொள்கையை நான் ஆதரிக்கிறேன்.

தேவ்பந்த் மதரசா ஆங்கிலத்திற்கு எதிராக கொடுத்த பத்வா குறித்து என்ன நினைக்கிறீர்கள். மேலும் பல உலக விவகாரங்களில் அவர்களின் நிலைபாடு குறித்து உங்கள் கருத்து என்ன? பலர் தேவ்பந்திகளின் இம்மாதிரியான நிலைபாடுகள் தான் இந்திய முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவிற்கு காரணம் என்கிறார்கள்.

தேவ்பந்த் உலமாக்கள் ஆங்கிலத்திற்கு எதிராக கொடுத்த பத்வாவை நான் ஆதரிக்கவில்லை. இஸ்லாம் எந்த மொழிக்கும் எதிரானதல்ல. மேலும் உலக விவகாரங்கள் மற்றும் அறிவியலுக்கு எதிராக இஸ்லாமிய பிரதிகள் கருத்து சொல்லவில்லை. தேவ்பந்த்களின் உலகியலுக்கு எதிரான பல விஷயங்களில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு.

இந்திய மத்ரஸாக்களை நவீனமயமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை, அது இந்திய முஸ்லிம் சமுகம் வளர்ச்சி நோக்கி பயணிக்கும் தீர்வு என கருதப்படுகிறதே - சரியா?

மத்ரஸாக் (இஸ்லாமிய மத கல்வி நிலையங்) களை நவீன மயமாக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மத்ரஸாவின் தன்மை, வகைப்பாடு என்பது சரியாகவே உள்ளது. மத்ரஸாக்களில் இருந்து தான் ஷிப்லி நௌமானி, செய்யத் சுலைமான் நத்வி போன்ற மாபெரும் ஆளுமைகள் உருவாகி வந்தனர். இது போல் இன்னும் எத்தனையோ பேர்கள்? மத்ரஸாக்களில் ஏதோ கோளாறு இருப்பதாக நான் எண்ணவில்லை. மத்ரஸாவின் தோன்றியதன் மூலக் காரணம் அறியாதவர்கள் தான் அதை நவீனப்படுத்த வேண்டும் என்கிற மாதிரி பேசி வருகின்றனர்.
மத்ரஸா முறை சரியாகவே உள்ளது. ஆனால் எது தேவைப்படுகிறது என்றால், அது நவீன மயமாக்கம் என்பது அல்ல. அதிக எண்ணிக்கையில் தகுதியான மாணவர்களை மத்ரஸாவில் சேர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும். திறமையான மாணவர்கள் இப்பொழுதெல்லாம் மத்ரஸாவுக்கு செல்வதில்லை. மத்ரஸாக்கள் இம்மாதிரியான துடிப்பான இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்து இழுப்பதில் தோற்றுப் போய் விட்டன. இது தான் இங்கிருக்கும் கேள்வி. அதை விட்டுப் பார்த்தால் உள்ள அமை.ப்பு சரியானதே. மத்ரஸாவில் பெரிய குறைப்பாடு எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நவீன மயமாக்கல் என்பது வெறும் ஒரு சொல். மத்ரஸா என்பதை நவீன மயமாக்க வேண்டும் என்பவர்களிடம் நான் கேட்டிருக்கிறேன். அது என்னவென்று திட்டவட்டமாக ஏதும் சொல்ல முடியுமா?. அவர்களில் எவருமே நவீன மயமாக்கல் என்பதை தெளிவாக எனக்கு சொல்லித் தரவில்லை. ஆகவே இது முஸ்லிம் சமுகம் சரியான போட்டியாளரை, தன்னம்பிக்கை உள்ளவரை மத்ரஸாவில் கொண்டு போய்ச் சேர்த்தால் மறுபடியும் மத்ரஸா ஷிப்லி நௌமானி,, செய்யத் சுலைமான் நத்வி போன்றவர்ளை அதனாலும் உருவாக்க முடியும். இது மத்ரஸாவில் உள்ள மிக முக்கியமான பிரச்சனை.

ஷரியா சட்ட இஜ்திஹாத் பற்றி உங்களின் நிலைபாடு என்ன? சிலர்  இஸ்லாமிய நூற்றாண்டின் முதல் இரு நூற்றாண்டுகளுக்குள் இஜ்திஹாதுக்கான கதவு நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது என்கின்றனர். சரியா?

இஜ்திஹாதுக்கான கதவு மூடப்பட்டு விட்டது என்று சொல்லப்படுவது சரியல்ல. உலமாக் (முஸ்லிம் மார்க்க அறிஞர்)களின் சரியான நிலைபாடும் அதுவாக இருக்க முடியாது. இல்லை., நான் இது பற்றி வெளியிட்ட இரு நூல்கள் “ஃபிக்ரே இஸ்லாமி - இஸ்லாமிய சிந்தனை அல்லது இஸ்லாமிய கோட்பாடு” மற்றும் “மஸாயிலே இஜ்திஹாத் - மார்க்கத்தில் ஒருமித்த நிலைப்பாடு” போன்றவையாகும். ஆகவே இது தவறான கருத்து. இஸ்லாமிய மார்க்க மேதைகளில் எவருமே இஜ்திஹாதுக்கான கதவு மூடப்பட்டது என ஒரு போதும் சொல்லவே இல்லை. அறவே இல்லை. இஜ்திஹாத் என்பது ஒரு தொடர் செயல்பாடு.  மூத்த மார்க்க மேதைகளின் நிலைப்பாடும் இதுவே. அவர்களில் எவரும் இதற்கு எதிராக இல்லை. இது தொடர்பாக நான் எழுதியிருக்கும் நூலில் அவர்களின் கருத்துக்களை மேற்கோளாக பயன்படுத்தி இருக்கிறேன். மார்க்க மேதைகளின் சரியான பார்வையும் இதுவே. ஆனால் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியை கற்றுத் தேர்ந்த மார்க்க மேதைகள் மட்டுமே இஜ்திஹாத் செய்ய தகுதியானவர்கள். முன் சென்ற மார்க்க மேதைகள் எழுதி வைத்த நூல்களை படித்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்பது முன் நிபந்தனை. இஜ்திஹாத் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ளவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். ஜாஹில் (அறியாமை நிறைந்தவர்)களால் ஒரு போதும் இஜ்திஹாத் செய்ய முடியாது. என்னுடைய இந்த நிலைப்பாட்டில் எந்த ஒரு மார்க்க மேதைக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.


இஸ்லாமிய தீவிரவாத குழுக்களில் சில, புனிதப் போர் என்கிற பொருளில் ஜிஹாத் என்பதை தியாகத்துக்கான இஸ்லாமிய குறியீடு என்கிறனர். அது அவர்களை அதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகின்றனர். அதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள். இஸ்லாம் இன்று எதிர்க் கொள்ளும் சவால்களில் இது மிக முக்கியமானதல்லவா?

ஜிஹாத் என்றால் கடும் முயற்சி, கடின உழைப்பு என்பது அகராதிப் பொருள். ஜிஹாத் என்றால் அமைதியான பெரும் முயற்சி. ஜிஹாத் என்பதற்கும், ஃகிதால் என்பதற்கும் வேறுபாடு உண்டு. ஃகிதால் என்றால் மட்டும் தான் போர் எனப்படும். எல்லா மார்க்க மேதைகளும் கிதால் என்பதை சாதாரண பொது மக்களுக்கானது என கூறவில்லை. ஃகிதால் (போர்) என்பது அரசின் கடமை அது ஆட்சியாளர்களின் மீதுள்ள பொறுப்பு. அரசு சார்பற்ற, தன்னார்வ தொண்டு இயக்கங்கள், தனிப்பட்ட முறையில் கூடி இருக்கும் இயக்கவாதிகளுக்கு ஆயுதங்களை கையாள அனுமதியில்லை. இதுவே இஸ்லாத்தின் சரியான நிலைப்பாடு. இஸ்லாமிய சட்ட முறையான ஃபிக்ஹில் ஒரு விதியுண்டு. “அர் ரஹீலுல் இமாம்” அதாவது போரிடுதல் என்பது அரசின் கடமை என்பதாகும். ஆகவே இன்றைய கால கட்டத்தில் அரசை சாராமல் ஆளாளுக்கு ஜிஹாத் என்று கிளம்பி இருப்பதெல்லாம் இஸ்லாம் ஆகி விடாது. ஆயுதங்களை கையாள்வதன் உரிமையையும், பொறுப்பையும் இஸ்லாம் அரசுக்கு மட்டுமே அளித்துள்ளது, வேறு எவருக்கும் அல்ல.

பொது வெளியில் வைத்து சவுதி அரேபியாவில் தலை கொய்யப்பட்ட ரிஸானா நஃபீக் என்ற இலங்கைப் சிறுமியின் சோகக் கதையைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நம்புகின்றோம். மரண தண்டனையைப் பற்றி உங்களின் பார்வை என்ன?

மரண தண்டனை (ஹத்) என்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதாக உணர்கிறேன். ஆனால் திருக்குர்ஆனில் எந்தெந்த குற்றங்களுக்கெல்லாம் மரண தண்டனை வழங்கலாம் என்பதை கூறுகிறதோ அதற்கு மட்டுமே என்பதையும் சேர்த்து விளங்கிக் கொள்ள வேண்டும். எந்த ஒரு அரசும், மனிதனால் இயற்றப்பட்ட எந்த ஒரு சட்டமும் மரண தண்டனை வழங்க முடியாது, அதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை. அது இறைவனுக்கென்று உரிய அதிகாரம், அதை திருக்குர்ஆனில் இருந்து மட்டுமே புரிந்து கொள்ள முடியும். திருக்குர்ஆன் வகைப்படுத்தும் பிரிவுகளுக்குள் வராத எந்த ஒரு குற்ற வழக்கிலும் மரண தண்டனை அளிக்க கூடாது. குறைவான தண்டனை ஏதேனும் அளித்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, சாட்டையடி போன்ற குறைவான மாற்று தண்டனைகளை அளிக்கலாம் என்பதே என் கருத்து.

வஹாபிசம் பற்றி உங்களின் கருத்து என்ன? உண்மையிலேயே இஸ்லாமிய வளர்ச்சிப் போக்கில் இந்த பிரிவுக்கு இடம் இருக்கிறதா? காரணம் “சமாதான தூதர் - முஹம்மத்” என்கிற உலக அளவில் புகழ்பெற்ற உங்களின் நூலில் ஆளானப்பட்ட “இப்னு தைமிய்யா”வையே விமர்சனம் செய்துள்ளீர்களே…

நீங்கள் குறிப்பிடும் இடு பெயர் அவர்களின் சொந்தப் பெயரல்ல. வஹாபி என கூறப்படும் எவரும் அவ்வாறு தம்மை அழைத்துக் கொள்வதில்லை. அவ்வாறு எவரையும் நான் சந்தித்ததில்லை. வஹாபி என்பது தவறான பெயராகும். யாரும் தம் சொந்த விருப்பப்படி பிறரை பெயரிட்டு அழைக்க முடியாது. அந்த மக்கள் தம்மை வஹாபி என கூறிக் கொள்வதில்லை. அவர்கள் தம்மை “ஸலஃபி (முன் சென்ற மூத்த தலைமுறையை பின் தொடரும் முன்னணியாளர்)கள் என கூறலாம். ஆகவே அவர்களை அந்த பெயரில் குறிப்பிட்டு பேசுங்கள். அல்லது அஹ்ல ஹதீஸ் (நபிமொழி அடிப்படையிலான மார்க்க கோட்பாட்டாளர்)கள் என சொல்லுங்கள். நான் அறிந்து வஹாபி என அழைக்கப்படும் எவரும் தம்மை அவ்வாறு அழைப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே அவர்களை ஸலஃபி அளவீடுகளில் வைத்துப் பாருங்கள். வஹாபி அளவீடு தவறானது.
அடுத்து, நீங்கள் குறிப்பிடும் விஷயமான இப்னு தைமிய்யா மிகப்பெரும் அறிஞர். மார்க்கத்தை புரிந்துக் கொள்வதில் அறிஞர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருப்பது சர்வ சாதாரண விஷயம். இப்னு தைமிய்யாவுக்கும், இப்னு கய்யூமுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது, அதே போல் அபு ஹனீஃபாவுக்கும் இமாம் அஹ்மதுக்கும் இடையில் கூட கருத்து வேறுபாடு இருந்தது. ஆகவே கருத்து வேறுபாடு என்பது பொதுவான நடைமுறை. எவருமே இறைத்தூதரைப் போன்றவர்கள் அல்ல. கருத்து வேறுபாடு என்பது தடுக்கப்பட்டதும் அல்ல. இதை தவிர்த்து இப்னு தைமிய்யா ஒரு பேரறிஞர் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக அவரை மதிக்கவும் செய்கிறேன்.  அதே நேரத்தில் அவருடன் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது. நான் மட்டுமே  இப்னு தைமிய்யா அவர்களை விமர்சிக்கவில்லை. பலர் விமர்சித்திருக்கின்றார்கள். இது போன்ற வேறுபாடுகள் எல்லா இடங்களிலும் உள்ளன.

அறிவார்ந்த ரீதியாக, தாங்கள் மார்க்க அறிஞர்களில் மிக முற்போக்கானவர். மதத்தின் பிணைப்பு என்ன? இந்திய முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் பொதுப் புத்தியில் தங்களைப் பற்றி பா.ஜ.க. ஆதரவாளர் என்கிற கருத்து நிலவுகிறதே? அது உண்மையா? “ஹிந்துத்வா” பற்றி வெளிப்படையாக பேசுங்களேன்?

இது முழுக்க முழுக்க தவறானது. எனக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கும் எந்த ஒரு தொடர்புமில்லை. கிடையவே கிடையாது. இந்த குற்றச்சாட்டு வெறும் அவதூறு, புரளி. நான் செய்வதெல்லாம் இஸ்லாமிய நூல்களை சமுகத்தின் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்கிறேன். குறிப்பாக திருக்குர்ஆன் மொழியாக்கத்தை இலட்சக் கணக்கில் வினியோகிக்கிறோம். நான் மற்றும் எனது சக தோழர்கள் எல்லா விதமான மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்து கொண்டு அங்கு வரும் பார்வையாளர்களுக்கு திருக்குர்ஆனை பரிசாக அளிக்கிறோம். ஆகவே அவ்வாறான கூட்டங்களில் நாங்கள் கலந்துக் கொள்வது திருக்குர்ஆனை கொண்டுப் போய்ச் சேர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. அது போலவே நாம் சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டிருக்கிறோம். அதை தவிர்த்து எனக்கும் நீங்கள் குறிப்பிடும் அமைப்புக்கும் எந்த ஒரு தொடர்புமில்லை. அதை யாராலும் நிருபிக்கவும் முடியாது. இது தவறு, முழுக்க முழுக்க தவறான பேச்சு.

சமூக அறிவியக்க செயல்பாடு, தீவிர இலக்கியம் போன்ற துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களின் தொடர்பில் இருக்கிறோம். எமது அவதானத்தில் கிறித்துவம், ஜைனர்கள், போன்ற மைய நீரோட்ட சமூகத்தில் வேலை வாய்ப்பு, வர்த்தகம், கல்வி, மருத்துவம் என்பவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ஆசிய முழுவதும் பரவியுள்ள சமூகம் பொதுவாகவும், அவற்றில் முஸ்லிம்கள் குறிப்பாகவும் எப்பொழுதும் பாபரி மஸ்ஜித், காஷ்மீர், பாலஸ்தீனம், கிழக்கு ஐரோப்பிய கொசுவோ, மியான்மர் பர்மிய அராகன், பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ என பேசிக் கொண்டே கிடக்கின்றனர். ராமர் கோயில், பொதுச் சிவில் சட்டம், அகண்ட பாரதம் போன்ற பிரச்சனைகளை முன் வைத்து இந்துக்களின் இளைய தலைமுறையிடமும் இதே மாதிரியான மனப்பான்மை வளர்ந்து வருகிறது. பெருமித உணர்வு என்கிற பாசிஸமும், அடையாளம் பேணல் என்கிற குறுங்குழுவாதம் இவ்விரண்டில் ஏதேனும் பொருத்தப்பாட்டை காண்கின்றீர்களா? எது அவர்களை அவ்வாறு யோசிக்கவும், செயல்படவும் தூண்டுகிறது?

சுருக்கமாக சொன்னால் இது Ghetto mentality என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. அதாவது  குறுங்குழுவாதம் அடைப்பட்ட சீழ் பிடித்த மனோபாவம். இரு பெரும் சமூகங்கள் அதிலிருந்து விடுபட்டு கலந்துரையாடினால் தான் இப்பிரச்சனையை எளிதாக களைய முடியும். இல்லா விட்டால் முடிவில் அழிவைத் தவிர எஞ்சுவது எதுவும் இருக்காது
சமீப கால முஸ்லிம்கள் சதாம் ஹுசேன், கர்னல் கதாஃபி ஆகியோரை மாவீரர்களாக போற்றினர். ஒரு ஐம்பது ஆண்டு காலத்தை பின்னோக்கி பார்த்தால் கமால் அப்துல் நாசர், சுஹர்னோ, யாசர் அராஃபத் ஆகியோர் அவ்வாறாக அடுத்தடுத்து பேசப்பட்டனர். மலேசியாவின் மஹாதிர் முஹம்மதை தவிர்த்து மற்ற அனைவரும் எதிர்நிலையில் நின்று தம் நாட்டை வழிநடத்தினர் எனப்படுகிறது. இம்மாதிரியான குணாம்சம் பொருந்திய தலைவர்கள் அடிக்கடி ஏன் முஸ்லிம் சமுகத்தில் மட்டுமே உருவாகி வருகின்றனர்?

இந்த விஷயத்தில் நான் எந்த கருத்தும் கூறவில்லை. இதற்கென்று தனித்த, அபூர்வ கருத்தும் எதுவும் என்னிடம் இல்லை. வரலாற்றுப் போக்கில் தவறான முடிவுகளால் பல்வேறு நிகழ்வுகள் சம்பவித்துள்ளன. இது இன்றைய தலைவர்களை மட்டும் தொடர்புடைய விஷயமல்ல. வரலாற்றில் அவ்வாறான பல்வேறு உதாரணங்களை காணலாம். மக்கள் சிலரை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு இருந்து விட்டு, பிற்காலத்தில் அவர்கள் சரியான தலைவர்களாக பரிணமிக்காமல் போயுள்ளனர். ஆகவே பின்னோக்கி பார்ப்பதை விட்டு விட்டு, முன்னோக்கி பார்வையை திருப்பினால் நல்லது. கடந்த காலத்தில் நாம் எடுத்த முடிவுகள் தோற்றுப் போயிருக்கலாம். அவ்வாறான பட்சத்தில் மீண்டும் ஒரு முறை நன்கு திட்டமிடவும். மீள் கட்டுமானம் செய்யவும். தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, வேறு புதிய தந்திர உபாயத்தை கடைப்பிடிக்கவும். இதுவே இன்றைய தேவை.
வடக்கு முஸ்லிம்களின் தெற்கத்திய பார்வையில் இருந்து பெருமளவு மாறுபடும் தலைவர்களில் மிக முக்கியமானவராக தோற்றமளிக்கின்றீர்கள். அதற்கு காரணம் வட இந்தியா அமைதி முன்னெடுப்புகளை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டிருக்கிறது. ஆகவே தென்னிந்தியாவிடம் எதை கண்டீர்கள்? இங்கு இருக்கும் அற மதிப்பீடுகளை, சமூக இணக்கத்தை மேற்கொண்டு மெருகேற்ற வழி சொல்லுங்கள்?

ஆம், நான் நேர்மறையானவன். அது தென்னிந்தியாவையும் உள்ளடக்கிய முழு உலகம் குறித்தும், பூமி கோள் முழுவதின் மீதும் நன்னம்பிக்கை, நல்லெண்ணம் கொண்டிருக்கிறேன். நம் அனைவரையும் இறைவன் ஒருவன் தான் படைத்தான். அந்த இறைவனின் படைப்பில் எந்த வேறுபாடுமில்லை. ஆகவே நான் முழு உலகிற்கும் நன்மை மீதே நம்பிக்கை வைக்கின்றேன். “நசஹ் - நற்செய்தி அளிப்பவர்” தான் அழைப்பாளர் ஆவார். ஆகவே அதே யுத்தியை பயன்படுத்த வேண்டும். அதனால் நான் யாரையும் வெறுப்பதில்லை. எவர் மீதும் எனக்கு குறை இல்லை. தென்னிந்தியாவையும் உள்ளடக்கிய முழு உலகிற்கும், முழு மனித குலத்துக்கும் நற்செய்தியாளனாக இருக்கிறேன்.  இது திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டு இருக்கும் இறைத்தூதர்களின் நடைமுறையாகும்.
(அன்றி) என் இறைவனின் தூதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். அன்றி, நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய நல்லுரை செய்பவனாகவும் இருக்கிறேன் 07:68
ஆகவே இறைத்தூதர்களின் இந்த நடைமுறையில் நான் இருக்கிறேன். அந்த வகையில் எனது நற்செய்தி அனைவருக்கும் பொதுவானது. என்னால் யாரையும் வெறுக்க முடிவதில்லை. எனது ஒரே பணி, திருக்குர்ஆனை எல்லோரிடத்திலும் கொண்டு போய்ச் சேர்ப்பதும், இஸ்லாமிய கொள்கைகளை உலகம் எங்கும் பரப்புவது மட்டுமே.

“கியாமத்-கா-அலாரம்” மறுமை நாளில் முன்னறிவிப்புகள் என்ற நூலில் முஸ்லிம் பொது புத்தி கண்ணோட்டத்துக்கு நேரெதிரான கருத்தை முன் வைத்துள்ளீர்கள். அதேப் போல் தங்களின் அர்-ரிஸாலா மாத இதழின் சமீபத்திய இதழ் 447 எண்ணில் முழு இஸ்லாமிய வரலாற்றுப் பாரம்பரியத்தில் இப்னு கல்தூனை தவிர்த்து விட்டு பார்த்தால் சுய சிந்தனையாளர்கள் யாருமே தோன்றவில்லை என அதிரடியாக கூறி விட்டீர்களே… தீவிர பிரஞ்சையுடனும், பேசிய விஷயத்துக்கும் பொறுப்பேற்கின்றீர்களா?

ஆம், நாம் சுய சிந்தனை கொண்டவர்கள். அந்த கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையும் பெற்றவர்கள். அவ்வாறு நான் மட்டுமில்லை, இன்ன பிற அறிஞர்களும் அவ்வாறு உள்ளனர். நான் சொன்னது / எழுதியதென்னவென்றால் சுயேச்சையான சிந்தனையாளர் இப்னு கல்தூன் மட்டுமே. அது ஒன்றும் நரகத்துக்கும் சொர்க்கத்துக்குமான விஷயமல்ல. அது கல்விபுலத்தின் அறிவார்ந்த விவாதத்திக்குரியது. மேலும் அவ்வாறான எனது கருத்தில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
கொந்தளிப்பான 1993-ம் ஆண்டுகளின் ஆரம்ப கட்டத்தில் தமிழகத்து காஞ்சி மற்றும் மைசூர் சிருங்கேரி மடத்துக்கும் சென்று வந்துள்ளீர். அதைப் பற்றிய உங்களின் பயண பதிவு நூலான “அஸ்ஃபாரே ஹிந்த் - தென்னிந்திய பயண அனுபவங்கள்” என்ற நூலை வாசித்து இருக்கிறோம். அதில் விடுப்பட்ட எதேனும் சுவையான சம்பவங்களை நினைவு கூற முடியுமா?

அவற்றை என்னால் இப்பொழுது நினைவு கூற முடியவில்லை. ஆனால் வழக்கமாக எல்லா இடங்களுக்கும் நான் சென்று வருகிறேன். இந்து, கிறிஸ்துவ,  ஜைன நிறுவனங்கள் அனைத்திற்கும் போய் இருக்கிறேன். யாருக்கு எதிராகவும் ஒரு தலைப்பட்சமான, முன் முடிவுகள் கொண்ட விருப்பு வெறுப்பில்லை. ஆகவே எல்லா மடங்களுக்கும் எளிதாக சென்று வருகிறேன். இது எந்த லௌகீக உள் நோக்கமும் அற்ற (தாயி) இஸ்லாமிய அழைப்பாளன் என்கிற அளவிலும், பரஸ்பர மரியாதைக்குரிய சந்திப்பு மட்டுமே.

உங்களுக்கென்று தனித்த சிந்தனையைக் கொண்டவராக காணப்படுகின்றீர்கள். அது எப்படி வந்தது? அதை எப்படி உணர்கிறீர்கள்? கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அர்-ரிஸாலா என்ற மாத இதழை வெளியிட்டு வருகின்றீர்கள். இணையத்தில் கிடைக்கும் அதன் முழு தொகுப்பை பார்வையிட்டதிலும், உங்கள் சிந்தனைப் போக்கை பின் தொடர்ந்ததிலும் அவற்றை இரு கட்டங்களாக வகைப்படுத்துகிறோம். 1960 - 1990 என்ற முதல் பாதி முஸ்லிம் மைய நீரோட்டமாகவும், அதன் பிறகு கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வரும் உங்களின் சொற்பொழிவு, எழுத்து என்று தொடரும் பிரச்சாரப் பயணம் பரந்த மனித குலத்தை நோக்கி பேசுவதாகவும் எண்ணுகிறோம். இதை பரிணாமம் என்பீர்களா அல்லது இதை வெறும் ஒரு திட்டமிடப்படாத தற்செயல் நிகழ்வாக கருதுகின்றீர்களா?

நீங்கள் குறிப்பிடும் இரு பகுதியிலும் என்னிடம் அடிப்படையில் எந்த ஒரு முரண்பாட்டையும் நீங்கள் காண முடியாது. நான் உத்திர பிரதேச மாநிலம் ஆஸம்கர் என்கிற ஊரில் 1924 ஆம் ஆண்டு பிறந்தேன். அந்த காலத்தில் நான் மஸ்ஜித், மத்ரஸா மற்றும் முஸ்லிம்களை சுற்றி வாழ்ந்து வந்தேன். ஆகவே இயற்கையாகவே நான் முஸ்லிம்களை நோக்கி பேசி இருக்கிறேன். காரணம் அப்பொழுது அவர்களை மட்டுமே என்னால் அடைய முடிந்தது. பிறகு என்ன நிகழந்தது என்றால், நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். அதனால் மேற்கத்திய சிந்தனைகளை கொண்ட நூல்களை வாசித்தேன். படிப்படியாக எனது பணியாற்றும் இடத்தின் பரப்பு அதிகரித்தது. பல்வேறு மாநாடுகள், கருத்தரங்குகளில் இருந்து பேசச் சொல்லி எனக்கு அழைப்புகள் வர ஆரம்பித்தன. இவ்வகையான கருத்துப் பரிமாற்றங்களால் எனது அழைப்பு பணியின் வீச்சை அதிகரிக்கும் வாய்ப்புகளை பெற்றேன். ஆக, இதை முரண்பாடாக கொள்ள முடியாது. இது எனது களச் செயல்பாட்டின் இயல்பான பரிணாம வளர்ச்சி என்றே கொள்ள முடியும். இதுவே இயற்கையானதும் கூட. இதை பொதுமைப்படுத்தி பார்க்கவும்.

மேற்கத்தியர்கள் கடல் கடந்து அவர்கள் சென்ற இடங்களின் உள்ளூர் மொழியை கற்றுக் கொண்டனர் என்பதுடன் நிற்காமல் அதில் அபாரமான தேர்ச்சியும் பெற்று மிகப் பெரும் பங்களிப்பு செய்திருக்கின்றனர். அதற்கு காரணம் மொழிப்பயிற்சி என்பதை வாடிகனிய கிறிஸ்துவம் அடிப்படை நிபந்தனையாக ஊழியப் பணியாளர்களுக்கு வைத்திருந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கு மாறாக முஸ்லிம் (தாயி) அழைப்பாளர்களின் உள்ளூர் மொழியாளுமை பலவீனம் என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக இருப்பதை காண்கிறோம். இதுவே முஸ்லிம் உலகின் எதார்த்தம். இருப்புக்கும், தேவைக்கும் இடையே உள்ள வெற்றிடத்தை எப்படி நிரப்புவது?

நீங்கள் சொல்வது சரியான கருத்து. இந்த உண்மையை அங்கீகரித்து நமது பழக்க வழக்கங்களில் உள்ள தீய அம்சத்தை சரி செய்ய வேண்டும். நாம் எல்லா மொழியையும் கற்க வேண்டும். காரணம் ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனின் நற்செய்தியாளன். ஆகவே அழைப்பாளன் அழைப்பு விடுக்கப்பட்ட மக்களின் மொழியை நிச்சயம் கற்க வேண்டும் அதில் பயிற்சி எடுக்க வேண்டும்.
மேலும் (நபியே! ஒவ்வொரு சமுகத்தாருக்கும்) அவர்களுக்கு (நம் தூதுத்துவத்தை) அவர் விளக்கி கூறுவதற்காக எந்த ஒரு தூதரையும் அவ(ரவ)ருடைய சமுகத்தாரின் மொழியைக் கொண்டேயல்லாது நாம் அனுப்பவில்லை திருக்குர்ஆன் 14:04
அந்தந்த பகுதியில் பேசப்படும் மொழியறியாமல் மக்களிடம் எப்படி பணியாற்ற முடியும்? முஸ்லிம்களிடம் தஃவா மனோபாவம் குறைந்து போய் விட்டதே இதற்கான காரணம். இது எதார்த்தம். முஸ்லிம்கள் உள்ளூர் மொழியில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது நானும் பதிவு செய்கிறேன். எனது ஆய்வின் படி முஸ்லிம்களிடம் தஃவா ஆர்வம் இல்லாமல் போனதே ஆகும்.

இஸ்லாமிய சூஃபி துறவிகளைப் போன்ற (சைவ) சமய சித்தர்கள் தென்னிந்தியாவில் சமாதானக் கொள்கையை பரப்பியவர்கள். ஆனால் எதெற்கெடுத்தாலும் வடக்கை நோக்கும் பழக்கம் இங்கு ஏற்பட்டு வருகிறது. இந்து, முஸ்லிம் என இரு பெரும் மனித பரப்பும் இந்த ஈர்ப்பில் மயங்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக கேரள பல்கலைக்கழக தேர்வு ஒன்றில்,  கேள்வி தாளை தயாரித்த போது இஸ்லாமிய தூதரை அவதூறு செய்து விட்டதாக எழுந்த சர்ச்சையின் போது மாணவர்களில் உள்ள சில தீவிர போக்கு உள்ளவர்கள் அந்த பேராசிரியரின் கை விரல்களை முறித்தும், முழுவதுமாக நசுக்கியும் விட்டனர். சகிப்புத்தன்மைக்கு பெயர் பெற்ற தென்னிந்தியாவில் இது நிச்சயம் மோசமான திருப்பம். இதை முறியடித்து அமைதி முயற்சிகளை எப்படி முன்னெடுப்பது?

இந்த துயர நிகழ்வை நானும் செய்தித் தாள்களில் பார்த்தேன். இந்த பிரச்சனையை அரசு மற்றும் நிர்வாக அமைப்பு தான் கையாள முடியும். இவ்வாறு மோசமாக செயல்படும் உரிமை யாருக்கும் இல்லை. இது ஒரு குற்றச்செயல். ஒரு சாதாரண இஸ்லாமிய அழைப்பாளன் என்கிற நிலையிலும், முறையிலும் இந்த விஷயத்தில் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. ஆகவே அரசு தலையிட்டு நீதியை நிலைநாட்டும் என நான் நம்புகிறேன். நியாயம் தீர்ப்பது எனது பணியுமல்ல, அது என்னால் ஆக கூடியதும் அல்ல. இது நிர்வாக அமைப்பின் கடமையில் உள்ளது. அதே நேரம் நடந்த சம்பவம் சரியானது அல்ல, மிக மிக தவறான மோசமான செயல் அது. வன்முறையை முன்னெடுத்துச் செல்ல எவருக்கும் உரிமையில்லை, அதை அனுமதிக்கவும் கூடாது.

இந்திய முஸ்லிம் அறிவு ஜீவிகள் சிலரின் கட்டுரை தொகுப்புகளை தனி நூல் வடிவிலும், அவ்வப்போது ஆங்கில நாளேடுகளிலும் வாசித்து வருகிறோம். அவற்றில் பரவலாக உங்களின் கருத்துக்களின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ அப்படியே கையாளப்பட்டுள்ளது அல்லது உங்களின் கருத்துக்களை அவர்களின் நடையில் மீள் படைப்பாக்கம் செய்திருப்பதாக கண்டடைகிறோம். ஆனால் அது குறித்து அந்த நூல்களில் அடிக்குறிப்பு அல்லது பிற்சேர்க்கை என எங்குமே அவர்களால் உங்களைப் பற்றி கூறப்படவே இல்லை. ஆகவே முற்போக்கான ஆங்கில வாசகர்கள் மத்தியில் உங்களைப் போன்ற மார்க்க பின்னணியில் வந்தவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதை காண்கிறோம். உங்களின் அனைத்து நூல்களில் பெங்குயின் மற்றும் ரூபா பதிப்பகம் வெளியிட்ட இரண்டு நூல்களை தவிர்த்து இது வரை தாங்கள் வெளியிட்டுள்ள 200 உருது மற்றும் 25 ஆங்கில நூல்கள் அனைத்தின் பதிப்புரிமையை விட்டுக் கொடுத்திருப்பதும் ஒரு வகையில் காரணம் என்கிறேன். இந்த கோணத்தில் யோசித்திருக்கின்றீர்களா?

எல்லோரும் சுதந்திரமானவர்கள். யாருடைய சுதந்திரத்தையும் என்னால் பறித்து விட முடியாது, அது என்னால் ஆகக் கூடியதும் அல்ல. அனைவரும் அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். நீங்கள் குறிப்பிடும்  எழுத்தாளர்களையும் நான் குறை கூற மாட்டேன். அவர்களை வெறுக்கவும் என்னால் முடியாது. அவர்களை நான் எதிர்க்கவும் மாட்டேன். அவர்கள் செய்ய நினைப்பதை செய்ய அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் யார் சரி, யார் செய்தது தவறு என அல்லாஹ் தீர்மானிப்பான். ஆகவே அழைப்பு பணியில் என்னால் முடிந்த நேர்மறை அணுகுமுறையை கடைப்பிடிக்கிறேன். இதைப் பற்றியெல்லாம் யோசிக்க என்னிடம் நேரம் இல்லை. இக்கேள்விகளை விட்டு என் மனதை தூய்மையாகவும், காலியாகவும் வைத்திருக்கிறேன். ஆகவே நேர்மறை சிந்தனையுடன் இயங்குகிறேன், அதில் அதீத அக்கறை கொள்கிறேன்











Tuesday, May 19, 2009

அடிப்படைவாத மோதல்கள் - தாரிக் அலி பற்றிய குறிப்புகள்







தனிமனிதன் அல்லது சமூகம் தன் நிலைபாட்டின் மீதான பொருண்மையின் மீது, அதன் சாராம்சங்கள் மீது காலத்தை கடக்க முடியாத நுனிமங்கள் மீது தொங்கி கொண்டிருப்பது தான் அடிப்படைவாதம். இது தனிமனிதர்களுக்கிடையே அல்லது சிவில் சமூகங்களுக்கிடையே கருத்தியல் ரீதியான, செயல்பாட்டு ரீதியான மோதல்களையும், அதிகார நவிற்சிகளையும் உருவாக்குகிறது. உலகம் அதை எதிர்ப்பவர்கள் இருப்பதால் மட்டுமே முன்னோக்கி நகர முடியும் என்ற கேதேவின் கோட்பாடு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. உலக வரலாற்றில் மாபெரும் அரசுகள் எல்லாம் மதத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை. அவற்றின் நம்பிக்கை, கலாசாரம், அரசியல் மீதே அதன் எதிர்செயல்பாடுகள் நிகழ்ந்தேறின. வரலாறு முன்னோக்கி செல்கிறது என்று அழுவதோ அல்லது சிரிப்பதோ அல்ல. மாறாக அதை புரிந்து கொள்வதே அவசியமான ஒன்றாகும் என்ற ஸ்பினோசாவின் கோட்பாட்டு அறிவுறுத்தல் அடிப்படைவாதம் வேர்கொண்டு நிற்கும் இந்த சூழலில் மிகப்பொருத்தமாக இருக்கிறது. இதன் தர்க்க ஒழுங்கை, கோட்பாட்டு பொருண்மையை மார்க்சிய தத்துவார்த்த மற்றும் வரலாற்று கண்ணோட்டத்தோடு நடப்பு உலகில் ஆராய்ந்து வருபவர் பாகிஸ்தான் புலம் பெயர் அறிவுஜீவியான தாரிக் அலி. ஒரு விசனகரமான அதே நேரத்தில் நாடகீயமான இளமைக்காலம் அவருக்குரியது. தற்போதைய பாகிஸ்தானின் லாகூரில் 1943 ல் நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் தாரிக் அலி பிறந்தார். இவருடைய தந்தை பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்தவர். சிறந்த, விசாலமான வாழ்க்கை பின்புலத்தை கொண்டவர். நிலப்பிரபுத்துவ பின்னணியை கொண்ட போதும் மார்க்சிய கோட்பாட்டின் மீது ஆர்வமும், தாக்கமும் கொண்டவர். இவர் தந்தையின் திருமணமே மிகுந்த போராட்டத்திற்கிடையே தான் நடைபெற்றது. அதற்கு அன்றைய பாகிஸ்தானில் நிலவிய மாற்று சிந்தனைகள் மீதான வெறுப்பும், மன அயற்சியுமே காரணம். அதன் தொடர்ச்சியின் மீதான எதிர்செயல்பாடு மற்றும் சிந்தனையே தாரிக் அலியின் உருவாக்கம். அன்றைய காலத்தில் லாகூர் பல கலாசாரத்தை கொண்ட காஸ்மோபாலிட்டன் நகரமாக இருந்தது. இந்த நகரத்தின் நெளிவான நகர்வுகளுக்கிடையில் தாரிக்கின் இளமைகாலம் சவால் ஒன்றின் முன்னோக்கத்திற்காக காத்திருந்தது. பள்ளிப்படிப்பை லாகூரில் முடித்த தாரிக் அலி பஞ்சாப் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். தன் தந்தையை போன்று இளமைகாலம் தொட்டே தாரிக் மத விவகாரத்தில் அவநம்பிக்கையாளராக இருந்தார். இதன் தொடர்ச்சி அவரை கல்லூரி பருவத்தில் முதிர்ச்சி பெற்ற அரசியல் மற்றும் தத்துவ சிந்தனையாளராக மாற வைத்தது. பஞ்சாப் கல்லூரி வாழ்க்கையின் தொடக்க காலங்களில் அவரின் பேச்சும், எழுத்தும் பாகிஸ்தானின் இராணுவ சர்வாதிகார வர்க்கத்தை உசுப்பி விட்டது. காலப்போக்கின் நகர்வில் தாரிக்கின் தத்துவார்த்த செயல்பாடுகள் அவரின் பாகிஸ்தான் இருப்பை கேள்விக்குறியாக்கின. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அக மற்றும் புற நிர்பந்தங்கள் காரணமாக தாரிக் பாகிஸ்தானை விட்டு லண்டனுக்கு செல்ல நேர்ந்தது. கீழைச் சிந்தனையாளர்கள் பலரின் வாழ்க்கை பின்னணியை நாம் நோக்கும் போது அவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்தல் அல்லது புலப்பெயர்ச்சிக்குள்ளாகுதல் என்ற கட்டத்தில் இருந்து தான் அவர்களின் எதார்த்த வாழ்வின் இன்னொரு கட்டம் தொடக்கம் பெறுகின்றது. இதன் காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. நேர்மாறான நிலையில் மேற்கத்தியர்கள் எவரும் தன் செயல்பாட்டிற்காக கீழைத்தேயத்திற்கு பெயர்ந்து வருவதில்லை. (விதிவிலக்கான தருணங்கள் தவிர) மேற்கு நாடுகளின் வட்டத்திற்குள் தான் அவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன. கீழை சிந்தனையாளர்கள் மேற்கை தங்கள் சிந்தனைக்கான சுதந்திர வெளியாக, செயல்பாடுகளுக்கான பரப்பிடமாக காண்பதே அதற்கு காரணம். அது மாதிரியே தாரிக்கின் லண்டன் வாழ்க்கை அவரின் ஆளுமை உருவாக்கத்திற்கான தொடக்க புள்ளி. அதற்கான விரிவான சாத்தியப்பாடுகளை அது உருவாக்கி விட்டிருந்தது. லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பொருளாதாரம் படித்த தாரிக் படிக்கும் காலத்தில் வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். அவருக்கான போராட்ட கள செயல்பாடுகள் அதன் மூலம் தொடக்கம் பெற்றன. இளமைகால தத்துவார்த்த வாசிப்பும், செயல்பாடுகளும், பல்கலைகழக பொருளாதார படிப்பும் அவரை அறிவுஜீவி என்ற கட்டத்திற்கு நகர்த்தின. வியட்நாம் போர்காலத்தில் பெர்டிணான்ட் ரஸ்ஸல் மற்றும் ழீன் பால் சார்த்தர் ஆகியோரின் அறிமுகம் தாரிக் அலிக்கு கிடைத்தது. அவர்களுடனான உரையாடல்கள் மூலம் தாரிக் தன் சிந்தனைமுறையை விசாலமாக்கி கொண்டார். அவரின் அனுபவ வெளி மேற்கத்திய அறிவுஜீவிகளுடனான தொடர்ந்த உரையாடல்கள் மூலம் அக அனுபவ முதிர்ச்சியாக மாற்றியது. வியட்நாமுக்கு பல சிந்தனையாளர்கள், மனித உரிமை போராளிகள் இணைந்த குழுவாக சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். அதிலிருந்து அமெரிக்க எதிர்ப்பு சிந்தனை அவரின் கோட்பாட்டு தளத்தில் மையம் கொள்ள தொடங்கியது. ஜியாவுல் ஹக் தலைமையிலான ராணுவ அரசின் அமெரிக்க ஆதரவு நிலைபாட்டை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக அவருக்கு சில ஆண்டுகளாக பாகிஸ்தானிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. இது இன்னொரு வகையில் மேற்கத்திய நாடுகளில் அவரின் பெயரை குவியப்படுத்தியது. வரலாறு, மறுமலர்ச்சிகால தத்துவம் சார்ந்த தொடர்ச்சியான, விசாலமான, ஆழ்ந்த வாசிப்பு காரணமாக தாரிக் அலி தன் பின்னால் கணிசமான வாசக வட்டத்தை இழுத்துக்கொண்டார். இதன் பின்னர் அவரின் முறைப்படியான எழுத்து வாழ்க்கை 1960 ல் லண்டனில் பிரட் ஹாலிடேயுடன் இணைந்து New left review என்ற கோட்பாட்டு சஞ்சிகையை தொடங்கியதில் இருந்து தொடங்குகிறது.இதே காலகட்டத்தில் சர்வதேச டிராஸ்கிய கட்சியின் உறுப்பினரானார். பிரிட்டனில் அதற்கு தலைமையும் வகித்தார். அப்போது கட்சியினருடன் இணைந்து trotsky for beginners என்ற நூலை எழுதினார். பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தோல்வியை டிராஸ்கிஸ்டுகள் கையாள தவறியது குறித்த விஷயத்தில் தாரிக் அலிக்கு முரண்பாடு ஏற்பட்டது. அது குறித்து எழுதவும் செய்தார். இதை தொடர்ந்து டிராஸ்கிஸ்டுகளுக்கும் இவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இவரின் முதல் புத்தகம் இஸ்ரேல் குறித்த சித்திரமாக 1968 and after:Inside the revolution என்ற பெயரில் 1978 ல் வெளிவந்தது.அதன் பிறகு பாகிஸ்தான் வரலாறு, அதன் இராணுவ சர்வாதிகாரம் குறித்த புத்தகமாக Can pakistan survive: Death of a state வெளிவந்தது. தாரிக்கின் தொடர்ச்சியான எழுத்துக்கள் அவரின் அடுத்தடுத்த நூல்களை வெளிக்கொணர்ந்தன. 1984 ல் "இருபதாம் நூற்றாண்டில் ஸ்டாலினியம்" குறித்த நூல் ஒன்றை வெளியிட்டார். அது ஸ்டாலினியம் குறித்த கடும் விமர்சன ஆய்வுமுறையாக இருந்தது. இதன் சமகாலத்தில் தாரிக் புனைவு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் பிரதிபலிப்பாக Shadow of pomegranate tree, Book of saladin, Stone woman போன்ற நாவல்கள் அவரிடம் இருந்து வெளிவந்தன. அவரின் ஆக்கங்களில் முக்கிய கோடிடும் பகுதியாக 2002ல் வெளியான The clash of fundamentalism இருந்தது. அடிப்படைவாதம் வேர்கொள்ளும் முறை, அதன் தர்க்கரீதியான தொடர்ச்சி, இருபதாம் நூற்றாண்டு மத்திய கிழக்கின் பிராந்திய முரண்பாடுகள், மோதல்கள், போர்கள், கலாசார தர்க்கவியல் போன்றவற்றை குறித்த விரிவான ஆய்வுமுறையாக இருந்தது. இதன் மூலம் மேற்கு மற்றும் மத்தியகிழக்கு வட்டாரத்தில் தாரிக் அலி குவியமான அறிவு ஜீவியாக முன்னிலைப்படுத்தப்பட்டார். அதற்கு பிந்தைய ஆண்டில் ஈராக் மீதான அமெரிக்க போரை முன்வைத்து, ஏகாதிபத்திய கருத்தியலையும், வரலாறையும் விளக்கும் Bush in Babylon வெளிவந்தது. இந்த நூலும் அறிவுத்துறை வட்டாரங்களில் குறிப்பிட்ட மாறுதலை ஏற்படுத்தியது. பின் மார்க்சிய, பின்காலனிய, எதிர் அடிப்படைவாத தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் தாரிக் அலி தற்போது லண்டனில் வசிக்கிறார்.


தாரிக் அலியின் அடிப்படைவாதம் குறித்த ஆய்வுமுறைகள் முக்கியமானவை. அடிப்படைவாதம் வரலாறு மற்றும் கோட்பாடு சார்ந்த நுனிமங்கள் மீது தொடக்கம் கொள்கிறது என்கிறார் தாரிக். லௌகீக உலகின் வளர்ச்சி போக்கில் சமூகத்தில் ஒவ்வொரு காலகட்டத்தில் தோன்றும் கோட்பாடுகள், நம்பிக்கைகள் அதன் மனக்கிடங்கில் ஆழ்ந்து பதிகின்றன. அந்த பதிதல் சார்ந்தே அதன் அரசியல் உருவாகிறது. நாகரீகங்கள் உருவான காலத்தில் இருந்து தொடங்கும் இவை சில வேளைகளில் காலத்தை மீற முடியாதவையாக இருக்கின்றன. மதம் அதன் தொடர்ச்சியில் உருவாகும் நம்பிக்கைகள் இதற்கு உதாரணங்கள். அவ்வகையில் உலகில் உருவான எல்லா குறு மற்றும் பெருமதங்கள் இந்த நெறிமுறையில் தான் இருக்கின்றன. இதில் குறுமதங்கள் பெரும்பாலும் வரலாற்றிலிருந்து அழிந்து போய்விட்டன. நிலைத்திருப்பவை எல்லாம் விதிவிலக்கான தருணங்கள் தவிர பெரும்பாலும் அடிப்படைவாதத்தின் உற்பத்திக்கூடங்களே. இதன் தொடர்ச்சியில் இஸ்லாமின் தோற்றத்தைப் பற்றி மதிப்பிடும் தாரிக் அலி அதை அக்காலகட்டத்தின் அதாவது கி.பி ஏழாம் நூற்றாண்டின் அரசியல், கலாசாரம் இருந்த நிலையில் அந்த சமூகத்தில் வலுவான நம்பிக்கை முறையை ஏற்படுத்தி ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது, வேறுபட்ட பழக்க வழக்கங்களை கொண்ட மக்களை ஒன்றிணைப்பது அல்லது இந்த இரண்டையும் செய்வதான நோக்கத்தில் உருவான அரசியல் இயக்கமே என்கிறார். இஸ்லாத்தின் முதல் இருபதாண்டுகளில் குர் ஆன் வெளிப்படுத்திய சொல்லாடல்கள் இந்த கருதுகோளை உறுதிப்படுத்துகின்றன. அதற்கு முந்தைய யூதம், கிறிஸ்தவம் போன்றவை இந்த கருதுகோளிலிருந்து பிறந்தவை தான். உலக பேரரசு கனவு என்பதில் இருந்தே இதன் வரலாற்று ரீதியான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற யூத மற்றும் கிறிஸ்தவத்துக்கு இடையேயான போர்கள், 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இஸ்லாம் -கிறிஸ்தவத்துக்கு இடையேயான சிலுவைபோர்கள் உலக பெருமதங்களின் பேரரசு நோக்கத்தை வெளிப்படுத்துபவை. இந்திய சூழலில் ஆரிய மற்றும் திராவிட நாகரீகத்திற்கிடையேயான போர்களை குறிப்பிடலாம். மேலும் சமண மற்றும் பௌத்த மதங்கள் அழிக்கப்படுதல், அதன் மீதான ஒடுக்குமுறை போன்றவை இந்த தர்க்க நீட்சிக்கு உதாரணங்கள். இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டு கால அரபுலகில் வலுவான அரசியல் மற்றும் கலாசார இயக்கமாக உருமாறிய பிறகு அதன் எல்லை விரிவாக்கம் படிப்படியாக அதற்கான செயல் தந்திரங்களோடும், புதுமையான யுக்திகளோடும் நடந்தேறியது. இக்காலத்தில் அரேபிய பாலைவனத்தில் முஸ்லிம் இராணுவத்தின் வெற்றி என்பது குறிப்பிடதக்கதாக இருந்தது. அந்த வெற்றியின் வேகம் மத்திய தரைக்கடல் உலகை நோக்கி சென்றது. முந்தைய கிறிஸ்தவத்துடனான முரண்பாடுகள் வெளிப்படுத்த முடியாத ஒன்றாக இருந்தன. நபியின் மரணத்துக்கு பிந்தைய இருபது ஆண்டுகளில் அவரை பின் தொடர்ந்தவர்கள் பிறைவள பகுதிகளில் (ஈராக், சிரியா, லெபனான், பாலஸ்தீன் போன்றவை)தங்களின் முதல் அரசை கட்டமைத்தார்கள். இந்த அரச கட்டமைப்பு மற்ற பகுதிகளில் உடனடியாக அதை விரிவுபடுத்துவதற்கான மன வேகத்தை அளித்தது. ஒவ்வொரு விரிவாக்கத்தின் போதும் அப்பிரதேசத்தின் இனக்குழுக்கள் இஸ்லாத்தை தழுவி கொண்டன. இதற்கிடையில் கி.பி ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டு காலத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பைசாண்டிய மற்றும் பாரசீக பேரரசுகள் வலுவான சக்திகளாக இருந்தன. இந்த இரு பேரரசுகளிடையே அக்காலத்தில் பிரமாண்ட போர் மேகம் நகர்ந்து கொண்டே வந்தது. அதன் இழுப்பங்களுடன் கூடிய தொடர்ச்சியான நகர்வு இருவரையும் தங்கள் பிராந்தியத்தின் மீது புதிய வெற்றியாளர்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது. சிரியாவும், எகிப்தும் பைசாண்டிய பேரரசின் பகுதிகள், ஈராக் பாரசீக பேரரசின் பகுதி. இவை அனைத்தும் பலம் பொருந்திய, நம்பிக்கையாளர்களான ஒருங்கிணைந்த இனக்குழு சக்தியின் முன் விரைவாக காணாமல் போயின. இரு பேரரசுகளின் உயர் திறன் வாய்ந்த, அனுபவம் மிக்க போர் இயந்திரங்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாக இருந்த போதும், நடைமுறையில் பலவீனமாக இருந்தன. அரேபிய முஸ்லிம் இராணுவத்தின் ஒட்டக மற்றும் குதிரைப்படைகள், மறைந்திருந்து தாக்கும் கொரில்லா யுத்த முறைகள், தீடீரென தாக்கி விட்டு மறையும் நாடோடி தாக்குதல் முறை போன்ற யுத்த உத்திகள் இரு பெரும் பேரரசுகளை தோற்கடித்தன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்த இரு பேரரசுகளின் வீழ்ச்சியோடு இஸ்லாமின் முறைப்படியான இருப்பு இங்கு தொடங்குகிறது. உலக வரலாற்றில் இவ்வாறு பலமான அரசுகள் பலவீனமாக மனிதர்களால் வெல்லப்பட்டிருக்கின்றன. ரோமானிய பேரரசை பலம் குன்றிய ஜெர்மானியர்கள் வென்றதும், மெக்சிகர்களிடமிருந்து யாங்கிகள் கலிபோர்னியாவை கைப்பற்றியதும் இந்த கருத்தாக்கத்தை மேலும் உறுதி செய்பவை. இவ்வாறான நிலையில் இஸ்லாமிய அரசுகள் பிராந்தியத்தில் வேர்கொண்ட பிறகு சமூக உற்பத்தி மற்றும் இயற்கையோடு இயைந்த செயல்பாடுகள் மீது கவனம் கொள்ள தொடங்கின. குறிப்பாக அறிவியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகள் மீது அதீத கவனமும், அவதானமும் அவர்களுக்கிருந்தது. அப்பாஸிட்கள் இதற்கான செயல்திட்டங்களை வைத்திருந்தார்கள். குறிப்பாக மருத்துவ துறையில் அவர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது. முதல் ஆயிரத்தாண்டு முழுவதும் மருத்துவ துறையின் வளர்ச்சி அறிவின் நீண்ட, குறுக்கு நெடுக்குமான பயணத்திற்கு உதாரணமாக இருந்தது. பாரசீகத்தின் பல நகரங்கள் இதற்கான வாயில்களாக இருந்தன. அரபுலகின் முதல் மருத்துவராக அறியப்பட்ட ஹாரித் இப்னு ஹலதா அக்கால பாரசீக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் அவரின் மருத்துவ ஆலோசனைகள் புகழ்பெற்றவை. அதிக உணவு உண்பதை தவிர்த்தல், கலக்காத ஒயினை அருந்துதல், தினசரி அதிக தண்ணீர் பருகுதல், மது அருந்தி விட்டு உடலுறவு கொள்ளாமை, சாப்பிட்டு விட்டு குளிப்பதை தவிர்த்தல் இவை அரசவையிலிருந்து குடிமக்களுக்கு பரப்பப்பட்டன. அந்த ஆலோசனைகள் அதிகாரபூர்வ முறையில் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து இப்னு ஸீனா மற்றும் அல் ராசி ஆகிய மருத்துவ தத்துவவியலாளர்கள் அரபுலகில் தோன்றினர். இவ்வாறாக மருத்துவ துறையின் விதை அன்றைய பாரசீகத்தில் விதைக்கப்பட்டு அரபுலகம் முழுவதும் வேர் கொண்டு மரமாக கிளைத்தது. இஸ்லாத்தின் தோற்றம் அதன் அரசியல், புவி பொருளாதார பார்வை குறித்து தன் அடிப்படைவாத மோதல்கள் (The Clash of Fundamentalism) நூலில் ஆராய்ந்த தாரிக் அலி அதன் முடிபுகளை நீண்டகன்ற முறையில் ஆழ்ந்து வெளிப்படுத்தினார். அவரின் சிந்தனை முறைகள் மரபான மேற்கத்திய சிந்தனையாளர்களிடமிருந்து வித்தியாசப்பட்ட ஒன்றாக இருந்தன. மரபாந்த முறையில் கீழைத்தேயவாதியாக இருப்பதால் மத்திய கிழக்கு சமூகம் குறித்த இந்த ஆய்வு முறை அவருக்கு விரிவான தளங்களை தொடுவதற்கான வாய்ப்பை வழங்கியது.மேலும் மேற்கத்திய நாகரீகம் மற்றும் இஸ்லாமிய நாகரீகம் குறித்த அடிப்படையான ஆய்வுமுறைகளை நிகழ்த்தியிருக்கிறார். மேற்கத்திய நாகரீகம் குறித்த ஆய்வில் தாரிக் பிரிட்டனின் காலனியாதிக்க நடவடிக்கைகள் குறித்து வெளிப்படுத்தினார். குறிப்பாக இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதில் இருந்து அதை தொடங்கினார். இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் காந்தியிடம் கேட்டார்." மேற்கத்திய நாகரீகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" அது ஒரு சிறந்த கருத்தாக இருக்கலாம்" காந்தி எள்ளல் முறையில் மிகச்சாதாரணமாக பதிலளித்தார். காந்தியின் இந்த பதிலை தற்போதைய கட்டத்துக்கு நகர்த்தும் தாரிக் அலி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஒடுக்குமுறையை, கண்ணுக்கு புலப்படாத ரீதியில் நாகரீகத்தின் மேல் படும் தாக்குதலாகவே காண்கிறார். குறிப்பாக ஈராக் மீதான அமெரிக்க போர் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மேற்கு ஈராக்கில் ஜனநாயகம் திரும்பும் என்ற மாயையை வெகுஜன மத்தியில் ஏற்படுத்துகிறது. இது உச்சபச்சமான மேல் திணிக்கப்படும் ஒடுக்குமுறை என்பதை அது உணராமல் இருக்கலாம். மேலும் நாகரீகம் அதன் எதிர்கொள்ளல் குறித்த யுக்திகளுக்கு அமெரிக்க ரெடிமேட் அறிவுஜீவிகளின் துணையை நாடுவதை தாரிக் குறிப்பிடுகிறார். குறிப்பாக சாமுவேல் காண்டிங்டனும், பிரான்சிஸ் புகாமாவும் இதன் வார்ப்புகள். அவர்களின் நாகரீகங்களின் மோதல் குறித்த கருத்தாக்கம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கை வடிவமைப்பே. சாமுவேல் காண்டிங்டன் ஜாண்சன் ஆட்சியில் வியட்நாம் போர் குறித்த வழிமுறைகளை அரசுக்கு வகுத்து கொடுத்தவர். சிவிலியன்கள் ஆதரவு இல்லாமல் அந்நிய நாட்டின் மீது போர்தொடுப்பது வெற்றியை தராது என்ற கருத்தை அதிகார வர்க்கத்தின் முன்வைத்தவர். இந்த கருத்தாக்கத்தை தான் அமெரிக்க ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போது பயன்படுத்தியது.சர்வதேச ஊடக சர்வாதிகாரம் இதற்கு துணைபுரிந்தது. பல தருணங்களில் சாமுவேல் காண்டிங்டனுக்கு கோட்பாட்டு ரீதியாக எதிர்வினையாற்றியிருக்கிறார். நாகரீகங்கள் குறித்த இந்த ஆய்வுமுறை தாரிக் அலியை மேற்கு மற்றும் கிழக்குலகின் தேர்ந்த அறிவுஜீவியாக ரூபம் கொள்ள செய்தது. கடந்த இருபதாண்டுகளில் மேற்குலகில் புனைவு மற்றும் புனைவு அல்லாத எழுத்துக்களின் எல்லையை கடந்த தாரிக் என்னை பாதித்த சிந்தனையாளராக இன்னும் இருக்கிறார். இவருடனான என் விரிவான நேர்காணல் இரு வருடங்களுக்கு முன்பு தமிழ்பத்திரிகை ஒன்றில் வெளியானது. ஓர் அறிவு ஜீவி மனிதசமூகம், வாழ்க்கை இவற்றை குறித்த ஆழ்ந்த அவதானங்களை உடையவன் என்பதற்கு தாரிக் இந்த நூற்றாண்டின் உதாரண புருஷர்.
- உயிரோசை