காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது
Showing posts with label எண்ணெய். Show all posts
Showing posts with label எண்ணெய். Show all posts

Thursday, November 26, 2009

எண்ணெயும் போரும்- தாரிக் அலியின் கோட்பாடுகள் குறித்து


இருபதாம் நூற்றாண்டு உலகிற்கு அளித்த பெருங்கொடை பெட்ரோலியம். இதற்காகவே கடந்த நூற்றாண்டில் போர்கள் பல நடைபெற்றிருக்கின்றன.வியட்நாம் போரில் அமெரிக்க தோல்விக்கு எண்ணெயும் ஒரு காரணம் என்று பிந்தைய கட்டத்தில் போரியல் நிபுணர்கள் வெளிப்படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் தான் பெட்ரோல் குறித்த முக்கியத்துவத்தை சர்வதேச சமூகம் உணர்ந்து கொண்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்த காலகட்டத்தில் பிரான்சு அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்." எமக்கு ஒரு துளி பெட்ரோல் ஓரு துளி இரத்தத்திற்கு சமமானது." இதனை தொடர்ந்து எல்லோரும் அதன் தீவிரத்தை உணரத்தொடங்கினார்கள். உலக வரலாற்றில் கனிம வளங்களை மனிதன் போராடி தான் கண்டறிந்திருக்கிறான். இயற்கை அதன் வளத்தை சிலருக்கு மட்டுமே கையளிக்கிறது. இதற்காகவே வரலாற்றில் பல போர்கள் நடந்திருக்கின்றன. காலம் கடக்கும் போது கனிம வளங்களும் மனிதனின் மற்றொரு இருப்பாக மாறுகின்றன. இருப்பும் காலமும் (Being and Time)ஒன்றை ஒன்று சார்பானவை. இவை பெட்ரோல் விஷயத்தில் சரியாகவே பொருந்துகின்றன.சராசரி மனிதனின் வாழ்க்கை தரம் உயரும் போது பெட்ரோலிய பயன்பாடும் அதிகரிக்கிறது. இவை தனிநபர் வருமான வரம்பிற்கு நேர்விகிதத்தில் இருக்கின்றன. தனிநபரின் வருமானம் அதிகரிக்கும் போது அதன் ஒத்திசைவாக பெட்ரோலிய செலவு அதிகரிக்கிறது. இங்கு பெட்ரோல் அளவு மாற்றத்திற்கு உட்படுகிறது. உலகின் தற்போதைய சராசரி பெட்ரோலிய நுகர்வு என்பது தனிநபருக்கு வருடத்திற்கு 4.4 பீப்பாய்கள். இவற்றின் சராசரியை வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் அதிகப்படுத்துகின்றன. ஆனால் வளரும் நாடுகளான மூன்றாம் உலக நாடுகள் இன்னும் உலக சராசரிக்கு கீழே இருக்கின்றன. இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் நுகர்வு விகிதங்கள் இவற்றை வெளிப்படுத்துகின்றன. அமெரிக்கா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்சு ஆகியவை அதிக அளவில் பெட்ரோலை உறிஞ்சு கொள்ளும் நாடுகள். அமெரிக்காவின் வருடாந்திர சராசரி தனி நபர் பெட்ரோலிய நுகர்வு 24 பீப்பாய்கள். இதில் அங்குள்ள பெரும் முதலாளிகளே எல்லாவற்றையும் உறிஞ்சி சராசரியை அதிகரிக்க செய்கிறார்கள். பெட்ரோலின் இந்த முரண் ஓட்டம் நாடுகளுக்கிடையேயான உராய்வுகளுக்கு வழி வகுக்கிறது. ஓர் அர்த்தத்தில் போருக்கான துணைக்கோளாகவும் பெட்ரோல் இருக்கிறது. இதனடிப்படையில் இருபதாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நான்கு போர்கள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றை பற்றி தாரிக் அலி தன் அடிப்படைவாத மோதல்கள் (The Clash of Fundementalism)நூலில் விரிவாக ஆராய்ந்தார். இரண்டாம் உலகப்போர் காலனிய தகர்ப்பிற்கான புதிய செயல்முறையை தொடங்கி வைத்தது. பழைய பேரரசுகள் எல்லாம் அவற்றின் சொந்த முரண்பாடு காரணமாக பலவீனம் அடைந்தன. ஜெர்மன் ஏகாதிபத்தியம் தோல்வியடைந்தது. அமெரிக்கா பொருளாதார மற்றும் இராணுவ அடிப்படையிலான பெரும் வல்லரசாக உலகளாவிய நிலையில் துளிர் விட தொடங்கியது. இரண்டாம் உலகப் போர் முடிந்த கட்டத்தில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய இரு வல்லரசுகளுக்கிடையேயான பனிப்போர் முன்னோக்கி சென்றது. அந்த கட்டத்தில் அமெரிக்கா, சோவியத், பிரிட்டன் ஆகிய மூன்று வல்லரசுகளும் ஐரோப்பாவை தங்கள் ஆதிக்கத்தின் கோளங்களாக கூறு போட எழுதப்படாத ஒப்பந்தங்களை இட்டுக்கொண்டன. ஸ்டாலின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, இத்தாலி, பிரான்சு, கிரீஸ் போன்ற நாடுகள் ஆங்கிலோ-அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ் வந்தன. இந்நிலையில் உலகின் பெரும் பெட்ரோல் மையமாக மத்திய கிழக்கு பிராந்தியம் இருக்கிறது. அன்றைய கட்டத்தில் இவை துண்டிக்கப்பட்டு ஏகாதிபத்தியங்களின் துணைக்கோளாக இருந்தன. 1948 ல் இஸ்ரேல் உருவான பிறகு இப்பிராந்தியத்தில் உணர்வு மற்றும் வாழ்நிலை ரீதியான பதட்டம் அதிகமானது. இஸ்ரேலின் உருவாக்கமும் அவற்றின் மீதான மேற்கத்திய அக்கறையும் தாரிக் அலியை பொறுத்தவரை எண்ணெய்க்கான செயல்தந்திரமே. இந்த இடத்தில் மேற்குலகம் இஸ்ரேலை "எண்ணெய், எண்ணெய், எண்ணெய்" என்பதாக பதிலீடு செய்கிறது. இதனடிப்படையிலான முதல் போர் எகிப்து மற்றும் இஸ்ரேல், மேற்கத்திய வல்லாதிக்க அரசுகளுக்குமிடையே ஏற்பட்டது. எகிப்து அப்போது நாசரின் கட்டுப்பாட்டில் இருந்தது. நாசர் தொடக்கத்தில் பிரிட்டன் ஆதரவாளராகவும் , பின்னர் கம்யூனிச அனுதாபியாகவும், அதற்கு பிறகு எகிப்து தேசியவாதியாகவும் மாறினார். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு எகிப்தின் உட்கட்டமைப்பு, சூழல் தகவமைப்பு, கனிம வளங்கள், புராதன சின்னங்கள் இவை குறித்த ஆர்வம் மேற்கத்திய அரசுகளுக்கு ஏற்பட்டது. பிரிட்டன் நாசர் சோவியத் யூனியனின் அனுதாபியாக மாறிய போது அவரை கொலை செய்ய குறி வைத்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. நாசர் தொடர்ந்து எகிப்து நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தினார். இந்நிலையில் இந்திய பிரதமரான நேரு எகிப்துக்கு சென்று நாசரை சந்தித்தார். ஆப்ரிக்கா நாடு என்ற வகையில் எகிப்து தனித்து இயங்க வேண்டும் என்றும், அணிசேரா அமைப்பில் சேர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 1955 ல் நடந்த அதன் மாநாட்டில் நாசர் இந்தியா, சீனா ஆகியவற்றின் ஆதரவால் அதிகம் தாக்கமுற்றார். அவரிடம் நேரு எகிப்து எப்பொழுதும் பனிப்போர் காலகட்டத்தில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் யூகோஸ்லோவியா அதிபரான டிட்டோவை நாசர் சந்தித்தார். டிட்டோவும் நேருவின் வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பனிப்போர் அணிகளிலிருந்து விலகி இருக்கும் படி நாசரை வலியுறுத்தினார். அதே நேரத்தில் எகிப்திலிருந்து நிரந்தரமாக விலகி கொள்ளும் படி பிரிட்டனை வலியுறுத்தலாம் என்றார். அதேகாலகட்டத்தில் எகிப்தில் இஸ்லாம் மற்றும் அதற்கு வெளியில் கருத்தியல் அடிப்படையிலான ஏராளமான குழுக்கள் இருந்தன. அவர்கள் இஸ்லாமிய உலகம் பிளவுப்பட்டது இருப்பதை கண்டறிந்தார்கள்.மேலும் சவூதி அரேபியா, ஈரான், துருக்கி, ஜோர்டான், ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வாஷிங்டன் மற்றும் பிரிட்டனின் ஊதுகுழல்களாக இருந்தன. அதில் சிரியா சின்ன ஊதுகுழலாக இருந்தது. இரு வல்லாதிக்க அரசுகளும் தங்களின் நீண்டகால நகர்விற்காக மத்திய கிழக்கு பிராந்தியத்தை தங்களுக்கு சார்பானவையாக திருப்பின. இதில் இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகியவை மட்டுமே சுதந்திரமாக இயங்கின. வல்லாதிக்கங்களின் கட்டுப்பாட்டு தந்திரங்கள் எவற்றுக்கும் இவை அடிபணியவில்லை. அதற்கான தண்டனையை அவர்களுக்கு மிக அருகில் காத்துக்கொண்டிருந்தது. எகிப்து நைல் நதியின் குறுக்கே அணைக்கட்டுவதற்காக அமெரிக்கா மற்றும் சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கியிடம் நிதி உதவி கோரியிருந்தது. இது அங்கீகரிக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால் திடீரென இது ரத்துசெய்யப்பட்டது. எகிப்து உலக அரங்கில் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள விரும்புவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியது. இதன் பின்னரசியல் பாகிஸ்தான், துருக்கி, ஈரான் ஆகியவற்றின் இடையீடு தான் என்பது பின்னர் தெரியவந்தது. அன்றைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான ஜாண் போஸ்டர் டல்லஸ் நிதி உதவி மறுப்பை பற்றி 1956 ஜுலை 19 ல் எகிப்துக்கு அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தினார். அதன் பின்னர் சில நாட்களில் அதிபரான நாசர் அலெக்சாண்டிரியாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் இதைப் பற்றி மக்களிடம் விரிவாக எடுத்துரைத்தார். அதில் ஏகாதிபத்தியத்தின் கோபத்தை அடக்க வேண்டும் என்றும், அமெரிக்க மற்றும் பிரிட்டனின் மிரட்டல்களை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் தனியாரிடம் இருக்கும் சூயஸ் கால்வாய் பகுதியை தேசியமயமாக்க வேண்டும். இதன் மூலம் அணை கட்ட வருமானம் வரும் என்றார். இதை கூட்டத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் மத்தியில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வல்லாதிக்கங்களை குறிப்பாக பிரிட்டனை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.காரணம் சூயஸ் கால்வாயின் நிழல் கட்டுப்பாட்டாளராக பிரிட்டன் இருந்து வந்ததுடன் அதன் வருமானத்தின் ஒருபகுதி அதற்கு சென்று கொண்டிருந்தது. சூயஸ் கால்வாய் என்பது உலகிலேயே அதிக அளவில் நீர்வழி போக்குவரத்து நடைபெறும் பகுதியாகும். இது 101 மைல்கள் தூரம் கொண்டது. முக்கியமாக ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களை சரியாக பிரிக்க கூடியதாகவும், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் ஆகியவற்றுக்கு இடையே அமைந்திருப்பதால் ஐரோப்பாவுடன் நீர்வழியாக இணைப்பளிக்கும் கால்வாயாக இருக்கிறது. ஆகவே எகிப்தின் இந்த முடிவு அநேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பழிவாங்கும் சந்தர்ப்பத்தை அவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தன. நாசரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவர் அரபுலகின் ஹீரோவாகவும், காலனிய எதிர்ப்பாளராகவும் மாறினார். இதனை தொடர்ந்து எகிப்திய அரசியல் தலைவர்களும், மேற்கத்திய சார்பானவர்களும் அடுத்து நிகழப்போகும் மோசமான நிகழ்வுகளை கண்டு பயந்தனர்.பிரிட்டன் பிரதமரான அந்தோணி ஏடன் நாசரை "நைல் பிரதேசத்தின் ஹிட்லர்" என வர்ணித்தார். நாசர் இதை அறிந்தே இருந்தார். பிரிட்டன் தன் துப்பாக்கி இராஜதந்திரத்தை செயல்படுத்தும் எனவும், அதற்காக இஸ்ரேலையும் பயன்படுத்தும் எனவும் அறிந்திருந்தார். இதற்காக அவர் இஸ்ரேலிய பிரதமரான மோசே சாரத்திற்கு கடிதம் எழுதினார். அதில் " இந்த விவகாரத்திற்கு வெளியே இருக்கும் படியும், இரு நாடுகளுக்குமிடையேயான பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம்" எனவும் குறிப்பிட்டிருந்தார். மோசே சாரத் கொஞ்சம் அனுதாப உணர்வு கொண்டவர் தான். ஆனால் அதிபரான பென்குரியன் இரத்த வாடையை உட்கொண்டவர். அதனால் நாசரின் இந்த கடிதத்தை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லை. இதன் தொடர்ச்சியில் அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் பிரிட்டன், பிரான்சு, இஸ்ரேல் ஆகியவை எகிப்தின் மீது தாக்குதல் நடத்த தீர்மானித்தன. 1956 அக்டோபர் 29 ல் இஸ்ரேலிய படைகள் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதி மீது தாக்குதல் நடத்தின. அதற்கு இருநாட்கள் கழித்து ஆங்கில -பிரெஞ்சு படைகளின் கூட்டமைப்பு சூயஸ் கால்வாய் மீது இறங்கியது. வல்லாதிக்க அரசுகளின் இந்த ஆக்கிரமிப்பு செயல்பாட்டை பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகள் ஆதரித்தன. இந்நிலையில் எகிப்திய படைகள் பலவீனப்பட்டன. இந்நிலையில் எகிப்துக்கு உதவும் பொருட்டு சோவியத் யூனியன் எகிப்திலிருந்து படைகளை பின்வாங்கும் படி இறுதி எச்சரிக்கை விடுத்தது. அதற்கு அடுத்த நாள் இந்த நாடுகள் தங்களின் இராணுவ நடவடிக்கையை நிறுத்திக்கொண்டன. பின்னர் அமெரிக்க ஜனாதிபதியான ஐசன்கோவர் மூன்று நாடுகளின் செயல்பாட்டை வெளிப்படையாக விமர்சித்தார். நாங்கள் இராணுவ ஆக்கிரமிப்பை மன்னிக்க மாட்டோம் என்றார். இதன் பிறகு பிரிட்டன் மற்றும் பிரான்சு ஆகியவை செய்த் துறைமுகத்திலிருந்து தங்களின் படைகளை வாபஸ் பெற்றன. இதுவே முதல் எண்ணெய் போர் என வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. நாசரை பொறுத்தவரை அவர் சண்டையில் தோற்றிருக்கலாம். ஆனால் போரில் ஒரு வகையில் வெற்றிப்பெற்று விட்டார். காரணம் போர் முடிந்த பிறகு எகிப்தின் எல்லா வங்கிகளும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் தேசியமயமாயின. போலந்து பொருளாதார நிபுணரான ஆஸ்கர் லேஞ் போர் நடக்கும் இரு வருடங்களுக்கு முன்பு எகிப்துக்கு பயணம் செய்து திட்டமிடப்பட்ட பொருளாதார திட்டங்கள் எகிப்தை விரைவில் வளப்படுத்தும் என்றார். இதனை சுவீகரித்துக்கொண்ட நாசர் அதனடிப்படையில் திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார். இதன் நகர்வில் எகிப்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சிறந்த ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகான எண்ணெய் போர் குவைத் மீதான் ஈராக்கின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து 1991ல் அமெரிக்க தலைமையிலான பன்னாட்டுப்படைகள் ஈராக்கை தாக்கிய போது ஏற்பட்டது. உலகின் 25 சதவீத எண்ணெய் வளத்தை கொண்டிருக்கும் ஈராக் அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக தன் 42 மில்லியன் பேரல் எண்ணெய் வளத்தை இழந்தது. குவைத் மற்றும் ஈராக் ஆகியவற்றில் பல எண்ணெய் வயல்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டன. இது உலக அளவில் பெட்ரோலிய உற்பத்தியில் மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அமெரிக்காவின் கொசாவா, கொலம்பியா, ஆப்கானிஸ்தான் போர்கள் இந்த எண்ணெய் காரணியை மீண்டும் உறுதிப்படுத்தியது. ஆப்கான் மீதான சோவியத் போரின் போது அமெரிக்க ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு ஆயுதப்பயிற்சியும், நிதி உதவியும் அளித்தது. ஆக இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய வரலாற்றில் எண்ணெய் என்பது அமெரிக்காவின் மிகப்பெரும் புவி அரசியல் கூறாக இருந்தது என்கிறார் தாரிக் அலி. மேலும் 2003 ஆம் ஆண்டைய அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு போர் அமெரிக்காவின் நீண்டகால திட்டத்தை மிகச்சரியாக நிறைவேற்ற செய்தது. 1991 போரை அடுத்து அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஈராக் மீது பொருளாதார தடை விதித்தது. அதன் பிறகு பல நாடுகள் ஈராக்கிடமிருந்து எண்ணெயை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக உணவுப்பொருட்களை அளித்தன. இது உணவுக்கு எண்ணெய் திட்டம் என்றழைக்கப்பட்டது. இதில் பல அரசுகள் பெருமளவில் மோசடி செய்தன. இது குறித்த விரிவான வரலாற்றுத் தகவல்களும், விமர்சன பூர்வமான அணுகுமுறையும் அடங்கிய நூலான The Bush in Babylon தாரிக் அலியிடமிருந்து வெளிவந்தது. வளைகுடா மற்றும் பால்கன் பிரதேசம் மீதான அமெரிக்காவின் கட்டற்ற போரானது தார்மீக வெற்று காசோலையின் நகல் உதாரணம் என்றார் தாரிக் அலி. அவரின் மத்திய கிழக்கு மற்றும் மேற்குலக ஆய்வுமுறைகள் அனைத்திலும் ஏகாதிபத்தியம் மீதான விமர்சனம் நிறைந்திருக்கிறது.

எண்ணெயின் பரிமாற்றத்தை பதிலீடு செய்யும் ஒன்று போதைப்பொருள். அமெரிக்கா ஆப்கானிஸ்தான், இந்தோ சீனா போன்ற பிரதேசங்களை இந்த பதிலீட்டு வளையத்திற்குள் கொண்டு வருகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய அமெரிக்க வரலாறு முழுவதும் தூர கிழக்கு நாடுகளுடனான மருந்து கடத்தலில் இருந்து தான் தொடங்குகிறது.1950 ல் தொடங்கிய கொரிய யுத்தம் இதன் பின்னணியில் தான் தொடங்கியது. மாவோ தலைமையிலான சீனப்புரட்சிக்கு பின்னர் சீனாவின் மாபெரும் ஓபிய கடத்தல் முடிவுக்கு வந்தது. இது உலக போதை மருந்து பரிவர்த்தனையில் 85 சதவீதமாகும். ஐம்பதுகளில் இந்தோ சீனா பகுதியிலிருந்து போதை மருந்துகள் ஈரான், லெபனான், சிரியா போன்ற பகுதிகளுக்கு கடத்தப்பட்டது. ஆப்கான் மீதான சோவியத் போரும், அமெரிக்க போரும் எண்ணெய், போதை மருந்து ஆகியவற்றை நேரெதிர் திசையில் பதிலீடு செய்பவை. ஆப்கான் மீதான சோவியத் போரின் போது அமெரிக்க ஜனாதிபதியான ஜிம்மி கார்டர் சொன்னார்." மத்திய கிழக்கு பிரதேசத்தை சோவியத் யூனியன் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் அமெரிக்காவின் பெட்ரோலிய பொருளாதாரத்திற்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அரேபிய வளைகுடாவை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே இந்த இலக்கை அடையும் முயற்சி. 1970 க்கு முன்பு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியத்திற்கெதிரான எண்ணெய் வள நாடுகளின் புரட்சி காரணமாக தெற்கு மற்றும் வடக்கு பூகோள பிரதேசங்களின் புதிய உலக ஒழுங்கு ஏற்பட்டது. அங்கு தனிநபர் வருமான வீதம் அதிகரித்தது. புள்ளி விபரங்களின் படி 1960 மற்றும் 1980 க்கும் இடைப்பட்ட காலத்தில் லத்தீன் அமெரிக்கா நாடுகளின் தனிநபர் வருமான வீதம் 73 சதவீதம் அதிகரித்தது. ஆப்ரிக்காவின் தனிநபர் வருமான வீதம் 34 சதவீதம் அதிகரித்தது.எண்பதுகளுக்கு பிறகு சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா இடையே எண்ணெய் வள பகிர்தல் தொடர்பான இரகசிய உடன்பாட்டிற்கு பிறகு அமெரிக்கா அந்நாடுகளின் தன் இராணுவ ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது. இதன் விளைவாக 1980 க்கும் 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் லத்தீன் அமெரிக்காவில் வருமான வளர்ச்சி 6 சதவீதமாக குறைந்தது.அதே நேரத்தில் ஆப்ரிக்காவில் வளர்ச்சி 23 சதவீதமாக சரிவடைந்து பெரும்பாலான நாடுகள் பட்டினி நிலைமைக்கு தள்ளப்பட்டன. சவூதியுடனான ஒப்பந்தம் அதன் டாலர்களை அதன் இடத்திற்கே மீண்டும் திரும்ப செய்தது. ஆக 1956 எகிப்து மீதான போர், 1967 அரபு-இஸ்ரேல் போர், 1991 ஈராக் போர், கொலம்பியா போர், வியட்நாம் போர், ஆப்கான் போர் எல்லாமே இனி பௌதீக இருப்பு பெட்ரோலை வைத்தே தீர்மானிக்கப்படும் என்பதை உலகுக்கு அறிவித்தது. இயற்கை வளங்கள் மீதான மனிதனின் போராட்டம் என்பது 16 நூற்றாண்டின் இறுதிபகுதியில் ஏற்பட்ட முதலாளித்துவ சமூகத்தின் தோற்றத்திற்கு பிறகே ஏற்பட்டது. அன்று முதல் இன்றுவரை முடிவற்ற தொலைக்காட்சி தொடர் மாதிரி எண்ணெய் மீதான இந்த முரண்பாடு நிகழ்ந்து கொண்டிருந்தது. இதை குறித்து ஆராய்ந்த கீழைச்சிந்தனையாளர்களில் தாரிக் அலி மிக முக்கியமானவராக இருக்கிறார். இதைப்பற்றியே அவரின் எழுத்துக்களே எண்ணெய் விவகாரம் சார்ந்து இன்றும் கோடிடப்படுபவையாக இருக்கின்றன.

Tuesday, May 19, 2009

அடிப்படைவாத மோதல்கள் - தாரிக் அலி பற்றிய குறிப்புகள்







தனிமனிதன் அல்லது சமூகம் தன் நிலைபாட்டின் மீதான பொருண்மையின் மீது, அதன் சாராம்சங்கள் மீது காலத்தை கடக்க முடியாத நுனிமங்கள் மீது தொங்கி கொண்டிருப்பது தான் அடிப்படைவாதம். இது தனிமனிதர்களுக்கிடையே அல்லது சிவில் சமூகங்களுக்கிடையே கருத்தியல் ரீதியான, செயல்பாட்டு ரீதியான மோதல்களையும், அதிகார நவிற்சிகளையும் உருவாக்குகிறது. உலகம் அதை எதிர்ப்பவர்கள் இருப்பதால் மட்டுமே முன்னோக்கி நகர முடியும் என்ற கேதேவின் கோட்பாடு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. உலக வரலாற்றில் மாபெரும் அரசுகள் எல்லாம் மதத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை. அவற்றின் நம்பிக்கை, கலாசாரம், அரசியல் மீதே அதன் எதிர்செயல்பாடுகள் நிகழ்ந்தேறின. வரலாறு முன்னோக்கி செல்கிறது என்று அழுவதோ அல்லது சிரிப்பதோ அல்ல. மாறாக அதை புரிந்து கொள்வதே அவசியமான ஒன்றாகும் என்ற ஸ்பினோசாவின் கோட்பாட்டு அறிவுறுத்தல் அடிப்படைவாதம் வேர்கொண்டு நிற்கும் இந்த சூழலில் மிகப்பொருத்தமாக இருக்கிறது. இதன் தர்க்க ஒழுங்கை, கோட்பாட்டு பொருண்மையை மார்க்சிய தத்துவார்த்த மற்றும் வரலாற்று கண்ணோட்டத்தோடு நடப்பு உலகில் ஆராய்ந்து வருபவர் பாகிஸ்தான் புலம் பெயர் அறிவுஜீவியான தாரிக் அலி. ஒரு விசனகரமான அதே நேரத்தில் நாடகீயமான இளமைக்காலம் அவருக்குரியது. தற்போதைய பாகிஸ்தானின் லாகூரில் 1943 ல் நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் தாரிக் அலி பிறந்தார். இவருடைய தந்தை பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்தவர். சிறந்த, விசாலமான வாழ்க்கை பின்புலத்தை கொண்டவர். நிலப்பிரபுத்துவ பின்னணியை கொண்ட போதும் மார்க்சிய கோட்பாட்டின் மீது ஆர்வமும், தாக்கமும் கொண்டவர். இவர் தந்தையின் திருமணமே மிகுந்த போராட்டத்திற்கிடையே தான் நடைபெற்றது. அதற்கு அன்றைய பாகிஸ்தானில் நிலவிய மாற்று சிந்தனைகள் மீதான வெறுப்பும், மன அயற்சியுமே காரணம். அதன் தொடர்ச்சியின் மீதான எதிர்செயல்பாடு மற்றும் சிந்தனையே தாரிக் அலியின் உருவாக்கம். அன்றைய காலத்தில் லாகூர் பல கலாசாரத்தை கொண்ட காஸ்மோபாலிட்டன் நகரமாக இருந்தது. இந்த நகரத்தின் நெளிவான நகர்வுகளுக்கிடையில் தாரிக்கின் இளமைகாலம் சவால் ஒன்றின் முன்னோக்கத்திற்காக காத்திருந்தது. பள்ளிப்படிப்பை லாகூரில் முடித்த தாரிக் அலி பஞ்சாப் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். தன் தந்தையை போன்று இளமைகாலம் தொட்டே தாரிக் மத விவகாரத்தில் அவநம்பிக்கையாளராக இருந்தார். இதன் தொடர்ச்சி அவரை கல்லூரி பருவத்தில் முதிர்ச்சி பெற்ற அரசியல் மற்றும் தத்துவ சிந்தனையாளராக மாற வைத்தது. பஞ்சாப் கல்லூரி வாழ்க்கையின் தொடக்க காலங்களில் அவரின் பேச்சும், எழுத்தும் பாகிஸ்தானின் இராணுவ சர்வாதிகார வர்க்கத்தை உசுப்பி விட்டது. காலப்போக்கின் நகர்வில் தாரிக்கின் தத்துவார்த்த செயல்பாடுகள் அவரின் பாகிஸ்தான் இருப்பை கேள்விக்குறியாக்கின. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அக மற்றும் புற நிர்பந்தங்கள் காரணமாக தாரிக் பாகிஸ்தானை விட்டு லண்டனுக்கு செல்ல நேர்ந்தது. கீழைச் சிந்தனையாளர்கள் பலரின் வாழ்க்கை பின்னணியை நாம் நோக்கும் போது அவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்தல் அல்லது புலப்பெயர்ச்சிக்குள்ளாகுதல் என்ற கட்டத்தில் இருந்து தான் அவர்களின் எதார்த்த வாழ்வின் இன்னொரு கட்டம் தொடக்கம் பெறுகின்றது. இதன் காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. நேர்மாறான நிலையில் மேற்கத்தியர்கள் எவரும் தன் செயல்பாட்டிற்காக கீழைத்தேயத்திற்கு பெயர்ந்து வருவதில்லை. (விதிவிலக்கான தருணங்கள் தவிர) மேற்கு நாடுகளின் வட்டத்திற்குள் தான் அவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன. கீழை சிந்தனையாளர்கள் மேற்கை தங்கள் சிந்தனைக்கான சுதந்திர வெளியாக, செயல்பாடுகளுக்கான பரப்பிடமாக காண்பதே அதற்கு காரணம். அது மாதிரியே தாரிக்கின் லண்டன் வாழ்க்கை அவரின் ஆளுமை உருவாக்கத்திற்கான தொடக்க புள்ளி. அதற்கான விரிவான சாத்தியப்பாடுகளை அது உருவாக்கி விட்டிருந்தது. லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பொருளாதாரம் படித்த தாரிக் படிக்கும் காலத்தில் வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். அவருக்கான போராட்ட கள செயல்பாடுகள் அதன் மூலம் தொடக்கம் பெற்றன. இளமைகால தத்துவார்த்த வாசிப்பும், செயல்பாடுகளும், பல்கலைகழக பொருளாதார படிப்பும் அவரை அறிவுஜீவி என்ற கட்டத்திற்கு நகர்த்தின. வியட்நாம் போர்காலத்தில் பெர்டிணான்ட் ரஸ்ஸல் மற்றும் ழீன் பால் சார்த்தர் ஆகியோரின் அறிமுகம் தாரிக் அலிக்கு கிடைத்தது. அவர்களுடனான உரையாடல்கள் மூலம் தாரிக் தன் சிந்தனைமுறையை விசாலமாக்கி கொண்டார். அவரின் அனுபவ வெளி மேற்கத்திய அறிவுஜீவிகளுடனான தொடர்ந்த உரையாடல்கள் மூலம் அக அனுபவ முதிர்ச்சியாக மாற்றியது. வியட்நாமுக்கு பல சிந்தனையாளர்கள், மனித உரிமை போராளிகள் இணைந்த குழுவாக சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். அதிலிருந்து அமெரிக்க எதிர்ப்பு சிந்தனை அவரின் கோட்பாட்டு தளத்தில் மையம் கொள்ள தொடங்கியது. ஜியாவுல் ஹக் தலைமையிலான ராணுவ அரசின் அமெரிக்க ஆதரவு நிலைபாட்டை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக அவருக்கு சில ஆண்டுகளாக பாகிஸ்தானிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. இது இன்னொரு வகையில் மேற்கத்திய நாடுகளில் அவரின் பெயரை குவியப்படுத்தியது. வரலாறு, மறுமலர்ச்சிகால தத்துவம் சார்ந்த தொடர்ச்சியான, விசாலமான, ஆழ்ந்த வாசிப்பு காரணமாக தாரிக் அலி தன் பின்னால் கணிசமான வாசக வட்டத்தை இழுத்துக்கொண்டார். இதன் பின்னர் அவரின் முறைப்படியான எழுத்து வாழ்க்கை 1960 ல் லண்டனில் பிரட் ஹாலிடேயுடன் இணைந்து New left review என்ற கோட்பாட்டு சஞ்சிகையை தொடங்கியதில் இருந்து தொடங்குகிறது.இதே காலகட்டத்தில் சர்வதேச டிராஸ்கிய கட்சியின் உறுப்பினரானார். பிரிட்டனில் அதற்கு தலைமையும் வகித்தார். அப்போது கட்சியினருடன் இணைந்து trotsky for beginners என்ற நூலை எழுதினார். பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தோல்வியை டிராஸ்கிஸ்டுகள் கையாள தவறியது குறித்த விஷயத்தில் தாரிக் அலிக்கு முரண்பாடு ஏற்பட்டது. அது குறித்து எழுதவும் செய்தார். இதை தொடர்ந்து டிராஸ்கிஸ்டுகளுக்கும் இவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இவரின் முதல் புத்தகம் இஸ்ரேல் குறித்த சித்திரமாக 1968 and after:Inside the revolution என்ற பெயரில் 1978 ல் வெளிவந்தது.அதன் பிறகு பாகிஸ்தான் வரலாறு, அதன் இராணுவ சர்வாதிகாரம் குறித்த புத்தகமாக Can pakistan survive: Death of a state வெளிவந்தது. தாரிக்கின் தொடர்ச்சியான எழுத்துக்கள் அவரின் அடுத்தடுத்த நூல்களை வெளிக்கொணர்ந்தன. 1984 ல் "இருபதாம் நூற்றாண்டில் ஸ்டாலினியம்" குறித்த நூல் ஒன்றை வெளியிட்டார். அது ஸ்டாலினியம் குறித்த கடும் விமர்சன ஆய்வுமுறையாக இருந்தது. இதன் சமகாலத்தில் தாரிக் புனைவு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் பிரதிபலிப்பாக Shadow of pomegranate tree, Book of saladin, Stone woman போன்ற நாவல்கள் அவரிடம் இருந்து வெளிவந்தன. அவரின் ஆக்கங்களில் முக்கிய கோடிடும் பகுதியாக 2002ல் வெளியான The clash of fundamentalism இருந்தது. அடிப்படைவாதம் வேர்கொள்ளும் முறை, அதன் தர்க்கரீதியான தொடர்ச்சி, இருபதாம் நூற்றாண்டு மத்திய கிழக்கின் பிராந்திய முரண்பாடுகள், மோதல்கள், போர்கள், கலாசார தர்க்கவியல் போன்றவற்றை குறித்த விரிவான ஆய்வுமுறையாக இருந்தது. இதன் மூலம் மேற்கு மற்றும் மத்தியகிழக்கு வட்டாரத்தில் தாரிக் அலி குவியமான அறிவு ஜீவியாக முன்னிலைப்படுத்தப்பட்டார். அதற்கு பிந்தைய ஆண்டில் ஈராக் மீதான அமெரிக்க போரை முன்வைத்து, ஏகாதிபத்திய கருத்தியலையும், வரலாறையும் விளக்கும் Bush in Babylon வெளிவந்தது. இந்த நூலும் அறிவுத்துறை வட்டாரங்களில் குறிப்பிட்ட மாறுதலை ஏற்படுத்தியது. பின் மார்க்சிய, பின்காலனிய, எதிர் அடிப்படைவாத தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் தாரிக் அலி தற்போது லண்டனில் வசிக்கிறார்.


தாரிக் அலியின் அடிப்படைவாதம் குறித்த ஆய்வுமுறைகள் முக்கியமானவை. அடிப்படைவாதம் வரலாறு மற்றும் கோட்பாடு சார்ந்த நுனிமங்கள் மீது தொடக்கம் கொள்கிறது என்கிறார் தாரிக். லௌகீக உலகின் வளர்ச்சி போக்கில் சமூகத்தில் ஒவ்வொரு காலகட்டத்தில் தோன்றும் கோட்பாடுகள், நம்பிக்கைகள் அதன் மனக்கிடங்கில் ஆழ்ந்து பதிகின்றன. அந்த பதிதல் சார்ந்தே அதன் அரசியல் உருவாகிறது. நாகரீகங்கள் உருவான காலத்தில் இருந்து தொடங்கும் இவை சில வேளைகளில் காலத்தை மீற முடியாதவையாக இருக்கின்றன. மதம் அதன் தொடர்ச்சியில் உருவாகும் நம்பிக்கைகள் இதற்கு உதாரணங்கள். அவ்வகையில் உலகில் உருவான எல்லா குறு மற்றும் பெருமதங்கள் இந்த நெறிமுறையில் தான் இருக்கின்றன. இதில் குறுமதங்கள் பெரும்பாலும் வரலாற்றிலிருந்து அழிந்து போய்விட்டன. நிலைத்திருப்பவை எல்லாம் விதிவிலக்கான தருணங்கள் தவிர பெரும்பாலும் அடிப்படைவாதத்தின் உற்பத்திக்கூடங்களே. இதன் தொடர்ச்சியில் இஸ்லாமின் தோற்றத்தைப் பற்றி மதிப்பிடும் தாரிக் அலி அதை அக்காலகட்டத்தின் அதாவது கி.பி ஏழாம் நூற்றாண்டின் அரசியல், கலாசாரம் இருந்த நிலையில் அந்த சமூகத்தில் வலுவான நம்பிக்கை முறையை ஏற்படுத்தி ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது, வேறுபட்ட பழக்க வழக்கங்களை கொண்ட மக்களை ஒன்றிணைப்பது அல்லது இந்த இரண்டையும் செய்வதான நோக்கத்தில் உருவான அரசியல் இயக்கமே என்கிறார். இஸ்லாத்தின் முதல் இருபதாண்டுகளில் குர் ஆன் வெளிப்படுத்திய சொல்லாடல்கள் இந்த கருதுகோளை உறுதிப்படுத்துகின்றன. அதற்கு முந்தைய யூதம், கிறிஸ்தவம் போன்றவை இந்த கருதுகோளிலிருந்து பிறந்தவை தான். உலக பேரரசு கனவு என்பதில் இருந்தே இதன் வரலாற்று ரீதியான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற யூத மற்றும் கிறிஸ்தவத்துக்கு இடையேயான போர்கள், 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இஸ்லாம் -கிறிஸ்தவத்துக்கு இடையேயான சிலுவைபோர்கள் உலக பெருமதங்களின் பேரரசு நோக்கத்தை வெளிப்படுத்துபவை. இந்திய சூழலில் ஆரிய மற்றும் திராவிட நாகரீகத்திற்கிடையேயான போர்களை குறிப்பிடலாம். மேலும் சமண மற்றும் பௌத்த மதங்கள் அழிக்கப்படுதல், அதன் மீதான ஒடுக்குமுறை போன்றவை இந்த தர்க்க நீட்சிக்கு உதாரணங்கள். இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டு கால அரபுலகில் வலுவான அரசியல் மற்றும் கலாசார இயக்கமாக உருமாறிய பிறகு அதன் எல்லை விரிவாக்கம் படிப்படியாக அதற்கான செயல் தந்திரங்களோடும், புதுமையான யுக்திகளோடும் நடந்தேறியது. இக்காலத்தில் அரேபிய பாலைவனத்தில் முஸ்லிம் இராணுவத்தின் வெற்றி என்பது குறிப்பிடதக்கதாக இருந்தது. அந்த வெற்றியின் வேகம் மத்திய தரைக்கடல் உலகை நோக்கி சென்றது. முந்தைய கிறிஸ்தவத்துடனான முரண்பாடுகள் வெளிப்படுத்த முடியாத ஒன்றாக இருந்தன. நபியின் மரணத்துக்கு பிந்தைய இருபது ஆண்டுகளில் அவரை பின் தொடர்ந்தவர்கள் பிறைவள பகுதிகளில் (ஈராக், சிரியா, லெபனான், பாலஸ்தீன் போன்றவை)தங்களின் முதல் அரசை கட்டமைத்தார்கள். இந்த அரச கட்டமைப்பு மற்ற பகுதிகளில் உடனடியாக அதை விரிவுபடுத்துவதற்கான மன வேகத்தை அளித்தது. ஒவ்வொரு விரிவாக்கத்தின் போதும் அப்பிரதேசத்தின் இனக்குழுக்கள் இஸ்லாத்தை தழுவி கொண்டன. இதற்கிடையில் கி.பி ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டு காலத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பைசாண்டிய மற்றும் பாரசீக பேரரசுகள் வலுவான சக்திகளாக இருந்தன. இந்த இரு பேரரசுகளிடையே அக்காலத்தில் பிரமாண்ட போர் மேகம் நகர்ந்து கொண்டே வந்தது. அதன் இழுப்பங்களுடன் கூடிய தொடர்ச்சியான நகர்வு இருவரையும் தங்கள் பிராந்தியத்தின் மீது புதிய வெற்றியாளர்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது. சிரியாவும், எகிப்தும் பைசாண்டிய பேரரசின் பகுதிகள், ஈராக் பாரசீக பேரரசின் பகுதி. இவை அனைத்தும் பலம் பொருந்திய, நம்பிக்கையாளர்களான ஒருங்கிணைந்த இனக்குழு சக்தியின் முன் விரைவாக காணாமல் போயின. இரு பேரரசுகளின் உயர் திறன் வாய்ந்த, அனுபவம் மிக்க போர் இயந்திரங்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாக இருந்த போதும், நடைமுறையில் பலவீனமாக இருந்தன. அரேபிய முஸ்லிம் இராணுவத்தின் ஒட்டக மற்றும் குதிரைப்படைகள், மறைந்திருந்து தாக்கும் கொரில்லா யுத்த முறைகள், தீடீரென தாக்கி விட்டு மறையும் நாடோடி தாக்குதல் முறை போன்ற யுத்த உத்திகள் இரு பெரும் பேரரசுகளை தோற்கடித்தன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்த இரு பேரரசுகளின் வீழ்ச்சியோடு இஸ்லாமின் முறைப்படியான இருப்பு இங்கு தொடங்குகிறது. உலக வரலாற்றில் இவ்வாறு பலமான அரசுகள் பலவீனமாக மனிதர்களால் வெல்லப்பட்டிருக்கின்றன. ரோமானிய பேரரசை பலம் குன்றிய ஜெர்மானியர்கள் வென்றதும், மெக்சிகர்களிடமிருந்து யாங்கிகள் கலிபோர்னியாவை கைப்பற்றியதும் இந்த கருத்தாக்கத்தை மேலும் உறுதி செய்பவை. இவ்வாறான நிலையில் இஸ்லாமிய அரசுகள் பிராந்தியத்தில் வேர்கொண்ட பிறகு சமூக உற்பத்தி மற்றும் இயற்கையோடு இயைந்த செயல்பாடுகள் மீது கவனம் கொள்ள தொடங்கின. குறிப்பாக அறிவியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகள் மீது அதீத கவனமும், அவதானமும் அவர்களுக்கிருந்தது. அப்பாஸிட்கள் இதற்கான செயல்திட்டங்களை வைத்திருந்தார்கள். குறிப்பாக மருத்துவ துறையில் அவர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது. முதல் ஆயிரத்தாண்டு முழுவதும் மருத்துவ துறையின் வளர்ச்சி அறிவின் நீண்ட, குறுக்கு நெடுக்குமான பயணத்திற்கு உதாரணமாக இருந்தது. பாரசீகத்தின் பல நகரங்கள் இதற்கான வாயில்களாக இருந்தன. அரபுலகின் முதல் மருத்துவராக அறியப்பட்ட ஹாரித் இப்னு ஹலதா அக்கால பாரசீக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் அவரின் மருத்துவ ஆலோசனைகள் புகழ்பெற்றவை. அதிக உணவு உண்பதை தவிர்த்தல், கலக்காத ஒயினை அருந்துதல், தினசரி அதிக தண்ணீர் பருகுதல், மது அருந்தி விட்டு உடலுறவு கொள்ளாமை, சாப்பிட்டு விட்டு குளிப்பதை தவிர்த்தல் இவை அரசவையிலிருந்து குடிமக்களுக்கு பரப்பப்பட்டன. அந்த ஆலோசனைகள் அதிகாரபூர்வ முறையில் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து இப்னு ஸீனா மற்றும் அல் ராசி ஆகிய மருத்துவ தத்துவவியலாளர்கள் அரபுலகில் தோன்றினர். இவ்வாறாக மருத்துவ துறையின் விதை அன்றைய பாரசீகத்தில் விதைக்கப்பட்டு அரபுலகம் முழுவதும் வேர் கொண்டு மரமாக கிளைத்தது. இஸ்லாத்தின் தோற்றம் அதன் அரசியல், புவி பொருளாதார பார்வை குறித்து தன் அடிப்படைவாத மோதல்கள் (The Clash of Fundamentalism) நூலில் ஆராய்ந்த தாரிக் அலி அதன் முடிபுகளை நீண்டகன்ற முறையில் ஆழ்ந்து வெளிப்படுத்தினார். அவரின் சிந்தனை முறைகள் மரபான மேற்கத்திய சிந்தனையாளர்களிடமிருந்து வித்தியாசப்பட்ட ஒன்றாக இருந்தன. மரபாந்த முறையில் கீழைத்தேயவாதியாக இருப்பதால் மத்திய கிழக்கு சமூகம் குறித்த இந்த ஆய்வு முறை அவருக்கு விரிவான தளங்களை தொடுவதற்கான வாய்ப்பை வழங்கியது.மேலும் மேற்கத்திய நாகரீகம் மற்றும் இஸ்லாமிய நாகரீகம் குறித்த அடிப்படையான ஆய்வுமுறைகளை நிகழ்த்தியிருக்கிறார். மேற்கத்திய நாகரீகம் குறித்த ஆய்வில் தாரிக் பிரிட்டனின் காலனியாதிக்க நடவடிக்கைகள் குறித்து வெளிப்படுத்தினார். குறிப்பாக இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதில் இருந்து அதை தொடங்கினார். இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் காந்தியிடம் கேட்டார்." மேற்கத்திய நாகரீகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" அது ஒரு சிறந்த கருத்தாக இருக்கலாம்" காந்தி எள்ளல் முறையில் மிகச்சாதாரணமாக பதிலளித்தார். காந்தியின் இந்த பதிலை தற்போதைய கட்டத்துக்கு நகர்த்தும் தாரிக் அலி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஒடுக்குமுறையை, கண்ணுக்கு புலப்படாத ரீதியில் நாகரீகத்தின் மேல் படும் தாக்குதலாகவே காண்கிறார். குறிப்பாக ஈராக் மீதான அமெரிக்க போர் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மேற்கு ஈராக்கில் ஜனநாயகம் திரும்பும் என்ற மாயையை வெகுஜன மத்தியில் ஏற்படுத்துகிறது. இது உச்சபச்சமான மேல் திணிக்கப்படும் ஒடுக்குமுறை என்பதை அது உணராமல் இருக்கலாம். மேலும் நாகரீகம் அதன் எதிர்கொள்ளல் குறித்த யுக்திகளுக்கு அமெரிக்க ரெடிமேட் அறிவுஜீவிகளின் துணையை நாடுவதை தாரிக் குறிப்பிடுகிறார். குறிப்பாக சாமுவேல் காண்டிங்டனும், பிரான்சிஸ் புகாமாவும் இதன் வார்ப்புகள். அவர்களின் நாகரீகங்களின் மோதல் குறித்த கருத்தாக்கம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கை வடிவமைப்பே. சாமுவேல் காண்டிங்டன் ஜாண்சன் ஆட்சியில் வியட்நாம் போர் குறித்த வழிமுறைகளை அரசுக்கு வகுத்து கொடுத்தவர். சிவிலியன்கள் ஆதரவு இல்லாமல் அந்நிய நாட்டின் மீது போர்தொடுப்பது வெற்றியை தராது என்ற கருத்தை அதிகார வர்க்கத்தின் முன்வைத்தவர். இந்த கருத்தாக்கத்தை தான் அமெரிக்க ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போது பயன்படுத்தியது.சர்வதேச ஊடக சர்வாதிகாரம் இதற்கு துணைபுரிந்தது. பல தருணங்களில் சாமுவேல் காண்டிங்டனுக்கு கோட்பாட்டு ரீதியாக எதிர்வினையாற்றியிருக்கிறார். நாகரீகங்கள் குறித்த இந்த ஆய்வுமுறை தாரிக் அலியை மேற்கு மற்றும் கிழக்குலகின் தேர்ந்த அறிவுஜீவியாக ரூபம் கொள்ள செய்தது. கடந்த இருபதாண்டுகளில் மேற்குலகில் புனைவு மற்றும் புனைவு அல்லாத எழுத்துக்களின் எல்லையை கடந்த தாரிக் என்னை பாதித்த சிந்தனையாளராக இன்னும் இருக்கிறார். இவருடனான என் விரிவான நேர்காணல் இரு வருடங்களுக்கு முன்பு தமிழ்பத்திரிகை ஒன்றில் வெளியானது. ஓர் அறிவு ஜீவி மனிதசமூகம், வாழ்க்கை இவற்றை குறித்த ஆழ்ந்த அவதானங்களை உடையவன் என்பதற்கு தாரிக் இந்த நூற்றாண்டின் உதாரண புருஷர்.
- உயிரோசை